பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது? அவர் நன்கொடைகளை அள்ளி வழங்குவது ஏன்?

பட மூலாதாரம், Maxine Collins/BBC
- எழுதியவர், கேட்டி ரஸ்ஸல்
- பதவி, கல்ச்சர் & மீடியா ஆசிரியர்
நேர்காணலின் இறுதியில்தான் பில்கேட்ஸ் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்று கூறினார். அவரின் தொண்டு நிறுவனம் மூலம், நோய்களைத் தடுக்க, வறுமையை ஒழிக்க அவர் நன்கொடை அளித்துள்ளார்.
''நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை நான் கொடுத்திருப்பேன். என்னிடம் கொடுக்க இன்னும் நிறைய உள்ளது'' என்று கூறுகிறார் பில் கேட்ஸ்.
பல்கேரியா நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு இது. இதை வைத்துக் கொண்டு லண்டனையும் பர்மிங்காமையும் இணைக்கும் அதிவிரைவு ரயில் சேவையான எச்.எஸ்.2 என்ற ரயில்வே லைனையே முழுமையாகக் கட்டிவிடலாம்.
இந்த மதிப்பானது, டெஸ்லா கார்களின் ஓராண்டு விற்பனை மதிப்பு. டெஸ்லாவின் உரிமையாளர் ஈலோன் மஸ்க், உலகில் மிகவும் பணக்கார நபராக அறியப்படுகிறார். ஒரு காலத்தில் பில் கேட்ஸ் அந்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான கேட்ஸும், மற்ற செல்வந்தரான வாரன் ப்ஃபெட்டும் அவர்களின் கோடிக்கணக்கான நிதியை கேட்ஸ் அறக்கட்டளை மூலமாகப் பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கேட்ஸ் அறக்கட்டளையை கேட்ஸும் அவரின் முன்னாள் மனைவியான மெலிண்டாவும் சேர்ந்து உருவாக்கினார்கள்.

மிகவும் சிறிய வயதில் இருந்தே மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் போக்கு தன்னிடம் இருந்ததாகத் தெரிவிக்கிறார் கேட்ஸ்.
அவருடைய அம்மா, "பணம் வரும்போது அதை மற்றவர்களுக்கு வழங்கும் பொறுப்பும் உடன் வருகிறது," என்று கூறியிருக்கிறார்.
கேட்ஸின் அறக்கட்டளையானது வருகின்ற மே மாதம், 25வது ஆண்டை நிறைவு செய்கிறது. பணத்தை வழங்குவதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்று கூறுகிறார் பில்கேட்ஸ்.
அன்றாட வாழ்க்கை என்று வரும்போது எந்த மாற்றத்தையும் அடைந்ததாகத் தெரியவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். "நான் தனிப்பட்ட ரீதியில் எதையும் தியாகம் செய்யவில்லை. நான் ஹாம்பர்கர் ஆர்டர் செய்வதைக் குறைக்கவோ, படத்திற்குச் செல்வதைக் குறைக்கவோ இல்லை," என்று கூறுகிறார்.
இதுவரை அவரது சொத்தில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அவரால் இன்றும் தனி விமானத்தில் பறக்க இயலும். பல வீடுகளை வாங்க இயலும்.
சொத்தில் பெரும் பகுதியை நன்கொடையாக அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அனால், "மூன்று பிள்ளைகளிடமும் அவர்களுக்கு எவ்வளவு சொத்து வேண்டும்," என்ற பெரிய ஆலோசனையை நடத்தியதாகத் தெரிவித்தார்
"அவர்கள் ஏழைகள் ஆகிவிடுவார்களா?" என்று நான் கேட்டேன். அவர் ''இல்லை'' என்றார். "மொத்த சதவீதத்தில் பெரும் பகுதி இல்லை என்றாலும் நான் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பணம் அவர்களை நன்றாக வாழ வைக்கும்," என்றார் அவர்.
கணக்கில் மிகவும் திறமையானவர் அவர். சியாட்டலில் உள்ள லேக்சைட் பள்ளியில் அவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது நான்கு மாகாணங்களுக்கான பிராந்திய கணக்குத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டார்.
அப்போது அவருக்கு வயது 13 மட்டுமே. அந்த வயதில், அந்தப் பிராந்தியத்தில் கணக்கில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
கணக்கு அவருக்கு மிகவும் எளிமையாக வருகின்ற ஒரு விசயம். ப்ளூம்பெர்க்கின் செல்வந்தர் பட்டியலில் அவருக்கு 160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறு விகிதத்தை அவரின் பிள்ளைகளுக்கு விட்டுச் சென்றாலும் அவர்கள் பணக்காரர்களாக வாழ முடியும்.
கேட்ஸின் பால்ய கால வீடு
ப்ளூம்பர்க் தரவுகளின் அடிப்படையில், 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துகளைக் கொண்டுள்ள செல்வந்தர்கள் உலக அளவில் வெறும் 15 நபர்கள்தான் உள்ளனர். அதில் பில் கேட்ஸும் ஒருவர்.
நாம் தற்போது, சியாட்டிலில், அவருடைய பால்ய கால வீட்டில் இருக்கின்றோம். நான்கு படுக்கை வசதிகளைக் கொண்ட அந்த வீடு மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. அவர் சமீபத்தில் 'ஸோர்ஸ் கோட்: மை பிகினிங்ஸ்' என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். அதில் தன்னுடைய ஆரம்பக்கால வாழ்வைப் பற்றி விவரிக்கிறார்.
சராசரி என்ற எல்லைக்குள் நிறுத்தி வைக்க இயலாத குழந்தையைப் பிற்காலத்தில் ஒரு தொழில்நுட்ப ஜாம்பவானாக மாற்றியது எது என்று புரிந்து கொள்வற்காக நான் இங்கே வந்திருக்கிறேன்.
கிறிஸ்டி மற்றும் லிபி என்று இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தவர் கேட்ஸ். இவர்கள் மூவரும் ஆச்சரியமாக வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இங்கே வருவதில்லை. அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர்கள் அந்த வீட்டை மறுசீரமைப்பு செய்துள்ளனர் (அதற்கு கேட்ஸின் சகோதரிகள் ஒப்புதலும் அளித்திருக்கின்றனர்).
அந்த வீட்டின் சமையலறைக்குச் செல்லும்போது பழைய நினைவுகளை அவர்கள் அசைபோடுகின்றனர். அங்கே ஒரு இண்டர்காம் சிஸ்டம் இருந்தது. அது அவர்களின் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. படுக்கையில் இருந்து எங்களை எழுப்பி காலை உணவை உட்கொள்ள வைக்க, "அவர் காலையில் எங்களுக்காகப் பாடல் பாடுவார்," என்று கேட்ஸ் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
பில் கேட்ஸின் அம்மா, மேரி கேட்ஸ் அவர்களின் கடிகாரங்களை எட்டு நிமிடங்கள் வேகமாக வைத்துவிடுவார். அப்போதுதான் அவருடைய நேரத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்வார்கள். பில் கேட்ஸை மேம்படுத்த அவருடைய அம்மா அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் அந்த சேட்டையெல்லாம் அவருடைய பாட்டி 'காமி' முன்பு ஒன்றுமில்லாமல் போனது. பில் கேட்ஸின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த அவர்தான் கேட்ஸுக்கு பல்வேறு விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
கணினி கற்றுக்கொள்ள ஏற்பட்ட ஆர்வம்

பட மூலாதாரம், Maxine Collins/BBC
படிகளில் இறங்கி தரைத்தளத்தில் முன்பு அவரின் படுக்கையறை இருந்த இடத்திற்கு நான் கேட்ஸுடன் சென்றேன். தற்போது விருந்தினர் தங்கும் பகுதியாக அது மாற்றப்பட்டுள்ளது. இளமைக் காலத்தில் கேட்ஸ் அங்கே அதிக நேரத்தைச் செலவிடுவாராம். ஏதேனும் யோசித்துக் கொண்டே இருப்பார் என்று அவரின் சகோதரிகள் கூறுகின்றனர்.
ஒரு நேரத்தில் வீட்டில் மூன்று குழந்தைகளும் செய்யும் சேட்டையால் வெறுப்படைந்த அவருடைய அம்மா தரையில் கிடைக்கும் உடை மற்றும் இதர பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வாராம். திருப்பித் தர வேண்டும் என்றால் அதற்கு பில் கேட்ஸும் அவரின் சகோதரிகளும் 25 செண்ட் பணத்தை அவர்களின் அம்மாவிடம் கொடுக்க வேண்டுமாம். "அதன் பிறகு மிகவும் குறைவான உடைகளை உடுத்த பழகிக் கொண்டேன்," என்று அவர் கூறுகிறார்.
இந்தக் காலத்தில்தான் 'கோடிங்கில்' அவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. ஏதேனும் பிரச்னையைப் பற்றி தெரிவித்தால் அதற்கு பதிலாக உள்ளூர் கணினி மையத்தில் கணினியைப் பயன்படுத்த அவரது பள்ளி நண்பர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொழில்நுட்பப் புரட்சியின் ஆரம்பக் காலத்தில், 'கோடிங்' கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினார் பில் கேட்ஸ். இரவு நேரங்களில் பெற்றோர்களிடம்கூட கூறாமல் ஜன்னல் வழியாக வீட்டைவிட்டு வெளியேறி கணினியைப் பயன்படுத்த விரும்பியிருக்கிறார் அவர்.
இப்போதும் உங்களால் அப்படி செய்ய முடியுமா என்று நான் கேட்டேன். அது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை எனக் கூறிக்கொண்டே, ஜன்னலைத் திறந்து அதிலிருந்து வெளியேறினார் கேட்ஸ்.
ஒரு காலத்தில் பில் கேட்ஸை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் ஒருவர், நின்ற இடத்தில் இருந்தே ஒரு நாற்காலியை தாண்டிக் குதிப்பீர்களா என்று கேட்டிருக்கிறார். அதே இடத்தில் கேட்ஸ் அதைச் செய்து காட்டியுள்ளார்.
அது மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. நான் இன்று அவருடைய பால்ய கால படுக்கையறையில் நின்று கொண்டிருக்கிறேன். 70 வயதைத் தொடப்போகும் அந்த மனிதர் இன்னும் இப்படியாக சாகசம் செய்து கொண்டிருக்கிறார்.
ஆட்டிசம் குறைபாடு கொண்டவரா பில் கேட்ஸ்?

பட மூலாதாரம், Maxine Collins/BBC
அந்த இடம் அவருக்குப் பழக்கப்பட்டது என்பதற்காக மட்டும் அவர் இப்படி இலகுவாக ஜன்னல் வழியாக ஏறிச் செல்லவில்லை. அவருடைய புத்தகத்தில் வெளிப்படையாக இவ்வாறு எழுதியுள்ளார், ''இந்தக் காலத்தில் அவர் வளர்க்கப்பட்டிருந்தால், அவர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவராக வகைப்படுத்தப்பட்டிருப்பார்.''
கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன் ஒரே ஒருமுறை அவரை நான் நேர்காணல் செய்தேன். உயிர்க் கொல்லி நோய்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான அவருடைய இலக்கு குறித்த நேர்காணல் அது.
அப்போது நேர்காணலுக்கு முன்பான உரையாடல் ஏதும் நிகழவில்லை. என்னுடைய நேர்காணலுக்குப் பிறகு அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறதா என்று எனக்குத் தோன்றியது.
அவருக்குப் பிடித்த விஷயங்களில் செலுத்தப்படும் அதிகபட்ச கவனம், எதையும் கற்றுக்கொள்ள காட்டும் அதீத ஆர்வம், சமூக விழிப்புணர்வு குறித்து அறியாமல் இருந்தது போன்றவை குறித்துத் தன்னுடைய புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.
டெலவேர் குறித்து 177 பக்க அறிக்கை ஒன்றை ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது எழுதியுள்ளார். உள்ளூரில் உள்ள நிறுவனங்களுக்கு ஆண்டு அறிக்கை வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும் என்று கூறி பல நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதும்போது அவருக்கு வயது 11.
அவருடைய சகோதரிகள், பில் கேட்ஸ் வித்தியாசமானவர் என்று உணர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கிறிஸ்டி, பில்லின் அக்கா. தன்னுடைய தம்பி குறித்து மிகவும் அக்கறை கொண்டதாகத் தெரிவிக்கிறார். "அவன் சாதாரண குழந்தை இல்லை. அவனுடைய அறையில் அமர்ந்து பென்சிலை மென்று கொண்டிருப்பான்," என்று தன்னுடைய தம்பி குறித்துக் கூறுகிறார்.
அவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக பில் கேட்ஸ் நம்பவது குறித்து அறிந்தபோது, ''அது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை'' என்று கூறுகிறார் மனநல ஆலோசகரான லிபி.
டிரம்ப்பை சந்தித்தேன்

பட மூலாதாரம், Maxine Collins/BBC
ஆட்டிசம் குறித்து முறையாக நோயறியும் பரிசோதனையில் ஈடுபடவில்லை என்றும் அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறுகிறார் பில் கேட்ஸ்.
"என்னுடைய குறைபாடுகள் எனக்கு ஒரு பிரச்னையாக இருந்ததைவிட எனது வாழ்க்கைக்கான நேர்மறையான பண்புகள் எனக்கு அதிக பயன் அளித்தன," என்று கூறுகிறார் பில் கேட்ஸ்.
"நரம்பியல் பன்முகத்தன்மை (neurodiversity) என்பது சிலிகான் பள்ளத்தாக்கில் அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுவிட்டது. ஏனெனில், மிகவும் சிறு வயதில் ஆழமாகக் கற்றுக் கொள்வது கடினமான சில விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவும்," என்கிறார் அவர்.
ஈலோன் மஸ்கும் ஆட்டிசம் குறைபாடான அஸ்பெர்கெர் குறைப்பாட்டைக் (Asperger's syndrome) கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். டெஸ்லா, எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான அவர் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர்.
அவர் மட்டுமின்றி சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்து மெட்டாவின் மார்க் சக்கர்பெர்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ் போன்றோர் வரை, டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
சுய லாபத்திற்காக அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம் என நீங்கள் கருதலாம், இருப்பினும் தானும் அதிபரை அணுகியதாகக் கூறுகிறார் பில்கேட்ஸ். டிசம்பர் 27ஆம் தேதியன்று மூன்று மணிநேரம் பேசியதாகத் தெரிவித்தார். "ஏனென்றால் உலக சுகாதாரம் தொடர்பாகவும், நாம் எப்படி ஏழை நாடுகளுக்கு உதவ முடியும் என்பது தொடர்பாகப் பல்வேறு முடிவுகளை அவர் எடுக்கிறார். அதில் தான் தற்போது என்னுடைய முழுமையான கவனமும் இருக்கிறது," என்று தெரிவித்தார் கேட்ஸ்.

பட மூலாதாரம், Lakeside School
பில்கேட்ஸ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரவில்லை. அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். பணம் ஒரு பிரச்னையாக இல்லை. ஆனால் தன்னுடைய மகனை தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்புவது அன்று சவாலாக இருந்தது. அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் இன்று நாம் யாரும் பில் கேட்ஸ் பற்றிக் கேட்டிருக்க இயலாது.
பள்ளியில் டெலிடைப் இயந்திரம் மூலம் முதல்முறையாக ஆரம்பக்கால மெய்ன்ஃபிரேம் கணினிக்கான அணுகல் கேட்ஸுக்கு கிடைத்தது. ஆசிரியர்களால் அதைப் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் நான்கு மாணவர்கள் இரவும் பகலுமாக அதில் வேலை செய்து வந்தனர். "வேறு யாராலும் அணுகவே முடியாத காலத்தில் நாங்கள் கணினியை நன்றாகப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தோம்," என்கிறார் அவர்.
அந்த அனுபவத்திற்குப் பிறகு, சில ஆண்டுகளில் அந்த நண்பர்களில் ஒருவரான பால் ஆலெனுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை கேட்ஸ் நிறுவினார். கேட்ஸின் மற்றொரு நெருங்கிய நண்பரான கென்ட் இவான்ஸ் அவருடைய 17 வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
லேக்சைட் பள்ளியில் நாங்கள் நடந்து செல்லும்போது அங்கே ஒரு தேவாலயத்தை தாண்டிச் சென்றோம். அங்கேதான் கென்ட்டின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது படியில் நின்று அழுததை நினைவு கூர்ந்தார் பில் கேட்ஸ்.
அந்த நான்கு பேருக்கும் மிகப்பெரிய கனவு இருந்தது. அவர்கள் கணினியைப் பயன்படுத்தாத காலத்தில், பலரின் சுயசரிதை புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தனர். அதில் மக்களை வெற்றியாளர்களாக மாற்றியது எது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தனர்.
தற்போது கேட்ஸ் அவருடைய சுயசரிதையை எழுதிவிட்டார். அவரின் கருத்து, ''நீங்கள் தற்போது யாராக இருக்கின்றீர்களோ, ஆரம்பக் காலத்தில் இருந்தே அவர் உங்களுக்குள் இருந்திருக்கிறார்.''
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












