15 ஆண்டுகள் கழித்து வந்த அபார சதம் - கொல்கத்தாவின் ஏக்கத்தை பூர்த்தி செய்த வெங்கடேஷ் ஐயர்

பட மூலாதாரம், BCCI/IPL
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார். கேப்டன் சூர்ய குமார் யாதவ் 43 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்களை எடுத்திருந்தது, அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா அணிக்காக ஆடும் வீரர் ஒருவர் அடித்த சதமாக இது பதிவானது.
சதம் அடித்தது குறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர், `பெருமையாக உள்ளது. மும்பையில் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதை சிறப்பாக உணர்கிறேன்` என்றார்.
தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ராணா பேசும்போது, `நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பியுஷ் சாவ்லா சிறப்பாக பந்துவீசினார். வெங்கடேஷ் ஐயருக்காக வருத்தப்படுகிறேன். அவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தும் நாங்கள் தோற்றுவிட்டோம்` என்றார்.
ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்

பட மூலாதாரம், BCCI/IPL
உடல்நல பாதிப்பு காரணமாக ரோகித் சர்மா டாஸ் போட வரவில்லை. அவருக்கு பதிலாக மும்பை அணியை சூர்ய குமார் யாதவ் வழிநடத்தினார். டாஸ் வென்ற அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தாவின் ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் முதன்முதலில் களமிறங்கினார்.
ரோகித் சர்மா அவருக்கு மும்பை இந்தியன்ஸ் தொப்பியை வழங்கினார். ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள முதல் தந்தை-மகன் என்ற சாதனையை சச்சினும் அவரது மகன் அர்ஜுனும் படைத்துள்ளனர். முதல் ஓவரை சிறப்பாக வீசிய அர்ஜுன், ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
அடுத்த ஓவரை வீசிய கேமரூன் கிரீன் 4வது பந்தை வைடாக வீச அது பவுண்டரிக்கு சென்றது. கிரீன் வீசிய 5வது பந்தை ஜெகதீசன் அடிக்க முயன்றபோது, ரித்திக் சோகீன் அதை டைவ் அடித்து பிடித்தார். இதையடுத்து ரன் எதுவும் எடுக்காமலேயே ஜெகதீசன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர்
அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர், அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், கிரீன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து வெங்கடேஷ் ஐயர் அசத்தினார்.
டுவான் யான்சன் வீசிய 5வது ஓவரில் 6 சிக்ஸர்களை வெங்கடேஷ் ஐயர் அடிக்க அவரது அதிரடி காரணமாக 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 50 ரன்களை கடந்தது. ரித்திக் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை அவர் எட்டினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
நித்திஷ் ராணா- ரித்திக் வார்த்தை மோதல்
9வது ஓவரை வீசிய ரித்திக் ஷோகின் முதல் பந்திலேயே நித்திஷ் ராணாவை வெளியேற்றினார்.
அந்த பந்தை ராணா தூக்கியடிக்க ரமன்தீப் சிங் கையில் கேட்ச்சாக மாறியது. அப்போது, ரித்திக் ராணாவை நோக்கி ஏதோ கூற, ராணாவும் பதிலுக்கு சில வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
அப்போது, `போ` என்று ராணாவை நோக்கி ரித்திக் சமிக்ஞை செய்தார். இதனால் ராணா ஆவேசமடைந்தார். உடனடியாக, மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் இருவரையும் சமாதானம் செய்தனர். அப்போது கொல்கத்தா 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை எடுத்திருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
சதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர்
ஒரு பக்கம் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட, மற்றொரு பக்கம் கொல்கத்தாவின் ஏனைய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்.
ஜெகதீசன் (0), குர்பாஸ் (8), கேப்டன் ராணா(5) என ஒற்றை இலக்கில் வெளியேறிக்கொண்டிருந்தனர். அடுத்து வந்த ஷார்துல் தாகூரும் 13 ரன்களில் வெளியேறினார்.
விக்கெட்கள் வீழ்ந்தாலும் தனது அதிரடியை விடாத வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் சதம் அடித்தார். கடந்த 2007-2008 சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வீரர் பிரண்டன் மெக்குலம் 158 ரன்களை அடித்திருந்தார்.
அதன் பின்னர் அந்த அணியின் சார்பாக யாரும் சதம் அடித்ததே இல்லை. 15 ஆண்டுகள் கழித்து தற்போது வெங்கடேஷ் ஐயர் அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தார்.
ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி
அவர் சதம் அடிக்கும்போது கொல்கத்தாவின் ஸ்கோர் 151 ஆக இருந்தது. அதாவது அணியின் ஸ்கோரில் மூன்றில் 2 பங்கு அவர் பங்களிப்பாக இருந்தது. மெரிடித் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த வெங்கடேஷ் ஐயர் அடுத்த பந்தில் கேட்ச்சாக வெளியேறினார். அவர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 104 ரன்களை எடுத்திருந்தார். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் சிறிது அதிரடி காட்ட கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்களை சேர்த்தது. ரஸ்ஸல் 11 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிஸ்டர் உட்பட 21 ரன்களை எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அதிரடியான தொடக்கம் கொடுத்த இஷான் கிஷன் - ரோகித் ஷர்மா
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. உடல்நல பாதிப்பு காரணமாக பந்துவீச்சின்போது அணியில் இடம்பெறாத கேப்டன் ரோகித் ஷர்மா, இம்பேக்ட் பிளேயராக ஓபனிங்கில் களமிறங்கினார். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே மும்பை அணி எடுத்தது. தாக்கூர் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து இஷான் கிஷன் அதிரடி காட்ட, அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. உமேஷ் யாதவ் வீசிய 3வது ஓவரில் ரோகித் ஷர்மா சிக்ஸர் அடிக்க அடுத்தடுத்த பந்துகளில் இஷான் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார்.
மூன்று ஓவர் முடிவில் மும்பை அணி 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4வது ஓவரை வீச சுனில் நரைனுக்கு வாய்ப்பு கொடுத்தார் கொல்கத்தா கேப்டன் ராணா. ஆனால், சுனில் நரைனாலும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ரோகித் ஷர்மா பவுண்டரியுடன் அந்த ஓவரை தொடங்கி வைக்க, பதிலுக்கு இஷான் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். அவர்களின் அதிரடி பேட்டிங்கால், 3.5 ஓவர்களில் மும்பை அணி 50 ரன்களை கடந்தது.
இம்பேக்ட் பிளேயரை வெளியேற்றிய இம்பேக்ட் பிளேயர்
இருவரின் பேட்டிங்கை பார்க்குபோது மும்பை அணி விரைவில் இலக்கை எட்டிவிடும் என்ற எண்ணம் வான்கடே மைதானத்தில் கூடியிருந்த மும்பை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், 5வது ஓவரை வீசிய கொல்கத்தாவின் இம்பேக்ட் பிளேயர் சுயாஷ், மும்பையின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.
அவர் வீசிய 5வது பந்தை ரோகித் ஷர்மா தூக்கியடிக்க உமேஷ் யாதவ் டைவ் அடித்து அதனை கேட்ச் பிடித்தார். 13 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 20 ரன்களில் ரோகித் வெளியேற, சூர்யகுமார் யாதவ் உள்ளே வந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிகொண்டிருந்த இஷான் கிஷன் சுயாஷ் வீசிய 7வது ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை எட்டினார். வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்த இஷான் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 58 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஃபார்முக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ்
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் ஃபார்ம் இழந்து தவித்த சூர்ய குமார் யாதவ், ஹோம் கிரவுண்டில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடினார். லோக்கி ஃபெர்குசன் வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சூர்ய குமார் யாதவ், ரஸ்ஸல் வீசிய 13வது ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர் , ஒரு பவுண்டரி அடித்தார். 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மும்பை எடுத்திருந்தது. வெற்றிக்கு 42 ரன்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. தனது கடைசி ஓவரை வீசிய சுயாஷ், 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை போல்ட் ஆக்கி வெளியேற்றினார். வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் டிம் டேவிட் 6 சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தது.
சூர்ய குமார் யாதவ் அரை சதம் அடிப்பார் என்று மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்த வேளையில், தாக்கூர் வீசிய 17வது ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். 25 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 43 ரன்களை அவர் எடுத்திருந்தார். 17.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை 2 அணிகளுக்கும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் மும்பை அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












