தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான் கச்சிதமான ஃபினிஷிங்: பஞ்சாப் கிங்சுக்கு சாதகமாக ஆட்டத்தை திருப்பிய 'அந்த' ஒரு ஓவர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. கேப்டன் ஷிகர் தவான் இல்லாமல் களமிறங்கிய அந்த அணியின் இளம் வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். சிக்கந்தர் ரஸா அரைசதம் அடிக்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக் கான் கச்சிதமாக பினிஷிங் செய்து அணியின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.
முந்தைய இரு போட்டிகளில் வென்று தெம்பாக வந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நேற்றைய போட்டியில் வென்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்ற உத்வேகத்துடன் களமிறங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணியோ உடல்தகுதி பிரச்னை காரணமாக கேப்டன் ஷிகர் தவான் இல்லாமல் இளம் வீரர் சாம் கரண் தலைமையில் களம் கண்டது.
கடந்த ஐ.பி.எல்.லில் அந்த அணிக்காக கலக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் வந்து சேர்ந்துவிட்ட போதிலும், நேற்றைய ஆட்டத்தில் களம் காணவில்லை.
லக்னோவில் போட்டி நடைபெற்ற அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலுமே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்று நம்பிக்கையுடன் இருந்தது. ஒப்பீட்டளவில் சற்று பலவீனமாக காணப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலிடத்திற்கு முன்னேறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பொய்த்துப் போனது.
சிறப்பான தொடக்கத்தை சரிவர பயன்படுத்திக் கொள்ளாத லக்னோ
முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் - கைல் மேயர்ஸ் ஜோடி மீண்டும் ஒருமுறை சிறப்பான தொடக்கம் தந்தது. அந்த அணி பவர் பிளே முடிவில் ஆறே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்தது. அதிரடியாக மட்டையை சுழற்றிய கைல் மேயர்ஸ் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆட்டம் கண்டது.
லக்னோ அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல சரிந்தது. குருணால் பாண்டியா மட்டும் சற்று நேரம் தாக்குப் பிடித்து 17 பந்துகளில் 18 ரன்களை எடுத்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் 2 சிக்சர்களுடன் 15 ரன்களில் வெளியேறினார். கடந்த போட்டிகளில் நாயகனாக ஜொலித்த நிகோலஸ் பூரன் இம்முறை டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர்.

பட மூலாதாரம், Getty Images
பார்ட்னர்ஷிப் அமையாமல் தன்னந்தனியாக தவித்த கேப்டன் லோகேஷ் ராகுல்
சர்வதேசப் போட்டிகளில் எப்படி இருந்தாலும், ஐ.பி.எல். என்றாலே ஃபார்முக்கு வந்துவிடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் லோகேஷ் ராகுலின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நடப்புத் தொடரில் முதல் அரைசதத்தை நேற்றைய ஆட்டத்தில் பதிவு செய்த அவர், 56 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளை அவர் விளாசினார்.
19-வது ஓவர் வரை களத்தில் இருந்த லோகேஷ் ராகுலுக்கு மறுமுனையில் சரியான பார்ட்னர்ஷிப் அமையவே இல்லை. பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். இதனால், ஒரு முனையில் விக்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் லோகேஷ் ராகுலால் கியர் மாற்றி முழு வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கடைசி ஓவர்களில் ரன் குவிக்க தவறிய லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டெத் ஓவர்களில் ரன்களைக் குவிக்கத் தவறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அந்த அணி 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுலுடன் குருணால் பாண்டியா களத்தில் இருந்தார்.
விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் கடைசிக்கட்டத்தில் அந்த அணி அதிரடியாக ரன்களை குவிக்கும் என்ற அதன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. 15-வது ஓவரை வீசிய காஜிசோ ரபாடா குருணால் பாண்டியா, நிகோலஸ் பூரன் ஆகிய இருவரையும் வெளியேற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தடம் புரண்டு போனது.
16-வது ஓவரில் ஸ்டோனிஸ் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினாலும் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் கடைசி 6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 51 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதுவும், கடைசி 3 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் சாம் கரண் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
எல்லைக்கோடு அருகே ஷாருக்கான் பிடித்த அற்புதமான கேட்ச்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஷாரூக் கான் நேற்றைய ஆட்டத்தில் 3 அற்புதமான கேட்ச்களை பிடித்து அசத்தினார். குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தடம்புரண்டதன் தொடக்கமாக அமைந்த, குருணால் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்த அவர் செய்த கேட்ச் பிரமிப்பாக இருந்தது.
அவுட்சைட் ஆப் ஸ்டம்பில் காஜிசோ ரபாடா வீசிய பந்தை குருணால் பாண்டியா புல்ஷாட் ஆட, பந்து டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை நோக்கி பறந்தது. ஆனால், ஷாரூக் கான் அபாரமாக செயல்பட்டு, துள்ளிக் குதித்து பந்தை கேட்ச் செய்தார். ஆனால், எல்லைக்கோட்டை நெருங்கிவிட்டதை உணர்ந்த அவர் துரிதமாக செயல்பட்டு பந்தை உள்ளே தூக்கி வீசிவிட்டு, ஓரடி மட்டும் எல்லைக்கோட்டை தாண்டிச் சென்று மீண்டும் உள்ளே வந்து பந்தை அபாரமாக கேட்ச் செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பஞ்சாப் கிங்சை சரிவில் இருந்து தூக்கி நிறுத்திய சிக்கந்தர் ரசா
எளிய இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும் அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் சிறிது நேரம் அதிரடி காட்டி, பவர் பிளே ஓவர்களில் அந்த அணிக்கு கணிசமாக ரன் சேர்த்தார். 22 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்களை அவர் சேர்த்தார். பவர் பிளேவில் அவரும் ஆட்டமிழக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை மட்டுமே எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது.
அப்போது களத்திற்கு வந்த ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவரான சிக்கந்தர் ரஸா பொறுப்புடன் ஆடி அணியை கரை சேர்த்தார். களத்தில் தன்னை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டு விட்ட பிறகு அதிரடி காட்டிய அவர், அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டையும் பராமரிக்கத் தவறவில்லை. 41 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சேர்த்த அவர் ரவி பிஷ்னோய் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு எல்லைக்கோடு அருகே ஸ்டோனிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆட்டத்தை பஞ்சாப் கிங்ஸ் பக்கம் திருப்பிய 'அந்த' ஒரு ஓவர்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன் ரேட் மிடில் ஓவர்களில் வெகுவாக குறைந்துவிட்டது. 12 ஓவர்களில் அந்த அணி 82 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டிருந்தது. இன்னும் 8 ஓவர்களில் அந்த அணி வெற்றி பெற 78 ரன்கள் தேவைப்பட்டன. முந்தைய ஓவரில்தான் ஹர்பிரீத் சிங் விக்கெட்டை அந்த அணி இழந்துவிட்டிருந்தது.
ஆனாலும், கொஞ்சமும் சலனப்படாமல் கியரை மாற்றிய சிக்கந்தர் ரசா குருணால் பாண்டியா வீசிய 13-வது ஓவரில் அதிரடி காட்டி அசத்தினார். அந்த ஓவரின் 2, 3 பந்துகளை டீப் மிட் விக்கெட் திசையில் அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்கவிட்ட சிக்கந்தர் ரஸா அடுத்த பந்தில் பவுண்டரியும் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தன.

பட மூலாதாரம், Getty Images
மிடில் ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன் ரேட் மந்தமானதால், எங்கே ஆட்டம் படிப்படியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பக்கம் திரும்புகிறதோ என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கிய நேரத்தில் சிக்கந்தர் ரஸாவிடம் இருந்து இந்த அதிரடி வெளிப்பட்டது.
தமிழ்நாடு வீரர் ஷாருக் கானின் கனகச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம், Getty Images
சிக்கந்தர் ரஸா அரை சதம் அடித்து அணியை தூக்கி நிறுத்தினாலும் சேஸிங்கை வெற்றிகரமாக நிறைவு செய்யாமல் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து விட்டார். ஆனால், அவர் விட்டுச் சென்ற பணியை தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் வெற்றிகரமான முடித்து வைத்தார். களமிறங்கியதும், தான் எதிர்கொண்ட முதல் பந்தையே லாங் ஆன் திசையில் பிரமாண்ட சிக்சரை விளாசி ஷாரூக் கான் அமர்க்களப்படுத்தினார். அதுவும், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மூன்றே போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, நீலத் தொப்பிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் பந்தில் இந்த சிக்சர் வந்தது.
மார்க் வுட் வீசிய அடுத்த ஓவர், அதாவது ஆட்டத்தின் 19-வது ஓவரிலும் ஷாரூக் கான் சிக்சர் அடித்து அசத்தினார். ஷார்ட் பிட்ச் ஆகி பவுன்சான பந்தை ஷாரூக் கான் அடித்தாட முயல, பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பருக்கு நேரே பின்னால் பறந்து சென்று எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது.
கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவையாக இருந்தது. முதலிரு பந்துகளையும் லெக் சைடில் அடித்து தலா 2 ரன்களை சேகரித்த ஷாரூக் கான், மூன்றாவது பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை தோற்கடித்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.

பட மூலாதாரம், Getty Images
இம்பாக்ட் பிளேயர் தேர்வில் லக்னோ அணி சொதப்பியதா?
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போதே, விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் முதலில் ஆட்டமிழந்த கைல் மேயர்சுக்குப் பதிலாக கிருஷ்ணப்பா கவுதமை இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியது. ஆல் ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதம் பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் கைகொடுப்பார் என்று அந்த அணி நம்பியது.
ஆனால், கிருஷ்ணப்பா கவுதம் இம்பாக்ட் பிளேயராக உள்ளே செல்ல வசதியாக, அந்த அணி கைல் மேயர்சை வெளியேற்றியது சரியா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது. ஏனெனில், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கைல் மேயர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடிய கடந்த போட்டிகளில் தொடக்க ஓவரை வீசியுள்ளார். இந்தப் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இக்கட்டான நேரத்தில் பந்துவீச்சில் அவர் பயன்பட்டிருக்கக் கூடும்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டமிழந்து வெளியேறிவிட்ட விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரனுக்குப் பதிலாக கிருஷ்ணப்பா கவுதமை இம்பாக்ட் பிளையேராக களமிறக்கி இருக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். பூரனுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பணியை கேப்டன் லோகேஷ் ராகுலே கவனித்திருக்கலாம். அது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகத் தான் ஐ.பி.எல்.லில் அவர் அடியெடுத்து வைத்தார். அவ்வாறு செய்திருந்தால், பந்துவீச்சில் பயன்படுத்த கைல் மேயர்ஸ் கூடுதலாக ஒரு ஆப்ஷனாக கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு இருந்திருப்பார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












