"56 டாட் பால்களை விட்டால் இதுதான் நடக்கும்"

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணியின் பந்துவீச்சாளர் மோதிக் சர்மா, பேட்ஸ்மேன் சுப்மான் கில், ராகுல் தேவாட்டியா ஆகியோர் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி இறுதிக்கட்டத்தில் ஷாருக்கான் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களை எடுத்தது. எனினும், தங்களது அணியின் பேட்டிங் சரியில்லை என்பதை தோல்விக்கான முக்கிய காரணமாக ஷிகர் தவான் தெரிவித்தார்.
ஆட்டம் முடிந்த பின்னர் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் அளித்த பேட்டியில், `நாங்கள் தேவையான ரன்களை குவிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். 56 டாட் பால்களை எதிர்கொண்டால், ஆட்டத்தை இழக்கத்தான் நேரிடும்.
எனவே, அதை சரி செய்ய வேண்டும். தொடக்கத்திலேயே விக்கெட்களை இழக்கும்போது, அடுத்து வருபவர்கள் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை சரி செய்ய வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி இல்லாத நிலையைல் பேட்ஸ்மேன்கள் ஏற்படுத்தி தரவேண்டும்` என்று குறிப்பிட்டார்.
கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து செல்வதை தான் ரசிப்பதில்லை என்று வெற்றி குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டார்.
` உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் இருந்த சூழ்நிலையையும் ஆட்டம் சென்ற சூழ்நிலையையும் கணக்கில்கொண்டால் நிச்சயம் நான் இந்த ஆட்டத்தை பாராட்ட மாட்டேன். இந்த ஆட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
ஆனால், அதுதான் விளையாட்டின் அழகு. மோஹித்தும் அல்ஜாரியும் சிறப்பாக பந்துவீசினார்கள். பெருமை எல்லாம் மோஹித்தையே சேரும். ஆட்டத்தை இந்த அளவு இறுதிக்கட்டத்துக்கு எடுத்து சென்றதை ஏற்றுக்கொள்வது கடினமாகதான் இருக்கும்` என்று தெரிவித்தார்.
பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி
மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 18வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து பஞ்சாப் அணியின் சார்பில் பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். கடந்த ஆட்டத்தை போன்றே இந்த ஆட்டதிலும் ரன் எதுவும் எடுக்காமலே பிரப்சிம்ரன் வெளியேறினார்.
ஷமி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை பிரப்சிம்ரன் அடிக்க ரஷித் கானின் கேட்சாக தஞ்சமடைந்து. பஞ்சாப் அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் ஷிகர் தவானும் லிட்டில் வீசிய 4வது ஒவரில் கேட்சாகி 8 ரன்களோடு வெளியேற பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருபக்கம் விக்கெட்கள் வீழ மறுபக்கம் மேத்யூ ஷார்ட் அதிரடி காட்டிக்கொண்டிருந்தார்.
அல்ஸாரி ஜோசப் வீசிய 5வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்களை அவர் விளாசினார். பவர்பிளே ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ரஷித் கான் சூழலில் சிக்கிய ஷார்ட்
2 விக்கெட்களை இழந்தபோதும் பஞ்சாப் அணியின் ரன்ரேட் சீரான அளவிலேயே இருந்தது. ஷார்ட் தனக்கு கிடைத்த நல்ல பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டிருந்தார். இதனால், பௌலிங்கில் மாற்றம் செய்ய திட்டமிட்ட குஜராத் கேப்டன் ஹர்திக் 7வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானிடம் வழங்கினார். அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. அந்த ஓவரின் 4வது பந்தில் ரஷித் கான் வீசிய கூக்லியை எதிர்கொள்ள முடியாமல் போல்ட் ஆனார்.
கடைசியில் கைகொடுத்த தமிழ்நாடு வீரர் ஷாருக் கான்
அதன் பின்னர் பஞ்சாப் அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்துபோனது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிதானமாகவே ஆடிக்கொண்டிருந்தனர். ராஜபக்ஷ 1 பவுண்டரி மட்டுமே விளாசினார். 26 பந்துகளை எதிர்கொண்ட அவரது பேட்டில் இருந்து 20 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஜிதேஷ் சர்மாவும் சாம் கரனும் அவ்வளவு பெரிய ஷாட்கள் ஏதும் ஆடவில்லை. ஷிகர் தவான் கூறியது போலவே அதிக டாட் பால்களை பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டனர்.
10 ஓவருக்கு 75 ரன்களை எடுத்த பஞ்சாப் 15 ஓவர் முடிவில் கூடுதலாக 24 ரன்களை மட்டுமே எடுத்து 99 ரன்களை எட்டியிருந்தனர். இறுதிக்கட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான் அதிரடியாக ஆட பஞ்சாப் அணி 150 ரன்களை கடந்தது. 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 153 ரன்களை எடுத்திருந்தது.
குஜராத் அணியின் மோஹித் சர்மா கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினார். கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 5 சிக்ஸரை விட்டுக்கொடுத்த யஷ் தயாலுக்கு பதிலாக 34 வயதான மோகித் சர்மா குஜராத் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார். 4 ஓவர்களை வீசிய அவர் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பட மூலாதாரம், IPL
வலுவான தொடக்கம்
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய குஜராத் அணிக்கு சாஹா- கில் ஜோடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். ர்ஷ்தீப் சிங் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். 19 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 30 ரன்கள் எடுத்த நிலையில், ரபாடா பந்துவீச்சில் சாஹா வெளியேறினார். ஐபிஎல்லில் ரபாடாவின் 100வது விக்கெட்டாகவும் இது அமைந்தது. 5 ஓவர் முடிவில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் எடுத்திருந்தது.
அதன் பின்னர் பஞ்சாப் பௌலர்கள் சாம் கரன், ஹர்பிரீத் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு காரணமாக குஜராத் அணியால் பவுண்டரிகளை பெரியளவில் அடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்ஷன்19 ரன்களிலும் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களிலும் வெளியேறினார். விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுபக்கம் சுப்மான் கில் பொறுப்பாக விளையாடி 41 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

பட மூலாதாரம், IPL
கடைசி ஓவர் பரபரப்பு
கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தபோது, முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் ஒரு ரன் அடித்து கில்லுக்கு ஸ்டிரைக் கொடுத்தார். பெரிய ஷார்ட்க்கு கில் முயற்சிக்க பந்து அவரிடம் இருந்து தப்பி ஸ்டம்பை பதம் பார்த்தது. 67 ரன்களில் கில் வெளியேற , ராகுல் தேவாட்டியா களத்திற்குள் வந்தார். 3வது பந்தில் 1 சிங்கில். 4வது பந்தில் யார்க்கர் வீசினார் சாம் கரண். அடிக்கத் தடுமாறிய மில்லர், ரன் ஓட முயற்சிக்க, ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டார் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா.
2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சாம் கரண் வீசிய 5வது பந்தை சாமர்த்தியமாக எதிர்கொண்ட தேவாட்டியா, பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 4 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 4 ஆட்டங்களில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












