சூர்ய குமார் யாதவ்: மிஸ்டர் 360க்கு என்ன ஆயிற்று - தொடர்ந்து சொதப்புவது ஏன்?

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விமல் குமார்
    • பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக

ஐபிஎல் போட்டியின் போது ஒவ்வொரு நாளும் ஒரு ஹீரோவையும் வில்லனையும் சோஷியல் மீடியா தேடுகிறது.

யாரோ ஒருவர் அதிரடியான மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸை விளையாடுகிறார் அல்லது அற்புதமாக பந்துவீசுகிறார்.

அப்போது அவருக்கு பாராட்டு மழை பொழியும் வகையில் அவரது சிறுவயது பின்னணியில் இருந்து இன்று வரையிலான போராட்டமும் வெற்றியும் அனைவரின் முன்னும் வைக்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் முழு கோபத்தையும் காட்டுவதற்காக சமூக ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வில்லனையும் தேடுகின்றன.

ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் ஒரு வீரர் போராடுவதைப் பார்த்தால், அவரை 'போட்டியின் குற்றவாளி' ஆக்குவதில் நிறைய விமர்சகர்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது.

டீம் இந்தியாவின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு முறை சரியான ஆனால் மிகவும் தீவிரமான ஒரு விஷயத்தை புன்னகையுடன் கூறினார். ஒருமுறை தனக்கு 'தி வால்' அதாவது "டீம் இந்தியாவின் சுவர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இது ஊடகங்களுக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் தனது ஃபார்ம் மோசமடையும்போது, 'சுவரில் விரிசல்' போன்ற தலைப்புச் செய்திகளை எழுத முடியும் என்று அவை மகிழ்ச்சியாக இருந்தன என்று டிராவிட் அப்போது கூறியிருந்தார்.

2011-12 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டிராவிட் போராடியபோது இது உண்மையிலேயே நடந்தது என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

'சூரியனுக்கு கிரகணம்'

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

தற்போது சூர்ய குமார் யாதவுக்கும் அதுதான் நடக்கிறது. ஸ்கை என்று அழைக்கப்பட்ட அதே சூர்ய குமார் யாதவுக்கு ‘சூர்யா பர் லகா கிரஹண்’ (சூரியன் மீது கிரஹணம்) என தலைப்புகளை அளிப்பதுடன் அன்றைய போட்டியின் குற்றவாளியைத் தேடும் பணி முடிவுக்கு வருகிறது.

கடந்த இரண்டு மாதப் பயணம் சூர்யகுமார் யாதவுக்கு விசித்திரமானதாக இருக்கிறது. அதற்கு முந்தைய 12 மாதப் பயணம் ஒரு தங்கக் கனவு போல இருந்ததை தற்போது அவரால் நம்பக்கூட முடியாது.

2023 பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் என்ற ஒரு குறுகிய ஆனால் பயனுள்ள இன்னிங்ஸை விளையாடினார்.

அன்று முதல் அடுத்த 7 இன்னிங்ஸ்களில் (டெஸ்டில் 1, ஒருநாள் மற்றும் ஐபிஎல்லில் 3-3) அவரால் 24 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது என்பதை விளையாட்டின் கொடுமையின் ஒரு பகுதி அல்லது காலத்தின் மாற்றம் என்றே சொல்லமுடியும்.

ஆனால் இந்த ஏழு இன்னிங்ஸ்களில் 4 முறை இரண்டாவது பந்தை கூட எதிர்கொள்ள முடியாமல் அவர் 'கோல்டன் டக்கிற்கு' பலியாகி இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

சூர்யகுமார் யாதவின் முகத்தில் பிரகாசத்திற்கு பதிலாக திகைப்பும் குழப்பமும் கலந்த உணர்வே காணப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

தரவரிசையில் நம்பர் 1

இந்த காலகட்டத்தைப் பார்க்கும்போது, ஐசிசி டி20 தரவரிசையில் அவர் இன்னும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பதை நம்புவது மிகவும் கடினம்.

அவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நம்பர் 2 பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானுக்கும் இடையே கிட்டத்தட்ட 100 அதாவது 95 புள்ளிகள் இடைவெளி உள்ளது.

2022-ம் ஆண்டில் அதிகபட்சமாக 1164 ரன்கள் எடுத்த இந்த மும்பை பேட்ஸ்மேனின் ஸ்டிரைக் ரேட் (187.43) சராசரி (46.56) வியக்க வைக்கும் வகையில் இருந்ததால் இது நடந்துள்ளது.

கடந்த ஆண்டு, 9 அரை சதங்கள் அடித்ததைத் தவிர, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இரண்டு சதங்களையும் அடித்துள்ளார் சூர்யா.

அந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் சதம் அடித்த சூர்யா செய்தியாளர் கூட்டத்திற்கு வந்தபோது, தனது அசாதாரண நிலைத்தன்மையைக் கண்டு தானே ஆச்சரியப்பட்டதை ஒப்புக்கொள்ள மறுக்கவில்லை.

சூர்யா பேட்டிங் செய்வதைப் பார்த்தால் அவர் ஆடுகளத்தில் அல்ல, வீடியோ கேமில் பேட்டிங் செய்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் கூறிய காலகட்டம் இது.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி பந்துவீச்சாளர்கள் பொதுவாக சூர்யாவின் முன் உதவியற்றவர்களாகத் தெரிவது மற்றும் எதிரணி பயிற்சியாளரின் திகைப்புடன் கூடிய வெளிப்பாடு, 1970கள் மற்றும் 80களில் சர் விவியன் ரிச்சர்ட்ஸின் ஆதிக்க சகாப்தத்தை நினைவூட்டுவதாக இருந்தது.

கிரிக்கெட் மட்டை இடி முழக்கத்தை ஏற்படுத்தியபோது..

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பையின் போது, மெல்போர்னில் ஜிம்பாப்வேக்கு எதிரான அவரது அற்புதமான ஸ்டைல், உலகம் முழுவதிலுமிருந்து வந்த எல்லா செய்தியாளர்களையும் சிறிது நேரம் தங்கள் வேலையை நிறுத்தி அவரது பேட்டிங்கைப் பார்க்க கட்டாயப்படுத்தியது.

தொழில்முறை வாழ்க்கையில் ஒரு புதிய வீரருக்கு அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களின் அத்தகைய மரியாதை, அன்பு அத்தனை எளிதில் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்ட வெற்றிக்குப் பிறகு புத்தாண்டில் அதாவது 2023ல் சூர்யாவுக்கு பரிசுகள் பொழிந்தன.

ராஜ்கோட்டில் இலங்கைக்கு எதிராக அபார சதம் அடித்த அவருக்கு டி20 வடிவத்தில் துணைக் கேப்டன் பொறுப்பு கிடைத்தது.

ஒரு நாள் அணியில் சஞ்சு சாம்சனை விட அவர் முன்னுரிமை பெற்றார். கூடவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஆனால், அன்றிலிருந்து காலச் சக்கரம் வித்தியாசமான முறையில் சுழன்றது.

டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான பந்தயத்திற்கு ஒரு நாள் முன்பு 32 வயதான சூர்யகுமார் யாதவை நான் சந்தித்தேன்.

சூர்யாவின் முகத்தில் அதே பழைய உற்சாகமும், அவரது கைகுலுக்கலில் பரிச்சயமான அரவணைப்பும் மகிழ்ச்சியும் தெரிந்தது.

சூர்யாவின் தினசரி பழக்க வழக்கம் மற்றும் பயிற்சியில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு அவர் தனது விளையாட்டில் எச்சரிக்கையாகவும் விடாமுயற்சியுடனும் இருந்ததைப் போலவே இன்றும் அவரது பாணி அப்படியே உள்ளது.

'பிரகாசம் மீண்டும் தோன்றும்'

அவருக்கு என்னதான் நேர்ந்தது? இந்தக் கேள்வியை அவரிடம் நேரிடையாகக் கேட்க சிறிது தயங்கினேன். அதனால் வியர்வையில் அவர் நனைந்திருப்பதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னேன்.

" கடினமாக உழைப்பது மட்டுமே நம் கையில் உள்ளது. பலன் கொடுப்பது கடவுளின் வேலை. அதனால்தான் நான் என் பக்கத்திலிருந்து கடினமாக உழைக்கிறேன். கடவுள் மட்டுமே பலனை கொடுக்க முடியும்," என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

இவ்வாறு கூறிக்கொண்டே சூர்யகுமார் யாதவ் முன்னே செல்கிறார். டெல்லியிலும் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. அவர் மீண்டும் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார்.

ஆனால், போட்டி முடிந்ததும் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் சூர்யகுமார் யாதவ் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படங்களும் வெளியாயின.

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சாதிக்கும் அபாரத்திறமை சூர்யாவிடம் உள்ளது என்பது உலகம் முழுவதற்கும் தெரியும். அத்தகைய வீரர்கள் உலகக் கோப்பையை வென்று தருவார்கள் என்பதால் இந்தியா அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஐபிஎல் போட்டிக்கு முன்பு பாண்டிங் கூறியதை இங்கே குறிப்பிடுவது சுவாரசியமாக இருக்கும்.

சூர்யாவின் ஆட்டத்தில் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரிய தருணங்களில் மேட்ச்-வின்னராக பிரகாசிக்கும் பழைய அணி வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை அவர் தனக்கு நினைவுபடுத்துகிறார் என்று அதிகபட்ச ஒருநாள் உலகக் கோப்பைகளை விளையாடியுள்ள பாண்டிங் கூறினார்.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் 18 இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆகாமல் இருந்த பேட்ஸ்மேன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று இன்னிங்ஸ்களிலும் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பிய அதிர்ச்சி அனுபவத்தை சந்திக்க வேண்டியிருந்தது. கூடவே இந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் ஒவ்வொரு முறையும் அவர் முதல் பந்திலேயே அவுட் ஆனதுதான் வேதனையான விஷயம்.

ஆனால், கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடப்பது முதல் முறை அல்ல. ஒருநாள் கிரிக்கெட் பற்றி மட்டும் பேசினால், அலெக் ஸ்டீவர்ட், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன் போன்ற ஜாம்பவான்கள் கூட முதல் பந்திலேயே அதாவது கோல்டன் டக்கில் அவுட் ஆகியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் கோல்டன் டக்கிற்கு பலியாகாமல் இருந்திருக்கலாம், ஆனால் 1994 இல், அவரும் தொடர்ச்சியாக மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார்.

ஒருவர் எவ்வளவு அற்புதமான வீரராக இருந்தாலும் அவர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இதுபோன்ற ஒன்றை கடக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு கிரிக்கெட் திடீரென்று இதயமில்லாத ஒன்றாக தோன்றத்தொடங்கும் என்று இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நல்ல விஷயம் என்னவென்றால், அவரது அணி சூர்யா மீது நம்பிக்கை வைத்துள்ளது. ”10 பந்துகள் காத்திருங்கள். மூன்று பவுண்டரிகள் அடித்தவுடன் அந்த பழைய சூரியாவை நீங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்,” என்று லெக் ஸ்பின்னர் பீயூஷ் சாவ்லா சூரியாவுக்கு ஆதரவாகப்பேசியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: