கடைசி ஓவரில் 'மிரட்டிய' தோனி; ராஜஸ்தானின் 'சுதாரிப்பால்' கைநழுவிய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL
கடைசி ஓவரில் சி.எஸ்.கேவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார் எம்.எஸ்.தோனி. சென்னை அணி வெல்லும் என ரசிகர்கள் நினைத்தாலும் அவர்களின் ஆசைக்கு தனது வேகப்பந்து வீச்சின் மூலம் முட்டுக்கட்டை போட்டார் ராஜஸ்தான் வேகம் சந்தீப் சர்மா. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிபெற்றது.
'கேப்டன்' தோனிக்கு 200-ஆவது ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி சார்பில் ஆகாஷ் சிங் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் மஹீஷ் தீக்சனாவும் களமிறக்கப்பட்டார்.
பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 200-ஆவது ஆட்டத்தில் களமிறங்கினார் எம்.எஸ்.தோனி.

பட மூலாதாரம், BCCI/IPL
பட்லரின் அரைசதமும் படிக்கலின் நிதானமும்
யாசஷ்வி ஜெய்ஷ்வால் - ஜாஸ் பட்லர் ஜோடி ஓபனிங் செய்தது. முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கினார் ஜெய்ஷ்வால். இருப்பினும் துசார் தேஷ்பாண்டே வீசிய பந்தில் ஷிவம் துபே வசம் கேட்ச் கொடுத்து 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படிக்கல் பட்லருடன் இணைந்து நிதானம் காட்டினார்.
2வது விக்கெட்டிற்கு பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி 88 ரன்கள் வரை சேர்த்தது. பவர்பிளேவில் மட்டுமே ராஜஸ்தான் அணி 57 ரன்களை குவித்தது. ஆட்டத்தில் ராஜஸ்தானின் கை ஓங்கியிருந்தது. பேட்டிங்கில் படிக்கலும் பட்லரும் சென்னை களத்தில் மிரட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த `மேஜிக்` சுழற்பந்துவீச்சாளரை கொண்டு வந்தார் எம்.எஸ்.தோனி
ராஜஸ்தான் வேகத்திற்கு பிரேக் போட்ட ஜடேஜா

பட மூலாதாரம், BCCI/IPL
ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது 9வது ஓவர்தான். அதனை ரவீந்திர ஜடேஜா வீசினார். அரைசதம் விளாசும் முனைப்பில் வேகமாக ஆடிக்கொண்டிருந்த படிக்கலை தனது சுழற்பந்துவீச்சு மூலம் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்து வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனையும் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
அடுத்தடுத்து 2 விக்கெட்களால் ராஜஸ்தானின் ரன் குவிப்பு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. ஜடேஜாவின் சுழல் சென்னை அணிக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.
சென்னை ஆடுகளத்திற்கு நன்கு பரிட்சயமான அஷ்வினை இடது கை சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதமாக முன்கூட்டியே பேட்டிங் ஆட அனுப்பி வைத்தது ராஜஸ்தான் அணி.
முதல் பந்திலேயே அவர் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மொயின் அலி தவறவிட்டார். தனது பங்கிற்கு பொறுப்புடன் ஆடிய அஷ்வின், 22 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து விடைபெற்றார்.
மொயின் அலி செய்த '3 தவறுகள்'
தீக்ஷனா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை படிக்கல் எதிர்கொண்டார். 15 ரன்கள் எடுத்திருந்தபோது பந்து எட்ஜில் பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த மொயின் அலி வசம் கேட்சாக சென்றது. ஆனால் மொயின் அலி கேட்சை தவறவிட்டார். பதிலுக்கு அடுத்த பந்தே சிக்சருக்கு பறக்கவிட்டார் படிக்கல். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான்.
ஜடேஜா வீசிய 9வது ஓவரில் அஷ்வினை கோல்டன் டக் அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கொடுத்த கேட்சை மீண்டும் அதே பாணியில் நழுவவிட்டிருந்தார் மொயின் அலி.
ராஜஸ்தானின் வேகம் ஒருபக்கம் கட்டுக்குள் வந்தாலும் மறுபக்கம் நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்தார் அஷ்வின். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தபோதே அவரை ரன் அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையும் சொதப்பலான ஃபீல்டிங்கால் அதை தவறவிட்டார் மொயின் அலி.
பாதி தூரம் வரை ஓடிவிட்டு ரன் எடுக்காமல் மீண்டும் க்ரீஸிற்குள் திரும்பினார் அஷ்வின். பெரிய இடைவெளியில் ரன் அவுட்டாக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும் தோனியின் கைக்கு பந்தை வழங்காமல் வேறு திசையில் வீசினார்.
சென்னைக்கு 176 ரன்கள் இலக்கு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
30 ரன்கள் எடுத்திருந்தபோது அஷ்வினின் கேட்சை பிடித்தார் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மகாலா. அப்போது அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக 16வது ஓவரை வீசினார் மொயின் அலி. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பட்லரை 52 ரன்களில் வெளியேற்றினார் மொயின் அலி.
அடுத்து வந்த ஹெட்மயர் 18 பந்துகளில் 30 ரன்கள் விளாச ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் 95 ரன்கள் விளாசியிருந்தபோதிலும் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்களை மட்டுமே வழங்கியது சென்னை அணி. அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் அதாவது கடைசி 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே சென்னை அணி வழங்கியது.
சொதப்பிய சி.எஸ்.கே.வின் மிடில் ஆர்டர்
176 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நடப்பு தொடரில் இதுவரை சிறப்பாக ஆடி வந்த ருத்துராஜ் கெய்க்வாட், இந்த முறை 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரஹானே பொறுப்புடன் ஆடினாலும் 31 ரன்களில் அவரும் விடைபெற்றார்.
மிடில் ஆர்டர்கள் கடுமையாக சொதப்பின. ஷிவம் துபே 8, மொயின் அலி 7, இம்பாக் ப்ளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடு 1 ரன்கள் எடுத்து வெளியேறினர். கான்வே அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணி நெருக்கடிக்கு உள்ளானது.
வெற்றிக்குப் போராடிய தோனி - ஜடேஜா
பின்னர் ஜடேஜா - தோனி இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் துவங்கினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா பந்துவீசினார். முதல் 2 பந்துகள் வைட் பாலாக மாறியதால் ராஜஸ்தானுக்கு அழுத்தம் அதிகரித்தது.
பின்னர் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார் தோனி. ஹாட்ரிக் சிக்சரை பலரும் எதிர்பார்த்த நிலையில் சந்தீப்பின் துல்லியமான பந்துவீச்சால் தோனி 1 ரன் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த ஜடேஜா ஆட்டத்தை முடித்து வைப்பார் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் அவராலும் முடியவில்லை. கடைசி 1 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன. தோனி ஸ்டிரைக்கில் இருந்தார். இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய இயலாமல்போனது. சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.












