இளம் வீரர்கள் எழுச்சியால் இந்திய கிரிக்கெட்டில் கோலி, ரோகித் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அண்மைக் காலமாக இந்தியக் கிரிக்கெட் அணி பல புதிய முகங்களைக் கண்டு வருகிறது. அவர்களில் பலர் மிகச் சிறப்பாக ஆடி அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார்கள். இந்தச் சூழலால் இந்திய அணி ஒரு பெரும் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்திய அணியில் திடீரென ஏற்பட்டிருக்கும் புதுமுக வீரர்களின் படையெடுப்பால் உருவாகி இருக்கும் சிக்கல்கள் என்ன?
இந்திய கிரிக்கெட் கடந்த 1970களில் இருந்து ஏராளமான மாற்றங்களைக் கண்டுள்ளது. பல தலைமுறை வீரர்களைப் பார்த்துள்ளது. கவாஸ்கர் முதல் டெண்டுல்கர் வரை அனைவருமே காலத்தின் மாற்றத்துக்கு அடிபணிந்துதான் சென்றிருக்கின்றனர்.
ஏனென்றால், சுனில் கவாஸ்கர், டெண்டுல்கர் அல்லது ரோஹித் சர்மா, விராட் கோலி என எந்த வீரராக இருந்தாலும், குறிப்பிட்ட காலம்தான் விளையாட முடியும். அவர்களின் மனநிலை தகுதியாக இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது. எதிர்கால தலைமுறையினருக்கு வழிவிட வேண்டிய நெருக்கடியால் மாற்றத்துக்கு உட்பட்டு, தங்களின் இடங்களை விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
அதிலும் 2000ம் ஆண்டுக்குப்பின் இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் வருகை, தொழில்நுட்பம், கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் அதிகரிப்பு என ரசிகர்கள் மனதிலும், இந்திய கிரிக்கெட்டிலும் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கோலி, ரோகித் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா?
கபில்தேவ், அசாருதீன், மனோஜ் பிரபாகர், சித்து, வெங்கடேஷ் பிரசாத், ஸ்ரீகாந்த், கவாஸ்கர், அமர்நாத் என வயதான அனுபவம் மிகுந்த வீரர்கள் இந்திய கிரிக்கெட்டை விட்டுச் செல்லும்போது, பெரிய தலைமுறை மாற்றத்தை இந்திய அணி எதிர்கொண்டது.
அந்த நேரத்தில் இந்திய அணி பல்வேறு சவால்களையும், சறுக்கல்களையும், தலைமைப் பதவிக்கு யார் சரியானவர் என்பதில் பல்வேறு பரிசோதனைகளையும் நடத்தியது. நீண்டகாலத்துக்குப்பின் கங்குலி தலைமையில் ஒரு அணியை பிசிசிஐ உருவாக்கியது.
அதன்பின் கங்குலி, சச்சின், விவிஎஸ் லட்சுமண், திராவிட், முகமது கைப், யுவராஜ் சிங் என ஒரு தலைமுறை வீரர்கள் சென்றபின் தோனியின் கீழ் ஒரு அணி கட்டமைக்கப்பட்டு, பெரிய மாற்றத்தைச் சந்தித்தது. 2011ம் ஆண்டு இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் கூட்டணியோடு உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வென்றது.
தோனியின் காலம் முடிந்து, அடுத்ததாக விராட் கோலி, ரோஹித் சர்மா காலத்தில் இந்திய அணி நிற்கிறது. இப்போது, ரோகித் சர்மா, விராட் கோலியின் காலமும் முடிந்து, அடுத்த தலைமுறையை நோக்கிய மாற்றத்துக்கு இந்திய அணி தயாராகி வருகிறது என்பதையே சமீபத்திய போட்டிகள் காட்டுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ்கான், கில், உள்ளிட்ட இளம்வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்ததைப் பார்க்கும்போது, கோலி இல்லாமல், ரோஹித் இல்லாமலும் வெற்றியை அடைய முடியும் என்ற மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்பதை ஏற்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
மாற்றங்கள் எப்படியும் நடக்கலாம்
கிரிக்கெட்டில் மாற்றம் என்பது பல வகைகளில் வரும். வலிந்து திணிக்கப்படும் மாற்றம், இயற்கையாகவே ஏற்படும் மாற்றம், கட்டாய மாற்றம் என இவற்றைக் கூறலாம்.
சீனியர் வீரர்கள் இடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து விளையாடும்போது, பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும். அடுத்தடுத்து இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்க முடியாத நிலை ஏற்படும். இந்த நேரத்தில் வேறு வழியின்றி சீனியர் வீரர்களை அனுப்பிவிட்டு இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.
உதாரணமாக, மேற்கிந்தியத்தீவுகள் அணியில் சீனியர் வீரர்கள் கிறிஸ் கெயில் போன்ற பல வீரர்கள் அணியை விட்டுநகராமல் இருந்தபோது, வேறுவழியின்றி அனுப்பும்நிலை ஏற்பட்டது. அப்போது இளம் வீரர்கள் அணிக்குள் வரும்போது, எதிர்பார்த்த முடிவுகளை பெறுவதில் சிரமம் இருந்தது. பழைய மேற்கிந்தியத்தீவுகள் என்ற பிம்பம் உடைந்தது.
இயற்கையாக நிகழும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாது. மூத்த வீரர்கள் தங்களின் பேட்டிங், பந்துவீச்சு திறன் குறைந்தவுடன் தாங்களாகவே ஓய்வு அறிவித்துவிடுவர். அப்போது காலத்தின் கட்டாயத்தால் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும்.
இந்திய அணி கட்டாயமான ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவே நிபுணர்கள் கருதுகிறார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களின் காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிந்துவிடலாம் என கிரிக்கெட் பலரும் கருதுகிறார்கள். அதன்பின் இளம் வீரர்களைக் கொண்ட அணியைத்தான் பார்க்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
இளம் வீரர்கள் எழுச்சி
ஏற்கெனவே இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சர்ஃபிராஸ்கான், கில், கேஎல்ராகுல், ரிஷப்பந்த், இஷான் கிஷந், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா,ரிங்குசிங், குல்தீப் யாதவ், சஹல் என ஏராளமான இளம் வீரர்களுக்கு போதுமான பயிற்சியும், அனுபவமும் வழங்கப்பட்டுவிட்டது.
விராட் கோலி இல்லாமல் டெஸ்ட் வெற்றி சாத்தியமாக, ரோஹித் சர்மா இல்லாமல் பவர்ப்ளேயில் ஸ்கோர் உயருமா என்ற கேள்விகள் எல்லாம் வழக்கிழந்துவிட்டன. வலுவான தொடக்கத்தை ஜெய்ஸ்வால் அமைத்து தருகிறார், தொடர்ந்து இரு இரட்டை சதங்களை அடித்து தனது ஃபார்மை நிருபித்துள்ளார். டி20 போட்டிக்கும் தன்னை தகமைத்துக் கொள்ளும் வகையில் தனது ஆட்டத்தையும் ஜெய்ஸ்வால் வடிவமைத்துள்ளார்.
அதேபோல் சர்ஃபராஸ் கான் ஏராளமான உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி, அணியில் எந்த நிலையிலும் தன்னால் களமிறங்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளார். இது தவிர கில், ஸ்ரேயாஸ் என நடுவரிசைக்கு வலுவான பேட்டர்கள் உள்ளனர். ஆதலால் கோலி, ரோஹித் சர்மா இல்லாத அணியாலும் வெற்றி பெற முடியும் என்பதை இளம் வீரர்கள் நிரூபித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் சச்சின், கங்குலி, திராவிட் இல்லாத அணியைப் பார்ப்பதே கடினம் என ரசிகர்கள் வேதனைப்பட்ட காலம் நகர்ந்து, அதன்பின் இளம் வீரர்கள் வெற்றியைக் குவிக்கவில்லையா?

பட மூலாதாரம், Getty Images
தலைமுறை மாற்றத்துக்கு இந்திய அணி தயாராகிறதா?
“இந்திய அணி தற்போது தலைமுறை மாற்றத்தை நோக்கித்தான் நகர்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. அந்த மாற்றம் இல்லாவிட்டால் அடுத்தக் கட்டத்துக்கு அணியை நகர்த்த முடியாது. ஜெய்ஸ்வால் அருமையான தொடக்க வீரராக வளர்ந்து வருகிறார், ஷிகர் தவண், ஜெயசூர்யாவின் கலவையாக மிகுந்த ஆக்ரோஷமான, நேர்த்தியான ரீதியிலும் விளையாடி வருகிறார்.” என்கிறார் விளையாட்டுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பத்திரிகையாளர் முத்துக் குமார்.
“ரோஹித்சர்மாவுக்கு இப்போதே வயது 36 ஆகிவிட்டது. இனிமேல் தொடர்ந்து விளையாடமுடியுமா எனத் தெரியவில்லை. ஆதலால், ரோஹித் சர்மாவின் இடத்துக்கு கில், கே.எல்.ராகுல்தான் வரமுடியும். 3-ம் இடத்துக்கு காலப்போக்கில் கே.எல்.ராகுல் கூட வரலாம். ஏனென்றால் கில்லின் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை. நிலைத்தன்மையை வளர்க்காவிட்டால், சுப்மான் கில்லின் இடத்தையும், ரஜத் பட்டிதார், சர்ஃபிராஸ்கான், இஷான் கிஷன் போன்ற வீரர்களால் பறிக்கப்படலாம்.” என்கிறார் அவர்.
ஒரு வீரர் எந்த இடத்தில் விளையாடப் போகிறோம், எந்த இடம் நமக்குச் சரியாக வரும் என்பதை பேட்டர்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் முத்துக்குமார்.
“ஒரு காலத்தில் விவிஎஸ் லட்சுமணை தொடக்க வீரராக சிட்னி ஆட்டத்தில் களமிறக்கினார்கள். அவரும் சதம் அடித்து தன்னை நிரூபித்தார். ஆனால், அடுத்த ஆட்டத்திலேயே வெளிப்படையாக பேசிய விவிஎஸ், என்னுடைய இடம் 4வது டவுன்தான் ஒபனிங் என்னுடைய இடம் இல்லை என்று தெரிவித்தார். ஆதலால் ஒரு பேட்டருக்கு தன்னுடைய இடம் என்ன என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும், அந்த இடத்தை தக்கவைப்பதும் அவர்தான். கோலி எவ்வாறு 3வது இடத்தை தக்கவைத்தாரோ அதுபோல சுப்மான் கில், தொடக்க வீரராக அல்லது ஒன்டவுனா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்”

பட மூலாதாரம், Getty Images
கோலி நிலை என்ன?
விராட் கோலியின் நிலை குறித்து முத்துக் குமார் பேசுகையில் “ விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார், மற்றொரு டெஸ்டில் விளையாடாமல் தவிர்க்கிறார். தான் விளையாட நினைக்கும்போது ப்ளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு இருக்கும், அவருக்கான இடம் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பது தெரியாது. வரும் காலத்தில் விராட் கோலி கூட பெஞ்சில் அமரவைக்கப்படலாம், அதற்கான காலம் வரலாம்.”
“டெஸ்ட் போட்டிகளில் விரும்பி ஆடக்கூடிய கோலி, தென் ஆப்பிரிக்கத் தொடர், இங்கிலாந்து தொடரிலும் விளையாடவில்லை. ஓய்வறையில்கூட ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். ஆனால் கோலி செய்யக்கூடிய அதே பேட்டிங்கை எதிர்காலத்தில் சுப்மான் கில், பட்டிதார், சர்ஃபாரஸ்கான் செய்யலாமே. ஆதலால், கோலியின் இடம் காலத்தால் நிரப்பப்பட்டுவருகிறது. ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் எடுத்த முடிவைக் கூட எதிர்காலத்தில் கோலி எடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரிக்கி பாண்டிங் நிலை
ரோஹித் சர்மா, கோலிக்கான இடம் அணியில் நீடிக்குமா என்பது குறித்து முத்துக் குமார் கூறுகையில் “ ரோஹித் சர்மா, கோலி இருவருமே பெரிய ஜாம்பவான்கள். இருவரையும் அணியிலிருந்து செல்லுங்கள் என்று பிசிசிஐ நேரடியாக கூறமாட்டார்கள். ரிக்கி பாண்டிங் சிறந்த கேப்டன், பேட்டராக இருந்தார், ஆனால், ஒரு கட்டத்துக்குப்பின் பாண்டிங்கிடம் அந்நாட்டு வாரியம் எவ்வாறு நாகரீகமாகக் கேட்டுக்கொண்டு ஓய்வு பெறச் செய்ததோ அதுபோன்று நடக்கலாம். ரோஹித், கோலியை பெஞ்சில் அமரவைப்பது அவமானப்படுத்துவது போல் என்பதால், ஓய்வுமுடிவை நீங்களே எடுக்கலாம் என்று வாய்ப்பை பிசிசிஐ எதிர்காலத்தில் தரலாம்.“
“இப்போதுள்ள நிலையில் இந்திய அணியில் ரோஹித், கோலி மட்டுமே 30வயதுக்கு மேற்பட்ட வீரர்கள். மற்ற அனைவரும் 20வயதுகளில் இருக்கும் வீரர்கள். இந்த இளம் அணியைக் கட்டமைக்க ரோஹித், கோலியின் இடங்களும் காலியானால், முழுமையான அணி கட்டமைக்கப்படும். இதுதான் எதிர்காலத்தில் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












