நகர எல்லை தாண்டாத துறவி, 570 ஆண்டுக்கு முன்பே உலக வரைபடத்தை துல்லியமாக வரைந்தது எப்படி?

மேப்பா முண்டி

பட மூலாதாரம், CalimaX/Alamy

    • எழுதியவர், ஆனா பிரெஸானின்
    • பதவி, பிபிசி

வெனிஸில் உள்ள சிறிய தீவில் இருந்து, 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஒருவர், உலகின் வியக்கத்தக்க துல்லியமான வரைபடத்தை வடிவமைத்த கதை தெரியுமா?

வெனிஸில் உள்ள செயின்ட் மார்க் நூலகத்தின் இரண்டாவது மாடியில், அவர் வடிவமைத்த உலக வரைபடம் ஒரு முழு அறையையும் ஆக்கிரமித்திருந்தது. (2.4மீ x 2.4மீ அளவுள்ள அது ஒரு 'கிங் சைஸ்' படுக்கையை விட பெரியது.

1459-இல் முடிக்கப்பட்ட 'மேப்பா முண்டி' எனப்படும் இந்த வரைபடம், அக்காலத்தைய புவியியல் அறிவின் தொகுப்பாகும். இது உலகின் மிகப்பெரிய இடைக்கால உலக வரைபடமாக கருதப்படுகிறது.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவைக் காண்பிக்கும் இந்த நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட உலக வரைபடம், சிறிய வெனிஸ் தீவான சான் மைக்கேலில் வாழ்ந்த ஃப்ரா மௌரோ என்ற துறவியின் தலைசிறந்த படைப்பாகும்.

இந்தத் துறவி வெனிஸுக்கு வெளியே காலடி எடுத்து வைத்ததே இல்லை. ஆனாலும், அவர் வடிவமைத்த வரைபடம் நகரங்கள், மாகாணங்கள், கண்டங்கள், ஆறுகள் மற்றும் மலைகளைச் சித்தரிப்பதில் வியக்கத்தக்க வகையில் துல்லியமாக உள்ளது.

இந்த வரைபடம் உருவாக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் கழித்தே கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் கடல் வழியாக தனது பயணத்தை மேற்கொண்டார் என்பதால், அந்த வரைபடத்தில் அமெரிக்கா இல்லை; ஆஸ்திரேலியாவும் இல்லை. ஆனால், ஜப்பான் (அல்லது ஃப்ரா மௌரோவின் வார்த்தைகளில், 'சிபாங்கோ') உள்ளது. இதன்மூலம், மேற்கத்திய அட்டவணையில் ஜப்பானின் பெயர் முதன்முதலில் இடம்பிடித்தது.

இன்னும் ஆச்சரியப்படும் விதமாக, 1488-இல் போர்ச்சுகீசியர்கள் நன்னம்பிக்கை முனையை சுற்றி வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆப்பிரிக்காவை சுற்றி வரக்கூடியதாக அவரது வரைபடம் சரியாக வரையப்பட்டிருந்தது.

"இது இன்று நமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான வரைபடம்," என்று ‘ஹியர் பிகின்ஸ் த டார்க் சீ’ (Here begins the dark sea) புத்தகத்தின் ஆசிரியர் மெரிடித் ஃபிரான்செஸ்கா ஸ்மால் கூறுகிறார். இது நவீன காலத்தில் எஞ்சியிருக்கும் மிகவும் முழுமையான இடைக்கால வரைபடம் என்றும் விவரித்தார்.

"மதத்தை விட அறிவியலை அடிப்படையாகக் கொண்ட முதல் வரைபடம் இது. ஹியர்ஃபோர்ட் வரைபடம் மதப் பிரசாரமாகும்," என்றார் அவர்.

மிக பிரமாண்ட வரைபடம்

மேப்பா முண்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃப்ரா மௌரோ

ஃப்ரா மௌரோ தனது வரைபடத்திற்கு அறிவியல் அணுகுமுறையை கையாண்டார்.

உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் பழமையான கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டுள்ள செயின்ட் மார்க் நூலகத்தின் வெள்ளைப் பளிங்கு படிக்கட்டுகளில் ஏறிய உடனேயே உங்கள் கண்களைக் கவரும் இந்த வரைபடத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், அதன் பிரமாண்டம்தான்.

"இது மிகப்பெரியது, அழகானது, அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று வரலாற்றாசிரியர் பியெரால்வைஸ் சோர்ஸி கூறுகிறார். நாடுகள் மற்றும் கண்டங்களின் வெளிப்புறங்களுக்கு அப்பால், ஃப்ரா மௌரோவின் வரைபடம் அழகான அரண்மனைகள், பாலங்கள், பாய்மரக் கப்பல்கள், நீல அலைகள் மற்றும் பெரிய கடல் உயிரினங்கள் மற்றும் 'கார்டிக்லியோ’ எனப்படும் 3,000 சிவப்பு மற்றும் நீல நிறத்தாலான குறிப்புகளைக் கொண்ட ஒரு அற்புதமான தங்க மற்றும் நீல ஓவியமாகும். இதில் பழங்கால வெனிஸ் மொழியில் எழுதப்பட்ட சிறு குறிப்புகள் கதைகள் மற்றும் புனைவுகளைக் கூறுகின்றன.

உதாரணமாக, 'கார்டிக்லியோ’ என்பது நார்வேயில் வெனிஸ் வணிகர் பியட்ரோ குவெரினி கப்பல் விபத்துக்குப் பிறகு கரைக்கு வந்த இடத்தைக் குறிக்கிறது. இதனை கதையாக விவரிப்பது போல், அவர் விபத்தில் இருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், மீன் ஒன்றை கொண்டு வந்ததும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் வெனிஸ் நாட்டுக்கு பாக்கலா (ஒருவகை மீன்) மீதான வேட்கை ஆரம்பித்தது.

ஒரே இடத்தில் இருந்தபடி உலக வரைபடத்தை வரைந்தது எப்படி?

மேப்பா முண்டி

பட மூலாதாரம், Bildagentur-online/Getty Images

மற்றொரு கார்டிகிலியோ 'தர்சே' என்ற இடத்தைக் குறிக்கிறது. இது பைபிளில் குறிப்பிடப்படும் கிழக்கிலிருந்து வந்த மூன்று ஞானிகளின் தேசம் என கருதப்படுகிறது. இது, அக்காலத்தில் சீனாவிற்கும் மங்கோலியாவிற்கும் இடையில் எங்காவது அமைந்துள்ளதாக கருதப்பட்டது.

இந்தச் சிறுகுறிப்புகள் அனைத்தும் வரைபடத்தில் தெளிவாக உள்ளன. மேலும் தற்போதைய பேச்சு வழக்கு 15-ஆம் நூற்றாண்டின் மொழியை பெருமளவு ஒத்திருப்பதால் வெனிஸ் மொழி பேசுபவர்களுக்குப் புரிந்துகொள்வது எளிதானது. புளோரன்ஸ் அருங்காட்சியகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடத்தில் இந்த எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதே நூலகத்தில் ஒரு திரையில் இந்த வரைபடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு அறிவார்ந்த துறவியின் மனதில் நுழைந்து அவரது இடைக்கால கண்களால் உலகைப் படிக்கும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.

அது ஒரு சிறிய உலகம் இல்லை. ஃப்ரா மௌரோ தனது வாழ்நாள் முழுவதும் காயல் உப்பங்கழியில் உள்ள மடாலயத்தில் வாழ்ந்தவர். அப்போது 'வரைபடத்தின் தலைநகராக' இருந்த செழிப்பான வர்த்தக நகரமான வெனிசுக்கு வந்துசென்ற பயணிகள் மற்றும் வணிகர்களின் அறிவிலிருந்து பயனடைந்ததால்தான் ஒரே இடத்தில் இருந்தபடியே அவரால் உலக வரைபடத்தை வரைய முடிந்ததாக செயிண்ட் மார்க்ஸ் நூலகர் மார்கரெட்டா வென்சுரெல்லி கூறுகிறார்.

"வரைபடங்கள் வர்த்தகத்திற்கு அடிப்படையாக இருந்தன. ஏனென்றால் உங்களிடம் ஒரு நல்ல வரைபடம் இருந்தால், நீங்கள் எல்லா இடங்களுக்கும் செல்லலாம்," என்று வரலாற்றாசிரியர் பியெரால்வைஸ் சோர்ஸி கூறினார். "வெனிஸில் வரைபடவியல் அடிப்படையில் ஒவ்வொரு புதுமையும் வரவேற்கப்பட்டது. நல்ல ஊதியமும் அவற்றுக்குக் கிடைத்தது," என்றார் அவர்.

மார்கோபோலோவின் பயணத் தகவல்கள்

மேப்பா முண்டி

பட மூலாதாரம், Mo Peerbacus/Alamy

படக்குறிப்பு, செயின்ட் மார்க் நூலகம் உலகின் மிக முக்கியமான நூல்களை கொண்டுள்ளது.

ஃப்ரா மௌரோவின் வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணியான மார்கோ போலோ மூலமே ஆசியாவைப் பற்றி அறிந்துகொண்டார். மார்கோ போலோ, மௌரோவின் காலத்துக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு தனது பயண தகவல்களை வெளியிட்டார். வரைபடத்தில், 150 இடங்கள் மார்கோபோலோவின் பயணக்குறிப்புகளில் நேரடியாகக் கண்டறியப்படுகின்றன.

உதாரணமாக, ஆதாமின் மலை இலங்கைத் தீவில் (இன்றைய இலங்கை) வைக்கப்பட்டது, அங்கு போலோவின் புராணக்கதைகளின்படி, முதல் மனிதனின் உடல், அவரது பற்கள், மற்றும் உணவைப் பெருக்கும் சக்தி இருப்பதாக நம்பப்பட்ட கிண்ணத்துடன் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

போலோவைத் தவிர, ஃப்ரா மௌரோ உலகம் முழுவதும் பல ஆதாரங்களைக் கொண்டிருந்தார். தற்கால மேற்கத்தியக் கண்களுக்கு இந்த விளக்கப்படம் தலைகீழாகத் தெரிகிறது. தெற்கு மேலே உள்ளது, அவர் வட ஆப்பிரிக்க புவியியலாளர் முஹம்மது அல்-இத்ரிசியின் 12-ஆம் நூற்றாண்டின் வரைபடத்தைப் போல அரபு வரைபடத்தால் ஈர்க்கப்பட்டார் என்று கொள்ளலாம்.

ஃப்ரா மௌரோ 'சொர்க்கத்தின் தொலைவு' (Distance of Heavens) என்று பட்டியலிட்ட எண்கள் கணிதவியலாளரும் வானவியலாளருமான கேம்பனஸ் டி நோவாராவின் எண்கள்.

"உலகின் மையத்திலிருந்து பூமியின் மேற்பரப்பு வரை 3,245 மைல்கள் உள்ளன. உலகின் மையத்திலிருந்து நிலவின் வானத்தின் கீழ் மேற்பரப்பு வரை 1,07,936 மைல்கள் உள்ளன," என்பது உள்ளிட்ட பலவற்றை அவர் வரைபடத்தின் மேல் இடது மூலையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஃப்ரா மௌரோ ஒரு ஆரோக்கியமான சந்தேகத்தை வெளிப்படுத்தினார். சில சமயங்களில் விமர்சிக்க அவர் தயங்கவில்லை.

கி.பி. 150-இல் கிளாடியஸ் டாலமியால் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் எழுதப்பட்ட நூலான டாலமியின் புவியியல் நூலை பல நூற்றாண்டுகளாக தொலைந்து போயிருந்தது. அது, 1400-களில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மௌரோ அதையும் தனது ஆதாரமாகப் பயன்படுத்தினார்.

பகுத்தறிவுடன் சிந்தித்த ஃப்ரா மௌரோ

மேப்பா முண்டி

பட மூலாதாரம், The History Collection/Alamy

படக்குறிப்பு, ஃப்ரா மௌரோவின் ஆசியாவிற்கான முக்கிய ஆதாரமாக வணிகர் மற்றும் வெனிஸை சேர்ந்த மார்கோ போலோ இருந்தார்.

அவரது பகுத்தறிவு மனப்பான்மை, ஆதாமையும் ஏவாளையும் நட்சத்திரக் கூட்டத்தின் வெளியே ஏதேன் தோட்டத்தில் வைத்த விதத்திலும் வெளிப்பட்டது. இது சொர்க்கம் பூமியில் ஒரு இடம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. மதம் மற்றும் புவியியல் ஆகியவற்றைப் பிரித்தது, ஒரு இடைக்கால மனிதனின் முற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

இதுபோல பல புதுமைகளைக் கொண்டிருக்கிறது இந்த வரைபடம். கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு சில தசாப்தங்களுக்கு முன்னர் இந்த வரைபடம் முடிக்கப்பட்டது. இதனால் ஃப்ரா மௌரோவின் இந்த வரைபடத்தை, இடைக்காலத்திற்கும் மறுமலர்ச்சிக்கும் இடையிலான புவியியல் இணைப்பாக நாம் கருதலாம்.

சம கால பார்வையாளர்களுக்கு, வரைபடங்கள் ஒரு காலத்தில் நடைமுறைக் கருவிகள் மட்டுமல்ல, அழகுக்கான விஷயமாகவும் இருந்தன என்பதை இது நினைவூட்டுகிறது. வரைபடங்கள் மிகவும் அசாதாரணமான கதைகளைச் சொல்லும் ஒரு வழியுமாகும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)