ஓர் இளம்பெண்ணின் மரணமும், பழிவாங்குவதற்காக நடந்த கொடூரக் கொலைகளும்

அன்ஷிகா வழக்கு

பட மூலாதாரம், Ankit Srinivas

படக்குறிப்பு, அன்ஷிகா மற்றும் அன்ஷு கேசர்வானியின் திருமணம் 2023இல் ஆடம்பரமாக நடைபெற்றது.
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் இரு குடும்பங்களின் பெரும் துன்பத்திற்கும், மூன்று பேரின் மரணத்திற்கும், ஏழு பேரின் சிறைத் தண்டனைக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (முன்னர் அலகாபாத்) மார்ச் 18 அன்று இரவு நடந்த இந்த சம்பவம், சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

"இரவு 11 மணியளவில் சுமார் 60-70 பேர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் எங்களை இரக்கமின்றி அடிக்கத் தொடங்கினர்," என்கிறார் ஷிவானி கேசர்வானி.

இந்த தாக்குதல் நடப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாக தான் அதே வீட்டிலிருந்து ஷிவானியின் சகோதரர் அன்ஷுவின் மனைவி அன்ஷிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

வீட்டிற்குள் ஊடுருவி தாக்கியவர்களில் அன்ஷிகாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் அடங்குவர்.

அன்ஷிகா தற்கொலை செய்து கொண்டதாக ஷிவானியும் காவல்துறையும் கூறுகின்றனர். ஆனால் வரதட்சணைக்காக அவர் கொல்லப்பட்டதாக அன்ஷிகாவின் குடும்பத்தினரும், அவரது பெற்றோரின் அண்டை வீட்டாரும் குற்றம் சாட்டுகின்றனர்.

அன்ஷிகா வழக்கு

பட மூலாதாரம், Ankit Srinivas

படக்குறிப்பு, ஷிவானி கேசர்வானி, தனது அண்ணியின் குடும்பத்தினர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது?

கேசர்வானிகள், டிம்பர் எனப்படும் மர வியாபாரம் செய்து, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். வீட்டின் தரைத் தளம் மற்றும் அடித்தளம், கடை மற்றும் கிடங்காக பயன்படுத்தப்பட்டது. அதன் மேலே அவர்களது குடும்பம் வசித்து வந்தது.

ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு படுக்கையறை இருந்தது. அன்ஷு, திருமணமான பிறகு கடந்த ஓராண்டாக தனது மனைவியுடன் மேல் தளத்தில் வசித்து வந்தார். அவரது பெற்றோர் முதல் தளத்தில் வசித்து வந்தனர். அவரது சகோதரி ஷிவானிக்கு இரண்டாவது மாடி ஒதுக்கப்பட்டிருந்தது.

"அன்ஷிகா வழக்கமாக இரவு 8 மணியளவில் இரவு உணவிற்கு வருவார், ஆனால் அன்று அவர் வரவில்லை. அவர் தூங்கியிருப்பார் என்று நாங்கள் நினைத்தோம்," என்று ஷிவானி பிபிசியிடம் கூறினார்.

இரவு 10 மணியளவில் தனது அண்ணன் கடையில் இருந்து வந்ததும், அண்ணி அன்ஷிகாவை அழைக்க அவர் மேலே சென்றதாக ஷிவானி கூறுகிறார்.

"கதவை பலமுறை அவர் தட்டிய பிறகும், கூச்சலிட்ட பிறகும் அன்ஷிகாவிடமிருந்து பதில் ஏதும் வராததால், ​​​​தாழ்ப்பாளை திறப்பதற்காக அவர் கதவுக்கு மேலே உள்ள கண்ணாடிப் பலகையை உடைத்துள்ளார். உள்ளே அன்ஷிகா தூக்கில் தொங்குவதைக் கண்டவுடன், அவர் அலறினார். சத்தம் கேட்டு நாங்கள் அனைவரும் விரைந்து சென்றோம்." என்கிறார் ஷிவானி.

அன்ஷுவும் அவரது மாமாவும் தங்கள் வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில் அன்ஷிகாவின் குறித்து புகார் அளித்தனர். அன்ஷிகாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குள், அன்ஷிகாவின் குடும்பத்தினர் உறவினர்கள் பலரை அழைத்துக்கொண்டு வந்தனர். சில நிமிடங்களில், இரு குடும்பங்களுக்கு இடையே ஒரு மோசமான சண்டை வெடித்ததாகக் கூறப்படுகிறது.

அன்ஷிகா வழக்கு

பட மூலாதாரம், Ankit Srinivas

படக்குறிப்பு, ஷிவானியின் பெற்றோர் ராஜேந்திர குமார் மற்றும் ஷோபா தேவி.

இரு குடும்பங்களுக்கு இடையேயான மோதல்

ஷிவானி தனது கைபேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை எங்களிடம் காட்டுகிறார், அதில் பல ஆண்கள் கூச்சலிட்டவாறே, ஒருவரையொருவர் மரக் கட்டைகளால் தாக்கிக் கொள்கிறார்கள். நடுவே நிற்கும் காவலர் ஒருவர், இருதரப்பையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார், ஆனால் அவரால் முடியவில்லை.

அன்ஷிகாவின் உடல் வீட்டிற்கு வெளியே கொண்டுவரப்பட்டதும், அவரது உறவினர்கள் வீட்டிற்கு தீ வைத்ததாக போலீசார் கூறுகின்றனர்.

தரைத்தளம் மற்றும் அடித்தளத்தில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் தீப்பற்றி எரிந்ததால், வீட்டில் இருந்த ஷிவானி, அவரது பெற்றோர் மற்றும் அத்தை அதில் மாட்டிக்கொண்டனர்.

ஷிவானியும் அவரது அத்தையும் இரண்டாவது மாடியின் ஜன்னலை உடைத்து, பக்கத்தில் இருந்த அவரது மாமாவுக்கு சொந்தமான வீட்டிற்குள் பாதுகாப்பாக ஊர்ந்து சென்றனர். ஆனால் ஷிவானியின் பெற்றோர் வீட்டிற்குள் மாட்டிக் கொண்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள், அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​​​வயதான தம்பதியினரின் உடல்கள் கருகிய நிலையில் இருப்பதைக் கண்டனர்.

"என் அம்மாவின் உடலை படிக்கட்டில் கண்டெடுத்தார்கள். ஒரு சாக்குமூட்டையில் அவர் பிணவறைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்," என்று கண்ணீருடன் கூறுகிறார் ஷிவானி.

ஷிவானி காவல்துறையில் கொடுத்த புகாரில் அன்ஷிகாவின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் மற்றும் ‘60- 70 அடையாளம் தெரியாத நபர்கள்’ தாக்குதல் நடத்தினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்ஷிகாவின் தந்தை, மாமா மற்றும் அவர்களது மகன்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அன்ஷு, அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் தனது மகளை வரதட்சணைக்காக துன்புறுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டி அன்ஷிகாவின் தந்தை எதிர்புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

அன்ஷிகா வழக்கு

பட மூலாதாரம், Ankit Srinivas

படக்குறிப்பு, தீயில் எரிந்து சாம்பலான ஷிவானி குடும்பத்தின் வீடு மற்றும் கடை.

வரதட்சணைதான் காரணமா?

திருமணத்தில் அன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கார் உள்ளிட்ட பரிசுகள் பெற்றதை ஒப்புக்கொள்ளும் ஷிவானி தனது குடும்பத்தினர் மீதான வரதட்சணை கொடுமை குறித்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

"தங்கள் மகளுக்கு அவர்கள் விரும்பியதைக் கொடுத்தார்கள். நாங்கள் எதையும் கேட்கவில்லை," என்று ஷிவானி கூறுகிறார்.

மனைவி இறந்த இரவு, வீட்டை விட்டு வெளியேறிய அன்ஷு இன்னும் வீடு திரும்பவில்லை.

"அன்ஷிகாவின் பெரும்பாலான உறவினர்கள் வெளியே இருப்பதால், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அவர் தலைமறைவாக இருக்கிறார்," என்கிறார் ஷிவானி.

இந்தியாவில் 1961 முதல் வரதட்சணை கொடுப்பது மற்றும் ஏற்றுக்கொள்வது ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது. ஆனால் 90% திருமணங்களில் இந்த இரண்டும் நடக்கிறது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது .

ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் (மனைவிகள்) துன்புறுத்தப்படுவது குறித்த ஆயிரக்கணக்கான புகார்கள் காவல்துறையினரிடம் வருகின்றன. இந்தியாவில் 2017 மற்றும் 2022க்கு இடைப்பட்ட காலத்தில், 35,493 மணப்பெண்கள் போதிய வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்ஷிகா வழக்கு

பட மூலாதாரம், Ankit Srinivas

தீக்கிரையான ஷிவானியின் வீடு

ஆனால் வரதட்சணைக் கொலை வழக்கில் இப்படிப்பட்ட கொடூரமான ஒரு பழிவாங்கல் என்பதை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இப்போது பக்கத்து வீட்டில் தனது மாமாவின் குடும்பத்துடன் வசிக்கும் ஷிவானி, தீக்கிரையான அவரது வீட்டிற்குள் எங்களை அழைத்துச் சென்றார்.

புகையால் கறுப்படைந்த சுவர்கள், தரை முழுவதும் சாம்பல், சிதறிக் கிடைக்கும் உலோகப் பானைகள் மற்றும் பாத்திரங்கள், எரிந்த மரச்சாமான்கள் என அந்த கொடூர இரவின் சோகத்தின் எச்சங்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன.

"எனக்கு நீதி வேண்டும். என் வாழ்க்கை பாழாகிவிட்டது, என் வீடும் குடும்பமும் போய்விட்டது. சுதந்திரமான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் ஏன் எங்கள் வீட்டை எரித்தார்கள்? இப்போது எப்படி ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியும்?" எனக் கேட்கிறார் ஷிவானி.

காவல்துறை மீதும் அவருக்கு கோபம் இருக்கிறது. "எங்கள் வீட்டிற்கு வெளியே குறைந்தது இரண்டு டஜன் காவலர்கள் இருந்தனர், ஆனால் என் பெற்றோரைக் காப்பாற்ற யாரும் உள்ளே செல்லவில்லை. அவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்," என்று குற்றம் சாட்டுகிறார்.

இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுக்கின்றனர், "இது கவனமாக அணுகப்பட வேண்டிய ஒரு பிரச்னை, அப்போது இங்கிருந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் இருந்தார்கள். நாங்கள் உடலை சம்பவ இடத்திலிருந்து அகற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்தினோம். கூட்டத்தை வெளியேற்றி நிலைமையைத் தணிப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பெயரை வெளியிட விரும்பவில்லை என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வீட்டிற்கு தீ வைக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அது முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம். உடனடியாக தீயணைப்புப் படையினரை அழைத்தோம். ஐந்து பேரை மீட்க நாங்கள் உதவினோம்" என்றார்.

அன்ஷிகா வழக்கு

பட மூலாதாரம், Getty Images

அன்ஷிகாவின் உறவினர்கள் கூறுவது என்ன?

இந்த தொடர் சோக நிகழ்வுகள் அன்ஷிகாவின் குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. அவர்கள் தரப்பு வாதத்தைக் கேட்க, அன்ஷிகாவின் பெற்றோர் வாழும் வீட்டிற்குச் சென்றோம். பிரதான வாயிலின் கதவு ஒரு பெரிய இரும்பு பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.

அன்ஷிகாவின் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அவரது மாமா வீடு உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மாமாவும் அவரது மகன்களும் அடங்குவர். குடும்பத்தினர் இதுவரை ஊடகங்களிடம் பேச மறுத்து வந்தனர்.

நாங்கள் கதவைத் தட்டியபோது, அன்ஷிகாவின் வயதான தாத்தா ஜவஹர் லால் கேசர்வானி வெளியே வந்தார். அவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் பிளாஸ்டிக் நாற்காலியை வெளியே கொண்டு வந்து போட்டார். அதில் உட்கார்ந்து, சில நிமிடங்கள் கழித்து பேசத் தொடங்கினார்.

"நான் என்ன சொல்ல முடியும்? என் மகன்கள், என் பேரன்கள் என என் குடும்பத்தினர் அனைவரும் சிறையில் இருக்கிறார்கள். அன்ஷிகாவை கொன்று தூக்கிலிட்டு, தற்கொலை என்று சொல்லிவிட்டார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய லால் கேசர்வானி, அன்ஷிகாவின் திருமணம் ஆடம்பரமாக நடந்ததாக கூறுகிறார்.

"நாங்கள் ரூ.50 லட்சம் செலவழித்தோம். ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் அவளுக்கு வாங்கிக் கொடுத்தோம், மேலும் 16 லட்சம் மதிப்புள்ள ஒரு காரையும் கொடுத்தோம்." என்று கூறினார்.

“கடந்த பிப்ரவரி மாதம் அன்ஷிகா இங்கு வந்தபோது, தான் கொடுமைப்படுத்தப்படுவதாக எங்களிடம் கூறினார். நாங்கள் அவளை பொறுமையாக இருக்கச் சொன்னோம். நிலைமை சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்தினோம்" என்று அவர் தனது குரலில் வருத்தத்துடன் கூறுகிறார்.

அன்ஷிகா வழக்கு
படக்குறிப்பு, அன்ஷிகா
அன்ஷிகா வழக்கு

பட மூலாதாரம், Getty Images

'அன்ஷிகா எப்படி இறந்தார்?'

கேசர்வானிகள், உள்ளூர் வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு குடும்பம். தன்னடக்கம் கொண்டவர்கள், நட்பாய் பழகுபவர்கள், உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று பலவிதமாக வர்ணிக்கப்படுகிறார்கள். இந்த சோக சோக நிகழ்வுகள் அவர்களின் அண்டை வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

"அவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள். அவர்கள் இப்படி செய்திருப்பார்கள் என்பதை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அவர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுபவர்கள் அல்ல" என்று அவர்களது தெருவில், சில வீடுகள் தள்ளி வசிக்கும் ஒருவர் கூறுகிறார்.

மேலும், "யார் வீட்டிற்கு நெருப்பை மூட்டினார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் பெற்ற மகளின் உயிரற்ற உடலைப் பார்க்கும் எவரும் தன் நிதானத்தை இழக்க நேரிடும்," என்று அவர் கூறுகிறார்.

“அன்ஷிகா எல்லோரிடமும் நன்றாக நடந்து கொள்வாள், மிகவும் அன்பான பெண். அவரது குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். இத்தகைய கொடூரத்தை செய்யும் அளவிற்கு அவர்கள் மோசமானவர்கள் இல்லை” என்று அருகில் வசிக்கும் பெண் ஒருவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார், "அன்ஷிகாவின் மாமனார் மற்றும் மாமியார் தீயில் கருகி இறந்தது துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால் எனக்கு மிகவும் வருத்தமாக இருப்பது என்னவென்றால், அன்ஷிகாவுக்கு என்ன நடந்தது என்று இப்போது வரை யாரும் பேசவில்லை. அவள் எப்படி இறந்தாள்?".

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)