'நிபந்தனையற்ற மன்னிப்பு': உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு கூறியது என்ன? - இன்றைய முக்கியச் செய்திகள்

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், தினமணி

படக்குறிப்பு, கோப்புப்படம்

இன்றைய (25/02/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

யூடியூப் பேட்டி தொடர்பாக சவுக்கு சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,"சவுக்கு சங்கரின் பேட்டியில் பெண் போலீசாரை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீது உள்ள 16 வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. " என வழக்கின் பின்னணி கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சீவ் குமார் இம்மனுவை விசாரித்த நிலையில், தமிழ்நாடு அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, "உச்சநீதிமன்றத்தில் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் வகையில் சவுக்கு சங்கர் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக கருத்து கூறியுள்ளார்" என கூறியதாக அந்த செய்தி விவரிக்கிறது.

சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தமது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுள்ளார் என குறிப்பிட்டதாகவும், தினமணி கூறுகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி,"மனுதாரர் சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் எனவே அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டதாகவும், இதற்கு சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அளித்த உத்தரவில் மேற்குறிப்பிட்ட வழக்குகளில், கோவை காவல்நிலைய சைபர் குற்றப்பிரிவில் 2024 மே 3ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடரும் என கூறியுள்ளனர். மற்ற வழக்குகளை கோவை நகர சைபர் கிரைம் காவல்நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது எனவும், குற்றச்சாட்டுகளின் தகுதிகள் அல்லது விசாரணை நடத்தப்பட வேண்டிய விதம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனவும் நீதிபதிகள் கூறியதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு : குற்றப்பத்திரிகை தாக்கல்

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், கோப்புப்படம்

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் பொறியியல் மாணவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி, பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போது, சார் என்று ஒருவரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து 'யார் அந்த சார்' என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு கடந்த டிசம்பர் 29ம்தேதி தனது விசாரணையை தொடங்கியது. ஞானசேகரனை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரித்து ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆவணங்களை சேகரித்து ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினர் இதனை சமர்ப்பித்துள்ளனர். இந்த வழக்கில் ஞானசேகரன் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகையில் உள்ள விவரங்கள் வெளியானால் மேலும் தகவல்கள் தெரியவரும்.

வருகிற 10ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மார்ச் 8 முதல் 'பிங்க் ஆட்டோ'

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், DT NEXT

படக்குறிப்பு, கோப்புப்படம்

சென்னையில் மார்ச் 8ம் தேதி முதல் பெண்கள் ஓட்டும் 'பிங்க் ஆட்டோக்கள்' இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் சுயசார்பாக இருப்பதற்காகவும் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றத்தில் பிங்க் ஆட்டோக்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மார்ச் 8ம் தேதி முதல் 250 பிங்க் ஆட்டோக்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் தகுதியுள்ள பெண்களுக்கு இயற்கை எரிவாயு அல்லது பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு இரண்டையும் பயன்படுத்தக்கூடிய ஆட்டோக்களை வாங்குவதற்கு ரூபாய் ஒரு லட்சம் அரசு வழங்கும்.

இந்த ஆட்டோக்களில் பெண்களின் பாதுகாப்புக்காக ஜி பி எஸ் கருவி பொருத்தப்படும், 181 என்ற பெண்களின் உதவி எண்ணை உடனே தொடர்பு கொள்ளும் வகையிலான வசதிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆட்டோக்கள் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் இயக்கப்படும். இவை பிங்க் நிறங்களில் வண்ணம் பூசப்பட்டிருக்கும். காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இந்த ஆட்டோக்கள் இருந்து வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நீர்நிலைகளின் தரம் என்ன? மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சென்னையின் நீர் நிலைகளில் PFAS (Per-and Polyfluoroalkyl) என அழைக்கப்படும் நிரந்தர வேதிப்பொருட்கள் குறிப்பிடத் தக்க வகையில் இல்லை என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் கூறுகிறது. இது முன்னதாக சென்னை ஐஐடி அளித்த அறிக்கையின் முடிவில் முரண்படுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

PFAS என்பவை நான்ஸ்டிக் குக்கர், நீர்த்தடுப்பு சாதனங்கள் போன்றவற்றில் இருக்கக் கூடியவை எனவும், நீர்நிலைகளில் இவை கலக்கும் போது , இந்த தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு கல்லீரல் சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தி இந்து ஆங்கில நாளிதழ் விளக்குகிறது.

கடந்த ஆண்டு சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அளித்த அறிக்கையில், PFAS வேதிப்பொருட்கள் நகரின் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு, செம்பரம்பாக்கம் ஏரி போன்ற நீர் நிலைகளில் காணப்பட்டதாகவும், குறிப்பாக பெருங்குடி குப்பைக்கிடங்கு பகுதியில் நிலத்தடி நீரில் பாதுகாக்கப்பட்ட அளவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என கூறப்பட்டிருந்தததாக அந்த செய்தி கூறுகிறது.

ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கை இதில் முரண்படுவதாக அந்த செய்தி கூறுகிறது. மேற்குறிப்பிட்ட நீர்நிலைகளில் 30 இடங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் PFAS வேதிப்பொருட்களின் அளவு அளவிடும் நிலையில் இல்லை என கூறப்பட்டுள்ளதாக தி இந்து மேற்கோள் காட்டுகிறது. ஆனாலும் Biological Oxygen Demand அளவீடு , ஃப்ளூரைடு, இரும்பு போன்றவை பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருக்கிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் தி இந்து ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை: ரூ.2 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் இந்தியர் கைது

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையில் 2 கோடி 30 லட்சம் மதிப்பிலான குஷ் எனும் போதைப்பொருளை கொண்டு வந்த 73 வயது இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கையின் வீரகேசரி செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "கட்டுநாயக்க விமான நிலையத்தில் திங்கட்கிழமை , 1 கிலோ 908 கிராம் எடையுடைய , 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெருமதிமிக்க குஷ் கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருளுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட நிலையில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குஷ் என்னும் மேம்படுத்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான ஹைபிரிட் கஞ்சா போதைப்பொருளை சிறிய பஞ்சிங் பேக் (punching bag) மற்றும் இனிப்பு பைக்கற்றுகளினுள் வைத்து பயணப் பொதியில் சூட்சுமமான முறையில் மறைத்து குறித்த நபர் அவற்றை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

கைதான சந்தேகநபர் 73 வயதுடைய இந்திய பிரஜை ஆவார். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் கைதான வெளிநாட்டுப் பயணி மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)