டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையே முதல் டிரோன் போர் வெடித்துள்ளது.
வியாழக்கிழமையன்று, தனது 3 ராணுவ தளங்கள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் உடனடியாக மறுத்தது.
அதற்குப் பிறகு சில மணிநேரத்தில் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதற்கு இந்தியா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பகையால், தங்கள் எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் பீரங்கிகளை மட்டுமல்ல, ஆளில்லா ஆயுதங்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது நிலைமை ஆபத்தான புதிய கட்டத்தை எட்டிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரு நாடுகளுமே நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமாகிவிட்டன. டிரோன்கள், தொலைதூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடியவை. ஆனால் தாக்குதல் நடத்தியதை மறுக்கக்கூடிய வாய்ப்புகளும் இருப்பதால், டிரோன்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டன.
"டிரோன்களின் சகாப்தத்திற்குள் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நுழைந்துவிட்டது. 'கண்களுக்குப் புலப்படாத கண்கள்' மற்றும் ஆளில்லாவிட்டாலும் அதிக துல்லியத்துடன் தாக்குதலை நடத்தலாம் என்பது டிரோன்களின் முக்கிய அம்சம். டிரோன் போரில் தேர்ச்சி பெற்ற தரப்பே, தெற்காசியாவின் வான் பகுதியில் போர்க்களத்தையும், போரையும் முடிவு செய்யும்" என்று அமெரிக்க கடற்படை போர் கல்லூரியின் பேராசிரியர் ஜஹாரா மதிசெக் பிபிசியிடம் கூறினார்.
புதன்கிழமை காலை முதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதிலும், எல்லை தாண்டி சுட்டதிலும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. மறுபுறம், பாகிஸ்தானின் ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறும் நிலையில், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என பாகிஸ்தான் கூறுகிறது.
வியாழக்கிழமையன்று, கராச்சி, லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், லாகூரில் ஒன்று உள்பட பாகிஸ்தானின் பல வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை செயலிழக்கச் செய்ததாக இந்தியா கூறியது. இந்தியாவின் கூற்றை பாகிஸ்தான் மறுத்தது.

பட மூலாதாரம், Getty Images
லேசர் வழிகாட்டுதலில் இயங்கும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் (UAV) போன்றவை இந்த நவீனப் போரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை, ராணுவ நடவடிக்கைகளின் துல்லியம் மற்றும் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகின்றன. வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும் இவை பயன்படும். அவற்றில் சில, லேசர் உதவியுடன் இலக்குகளை நோக்கி நேரடியாக ஏவப்படலாம்.
எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றவும், மட்டுப்படுத்தவும் டிரோன்களை பயன்படுத்தலாம். எதிரி ரேடாரை தூண்டுவதற்காக, டிரோன்களை வேண்டுமென்றே பறக்கவிடலாம். இதனால் தூண்டப்பட்ட எதிரி ரேடார் சமிக்ஞைகளை வெளியிடும்போது அதன் இருப்பிடத்தை அறிந்து மற்றொரு தாக்குதல் டிரோன் மூலமோ அல்லது கதிர்வீச்சைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலமோ அந்த ரேடாரை அழிக்கலாம்.
"யுக்ரேன்- ரஷ்யா போரில் இப்படித்தான் நடக்கிறது. விலை மதிப்பு மிக்க, மனிதர்களால் இயக்கப்படும் போர் விமானங்களை ஆபத்தில் ஆழ்த்தாமல் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதில் டிரோன்கள் இவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று பேராசிரியர் மேட்டிசெக் கூறுகிறார்.
பெரும்பாலும் இஸ்ரேலிய தயாரிப்பான IAI சர்ச்சர், ஹெரான் போன்ற உளவு டிரோன்களின் அடிப்படையிலேயே இந்தியாவின் டிரோன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்பி, ஹாரோப் போன்ற டிரோன்கள் முக்கியமானவை. குறிப்பாக ஹாரோப் டிரோன்கள் மதிப்பு மிக்க, துல்லியத் தாக்குதல் போர் முறைக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் ஹெரான் டிரோன், அமைதிக்கால கண்காணிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய "வானத்தில் மிக உயரத்தில் இருந்து பார்க்கும் கண்கள்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர். IAI சர்ச்சர் Mk II முன்கள நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. இந்த டிரோன்கள், தொடர்ந்து 18 மணிநேரம் வரை இயங்கக் கூடியவை. மேலும், அதிகபட்சம் 7,000 மீ (23,000 அடி) உயரம் வரை பறந்து 300 கி.மீ. வரை செல்லக் கூடியவை.
இந்தியாவிடம் உள்ள போர் டிரோன்களின் எண்ணிக்கை "குறைவு" என்று பலர் கருதுகின்றனர். 40 மணிநேரம் மற்றும் 40,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய 31 MQ-9B பிரிடேட்டர் டிரோன்களை வாங்க அமெரிக்காவுடன் செய்துள்ள 4 பில்லியன் டாலர் ஒப்பந்தம், தாக்குதல் திறன்களை அதிகரிக்கும் இந்தியாவின் முயற்சிகளைச் சுட்டிக் காட்டுகிறது.
டிரோன்களை ஒரே நேரத்தில் திரளாகப் பயன்படுத்தும் தந்திரோபாயங்களை இந்தியாவும் உருவாக்கி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான சிறிய டிரோன்களை பறக்க விடுகையில் அவற்றை அழிப்பதிலேயே எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் முழு திறனையும் பயன்படுத்த நேரிடும் என்பதால், தனது மதிப்புமிக்க போர் விமானங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானின் டிரோன் படை, "விரிவானது மற்றும் மாறுபட்டது". இது உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகளை உள்ளடக்கியது என்று லாகூரை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எஜாஸ் ஹைதர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
சீனா, துருக்கி மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் மாதிரிகளைக் கொண்ட "ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள்" பாகிஸ்தானிடம் இருப்பதாக அவர் கூறினார். குறிப்பிடத்தக்க தளங்களில் சீனாவின் CH-4, துருக்கியின் பைரக்டர் அகின்சி மற்றும் பாகிஸ்தானின் சொந்த புராக் மற்றும் ஷாபர் டிரோன்கள் உள்ளன.
பாகிஸ்தான் விமானப்படை (PAF) கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக ஆளில்லா அமைப்புகளை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக ஹைதர் கூறினார். மனிதர்கள் இயக்கும் போர் விமானங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வடிவமைக்கப்பட்ட "லாயல் விங்மேன் (loyal wingman)" டிரோன்களை உருவாக்குவதிலும் பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
"ஹாரோப் மற்றும் ஹெரான் டிரோன்களை வழங்கும் இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவி இந்தியாவுக்கு முக்கியமானது. அதே நேரத்தில் துருக்கி மற்றும் சீனாவின் டிரோன் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் நம்பியுள்ளது. இது, இந்தியா-பாகிஸ்தான் ஆயுதப் போட்டியை எடுத்துக்காட்டுகிறது" என்று பேராசிரியர் மேட்டிசெக் நம்புகிறார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்திய டிரோன் தாக்குதல்கள் அவர்களின் மோதலில் முக்கியமானதாக இருக்கும். அதே வேளையில், ரஷ்யா - யுக்ரேன் மோதலில் காணப்பட்ட டிரோன்களை மையமாகக் கொண்ட போரிலிருந்து இந்த மோதல் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபடுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அங்கு, டிரோன்கள் ராணுவ நடவடிக்கைகளின் மையமாகிவிட்டது. இரு தரப்பினரும் கண்காணிப்பு, இலக்கு மற்றும் நேரடித் தாக்குதல்களுக்கு ஆயிரக்கணக்கான டிரோன்களை பயன்படுத்துகின்றனர்.
"போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளுக்குப் பதிலாக [நடந்து கொண்டிருக்கும் மோதலில்] டிரோன்களை பயன்படுத்துவது என்பது ராணுவத்தின் மட்டுப்பட்ட தாக்குதல் விருப்பத்தைக் குறிக்கிறது. டிரோன்கள், மனிதர்களால் இயக்கப்படும் போர் விமானங்களைவிட குறைவான தாக்குதல் திறன் கொண்டவை.
எனவே ஒரு வகையில், இதைக் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்றே கூறலாம். இருப்பினும், இந்த முன்னெடுப்பு விரிவான வான்வழித் தாக்குதலுக்கான முன்னோட்டமாக இருந்தால், கணக்கீடு முற்றிலும் மாறுபடும்," என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் மனோஜ் ஜோஷி பிபிசியிடம் கூறினார்.
ஜம்முவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டிரோன் தாக்குதலானது, "தூண்டுதல் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் திட்டமிட்ட செயலாகத் தோன்றுகிறது. இது பாகிஸ்தானின் முழு அளவிலான பதிலடி அல்ல" என்று எஜாஸ் ஹைதர் நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்தியாவுக்கு எதிரான உண்மையான பதிலடித் தாக்குதல் என்பது, அதிர்ச்சியையும் பிரமிப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். அது விரிவானதாக, பல தளங்களை உள்ளடக்கியதாகவும் பரந்த அளவிலான நோக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கும். தற்போதைய 'பழிக்குப் பழி' நடவடிக்கைகளைத் தாண்டி, தீர்க்கமான தாக்கத்தை வழங்குவதாக இருக்கும்" என்று ஹைதர் கூறுகிறார்.
யுக்ரேன் போரில், அடிப்படைப் போர்க்களமே டிரோன்களால் மறுவடிவம் பெற்றுள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் டிரோன்களின் பங்கு மிகவும் குறைவாகவும் ஒரு குறியீடாகவும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
"நாம் பார்த்துக் கொண்டிருக்கும் டிரோன் போர் நீண்ட காலம் நீடிக்காது. இது மாபெரும் மோதல் ஒன்றின் தொடக்கமாக இருக்கலாம்" என்று ஜோஷி கூறுகிறார்.
"இது பதற்றத்தைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். இப்படி இரண்டு சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. நாம் எந்தத் திசையில் செல்வோம் என்பதை நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது."
இந்தியா, தனது துல்லியத் தாக்குதல் கோட்பாட்டிற்கு டிரோன்களை பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. எல்லையைக் கடக்காமல் தாக்குதல் நடத்துவதற்கு வழக்கமான போர் விமானங்களுக்கான மாற்றாக டிரோன்கள் இருக்கின்றன. இருப்பினும் சில முக்கியமான கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியாது.
"அரசியல் மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைக்கான வரம்பை டிரோன்கள் குறைக்கின்றன. போரை விரிவுபடுத்தும் அபாயங்களைக் குறைக்க முயலும்போது, கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்கான வாய்ப்புகளை டிரோன்கள் வழங்குகின்றன," என்று பேராசிரியர் மேட்டிசெக் கூறுகிறார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












