பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல்கள் பற்றி சீனா, அமெரிக்கா கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் ராணுவ தாக்குதல் வருந்தத்தக்கது எனக் கூறியுள்ள சீனா இரு தரப்பும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து புதன்கிழமை காலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள பாகிஸ்தான், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளான பூஞ்ச் - ராஜௌரியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தியதாகக் கூறும் இந்திய ராணுவம் இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலை குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' - அமெரிக்க அதிபர்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இது அவமானகரமானது. இப்போதுதான் கேள்விப்பட்டோம் ஓவல் அலுவலகத்திற்குள் இப்போது வரும்போதுதான் தெரிய வந்தது," என்று தெரிவித்தார்.
மேலும், "கடந்த கால அனுபவங்களால், ஏதோ நடக்கப் போகிறது என மக்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன்," என்று பதிலளித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சூழ்நிலையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக அமெரிக்க அரச செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரூபியோவிடம் பேசி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விவரித்ததாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது விரைவாக முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ள ரூபியோ அமைதியான தீர்வை நோக்கி நகர இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமை உடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா கூறியது என்ன?
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே "தீவிரமாகி வரும் ராணுவ மோதல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக" ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் அமைதியை நிலைநிறுத்துமாறு ரஷ்யா கூறியுள்ளதாக ஆர்.டி செய்தி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள முரண்பாடு, அமைதியான வழியில் தீர்க்கப்படும் என நம்புகிறோம்'' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நெருக்கமான நட்பு நாடாக ரஷ்யா கடந்த பல பத்தாண்டுகளாக உள்ளது பாகிஸ்தானுடனும் ரஷ்யா நட்புறவை பேணி வருகிறது.
பிரான்ஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜீன்-நோயெல் பேரோட், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
"பயங்கரவாதத்துக்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான இந்தியாவின் ஆவலை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், நிலைமை தீவிரமடையாமல் இருக்க இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் நடந்துகொள்ளுமாறும் குடிமக்களை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்." என பேரோட் பிரெஞ்சு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கத்தார் கூறியது என்ன?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள கத்தார், இந்த நெருக்கடிக்கு ராஜ்ஜீய வழியில் தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம், சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் குறித்து கத்தார் கவலை கொண்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு ராஜ்ஜீய வழியில் தீர்வு காண இரு நாடுகளையும் அது வலியுறுத்துகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கத்தார் கூறியுள்ளது.
தீர்க்கப்படாத பிரச்னைகளை இரு நாடுகளும் நேர்மறையான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானும் இந்தியாவும் நிதானமாகச் செயல்பட வேண்டும் - பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றம் "தீவிரமான கவலையை ஏற்படுத்துகிறது" என்று பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி கூறியுள்ளார்.
"இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானமாக செயல்பட்டு, விரைவான, ராஜ்ஜீய வழியிலான தீர்வை கண்டறிய நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பிரிட்டன் அரசு வலியுறுத்துகிறது" என்று டேவிட் லாம்மி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் இரு நாடுகளுடனும் நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவைக் கொண்டுள்ளது என்று லாம்மி கூறினார்.
"இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள எனது சக அதிகாரிகளிடம், இந்த நிலை நீடித்தால் அதில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதைத் தெளிவாக கூறியுள்ளேன்" என்று அதில் லாம்மி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "கடந்த மாதம் பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்தது.
பிராந்திய ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்து தரப்பினரும் அவசரமாக வேலை செய்ய வேண்டும்," என்றும் லாம்மி தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள பிரிட்டன் குடிமக்களின் பாதுகாப்பு "எங்களது முன்னுரிமை" என்றும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அலுவலகம் அந்த பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் லாம்மி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் 'சுய பாதுகாப்பு உரிமையை' இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களிலிருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை தீவிரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடித்து பதற்றங்களைத் தணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பிராந்திய மற்றும் சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை ஆதரிப்பதற்கும், அத்தகைய மோதல்களால் ஏற்படும் மனிதாபிமான பிரச்னைகளை தீர்ப்பதற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து செயல்படும் என்றும் ஷேக் அப்துல்லா கூறியதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விரைவில் அமைதி திரும்ப வேண்டும் - இரான்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் தாக்குதலால் தாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.
"அனைவரின் பாதுகாப்புக்காகவும் விரைவில் அமைதி திரும்பவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என இரான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்திய தாக்குதல் குறித்து சீனா கூறியது என்ன?
இது தொடர்பாக எதிர்வினையாற்றியுள்ள சீனா இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது எனக் கூறியுள்ளது. மேலும் இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றிப் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத் துறை, "தற்போதைய சூழ்நிலை பற்றி நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்தியா பாகிஸ்தான் எப்போதும் அண்டை நாடுகளாக இருப்பார்கள். அவர்கள் இருவரும் சீனாவுக்கும் அண்டை நாடுகளே.
அனைத்து விதமான தீவிரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து இரு தரப்பும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அமைதியாக, கட்டுப்பாட்டுடன் இருந்து, சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்க்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












