உங்கள் குழந்தைகளை 'வக்கிர ஆண்களின்' பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

“பக்கத்து வீட்டுத் தோழியிடம் விளையாடச் செல்லும்போதெல்லாம், அவளது தந்தை என் தொடை நடுவில் கை வைத்துக்கொண்டே இருப்பார். அது எனக்கு சங்கடமாக இருந்தாலும், நம்மிடம் பாசமாக நடந்துகொள்ளும் மாமாவை கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைத்து நான் அமைதியாக இருந்துவிடுவேன்.

ஆனால், விவரம் தெரியும் வயதை அடையும்போதுதான் அவர் என்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறினார் என்பதே எனக்குப் புரிய வந்தது.”

காவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது கேரளாவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு எட்டு வயது இருக்கும்போது அவருக்கு இந்தப் பாலியல் அத்துமீறல் நடந்தது.

காவ்யா தனது அண்டை வீட்டில் இருந்த சக வயது தோழியுடன் விளையாடுவதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

அப்படிச் செல்லும்போது அந்தத் தோழியின் தந்தையும் காவ்யாவுடன் விளையாடுவார். சாப்பிடுவதற்கு பலகாரங்களை கொடுப்பார். காவ்யாவும் பக்கத்துவீட்டு மாமா, தோழியின் தந்தை என்ற முறையில் அவருடன் விளையாடியுள்ளார்.

“அந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒன்றும் வேற்று நபர் இல்லை. என் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்தான். நான் பிறந்தது முதல் அவர் என்னைத் தூக்கி வைத்து விளையாடியுள்ளார். அவர் அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.”

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

ஒருநாள் தனது அவரது வீட்டிற்குச் சென்றபோது தோழி இல்லையெனத் தெரிந்து கிளம்ப எத்தனித்த காவ்யாவை சாப்பிட பலகாரம் கொடுத்து உட்கார வைத்துள்ளார்.

“அவர் என் தொடை நடுவில் கை வைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து என்னைத் தேடிக்கொண்டு என் அம்மா அங்கு வரவே, அவர் செய்துகொண்டிருந்த காரியத்தை அவர் பார்த்துவிட்டார்.

அந்த நபரை மோசமாகத் தாக்கிய என் அம்மா, என்னையும் மோசமாகத் திட்டி அங்கிருந்து இழுத்துச் சென்று வாய் திறந்து ஏன் சொல்லவில்லை என்று கூறி அடித்தார்,” என்று தனக்கு சிறு வயதில் நடந்த சம்பவம் குறித்து விவரித்தார் காவ்யா.

பாலியல் வன்கொடுமை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நடப்பதில்லை

சூர்யாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கையிலும் இப்படியோர் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

“இது என் அக்கா திருமணத்தின்போது நடந்தது. எங்கள் உறவினர் ஒருவர் என்னிடம் நன்கு பேசினார், விளையாடினார். இளம் வயது இளைஞர் என்பதால், ஆண் பிள்ளையாக நானும் அவர் கூறும் சுவாரஸ்ய கதைகளைக் கேட்கவும் அவருடன் ஊர் சுற்றவும் விரும்பினேன்.

ஆனால், என்னுடன் அவர் நெருங்கிப் பழகியது என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத்தான் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் சூர்யா.

பதின்ம வயதின் தொடக்கத்தில் இருந்த சூர்யாவுடன் நெருங்கிப் பழகிய அந்த இளைஞர், தான் எங்கு கூப்பிட்டாலும் வருவார் என்கிற அளவுக்குத் தன் மீதான நம்பிக்கையை சிறுவனாக இருந்த சூர்யாவிடம் வலுப்படுத்தியுள்ளார்.

அதன்பிறகு அவர், “தான் நடத்தி வந்த சலூன் கடைக்கு அக்கா திருமணம் முடிந்த நாளன்று பகல் நேரத்தில் அழைத்துச் சென்றதாக” சூர்யா கூறுகிறார். “மதிய வேளையில் என்னை கடைக்குள் விட்டு ஷட்டரை மூடிவிட்டார். நான் ஏன் எனக் கேட்டதற்கு படம் பார்க்கலாம் என்று கூறினார். ஆர்வமாக உட்கார்ந்த எனக்கு அவர் தனது டிவியில் ஆபாசப் படத்தைப் போட்டுக் காட்டியபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.

நான் பயந்தபோது, அவர் என்னை ஆற்றுப்படுத்தினார். ‘இதையெல்லாம் நீ தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். நீ ஒன்றும் இனி குழந்தையில்லை, வளர்ந்துவிட்டாய்’ என்று கூறி எனக்கு ஆபாசப் படத்தில் நடந்துகொண்டிருந்தவை குறித்து விளக்கினார்,” என்கிறார் சூர்யா.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

அப்படி விளக்கிக்கொண்டே சூர்யாவிடமும் அந்த நபர் அத்துமீறத் தொடங்கினார். ஒரு கட்டம் வரைக்கும் பேச்சற்று அமைதியாக இருந்த சூர்யா, தனக்கு பயமாக இருப்பதாகவும் உடனே வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

ஆனால், தொடர்ந்து “என்னை சமாதானப்படுத்திக்கொண்டே அந்த நபர் அத்துமீறத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் விஷயம் எல்லை மீறும் நிலையை அடைந்ததும் தயவு செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறி கெஞ்சியவாறு கடுமையாக அழத் தொடங்கிவிட்டேன். அதற்குப் பிறகுதான் அந்த நபர் அங்கிருந்து என்னை அழைத்துச் சென்றார்,” என்கிறார் சூர்யா.

உறவினர் என்பதால் அதற்குப் பிறகும் சூர்யா அந்த நபரைத் தொடர்ந்து பார்க்கவும் பழகவும் வேண்டியிருந்தது. “அதைத் தொடர்ந்து வந்த சில மாதங்களில் அந்த நபரை எங்காவது பார்த்தேலே எனக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

ஆனால், அவரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கவேண்டிய சூழல். அங்கு நடந்த சம்பவத்தை வெளியே சொல்லவும் தயக்கமாக இருந்தது. ஏனென்றால், அங்கு அவர் போட்டுவிட்ட ஆபாசப் படத்தை நானும்தான் பார்த்தேன் எனக் கூறி என்னை குற்றம் சொல்லிவிடுவார்களோ, வீட்டில் அடித்துவிடுவார்களோ என அஞ்சினேன்.”

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

“இன்றளவும் அந்த நபர் கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் என்னைப் பார்க்கும்போதெல்லாம் பேசுகிறார். வீட்டிற்கு அஞ்சி வெளியே சொல்லாமல் விட்டுவிட்ட நான், வேறு வழியின்றி அவர் முன்பாக பொய்ச் சிரிப்பைக் காட்டியவாறு அப்படியொரு சம்பவமே நடக்காததைப் போல் இருந்துகொண்டிருக்கிறேன். இப்படியொரு நிலை யாருக்கும் வரவே கூடாது,” என்று வருந்துகிறார் சூர்யா.

காவ்யா, சூர்யா இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நடந்த கசப்பான சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்திய உளவியல் பாதிப்பு அவர்களது இளம் வயது ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பாதித்தது.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. அவர்கள் இருவருக்குமே பெற்றோர் மீது கடும் அச்சம் நிலவியது. அந்த அச்சம்தான், அவர்கள் தங்களுக்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் போனதற்குக் காரணம்.

வெளிச்சத்திற்கு வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் 6 வயது சிறுவன், தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கை-கால் கட்டப்பட்ட நிலையில் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

கேரளாவில் ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் செய்திகளில் வருவதன் காரணமாக, இப்போதுதான் இத்தகைய சம்பவங்கள் அதிகமாக நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படலாம்.

ஆனால், உண்மையில் இத்தகைய சம்பவங்கள் நீண்ட காலமாக சமூகத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை வெளியில் அதிகமாகத் தெரிய வருவது மட்டுமே சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

தற்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கும் இத்தகைய சம்பவங்கள், பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, ஆண் குழந்தைகளுக்கும் உடல் எல்லையையும், பாதுகாப்பையும் கற்றுத் தர வேண்டிய தேவையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும், அவர்களோடு உடல் சார்ந்த பாதுகாப்பு குறித்து எப்படிப் பேச வேண்டும் என்பவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் குழந்தைகள் நல ஆர்வலர்களிடம் பேசியது.

குழந்தைகள் அனுமதியின்றி அவர்களைக் கொஞ்சவே கூடாது

பாலியல் கல்வி குறித்தும் உடல் எல்லைகள் குறித்தும் வகுப்புகள் மூலமும் 'மாயா’ஸ் அம்மா' என்ற தனது சமூக ஊடகப் பக்கத்தின் பதிவுகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஸ்வாதி ஜகதீஷ், பெரியவர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவதாக இருந்தாலும், அதை அவர்கள் அனுமதியின்றிச் செய்யக்கூடாது என்கிறார்.

ஸ்வாதி, தன் மகளை அணைத்துக் கொஞ்சத் தோன்றினால்கூட, “தங்கம், ப்ளீஸ் அம்மாக்கு ஒரு ஹக் கொடுக்குறீங்களா?” என அனுமதி கேட்டே அரவணைப்பதாகச் சொல்கிறார் அவர்.

இது குழந்தைப் பருவம் முதலே தன்னை யாரும் அத்துமீறித் தொடுவதை எதிர்க்கும் பண்பை குழந்தைகளுக்குள் இயற்கையாகவே வளரச் செய்யும் ஒரு வழிமுறை எனவும் விவரிக்கிறார்.

மேலும் பேசிய அவர், அசௌகரியமான சூழ்நிலைகளுக்கு பெற்றோர் ‘நோ’ சொன்னால்தான், அதைப் பின்பற்றி குழந்தைகளும் கற்றுக் கொள்வார்கள் என்கிறார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

“நமது கலாசாரத்தின்படி குழந்தைகளில் தலை கோதுவது, கன்னத்தைக் கிள்ளுவது போன்ற செயல்கள் நடைமுறையில் உள்ளன. இதையே அவர்கல் அனுமதி ஓஊத்தாோள்தான் செய்யவேண்டும் என்ற தெளிவு வரவேண்டும்.

அதன்பிறகு, அதையும் மீறி மேற்கொள்ளப்படும் தவறான அணுகுமுறைகளை குழந்தைகளே எதிர்க்க கற்றுக் கொள்வார்கள். கலாசாரம் என்பதே காலத்துக்கு ஏற்றாற்போல மாறும் என்றால், ஏன் இதையும் மாற்றக் கூடாது?” என்கிறார் ஸ்வாதி.

குழந்தைகளுக்கு உடல் எல்லைகள் பற்றிக் கற்றுக் கொடுப்பதால் என்ன நன்மை?

ஸ்வாதி, ஒரு தாய் தன்னிடம் சொன்ன சம்பவத்தைப் பற்றி பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார்.

“ஒரு 8 வயது குழந்தை அபார்ட்மென்டில் விளையாடச் சென்றிருக்கிறார். பிறகு திடீரென தாயிடம் ஓடிவந்து, ‘அம்மா, எல்லாரும் ஷார்ட்ஸை கழட்டி தங்களது அந்தரங்க உறுப்பைக் காண்பிக்கும்படி ஒரு 11 வயது அண்ணா சொன்னாரு, ஆனா நான் என்னோட பிரைவேட் பார்ட்ட காட்ட மாட்டேன்னு சொல்லி ஓடி வந்துட்டேன்,’ என்றிருக்கிறார்,” என்றார் ஸ்வாதி.

இதைக் கேட்ட அந்தத் தாய் தன் குழந்தைக்கு அவரது உடல் பற்றி சொல்லிக் கொடுத்ததில் நிம்மதி அடைந்ததாகவும், தனது ஆன்லைன் பட்டறையில் பங்கேற்றமைக்காக பெருமிதத்தோடு நன்றி கூறியதாகவும் தெரிவித்தார் ஸ்வாதி.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Swati jagdish

படக்குறிப்பு, பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வரும் ஸ்வாதி ஜகதீஷ்

பூக்காரப் பாட்டியிடம் தீண்டாமையா?

சமீபத்தில் தனது மகளின் கன்னத்தை ஒரு பூக்காரப் பாட்டி கிள்ளியது பற்றி ‘மாயாஸ் அம்மா’ என்ற தனது சமூக ஊடகப் பக்கத்தில் பேசியிருந்தார்.

அதில் குழந்தையாக இருந்தாலும்கூட அவர் அனுமதியின்றி கொஞ்சக்கூடாது, இது பல பெரியவர்களுக்குத் தெரிவதில்லை," என்று கூறியிருந்தார்.

இதற்காக சமூக ஊடகத்தில் அவரைப் பலரும் விமர்சித்தனர். ஸ்வாதி பூக்காரப் பாட்டியிடம் தீண்டாமை காட்டுவதாக விமர்சித்தனர். ஆனால், தீண்டாமைக்கும் ‘ஃபிசிகல் பவுண்டரீஸ்’ எனும் உடலியல் எல்லைகளுக்கும் உள்ள வித்யாசத்தைப் பலரும் உணராமல் தன்னை விமர்சித்து வருவதாகக் கூறுகிறார்.

குழந்தைகளுக்கு உடல் சார்ந்த விழிப்புணர்வை வீட்டிலேயே ஏற்படுத்துவது எப்படி?

வீட்டில் எதைப் பற்றியும் பேசலாம் என்ற திறந்த மனநிலை இருந்தால்தான் வெளியே அசௌகரியமான சூழ்நிலைகள் நடந்தால் நடந்தால் குழந்தைகள் அதைப் பெற்றோரிடம் வந்து சொல்வார்கள் என்கிறார் ஸ்வாதி.

இதை விளக்க அவர் சில சூழ்நிலைகளைப் பற்றிக் கூறுகிறார்.

“விடுமுறைக்கு உறவினர்களும், குழந்தைகளும் ஒன்றாகச் சந்திக்கும் போது, குழந்தைகள் எதிர்பாலின குழந்தைகளின் உறுப்புகளைத் தொட்டோ, அப்பா-அம்மா விளையாட்டு என ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டோ விளையாடக் கூடும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வீட்டில் எதைப் பற்றியும் பேசலாம் என்ற திறந்த மனநிலை இருந்தால்தான் வெளியே அசௌகரியமான சூழ்நிலைகள் நடந்தால் நடந்தால் குழந்தைகள் அதைப் பெற்றோரிடம் வந்து சொல்வார்கள் என்கிறார் ஸ்வாதி.

அவர்களுக்கு உடலியல் மாற்றங்களையும், எல்லைகளையும் சொல்லித் தந்திருந்தால் குழந்தைகள் ஓரிடத்தில் தனியாக இருந்தாலோ, அறையைப் பூட்டிக் கொண்டு சத்தமின்றி விளையாடினாலோ, அச்சத்தில் ஓடிச் சென்று பார்க்க வேண்டிய அவசியம் பெற்றோருக்கு இருக்காது,” என்கிறார்.

“அதேபோல், அவசரக் காலங்களில் குழந்தைகளை வேறு யாருடைய வீட்டிலேனும் விட்டுச் செல்ல நேரிடலாம். அப்போது, தம்மைப் போன்றே உடல் எல்லைகள் பற்றி குழந்தைகளிடம் சொல்லித் தந்த பெற்றோர் உள்ள வீட்டுக்கு குழந்தைகளை நிம்மதியாக அனுப்பலாம்,” என்கிறார் ஸ்வாதி.

அப்படிப்பட்ட சௌகர்யமான இடங்களை ‘நல்ல நண்பர்கள் வீடு’ என்ற ஒரே வட்டத்தில் சுருக்காமல் அதை ஒரு பரந்த சமூகமாக விரிவடையச் செய்துவிடுவது ஒவ்வொரு பெற்றோரின் கையில்தான் உள்ளது என்றும் கூறுகிறார் ஸ்வாதி.

இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்கிறார்.

“என்னோட 8 வயசு பையன் பக்கத்து வீட்டில் இருக்கும் 6 வயது பெண் குழந்தையை தப்பா தொட்டுட்டான். அவங்க அம்மா அப்பா சண்டைக்கு வர்றாங்க. நான் என் பையன ரொம்ப அடிச்சுட்டேன். இந்தச் சம்பவத்திலிருந்து என்னால மீண்டு வெளிய வர முடியல,” என ஒரு தாய் தன்னிடம் வந்து கவலையை வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டுகிறார் ஸ்வாதி.

அந்தத் தாய் “நீங்க சொல்லும்போதுதான் அவன் இன்னும் ஒரு குழந்தைதான்னு எனக்கு தெரியுது. அவனை நினைத்து குற்ற உணர்வில் உள்ளேன். அடுத்தவரின் பிரைவேட் பார்ட் எப்படி இருக்கும்? அதை நாம் ஏன் தொடக்கூடாது என எதுவுமே சொல்லித்தராதது என் தப்பு. என்னவென்று தெரியாத ஆர்வக் கோளாறில் குழந்தை செய்துவிட்டது,” என அந்தத் தாய் விழிப்புணர்வு அடைந்ததாகச் சொல்கிறார் ஸ்வாதி.

நன்கு தெரிந்தவர்களே குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடலாம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், devaneyan

படக்குறிப்பு, குழந்தைகள் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் தேவநேயன்

குழந்தைகள் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் தேவநேயன் பாலியல் சம்பவங்களில் குழந்தைகள் ஒருபோதும் குற்றவாளி இல்லை, பெற்றோரே பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்கிறார்.

வக்கிர புத்தியுள்ளவர்கள் அணுகும் முறையைக் கேட்டாலே குழந்தைகளை பெற்றோருக்கு பதைபதைப்பு ஏற்படும்.

இதுகுறித்து விவரித்த தேவநேயன், குழந்தைகளை ஏமாற்றி உறவு கொள்வது பெரும்பாலும் ஒரே நாளில் நடப்பதில்லை, பார்த்ததும் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தல் 7%-10% சம்பவங்களில்தான் நடக்கிறது, என்கிறார்.

“இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள், முதலில் பெற்றோரிடம் நல்ல பெயர் எடுப்பது, பிறகு தன்னை நேசிக்க வைப்பது, குழந்தையை சிரிக்க வைப்பது என அடுத்தடுத்த கட்டங்களாக அவர்கள் முன்னேறுவார்கள்.

குழந்தையை முதலில் தொடுவார்கள். அந்தக் குழந்தை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றாலோ, சிரித்து, வெட்கி ஆமோதித்தாலோ குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுவார்கள்.

பிறகு குழந்தைக்குப் பிடித்ததை அறிந்து பரிசு கொடுத்து மனம் கவர்வார்கள். இறுதியாக, தனிமைப்படுத்தி பாலியல் வன்முறை செய்து சில நேரம் கொலையும் செய்துவிடுவார்கள்,” என்று விவரிக்கிறார் தேவநேயன்.

குழந்தைகள் பேச்சுக்கு பெற்றோர் மதிப்பு கொடுக்க வேண்டியது ஏன் அவசியம்?

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலான குழந்தைகள் தவறுகள் தொடங்கும்போதே அதை யாரிடமாவது பகிர்ந்துகொள்வார்கள், அப்போது அவர்களை நம்ப வேண்டும், என்கிறார் தேவநேயன்.

மேலும், குழந்தைகளுக்கு எதையும் பகிரும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும், அதற்குப் பெற்றோர் முதலில் வீட்டுக்கு வந்ததும் டி.வி. மற்றும் செல்போனில் மூழ்குவதைக் குறைத்து அவர்களிடம் தரமான நேரம் செலவிடுதல் வேண்டும், என்கிறார்.

“ஆரம்பப்புள்ளியில் ஒரு குழந்தை வந்து, ‘அப்பா, அந்த அங்கிள் என்னை அப்படி தொட்டார்’ என்று சொல்லலாம். அதற்கு, ‘அய்யோ அவரு எவ்ளோ பெரிய ஆளு, அவரப் போய் இப்டி சொல்லுற? இதெல்லாம் வெளிய யார்டயும் சொல்லாத’ எனத் திட்டும் பெற்றோராக இருக்கக் கூடாது.

இது அந்த அங்கிள் பெரியதாக தவறு செய்தாலும்கூட வீட்டில் சொன்னால் நமக்குத்தான் திட்டு விழும் என்ற மனப்போக்கை குழந்தைகளிடம் உருவாக்கிவிடும்,” என்கிறார் தேவநேயன்.

அதேபோல், தனக்கு நேர்ந்ததைப் பற்றிப் பெற்றோரிடம் சொல்லும் தைரியமான குழந்தையிடம் சென்று, ‘நீ அவனிடம் பல்ல காட்டிருப்ப, நீ அவன் பின்னாடியே சைக்கிள்-ல போயிருப்ப, அவன் தப்புக்கு துணையா இருந்திருப்ப,’ எனத் திட்டுவது மிகப்பெரும் தவறு என்கிறார்.

“இதுபோன்றச் சம்பவங்களில் குற்றம் செய்தவர்கள்தான் குற்றவாளியே தவிர, குழந்தைகள் அல்ல. அவர்கள் இயல்பானவர்கள். சமூகம், குடும்பம், சாதிய கௌரவம் பார்த்து குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கப் பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது,” என்கிறார் தேவநேயன்.

குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் செலவிடுவது ஏன் முக்கியம்?

குழந்தைகளுக்க்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், shobana

படக்குறிப்பு, குழந்தைகள் நல மருத்துவர் ஷோபனா

குழந்தைகளுக்குப் பெற்றோர் என்ன வாங்கிக் கொடுக்குறார்களோ இல்லையோ, அவர்களது நேரத்தைச் செலவிட வேண்டும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஷோபனா.

பள்ளி முடித்து வந்ததும் குழந்தைகள் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் ‘இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது? என்ன சொல்லி கொடுத்தாங்க? டாய்லட் கூட்டிட்டு போனது யாரு? ஆயம்மா சுத்தப்படுத்திவிட்டாங்களா? யாராவது கிண்டல் செய்தார்களா?’ என்பது போல பேச்சுக் கொடுக்க வேண்டும், என்கிறார் அவர்.

“அதேபோல், பெற்றோர்களும் ‘நான் இன்று இத்தனை மணிக்கு எழுந்தேன், இன்று பால்காரர் வரவில்லை’ எனத் தங்களது அன்றாட வாழ்வில் நடப்பவற்றை 3 வயது முதலே குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை வளர்த்துவிட வேண்டும்,” என்கிறார்.

மேலும், “இதைப் பற்றியெல்லாம் பெற்றோரிடம் பேசக்கூடாது என்ற பேதம் இல்லாத நிலையில், குழந்தைகளுக்கு ஏதும் தவறாக நடப்பதுபோல் தெரிந்தாலே பெற்றோரிடம் கூறிவிடுவார்கள், ஆரம்பத்திலேயே அதைத் தடுத்துவிடலாம்,” எனக் கூறுகிறார் மருத்துவர் ஷோபனா.

பாலியல் குற்றங்களுக்கு அதிகமாக பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகள்

குழந்தைகளுக்க்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாலியல்ரீதியாக பாதிப்புக்கு ஆளாவதற்கு மூன்றரை மடங்கு அதிகம் வாய்ப்பு உள்ளது

சாதாரண குழந்தைகளைவிட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளாவதற்கு மூன்றரை மடங்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் நேன்சி தாமஸ்.

குளிப்பது, பள்ளியில் சென்று விடுவது உள்பட தன்னுடைய தினசரி தேவைகளுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் யாரையேனும் சார்ந்திருக்கும்போது, அவர்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்.

“எனவே, அவர்கள் பாலியல்ரீதியாக ஈர்க்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களை அனைவரும் பாவமாகவே பார்ப்பார்கள் என்றும் நினைத்து அவர்களது உடலைப் பாதுகாப்பது பற்றி சொல்லித் தராமல் தவிர்ப்பது தவறு,” என்று சொல்கிறார்.

இதேபொல் அதிகம் பாதிக்கப்படும் இன்னொரு வகையான குழந்தைகள், ஒற்றை தாயை பெற்றோராகக் கொண்டவர்கள் என்று கூறுகிறார் நேன்சி.

ஒற்றைப் பெற்றோர்களுக்கு, குழந்தை பராமரிப்பு மட்டுமின்றி சம்பாதிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கலாம். இதனால் குழந்தைகளைச் சரி வர கவனிக்க முடியாமல் போகலாம், என்கிறார் அவர்.

பெண் குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை

குழந்தைகளுக்க்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Nancy Thomas

படக்குறிப்பு, நேன்சி தாமஸ்

பாலியல் வன்கொடுமை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நடக்கும் என்பதும் கட்டுக்கதை.

ஆண் குழந்தைகள் இதுபற்றி வெளியே சொன்னால், பெற்றோரே சிரித்துவிட்டுக் கடக்கும் நிகழ்வுகளும் சில நேரம் நடப்பதாகச் சொல்கிறார் நேன்சி.

ஆண் குழந்தைகளை பாதுகாப்பு வளையத்தில் இருந்து புறக்கணிப்பதும் ஆபத்துதான் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், குழந்தை எதிர்பார்க்கும் அன்பை பெற்றோர் கொடுத்தாலே, அது வெளியிடங்களில் அன்பு தேடி தவறான பாதையில் சிக்கிவிடாது என்பதும் மேற்சொன்ன அனைத்து குழந்தைகள் நல ஆர்வலர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: