'மெட்ராஸ் ஐ' கண்களை பார்த்தாலே பரவுமா? தற்காப்பு, அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மருத்துவர் பிரதிபா லக்ஷ்மி
- பதவி, பிபிசிக்காக
நாடு முழுவதுமே கடந்த சில நாட்களாகவே 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண்வலி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கண்கள் சிவந்து, கண்ணீர் பெருக்கெடுக்கும் இந்த நோய் வந்தாலே வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும். கண்கள் சிவந்து இருந்தாலே பலரும் நம்மைப் பார்ப்பதற்கு அஞ்சுவார்கள்.
அத்துடன் கண்களில் வலி எடுப்பதால் எந்த வேலையும் செய்ய முடியாமலே வேதனையில் துடிக்க வேண்டியிருக்கும். பலர் குளிர் கண்ணாடி அணிந்து இந்த வேதனையைக் குறைக்க முயற்சிப்பார்கள்.
இந்தக் கண்வலியைப் பற்றி பல தவறான புரிதல்களும், நம்பிக்கைகளும் இருக்கின்றன. அதுவும் கூட சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக மழை காலத்தின் போது இந்த கண் தொற்று அதிகமாக இருக்கும்.
நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் மற்றொரு நபருக்கு கைகள் மூலமாகவோ அல்லது ஏதேனும் ஒரு பொருளின் மூலமாகவோ பரவும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இத்தனை பாடுபடுத்தும் இந்த நோய் எப்படி வருகிறது. அதற்கான சிகிச்சை என்ன, அதைத் தடுக்க என்ன செய்யலாம்? என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

பட மூலாதாரம், Getty Images
மெட்ராஸ் ஐ ஏன் ஏற்படுகிறது?
வைரஸ் அல்லது பாக்டீரியா அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் மெட்ராஸ் ஐ ஏற்படலாம். பள்ளிகள் போன்ற நெரிசலான இடங்களில் இத்தொற்று வேகமாக பரவுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் தொற்று என்பது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியோடு தொடர்புடையது. வைரஸ் காரணமாக ஏற்பட்டாலும் சரி , ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டாலும் சரி, மெட்ராஸ் ஐ அறிகுறிகள் குறுகிய காலத்திற்கு கடுமையானதாகவே இருக்கும். ஆனால், எளிதில் குணமாகி ஆகிவிடும்.
பாக்டீரியா மூலம் ஏற்படும்போது மெட்ராஸ் ஐ பாதிப்பும் சில காதுக்கும் இருக்கும். இதன் தாக்கம் கண்ணில் அதிகமாகவே இருக்கும். சில நேரங்களில் கண் பார்வையே பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
ஒரு சில நேரங்களில், ரசாயனங்கள் காரணமாகவும் கண் எரிச்சல் ஏற்படும். சுத்தமான தண்ணீரில் கண்களைக் கழுவுவதன் மூலம் அதன் பாதிப்பை குறைக்கலாம். ஒருவேளை, பாதிப்பு கடுமையானதாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தாமதப்படுத்தினால் பாதிப்புகள் மோசமானதாக மாறக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
மெட்ராஸ் ஐ எப்படி மற்றவர்களுக்கு பரவுகிறது?
பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து, கண் சுரப்பு மற்றும் கைகள் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவுகிறது. பெரும்பாலானோர் தங்களை அறியாமலேயே கண்களில் கை வைத்துவிடுகின்றனர். இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒரு நபரின் மூக்கு அல்லது சைனஸில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மற்றவர்களின் கண்களுக்கு பரவி, தொற்றுநோயை ஏற்படுத்தும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அவற்றை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது சரியான லென்ஸை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை காரணமாக மெட்ராஸ் ஐ வரலாம்.
பள்ளியிலோ அல்லது அதிக கூட்டமாக இருக்கும் இடத்திலோ நேரத்தை செலவிடுபவர்களுக்கு கண் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம்.
மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பார்ப்பதால் பிறருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை.

பட மூலாதாரம், Getty Images
மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் என்ன?
- ஒரு கண்ணோ அல்லது இரண்டு கண்களும் சிவந்து இருப்பது
- கண்களில் எரிச்சல், வலி அல்லது அரிப்பு
- கண் இமைகள் வீக்கம்
- கண் இமைகள் ஒட்டுதல் (கண் இமைகள் அதிகப்படியான வெள்ளை நிறத்தினால திரவத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும், குறிப்பாக அதிகாலையில் எழுந்தவுடன்.)
- அதிக வெளிச்சத்தைப் பார்க்க முடியாது
- கண்களில் இருந்து நீர் வெளியேற்றம்
- பாக்டீரியாவால் கண்ணிமையில் சீழ் வர வாய்ப்பு உள்ளது. நோய்த்தொற்று கண் பார்வைக்கு பரவினால், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
- மெட்ராஸ் ஐ - யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷமும் ஏற்படலாம்
- குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
மெட்ராஸ் ஐ-க்கு என்ன சிகிச்சை?
- இந்த அறிகுறிகள் தென்படும் போது கண்களைத் தேய்க்கவோ, கண்களில் கைகளை வைக்கவோ கூடாது.
- சுத்தமான துணி அல்லது கைக்குட்டையால் கண்களைத் துடைக்கவும்.
- அடர்த்தியான நிறங்களில் கண்ணாடி அணிவது பாதிப்பில் இருந்து சிறிது நிவாரணம் அளிக்கலாம்.
- காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் உடனடியாக அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
- வைரஸால் ஏற்படும் பிரச்சனை பொதுவாக ஓரிரு வாரங்களில் குறையும்.
- பாக்டீரியாவால் பிரச்னை ஏற்பட்டால், நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, சரியான மருந்தை, சரியான அளவு நாட்களுக்கு, சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
மெட்ராஸ் ஐ ஏற்படாமல் தடுப்பது எப்படி?
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெட்ராஸ் ஐ பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
உங்கள் கண்களை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும். கண்ணாடியைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றை குறைக்கலாம் என்பதோடு இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதையும், நீச்சல் குளங்களை பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.
பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் துண்டுகள், கைக்குட்டைகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் . இதன் மூலம் தொற்று பரவால் தடுக்கலாம்.
வீட்டு வைத்தியம் செய்து நேரத்தை வீணடிக்காமல், பாதிப்பு சிறியதாக இருக்கும்போதே மருத்துவரின் ஆலோசனைப்படி முழுமையான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
குறிப்பு: கட்டுரையின் ஆசிரியர் ஒரு மருத்துவர். மெட்ராஸ் ஐ பற்றிய பொதுவான புரிதலுக்காக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












