குண்டூர் காரம் விமர்சனம்: மகேஷ் பாபுவின் சென்டிமென்ட் மசாலா எப்படி இருக்கிறது?

குண்டூர் காரம் விமர்சனம்

பட மூலாதாரம், TRIVIKRAM SRINIVAS/FB

மகேஷ் பாபு- திரிவிக்ரமின் கூட்டணி ஒரு மாயாஜாலக் கூட்டணி என்றே சொல்லலாம். இருவரும் இணைந்து உருவாக்கிய அத்தடு, கலேஜா ஆகிய இரண்டு திரைப்படங்கள் தனித்துவமானவை.

தற்போது இருவரும் மூன்றாவது முறையாக 'குண்டூர் காரம்' மூலம் சங்கராந்தி ரேஸில் நுழைந்துள்ளனர். திரைப்படத்தின் விளம்பர வீடியோக்களில், மகேஷ் பாபுவின் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் மக்களை கவர்ந்துள்ளது. மகேஷை மிகவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள் என்பது பாடல்கள் மற்றும் ப்ரோமோக்களை பார்த்தால் புரியும்.

மேலும் 'அலா வைகுந்தபுரமுலோ' வெற்றிக்குப் பிறகு திரிவிக்ரம் இயக்கும் படம் என்பதால் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை அம்சங்களுடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? மகேஷின் மாஸ் அவதாரம் பார்வையாளர்களை மகிழ்வித்ததா?

குண்டூர் காரம் விமர்சனம்

பட மூலாதாரம், TRIVIKRAM SRINIVAS/FB

தாய்- மகன் இடையேயான பாசக்கதை

குண்டூர் காரம் படத்தின் கதையைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், அம்மா- மகன் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை. வசுந்தரா (ரம்யாகிருஷ்ணா) தன் ஐந்து வயது மகன் ரமணாவை (மகேஷ் பாபு) தனியே விட்டுவிட்டு, மறுமணம் செய்து கொள்கிறாள். இதற்கான காரணங்கள் என்ன? ரமணா வளர்ந்ததும் அம்மாவை சந்தித்தாரா? ரமணாவின் வாழ்க்கையில் தாய் வசுந்தரா மீண்டும் வருகிறாரா இல்லையா என்பது மீதிக்கதை.

ஒரு கதையாக பார்த்தால், நல்ல திரைப்படத்திற்கான களம் தான் இது. கதையின் போக்கில் போதுமான உணர்வுகள் இருக்கிறது.

ஒரு காட்சியில் வசுந்தரா தன் மகனைப் பார்த்து கேட்கிறார், "ஏன் தாடி வளர்க்கிறாய்?"

அதற்கு ரமணா "காதல் தோல்வி'' என்கிறார். "யார் அந்த பெண்" என்று வசுந்தரா கேட்க, "நீ" என்கிறார் ரமணா. அம்மா மற்றும் மகன் இடையிலான பாசத்தை தனது பாணியில் சொல்ல முயற்சித்துள்ளார் திரிவிக்ரம். ஐடியா நன்றாக இருந்தாலும் அதை திரைக்கதையாக்கிய விதம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை.

படத்தின் மையப் புள்ளி வேறு எங்கோ இருக்க, தேவையில்லாத காட்சிகளால் நேரத்தை வீணடித்துள்ளார் இயக்குனர். தாய்- மகன் பாசம் மேலே உள்ள அந்த ஒரு வசனத்தில் மட்டும் தான் உள்ளது, எனவே திரைப்படம் முழுவதும் அதை பார்வையாளர்களால் உணர முடியவில்லை.

குண்டூர் காரம் விமர்சனம்

பட மூலாதாரம், HAARIKA & HASSINE CREATIONS

மகேஷ் பாபுவின் பிம்பம் மட்டும் போதுமா

கதையை விட மகேஷ் பாபுவின் மாஸ் கதாபாத்திரம் மட்டும் போதுமென நினைத்துவிட்டார் இயக்குநர். இதனால் பல தேவையில்லாத காட்சிகள் படத்தில் உள்ளன. மகேஷ் பாபுவின் ரமணா கதாபாத்திரம் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவரது கதாபாத்திரத்தோடு பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை.

ரமணாவின் அப்பா சத்யம் (ஜெயராம்) ஒரு காட்சியில் "உன்னுடைய பிரச்சனை என்னவென்று உனக்கே தெரியவில்லை' என்று ரமணாவிடம் சொல்வார், அது உண்மை தான்.

ஹீரோவுக்கு என்ன பிரச்சனை? அவர் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறார்? அவர் இழந்தது என்ன? இதையெல்லாம் பார்வையாளர்களுக்கு சரியாக கூறாமல் அந்த கதாபாத்திரத்தை கடைசி வரை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர்.

மேலும், இந்த கதையில் முக்கிய பிரச்சனை என ஹீரோவுக்கு எதுவும் இல்லை. அம்மாவுடன் உட்கார்ந்து பேசினால் இந்தக் கதை முடிந்து விடும். இப்படிப்பட்ட ஒரு மெல்லிய கதையை திரைக்கதையாக்க, மற்ற கதாபாத்திரங்களும் அவற்றின் செயல்களும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த திரைப்படத்தில், ஒற்றை அடுக்கு திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்கிறது.

ரமணா தன் அம்மாவை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதை ஒரு காட்சியிலாவது காட்டியிருக்க வேண்டும். அப்போது தான் ரமணாவின் பயணத்துடன் பார்வையாளர்கள் இணையும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இந்தப் படத்தில், "ரமணாவின் வாழ்க்கை ஒரு அதிசயம் ரா பாபு'' என்ற ஒரு வசனம் வருகிறது. அவரது குணாதிசயத்தில் என்ன அதிசயமாக உள்ளது அல்லது ஏதேனும் வித்தியாசமாக உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

குண்டூர் காரம் விமர்சனம்

பட மூலாதாரம், HAARIKA & HASSINE CREATIONS

திரிவிக்ரமின் பாணி மிஸ்ஸிங்

திரிவிக்ரம் ஒரு நல்ல கதைசொல்லி. அவருடைய கதையில் சில தந்திரமான முடிச்சுகள் இருக்கும். சொல்லப்போகும் கதை மெல்லியதாக இருந்தாலும், கதையின் மையப் புள்ளியைச் சுற்றி சுவாரசியமான கதாபாத்திரங்களை உருவாக்கி, திரைக்கதையை எங்கும் சலிப்பில்லாமல் உருவாக்குவார்.

ஆனால் குண்டூர் காரத்தில் அவரது திரைக்கதை முத்திரை தென்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையில், இந்தக் கதை நன்றாக தான் தொடங்குகிறது. முதல் நான்கு காட்சிகளைப் பார்த்ததும், மகேஷ் பாபு போன்ற ஹீரோவை வைத்து நல்ல குடும்பக் கதையைக் காட்டப் போகிறார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அந்த குடும்ப உணர்வுகளை அங்கேயே விட்டுவிட்டு, பல தேவையில்லாத காட்சிகளைக் குவித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து, எதிர்பார்ப்புகள் அனைத்தும் மறைந்துவிடும்.

திரையில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், 'வாவ்' என்ற உணர்வை அவை தரவில்லை. இன்டர்வெல் காட்சியும் மிக எளிமையாக முடிகிறது.

ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு போராட்டமா?

குண்டூர் காரத்தின் முதல் பாதி முழுவதும் ஒரே ஒரு கையெழுத்தைச் சுற்றியே நகர்கிறது. இரண்டு காட்சிகளில் சொல்ல வேண்டியவற்றை பல காட்சிகளுக்கு இழுத்திருக்கிறார்கள்.

குண்டூரிலிருந்து ரமணா ஹைதராபாத் திரும்புவதற்கு முதல் பாதி காட்சிகளே போதுமானதாக இருந்தது. மேலும், நாயகி ஸ்ரீலீலாவின் வேடம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. குண்டூரில் உள்ள ரமணா வீட்டுக்கு கையெழுத்துக்காக வருவது மட்டுமே அவரது வேலையாக இருந்தது.

ஆக்‌ஷன் காட்சிகளும் இயல்பாக இல்லை. சில இடங்களில் மட்டும் சண்டை தேவை என்பது போல் இருந்தாலும், திரைக்கதையில் இயல்பான சண்டைக் காட்சிகள் இல்லாதது இன்னொரு பெரிய பிரச்சனை. "நாடி நகிலிஸ் கொலுசு'' என்ற பாடல் மூலம் ஒரு மெட்லி இசை உருவாக்கப்பட்டது.

சில சமயங்களில் இதுபோன்ற காட்சிகள் தியேட்டரில் ஆரவாரத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கதையின் போக்கில் இதுபோன்ற காட்சிகள் மனதில் நிற்கவே இல்லை. அந்தப் பாடல் காட்சி மட்டும் ஸ்ரீலீலாவின் நடனத் திறமையைக் காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

கதையை எப்படி கொண்டு செல்வது என்று புரியாத சூழ்நிலைகளில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்படுகின்றன. முதல் பாதியில் கதை பெரிதாக எங்கும் நகரவில்லை. அம்மா, மகன் பாசத்தின் கண்ணோட்டத்தில் காட்சிகள் அமைத்திருந்தால் அதிலிருந்து கதை நன்றாக நகர்ந்திருக்கும்.

இரண்டாம் பாதி மேலும் மந்தமாகவே இருந்தது. இங்கும் கதைக்கு தேவையில்லாத கதாபாத்திரங்களுடன் ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. அவை கதைக்குத் தடையாக இருந்தன, சொல்லப்போனால் கதைக்கு எந்தப் பலனையும் தரவில்லை.

முடிவில் காட்டப்பட்ட அம்மா செண்டிமெண்ட் பொருத்தமற்றது போல் தோன்றியது. இந்த காட்சியில் வரும் வசனங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. மகேஷ் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் அனுபவ நடிப்பும் அதற்கு ஒரு ஃபீல் குட் டச் சேர்க்கிறது.

குண்டூர் காரம் விமர்சனம்

பட மூலாதாரம், HAARIKA & HASSINE CREATIONS

கலேஜா திரைப்படத்தில் காட்டப்பட்ட மகேஷ்

கலேஜா படத்தில் மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த சாயல்கள் ரமணா கதாபாத்திரத்திலும் தெரிகிறது. எப்போதும் போல, மகேஷ் தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகளுடன் அவரது நடனமும் சிறப்பாக உள்ளது. ரமணா கதாபாத்திரத்தின் வலியை பார்வையாளர்களுக்கு உணர வைத்திருந்தால், அந்த பாத்திரம் வேறு லெவலில் நின்றிருக்கும். ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் பெரிதாக எடுபடவில்லை.

பாடல்கள், நடனத்திற்காக மட்டுமே அவரை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் பல இடங்களில் மகேஷ் பாபுவுடன் அவர் நிற்பதை காணலாம். மீனாட்சி சவுத்ரியின் கதாபாத்திரம் ஒரு பொம்மை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த பாத்திரம் திரைப்படத்தில் வருகிறது என்று தெரியவில்லை.

ரம்யாகிருஷ்ணா தனது அனுபவ நடிப்பால், உணர்ச்சிகரமான காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். பிரகாஷ் ராஜுக்கு வழக்கமான ஒரு வேடம். ரகுபாபு, ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக சொதப்பியது ஏன்?

தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களையே பெறும். மகேஷ் பாபு போன்ற ஒரு பெரிய ஹீரோ படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை இந்த திரைப்படம் ஏற்படுத்தாது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, ஆனால் பிரம்மாண்டமாகத் தோன்றும் ஒரு ஷாட் கூட படத்தில் இல்லை.

திரைப்படம் முழுவதும் வழக்கமான ஷாட்களால் நிரம்பியுள்ளது. தமன் இசையில் சில தியேட்டரில் ரசிக்க நன்றாக இருக்கிறது. பின்னணி இசை சற்று அலற வைக்கிறது. திரைப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட தடைகள் திரையில் பிரதிபலிக்கின்றன. மகேஷ் பாபுவின் ஆக்ஷன், நடனம், மாஸ் வசனங்கள் தான் இந்தப் படத்தின் பலம். இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பெற, மகேஷ் பாபு என்ற பிம்பம் மட்டுமே உதவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)