ஏமனில் இரான் ஆதரவு ஹூத்தி மீது அமெரிக்கா, பிரிட்டன் வான்வழி தாக்குதல் - சௌதி அரேபியா கவலை ஏன்?

ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம், reuters

அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏன் செங்கடலில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர். இந்த தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இரானின் ஆதரவு பெற்றதாக அறியப்படுகிறது.

ஏமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன?

அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித்தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர்விமானங்கள், குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்கு தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.

சைப்ரஸிலிருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின.

இந்த தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர் செய்ய இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

யேமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகள் ஹூத்திகளை வலுவிழக்க செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.

ஹூத்திகளின் ஆளில்லா விமானம், ஆளில்லா கப்பல், தரை வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணை, கடலோர மற்றும் வான்வழி கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

உடல் நலம் குன்றியுள்ள ஆஸ்டின் , மருத்துவமனையிலிருந்து இந்த தாக்குதல்களை நேரடியாக மேற்பார்வையிட்டார்.

ஏமன்

பட மூலாதாரம், Getty Images

ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை

ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டியது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலக மிக முக்கியன் கடல்வழிபாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்க செய்யவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நிலவும் பதற்றத்தை தணித்து நிலைமைகளை சீராக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

யேமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம், FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES

சவுதி அரேபியா என்ன சொல்கிறது?

இதற்கிடையில், செங்கடலில் தாக்குதல்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கடலில் பாதுகாப்பான சூழல் நிலவுவதன் முக்கியத்துவத்தை சவுதி அரேபியா உணர்கிறது. ஏமனில் நடைபெறும் பல்முனை தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியா கவலைக் கொள்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் அதன் உடன் நிற்கும் நாடுகள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹூத்திகள் என்ன கூறுகிறார்கள்?

ஹூத்திகள் இந்த தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஹூத்தி அதிகாரிகளில் ஒருவர், “அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கற்பனைக்கு அப்பாற்பட்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை விக பெரியதாக இந்த போர் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹூத்திகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம், “ஏமனுக்கு எதிரான இந்த தாக்குதல்களுக்கு எந்தவித நியாயமும் கிடையாது. செங்கடல் மற்றும் அரபிக்கடல்களில் சர்வதேச போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனின் துறைமுகங்கள் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அது இனியும் தொடரும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் தாக்குதல்களினால், பாலத்தீன் மற்றும் காஸாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏமன் கைவிடும் என்று நினைப்பது தவறு” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிற நாடுகள் என்ன கூறுகின்றன?

இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஏமன் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளது. “ஏமனின் இறையாண்மையை, பிராந்திய உரிமையை மீறும் செயலாகும். சர்வதேச சட்டங்களையும் இந்த தாக்குதல்கள் மீறுகின்றன. இந்த தாக்குதல்களின் அச்சமும், நிலையற்றத்தன்மையுமே” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார்.

இரானின் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக்குழு ஹிஸ்புல்லாவும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளது. “காஸா மீது சியோனிச எதிரி நடத்திய படுகொலைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் அமெரிக்கா முழு உடந்தை என்பது இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது.

இராக் பிரதமர் அலுவலகம் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மோதலை இந்த பிராந்தியம் முழுவதும் நீட்டிக்கிறது அமெரிக்கா” என்று கூறியுள்ளது.

பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைவர் லார்ட் டன்னட் பிபிசியிடம் பேசுகையில், இரான் இந்த விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஹூத்திகள் மட்டுமல்ல, ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுக்கான ஆதரவையும் வழங்குகிறது. இந்த தாக்குதல்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டு நடத்தப்படுபவையாக இருந்தால், செங்கடலில் நிலவும் பிரச்னையை துரிதமாக தீர்க்க உதவும். மீண்டும் நமது கவனத்தை இஸ்ரேல் காஸா போரை கட்டுப்படுத்தப்பட்டதாக வைத்திருக்க செலுத்த முடியும்” என்று கூறினார்.

பிரிட்டன் ஆயுதமேந்தி படைகளின் அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி “நமது நாட்டின், படைகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதில் நிறைய ஆபத்துகள் இருந்தன. நேற்று இரவு அவர்கள் செய்த காரியத்துக்காக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)