நிலையான காதல் உறவுக்கு உங்கள் தோற்றத்தைவிட முக்கியமானது எது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வில்லியம் பார்க்
- பதவி, பிபிசி ஃப்யூச்சர்
‘முதல் தோற்றம் முக்கிய தோற்றம்’ என ஒரு பழமொழி இருக்கிறது.
ஒருவரின் வெளித்தோற்றம் மிக முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட மற்றவரின் மதிப்பைப் பெறுவதற்கு நமது குணநலன்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நமது வெளிப்புறத் தோற்றங்களுக்குக் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து நாம் மிக விரைவாக அவரைப்பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறோம், அதில் உறுதியாக இருக்கிறோம். இதன் அடிப்படையில் நாம் பிறரின் அன்பையும் மதிப்பையிம் பெறுவதில் நமது தோற்றம் மிகவும் முக்கியமானது என்று நாம் எளிதாகக் கருதலாம்.
தோற்றத்தினால் ஏற்படும் விருப்பு என்பது உண்மையில் முக்கியமானதாக இருந்தாலும், மனிதர்களின் குணங்களும் பல நிலைகளில் முக்கியமானவையாக இருக்கின்றன.
தோற்றக் கவர்ச்சி மக்கள் விரும்பும் குணநலன்கள் பற்றிய கருத்துக்கணிப்புகளில் முன்னணியிலும் இல்லாமல் பிந்தங்கியும் இல்லாமல், நடுநிலையில் உள்ளன. சொந்தமாக ஒரு நல்ல வீடு வைத்திருத்தல், பொருளாதார ஸ்திரத்தன்மை போன்றவை மக்களை மிகக் குறைந்த அளவே ஈர்க்கின்றன என்று இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
உடல் ஈர்ப்பை விட இணக்கம், உற்சாகம், புத்திசாலித்தனம் போன்ற பண்புகள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. இது எதிர்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகிய ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் விஷயங்களாக உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஒரு துணையைத் தேடும்போது நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?
இது போன்ற கருத்துக்கணிப்புகளில் பங்கேற்பவர்கள், மற்றவர்கள் மத்தியில் தங்களை நன்றாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பதில்களை அளிக்கவும் வாய்ப்புள்ளது. இது முடிவுகளை திசைதிருப்பக்கூடும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் கிரெக் வெப்ஸ்டர் கூறுகிறார்.
பங்கேற்பாளர்கள் சுயமாக பதில்களைத் தேர்வு செய்யும் கருத்துக்கணிப்புகள் திசைதிருப்பக்கூடிய தரவுகளை வழங்கலாம் என்று தோன்றினாலும், பொதுவாக மக்கள் தோற்றத்தை விட புத்திசாலித்தனம் போன்ற குணங்களை விரும்புகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, நாம் தோற்றத்தை விட குணநலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமா?
‘So Syncd’ என்ற டேட்டிங் செயலியில் பயனர்கள் ஆளுமைப் பண்புகளை அளவிட ஒரு சைக்கோமெட்ரிக் சோதனையை முடிக்க வேண்டும்.
இந்தச் செயலியின் இணை நிறுவனர் ஜெஸ் ஆல்டர்சன் நாம் தோற்றத்தைவிட குணநலன்களுக்கு முக்கியத்துவம் தருவதாகக் கூறூகிறார். பிபிசி ஃபியூச்சர் இணையதளத்திடம் அவர் பகிர்ந்துகொண்ட 1,000-க்கும் மேற்பட்ட பயனர்களின் தகவல்களின் படி, கிட்டத்தட்ட 90% பேர் தோற்றத்தை விட ஆளுமையைத் தான் அதிகம் விரும்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
நமது ஐந்து அடிப்படை குணங்கள் என்ன?
ஒருவரின் ஆளுமையை அளவிடுவது சிக்கலான விஷயமாக இருக்கலாம். பொதுவாக கேள்விகள் சார்ந்த சைக்கோமெட்ரிக் சோதனைகள் தான் ஆளுமையை அளவிடுவதற்கான வழியாக மனநல மருத்துவத்தில் பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. (இந்தச் சோதனைகள், ‘ஒரு பார்ட்டியில் நான் தான் மையப்புள்ளியாக இருப்பேன்’ என்பது போன்ற வாக்கியங்களுடன் ஒருவர் எந்த அளவு உடன்படுகிறார்கள் என்பதை அளவிட முனைகின்றன.)
உளவியலாளர்கள் பெரும்பாலும் ‘பிக் ஃபைவ்’ (Big Five) சோதனையைப் பயன்படுத்துகின்றனர். இது ஐந்து குணாதிசயங்களைக் கொண்டு மக்களை அளவிடுகிறது - புதிய அனுபவங்களுக்கான முனைப்பு, செயல்களில் கவனமாக இருப்பது, உற்சாகம், இணக்கம், மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள். இந்த ஐந்து குணாதிசயங்களும் மிகவும் பொதுவானவை என்று கருதப்படுகிறது.
ஆனால் இந்த ‘பிக் ஃபைவ்’ சோதனைக்கு எதிராக விமர்சனங்களும் உள்ளன. இந்த ஐந்து குணாதிசயங்களை மட்டுமே கணக்கில் கொள்வது, ஒருவரைப் பற்றிய குறுகிய பிம்பத்தையே தரும் என்று வெப்ஸ்டர் கூறுகிறார்.
துல்லியமான விவரங்களை அளிக்காவிட்டாலும், சைக்கோமெட்ரிக் சோதனைகள் மக்களிடையே நிலவும் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைக் காட்டக்கூடும். மேலும் மக்களின் ஆளுமைகள் குறித்த பரந்துபட்ட தகவல்களை அளிக்கலாம். இதில், நமது ஆளுமைகளின் சில பகுதிகள், தீவிர உறவுகளுக்கு நாம் எவ்வளவு பொருத்தமானவர்கள் என்பதற்கான சிறந்த குறிகாட்டிகளாகத் தெரிகின்றன.
இந்த ‘பிக் ஃபைவ்’ சோதனையில் அளவிடப்படும் ‘இணக்கம்’ என்ற குணநலன், ஒருவர் எவ்வளவு அக்கறையுடனும், இரக்கத்துடனும் இருக்கிறார்கள் என்பது குறித்தது. இது அவர் மற்றவர்களுடன் எந்த அளவு இணக்கமாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. இது ஒரு துணையைத் தேடுபவர்களுக்கான ஆரம்ப மதிப்பீட்டில் இரு பாலினருக்கும் வலுவான பங்கு வகிக்கிறது.
இது தற்போதைய மற்றும் எதிர்கால உறவின் வலுவான முன்கணிப்பு ஆகும். உறவில் திருப்தி, மற்றும் உறவு முறிவின் ஒரே குறிப்பிடத்தக்க முன்கணிப்பாக இது இருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும், ஒரு தீவிர உறவுக்கான விருப்பத்தைக் கணிக்க, உடல் கவர்ச்சியை, இணக்கமான மனதுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஈர்ப்பின் அடிப்படைக் கொள்கை என்ன?
ஒரு நல்ல மனிதராக இருப்பது, ‘இணக்கமான நீண்ட கால உறவுகளுக்கு இன்றியமையாதது’ என்கிறார் வெப்ஸ்டர். "கனிவாக, கண்ணியமாக, நட்பாக இருப்பது ஒரு அடிப்படை தேவை," என்று அவர் கூறுகிறார். ஒருவர் இரக்கமற்றவர் என்று நினைத்தால் அவருடன் உறவில் நுழைவது சிக்கலாக இருக்கும்.
வெப்ஸ்டர் கூறுகையில், “நம்முடைய ஆளுமையைப் பற்றியும், பிறரின் ஆளுமைகளைப் பற்றியும் நமது கருத்து, நமது பார்வையால் வடிவமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மிகவும் கனிவான நபர்கள், மற்றவர்களை அன்பானவர்களாகவும் நட்பானவர்களாகவும் பார்க்க முனைகிறார்கள். மேலும் ஒருவருடைய ஒத்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களிடம் அவர் மிகவும் ஈர்க்கப்படுகிறார். அப்படியானால், நம்மைப் போலவே ஒத்த ஆளுமைகளைக் கொண்டவர்களுடன் நாம் நன்றாகப் பொருந்தி வாழலாம்,” என்கிறார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் டெர்ரி ஆர்புச் மற்றும் இல்லினாய்ஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த சமூகவியலாளர் சூசன் ஸ்ப்ரெச்சர் ஆகியோர், உடல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஒரு நபர் இன்னொருவருடன் எவ்வளவு ஒத்திருக்கிறார், அவர்கள் மற்றவர்களுடன் எவ்வளவு நெருக்கமாக வாழ்கிறார்கள் போன்ற குணங்கள் முக்கியமானவை என்று கூறுகிறார்கள்.
‘பிக் ஃபைவ்’ சோதனையில் கவனம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் அதிக அளவிலான ஒற்றுமை உள்ள ஜோடிகள், பிரச்னைகளைத் தீர்க்கும் மற்றும் அன்றாடப் பணிகளை நிர்வகிப்பதற்கான திறன்களில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
நமக்குப் பரிச்சயமான கூட்டாளர்களைத் தேடுவதும், நமது ஆளுமைப் பண்புகள், தோற்றம், புவியியல் மற்றும் சமூகக் குழுக்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதும் ‘ஈர்ப்பின் மிக அடிப்படைக் கொள்கை’ என்று, மினசோட்டா, மினியாபோலிஸ், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் எலன் பெர்ஷெய்ட் மற்றும் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் ஹாரி ரீட் ஆகியோர் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் சில ஆளுமை வேறுபாடுகள் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, வெவ்வேறு குணங்களை நம்மிடம் இருந்து வெளிக்கொணரக்கூடிய உற்சாகமான குழுக்களில் இருப்பதை நாம் விரும்புகிறோம்.
"குறைந்தபட்சம் நம்மைவிட குறைந்தபட்சம் வேறுபாடு உள்ளவர்களிடம் ஈர்க்கப்படுவம் வகையில் நாம் பரிணமித்துள்ளோம்," என ஆல்டர்சன் கூறுகிறார். "இது இணைந்து வாழ்வதற்கு ஏற்ற ஒரு வலுவான அணியை உருவாக்குகிறது. ஆனால், நம்மை ஒன்றிணைக்கும் நெருக்கமும் நமக்குத் தேவை," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
‘So Syncd’ டேட்டிங் செயலியில் பயன்படுத்தப்படும் சைக்கோமெட்ரிக் சோதனை, ‘பிக் ஃபைவ்’ போன்றது அல்ல, ஆனால் அதே கருத்துக்களின் அடிப்படையில் கேள்விகளைக் கேட்கிறது. அந்தச் செயலி, பயனர்கள் எந்த அளவு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறார்கள், உணர்வுப்பூர்வமான இணைப்புகளை உருவாக்குகிறார்களா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கிறது.
"வலுவான இணைப்பை உருவாக்க, போதுமான ஒற்றுமைகள் தேவை. அதேபோல் உற்சாகமூட்டும் அளவு வேறுபாடுகளும் தேவை," என்று ஆல்டர்சன் கூறுகிறார்.
"எந்த வகையான ஆளுமை கொண்டவர்களும் ஒரு ஜோடியாக இணையலாம். ஒவ்வொன்றுக்கும் நன்மைகள் மற்றும் சவால்கள் உள்ளன. நீங்கள் மிகவும் ஒத்திருந்தால், அது சற்று சலிப்பை ஏற்படுத்தலாம். அதே நேரம் உங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் இருந்தால், அது எப்போதுமே மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று கூறமுடியாது."

பட மூலாதாரம், Getty Images
கொஞ்சம் கனிவு, கொஞ்சம் ஆதிக்கம்
உறவுகளில், மற்ற கவர்ச்சிகரமான குணநலன்களுடன் ஒத்துப்போகும் தன்மையும் சேர்ந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று வெப்ஸ்டர் கூறுகிறார்.
சமூக உளவியலாளர்கள் ஏஞ்சலா பிரையன் மற்றும் அமண்டா மஹாஃபி ஆகியோருடன் இணைந்து வெப்ஸ்டர் நடத்திய ஒரு ஆய்வில், சமூக, உடல், மற்றும் நிதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் நபர்களிடம், இணக்க குணமும் இருந்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ந்தனர்.
இந்த மூன்று வகையான ஆதிக்கங்களும் கவர்ச்சிகரமானவை. ஏனெனில் ஒவ்வொன்றும் ஒரு வகையான பாதுகாப்பை அல்லது உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான உத்தரவாதத்தை, ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் போன்ற மிகவும் விரும்பத்தக்க தேவைகளை வழங்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அதே ஆதிக்கம் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பயன்படுத்தப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் நாம் என்னதான் தேடுகிறோம்?
"ஆதிக்கம் என்பது ஒரு உறவை மேலும் வலுவாக்கவோ, அல்லது பலவீனமாக்கவோ முடியும் என்பது கண்கூடாகத் தெரிகிறது," என்கிறார் வெப்ஸ்டர். "மக்கள் விரும்புவது சமூகரீதியாக, உடல் ரீதியாக அல்லது நிதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் துணையைத்தான். ஆனால் அவர்கள் தன்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பது அவசியமில்லை.”
‘ஆதிக்க குணமும் இணக்க குணமும் ஒரு கவர்ச்சியான கலவை’ என அவர் மேலும் கூறுகிறார். "மக்கள் மற்றவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் நபர்களை எதிர்பார்க்கின்றனர். ஆனால் தங்களை ஆதிக்கம் செய்பவர்களை அல்ல."
ஒரு துணையைத் தேடும் போது, கனிவும் இணக்கமும் மற்ற அனைத்தையும் விட மிக்கியப் பங்கு வகிக்கிறது என்று வெப்ஸ்டர் கூறுகிறார்.
அன்பாக இருப்பது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












