புத்தாண்டு: போட்ட சபதத்தை நிறைவேற்ற அறிவியல் கூறும் எளிய வழிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
புத்தாண்டு தொடங்கியதில் இருந்து அடுத்த 12 மாதங்களில் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என இப்போதே திட்டமிட்டிருப்பீர்கள். அதற்காக, நீங்கள் புத்தாண்டு சபதம் ஏற்றிருப்பீர்கள்.
சராசரியாக, மொத்த மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதியினர் இப்படி புத்தாண்டையொட்டி சபதம் ஏற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அவற்றை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை.
கடந்த ஆண்டு நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி, 17 % முதல் 45% மக்கள் வரை, புத்தாண்டு தொடங்கி ஒரே மாதத்தில் தாங்கள் ஏற்றுக்கொண்ட சபதத்தை கைவிடுவதாக அந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்தது.
அதேபோல, மீதம் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர், ஆறு மாதங்களில், தாங்கள் ஏற்றுக்கொண்ட சபதத்தை கைவிடுகின்றனர் என்றும் அந்த கணக்கெடுப்பில் தெரியவந்தது.
ஆனால், நாம் நடைமுறைக்கு சாத்தியமான நமது வளர்ச்சியை அளவிடக்கூடிய ஒரு இலக்கை நிர்ணயித்து பயணித்தால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி நம் இலக்கை நிர்ணயிக்கும்போது, நாம் முதலில் எதனை கனிக்க வேண்டும் என சந்தேகம் எழலாம்.
இந்தப் புத்தாண்டில், நீங்கம் சபதம் ஏற்கும் முதல் வாரத்தில், அறிவியல் பூர்வமான இந்த ஏழு விஷயங்களை பின்பற்றினால், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறலாம்.

பட மூலாதாரம், Getty Images
நாள் 1: உங்கள் உறக்கத்தில் கவனம் செலுத்துங்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அனைவரும் நள்ளிரவு வரை விழித்திருப்போம். ஆனால், அடுத்து வரும் நாட்களில் அப்படியிருக்க வேண்டியதில்லை. தூங்கி எழும்போது, நமது அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் தூங்குவதற்கு நாம் குற்றவுணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.
குளிர்காலத்தில் நாம் படுக்கையில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மனிதர்கள், காலநிலைக்கு ஏற்ற வகையில் உறங்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, கடும் வெயில் காலத்தைவிட, குளிர்காலத்தில் மனிதர்களுக்கு அதிக ஓய்வு தேவை. ஜெர்மனியில் நடந்த ஒரு ஆய்வில், மக்கள் ஜூன் மாதத்தைவிட, டிசம்பர் மாதம் ஒரு மணி நேரம் அதிகம் உறங்குவது தெரியவந்தது.
குளிர்காலத்தில் நல்ல உறக்கம்பெற, உங்கள் படுக்கையறையில் நீங்கள் உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பிலிருந்து வெளிச்சத்தை பார்ப்பதை தவிர்க்கவும். அதேபோல, உறங்குவதற்க முன்பு வரை மொபைல்போனை பார்ப்பதையும் தவிர்க்கவும். ஒரு சமீபத்திய ஆய்வின்படி, சீரான தூக்கம் நம் உடல்நலத்தை காக்கும்.

பட மூலாதாரம், Getty Images
நாள் 2: உங்கள் உடல் மீது கவனம் செலுத்துங்கள்
நீங்கள் எப்போதும் பரபரப்பாக கை,கால்களை அசைத்துக் கொண்டிருக்கும் (Fidget) நபராக இருந்தால், உங்கள் பழக்கங்களை அப்படியே கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களை அறியாமல், காலை கீழ தட்டுவதும், கை விரல்களை அழுத்துவதும் குறிப்பிட்ட அளவு உங்கள் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க உதவும்.
ஆனால், தற்போது, குளிர்காலம் என்பதால், வெளியே சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முயற்சிக்கலாம். ஏனென்றால், அது உங்கள் இதயத்திற்கு நல்லது. குளிர்காலத்தில் வெளியே உடற்பயிற்சி செய்தால், உங்கள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கெட்ட கொழுப்புகளும் குறையும்.
அதேபோல, நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, பின்நோக்கி நடைபயிற்சி மேற்கொள்ளவும் முயற்சிக்கலாம். ஏனென்றால், முன்நோக்கி நடப்பதைவிட, பின்நோக்கி நடப்பதால், அதிக காலோரிகள் குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது பெரும்பாலும், மூட்டு வலி உள்ளவர்கள் பின்பற்றலாம். ஏனெனில், இப்படி பின்நோக்கி நடப்பதால், மூட்டு வலி அதிகம் இருக்காது, அதேநேரத்தில் அதிக கலோரிகளையும் குறைக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
நாள் 3: உங்கள் மனதின் மீது கவனம் செலுத்துங்கள்
முன்பின் தெரியாதவர்களுடன் பேசுங்கள், நீங்கள் பயப்படும் விஷயங்களைச் செய்யுங்கள், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். இவை அனைத்தும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதேபோல, அறிவியலின்படி, இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.
அதேபோல, நீங்கள் எதாவது புதிதாக செய்வதற்கும் முயற்சிக்கலாம். ஏதேனும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என உங்களுக்கு நீங்களே சவால்விடுங்கள். இது உங்கள் மூளையின் செயல்தன்மையை அதிகரிக்கும்.
மிகவும் உற்சாகமாக இருக்கும்போது, தோப்புகரணம் போடுங்கள், அப்படி செய்வதால், உங்கள் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும். அதனால், உங்கள் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு, உங்கள் பிரச்னைகளுக்கான தீர்வை மிக எளிமையாக யோசிக்க முடியும்.
இப்படி மேலே சொன்ன விஷயங்கள் கடினமாக இருந்தால், அனைத்தையும் விட்டுவிட்டு, நீங்கள் உங்களை இளமையாக நினைத்துக்கொள்ளுங்கள். ஆய்வுகளின்படி, நீங்கள் உங்களை இளமையாக நினைத்துக்கொண்டால், உங்களால், நீண்ட காலம் வாழ முடியும். நீங்கள் மலை ஏறுதல், கடலை பார்ப்பது, அல்லது வானத்தை பார்ப்பது போன்ற விஷயங்களிலும் ஈடுபடலாம்.
இவை அனைத்தும் கூட உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். சில நேரங்களில், நீங்கள் தானாக உங்களுக்கு பிடித்த பாடலை சத்தமாகப் பாடலாம். அதுவும் மன இறுக்கத்தையும், அழுத்தத்தையும் குறைக்கும் வழிகளில் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images
நாள் 4: உங்கள் சுற்றத்தாரை கவனியுங்கள்
நண்பர்களை வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. அது, உங்களின் எதிர்ப்பு சக்தி மற்றும் உங்கள் இத ஆரோக்கியத்தை அதிகரித்து, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நம் நண்பர்களால், நம்முடைய பழக்கங்களை மாற்ற முடியும்.
நாம் எப்போதும் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறோம். அது நம் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒருவரை மன்னிப்பது தொடர்பாக உங்களின் எண்ணங்களை மாற்றிக்கொண்டால், உங்கள் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கு கடினமாக இருந்தாலும், சில நேரங்களில் அப்படி சொல்வதன் மூலம், நாம் மன அழுத்தமின்றி, அதிக பணம் சம்பாதித்து, உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழலாம்.

பட மூலாதாரம், Getty Images
நாள் 5: உங்கள் உணவின் மீது கவனம் செலுத்துங்கள்
ஆண்டின் அனைத்து மாதங்களிலும் நம் உணவின் மீது கவனம் செலுத்துவது அவசியம். ஆனால், ஆய்வுகளின்படி, நாம் நம் உணவிற்கு பிறகு இனிப்பு எடுத்துக்கொள்வது நம் உடலுக்கு நல்லதல்ல.
காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணும்போசு, பச்சை நிறத்தில் உள்ளவற்றை மட்டும் உண்ணாமல், அனைத்து நிறங்களிலும் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணால், நம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அதேபோல, இருதய நோயில் இருந்தும் நம்மை காக்கும்.
ஆனால், இப்படி காய்கறிகளை மட்டுமே நாம் உண்ண வேண்டும் என்பதில்லை. அதிலும், குறிப்பாக ஜனவரி மாதத்தில், குளிர்காலத்தில், நாம் காபி குடிப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது.
ஆய்வுகளின்படி, காபி குடிப்பதால் வாதம் மற்றும் இருதய நோய் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். ஆனால், அளவுக்கு மீறிய அமுதமும் நஞ்சு என்பதைப்போல, காபியையும் அளவாகக் குடிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
நாள் 6: உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்
உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நம் உடல் நலம் மற்றும் மனநலத்தை நாம் மேம்படுத்தலாம். ஆனால், அதிகம் உடற்பயிச்சி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாளுக்கு 10,000 அடிக்கு மேல் நடப்பதும் நல்லதல்ல.
சில ஆய்வுகளின்படி, 10,000 அடிக்கு குறைவாக, சில நேரங்களில் 5000 அடிக்கு குறைவாக நடந்தாலே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
ஒருவேளை, உங்கள் உடலை விரைவாக சரி செய்ய வேண்டும், கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், சீரான இடைவெளியில் ஒரு நாளைக்கு ஆறு முறை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதும். இது, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை அதிகரித்து, நம் உடலை ஒட்டுமொத்தமாக சீரமைக்கும்.
நாம் ஒரு நாளின் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியம். ஒரு ஆய்வின்படி, மாலை நேரத்தில் சைக்கிளிங் செய்பவர்கள் அதிக வேகமாக சைக்கிளிங் செய்வதாக தெரியவந்துள்ளது. ஆனால், இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட திறனையும் பொறுத்தது.

பட மூலாதாரம், Getty Images
நாள் 7: உங்கள் பொழுதுபோக்கின் மீது கவனம் செலுத்துங்கள்
சில நேரங்களில், நீங்கள் சும்மா இருக்கும்போது சிந்திக்கும் சில விஷயங்கள் உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரும் அளவிற்கான நன்மைக்களைக் கொடுக்கலாம். மிக எளிதாக தங்களின் செயலில் சலிப்படையும் மக்கள், கட்டாயத்தின் பேரில் தங்களின் மொபைல்போனை பார்க்கிறார்கள். இதனால், பல்வேறு மனநல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புதிய பொழுதுபோக்கினை தேர்வு செய்வதன்மூலம், உங்கள் மூளை மிகவும் இளமையாக இருக்கும். நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளே, தங்களுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பொழுதுபோக்குகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதேபாேல, புத்தக வாசிப்பும் உங்களுக்கு உதவலாம். புனைவுக்கதைகளையும் கட்டுரைகளையும் வாசிப்பவர்கள், மற்றவர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல, வாசிக்கும்போது, சத்தமாக மற்றவர்களுக்கும் வாசித்து காண்பிப்பதன் மூலம், உங்கள் நினைவு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, கடினமாக விஷயங்களைக்கூட எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












