இந்திய வம்சாவளியினர் அதிகம் உள்ள எண்ணெய் வளம் மிகுந்த நாட்டுடன் வெனிசுவேலாவுக்கு என்ன சண்டை?

பட மூலாதாரம், Getty Images
இந்த மாத தொடக்கத்தில், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினார்.
அந்த வாக்கெடுப்பிற்குப் பிறகு, அண்டை நாடான கயானாவின் எஸ்செகியூபோ(Essequibo ) பகுதியை வெனிசுலாவுடன் இணைக்கும் உரிமையைப் பெற்றதாக அவர் கூறினார்.
200 ஆண்டுகால நிலப்பிரச்னையில் இது ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் 3 கோடி மக்கள் தொகை கொண்ட பிரமாண்ட நாடான வெனிசுவேலா, இன்னொரு பக்கம் தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள கயானா. கயானாவின் மக்கள் தொகை 80 லட்சம் மட்டுமே.
கயானா தனது பிரதேசத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக கூறியுள்ளது.
அதே சமயம், வெனிசுவேலாவின் அண்டை நாடுகளும், உலகின் பல நாடுகளும், அதிபர் மதுரோவிடம் எந்தவித கடுமைான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், மதுரோ சர்வதேச சமூகத்தின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
எஸ்செகியூபோ பகுதி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
எஸ்செகியூபோ பகுதி கயானாவின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியது. அதாவது, அதன் பரப்பளவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சமமானது. இந்த மலைப் பகுதிதான் வெனிசுலாவின் எல்லையாக உள்ளது.
அதன் முக்கியத்துவம் குறித்து சர்வதேச நாடுகளுக்கிடையேயான நெருக்கடி குறித்து ஆய்வு செய்யும் குழுவின் உறுப்பினரும் மூத்த ஆய்வாளருமளான பில் கன்சனிடம் பேசினோம். வெனிசுலா எப்போது அந்த எஸ்செகியூபோ பகுதியை முதன்முதலில் உரிமை கோரியது என அவரிடம் கேட்டோம்.
அப்போது, அவர் “இந்த சர்ச்சை நாடுகள் அமையத் தொடங்கிய மிக ஆரம்பக் காலத்தில் தொடங்கியது. ஆனாலும், ஸ்பெயினின் காலனித்துவவாதிகள் எஸ்செகியூபோ பகுதியை ஆக்கிரமித்ததாக எந்த பதிவும் இல்லை. ஆனால், அந்த நாட்டின் வரைபடங்கள் வெனிசுலா கடற்படையினர் எஸ்செகியூபோ நதியை அடைந்ததாகக் காட்டியது. அந்த அடிப்படையில்தான் வெனிசுலா எஸ்செகியூபோ பகுதியை உரிமை கோரத் தொடங்கியது."
"கோட்பாட்டளவில், இந்த சர்ச்சை 1899 இல் தீர்க்கப்பட்டது. அந்த நேரத்தில், ஐந்து சர்வதேச நீதிபதிகள் தங்கள் முடிவை பாரிஸில் அறிவித்தனர். நீதிபதிகள் குழுவில் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர்."
"அவர்கள், எஸ்செகியூபோ பகுதியை பிரிட்டிஷ் கயானாவின் உடைமையாக்கினார். வெனிசுலாவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, இந்த முடிவை வெனிசுலா ஏற்றுக்கொண்டது."
"ஆனால், அவர்களது உரிமையைப் பறிக்க சர்வதேச நீதிபதிகள் சதி செய்ததாக அந்த நாட்டின் அதிகாரிகள் உணர்ந்தனர். 1949 இல் நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவரால் தயாரிக்கப்பட்ட சமரசத்தின் வரைவு வெளிவந்தபோது அவர்களது அச்சங்கள் ஆதரித்தன," என்றார்
தொடர்ந்து பேசிய பில் கன்சன், "பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய நீதிபதிகள் இணைந்து அமெரிக்க நீதிபதிகளிடம் ஒரு வரைவை முன்மொழிந்தனர். அதில், ஒரு வேளை அந்த வரைவை வெனிசுலா நாட்டினர் ஏற்கவில்லை என்றால், அந்த நீதிபதிகளின் முடிவு மேலும் சாதகமற்றதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது."

பட மூலாதாரம், Getty Images
சர்வதேசி நீதிபதிகளின் முடிவு வெளிவந்த பின் வெனிசுவேலாவின் எதிர்வினை என்ன?
"வெனிசுலா இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபைக்கு மேல்முறையீடு செய்தது" என்கிறார் பில் கன்சன்.
ஆனால், அது எதற்கும் உதவவில்லை. இறுதியாக, 1966 இல், ஜெனீவா உடன்படிக்கைகள் எட்டப்பட்டன. இன்றும், அதிபர் மதுரோ இந்த சர்ச்சையை அதே நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டும், என்று கூறுகிறார், பில் கன்சன்.
அந்த நேரத்தில் கயானா சுதந்திரம் அடையவிருந்தது, ஆனால், எஸ்செகியூபோ பிரச்னையில் வெனிசுலாவுடன் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 1999-ல் வெனிசுவேலாவின் அதிபராக ஹ்யூகோ சாவேஸ் பதவியேற்றபோது, இந்தப் பிரச்னையை எழுப்பினார். அவரது கூட்டாளியும் கியூபா தலைவருமான பிடல் காஸ்ட்ரோவின் ஆலோசனையின் பேரில் அவர் அதைச் செய்ததாக நம்பப்படுகிறது.
கரீபியன் தீவுகள் மற்றும் பிற நாடுகளின் ஆதரவை அவர் விரும்பினால், எஸ்செகியூபோ மீதான தனது கோரிக்கையை அவர் கைவிட வேண்டும் என்று சாவேஸுக்கு எதிராக காஸ்ட்ரோ ஒரு வாதத்தை முன்வைத்ததாக பில் கன்சன் கூறுகிறார்.
ஆனால், வெனிசுவேலாவில் மதுரோ ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 இல், கயானாவின் அசெக்விபோ கடற்கரையில் ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அது இந்த நிலைமையை மாற்றியது.
2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை இந்த வழக்கை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப பரிந்துரைத்தது, ஆனால் வெனிசுவேலா இந்த பிரச்னை சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வராது என்று கூறியது.
சர்வதேச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை விசாரிக்க வெனிசுவேலா ஏன் எதிர்க்கிறது?, என நாம் பில் கன்சனிடம் கேட்டோம்.
அப்போது அவர்,“ஒருவேளை சர்வதேச நீதிமன்றம் வெனிசுவேலாவின் வழக்கை தோற்கடிக்கப் போவதாக அவர்கள் நினைப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், வெனிசுவேலா, இந்தப் பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அதன் அடிப்படையில் தேசியவாத உணர்வுகளை நாட்டு அரசியலில் செலுத்த முடியும். நிக்கோலஸ் மதுரோவின் அணுகுமுறையை வைத்துப் பார்த்தால், அப்படித்தான் தெரிகிறது,"என்றார்.

பட மூலாதாரம், Getty Images
யார் இந்த அதிபர் நிக்கோலஸ் மதுரோ?
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லத்தீன் அமெரிக்க வரலாற்று பேராசிரியரான அலெஜான்ட்ரோ வெலெஸ்கா, முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ், நிக்கோலஸ் மதுரோவை தனது வாரிசாக தேர்வு செய்ததாக கூறுகிறார். ஆனால் அவர் சாவேஸைப் போல் மக்களிடம் பிரபலமாகவில்லை.
“மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மதுரோ வெற்றி பெற்றார். ஆட்சியில் நீடிக்க ஜனநாயக விழுமியங்களை தியாகம் செய்தார்," என்றார் அலெஜான்ட்ரோ.
மதுரோவின் அரசியல் சித்தாந்தம் என்ன? என அலெஜான்ட்ரோ வெலெஸ்காவிடம் கேட்டபோது,"அவர் சாவேஸின் வாரிசு மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர், ஆனால் அவரது கொள்கைகளில் பல முரண்பாடுகள் உள்ளன. அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகப் பேசுகிறார். ஆனால் வேறு இடங்களில் ஏகாதிபத்தியத்தை ஆதரித்துள்ளார். ஒருபுறம் டாலர் அடிப்படையிலான பொருளாதாரத்தை எதிர்க்கும் அவர், மறுபுறம் வெனிசுலா பொருளாதாரத்தை டாலரை நம்பி இருக்கச் செய்துள்ளார்," என்றார் அலெஜான்ட்ரோ வெலெஸ்கா,
அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெனிசுலாவின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என அலெஜான்ட்ரோ வெலாஸ்கோவிடம் கேட்டோம்.
அப்போது அவர்,"கடந்த 10 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் பலவீனமாகிவிட்டது. பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்து, பணவீக்க விகிதம் இரண்டாயிரம் சதவீதத்தை எட்டியுள்ளது. மின் உற்பத்தி நிறுத்தப்படும் தறுவாயில் உள்ளது. தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது. உணவு முதல் மருந்து வரை அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணவீக்கத்தால் விரக்தியடைந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வெனிசுவேலா, எண்ணெய் ஏற்றுமதியில் அதிக அளவில் தேங்கியிருப்பதுதான் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்," என்கிறார் அலெஜான்ட்ரோ வெலாஸ்கோ.
தொடர்ந்து பேசிய அலெஜான்ட்ரோ, “எண்ணெய்த் தொழிலின் தவறான நிர்வாகத்தால் வெனிசுவேலாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. வெனிசுவேலா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளதும் மற்றொரு காரணம்," என்றார்.
இந்த காரணத்திற்காகவே, எண்ணெய் இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, வெனிசுவேலா எஸ்செகியூபோ மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தி, எஸ்செகியூபோ தொடர்பாக நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்தியுள்ளது.
பொது வாக்கெடுப்பில் ஐந்து கேள்விகள் பொதுமக்கள் முன் வைக்கப்பட்டு, அதில் மக்கள் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று வாக்களிக்க வேண்டும்.
எஸ்செகியூபோ சர்ச்சை சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா என்ற கேள்வியும் பொதுமக்கள் முன் வைக்கப்பட்டது.
வெனிசுலாவில் புதிய மாநிலமாக எஸ்செகியூபோ இணைக்கப்பட வேண்டுமா என்பது மற்றொரு கேள்வியும் இருந்தது. அனைத்து கேள்விகளுக்கும் 95 சதவீதம் பேர் 'ஆம்' என்று பதிலளித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பின் முடிவு தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்கிறார் அலெஜான்ட்ரோ வெலாஸ்கோ. ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை, எஸ்செகியூபோவை உரிமைகோருவது என்பது, நாட்டில் உள்ள அனைத்து சித்தாந்தங்களும் ஒன்றிணைந்த ஒரு பிரச்சினை.

பட மூலாதாரம், Getty Images
சீனா யாருக்கு நண்பர்?
80 லட்சம் மக்கள்தொகை கொண்ட கயானாவில் 11 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று லண்டனை தளமாகக் கொண்ட சாதம் ஹவுஸின் மூத்த ஆய்வாளர் டாக்டர் கிறிஸ்டோபர் சபாடினி கூறுகிறார். இந்த எண்ணெய் இருப்பு கயானாவின் அதிர்ஷ்டத்தை மாற்றியது.
"கயானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 இல் 80 சதவிகிதம் வளர்ந்தது," என்று அவர் கூறுகிறார். இது உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாகும். நாட்டின் கருவூலத்திற்கு பணம் வருகிறது, ஆனால் அது எங்கே செலவு செய்யப்படுகிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்தப் பணம் எங்கு பயன்படுத்தப்படும் என்பதை கயானா அதிபர் இர்பான் அலிதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இப்போதைக்கு வெனிசுவேலாவின் சவாலை எதிர்கொள்வதில் அவரது கவனம் உள்ளது. சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பிறகு அவர் 2020 இல் ஆட்சிக்கு வந்தார்.
முன்னாள் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தேர்தல் நடந்ததாக கிறிஸ்டோபர் சபாடினி தெரிவித்துள்ளார். ஆனால் முதலில் அவர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துவிட்டார்.
தேர்தலுக்குப் பல வாரங்களுக்குப் பிறகு அவர் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் இரண்டு முக்கிய அரசியல் சக்திகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. இதன் காரணமாக கயானாவின் பாலின சமன்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
ஆளும் கட்சி ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கு ஆதரவாக உள்ளது, மற்ற கட்சிகள் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கயானா மக்கள், குறிப்பாக எஸ்செகியூபோ மக்கள், அந்த பகுதி கயானாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தில் ஒன்றுபட்டுள்ளனர். சில மதிப்பீடுகளின்படி, எஸ்செகியூபோவின் மக்கள்தொகை ஒன்று முதல் இரண்டு லட்சத்திற்கு இடையில் உள்ளது.
கயானா அதிபர் இர்பான் அலி தற்போது வெனிசுலாவுடனான பிரச்னையில் தூதரக வழியை நாடி வருகிறார். கயானாவின் எண்ணெய் இருப்பில் இருந்து எண்ணெய் எடுக்க சில எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனுடன், இந்த விஷயத்தில் கரீபியன் நாடுகள், பிரிட்டன் மற்றும் சீனாவின் உதவியையும் அவர்கள் விரும்புகிறார்கள். எஸ்செகியூபோ இருந்து எண்ணெய் எடுக்கவும், நாட்டை மேம்படுத்தவும் பல திட்டங்களில் சீனாவை அவர் ஈடுபடுத்தியுள்ளார். இதனால் வெனிசுவேலா அதிபர் மதுரோ கோபமடைந்துள்ளார். ஏனெனில் சீனா வெனிசுலாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா உறுப்பினராக உள்ளது. சமீபத்தில், வெனிசுலா கயானாவை தாக்கக்கூடும் என்று கூறி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ரஷ்யா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகவும் வெனிசுவேலாவின் நட்பு நாடாகவும் உள்ளது.
“ரஷ்யாவின் வழக்கு வேறு” என்கிறார் கிறிஸ்டோபர் சபாடினி. வெனிசுவேலாவுடன் ரஷ்யாவிற்கு நெருக்கமான உறவுகள் இல்லை, ஆனால் வெனிசுவேலாவின் எண்ணெய் தொழிலில் பெரும் பங்கு உள்ளது. இதனால்தான் ரஷ்யாவின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்கள் வெனிசுவேலாவுடன் இணைந்துள்ளன,"என்றார்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












