ஜிபே, பேடிஎம்: தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் 4 மணி நேரத்திற்குள் திரும்ப பெறலாம்

ஜிபே, பேடிஎம்

பட மூலாதாரம், Getty Images

யுபிஐ. 2016ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. சிறு கடைகள் முதல் பெரு வணிகங்கள் வரை நாம் காணக்கூடிய ஒரு பொதுவான அம்சம், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் பணம் செலுத்தும் வசதி.

இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக யுபிஐ பணப் பரிமாற்றங்கள் மாறிவிட்டன என்றே சொல்லலாம். இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) வெளியிட்ட தகவலின் படி, 2023ஆம் ஆண்டில், நவம்பர் மாதத்தின் போது 17 ட்ரில்லியனுக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன.

செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் போது, நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ள யுபிஐ பரிவர்த்தனைகள் மத்திய அரசின் ஒரு முக்கிய சாதனையாக விளம்பரப்படுத்தப்பட்டது.

ஜி20 மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு தலைவர்களும் யுபிஐ பணப் பரிவர்த்தனையை பயன்படுத்த யுபிஐ ஒன் வேர்ல்டு மற்றும் இ-ரூப்பி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் இந்திய வங்கிக் கணக்கு இல்லாமலே யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்க இந்தியன் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் நேற்று முதல் (1/1/2024) அமலுக்கு வந்துள்ளன. இந்தியர்களின் யுபிஐ பயன்பாட்டில் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த விதிமுறைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.

யுபிஐ பரிவர்த்தனைக்கு 5 புதிய விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

பயன்படுத்தாத யுபிஐ ஐடிக்கள் செயலிழக்கும்

ஒரு வருடத்துக்கும் மேலாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை உடனே செயலிழக்கச் செய்ய வேண்டுமென கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளுக்கும், வங்கிகளுக்கும் என்பிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் 12 மாதங்களுக்கும் மேலாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படாத யுபிஐ ஐடிகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் செயலிழக்கும். நீண்ட காலமாக செயலற்று இருக்கும் கணக்குகள் மூலம் மோசடிகள் ஏதும் நடப்பதைத் தடுக்க இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை உச்சவரம்பு அதிகரிப்பு

யுபிஐ பயன்பாட்டிற்கான தினசரி உச்சவரம்பு தற்போது 1 லட்ச ரூபாயாக உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை தற்போது 5 லட்சமாக உயர்த்தியுள்ளது என்பிசிஐ.

இந்த விதிமுறை கடந்த டிசம்பர் மாதம், 8ஆம் தேதி இந்தியன் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த விதியும் அமலுக்கு வந்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைக்கு 5 புதிய விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

பரிமாற்ற கட்டணம் அறிமுகம்

ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகளை (பிபிஐ) மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவிகிதம் பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த பரிமாற்ற கட்டணம் பொது மக்களுக்கானது அல்ல, வணிக பரிமாற்றங்களுக்கு மட்டுமே என என்பிசிஐ அறிவித்துள்ளது. ஜி20 மாநாட்டின் போது கொண்டு வரப்பட்ட யுபிஐ ஒன் வேர்ல்டு திட்டமும் இந்த பிரீபெய்டு பேமண்ட் கருவிகளுடன் தொடர்புடைய ஒன்றாகும்.

யுபிஐ பரிவர்த்தனையில் விரைவில் டேப் அண்ட் பே முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என என்பிசிஐ அறிவித்துள்ளது. இந்த முறையின் மூலமாக விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஐ ஏடிஎம்

நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி ஏடிஎம்மில் எவ்வாறு டெபிட் அட்டை மூலமாக பணம் எடுக்க முடியுமோ அதே போல, நமது கைப்பேசியில் உள்ள யுபிஐ கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் எடுத்துக்கொள்ள முடியும்.

4 மணி நேரம் அவகாசம்

அதிகரித்து வரும் ஆன்லைன் பரிவர்த்தனை மோசடிகளை குறைக்க இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பயனர்களுக்கு இடையே ரூபாய் 2,000க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு நான்கு மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிபே, பேடிஎம் போன்ற பரிவர்த்தனைகளின் போது இந்த நான்கு மணி நேரத்திற்குள் தவறுதலாக பணத்தை ஒரு புதிய பயனருக்கு அனுப்பிவிட்டோம் எனத் தெரிந்தால், அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இந்த ஐந்து விதிமுறைகளும் புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.

யுபிஐ பரிவர்த்தனைக்கு 5 புதிய விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

"யுபிஐ பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்"

நாட்டின் பெரும்பாலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் செயல்படுத்தப்படும் நிலையில், இதிலுள்ள சிக்கல்கள் மற்றும் பயன்கள் குறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

"அரசு தொடர்ந்து யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது ஆனால் யுபிஐ தொடர்பாக நடக்கும் மோசடிகளைத் தடுக்க ஆன்லைன் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதை முதலில் பலப்படுத்தாமல் மக்களை யுபிஐ நோக்கி தள்ளுவதில் என்ன பயன்" என கேள்வி எழுப்புகிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்.

"முன்பு வங்கிகளில் மூலமாக பணப் பரிவர்த்தனைகள் நடக்கும் போது, பணம் எங்கு போகிறது என்பதை எளிதாக கண்காணிக்க முடியும். சமீபத்தில் எம்.பி தயாநிதி மாறன் கணக்கிலிருந்து 1 லட்சம் பணம் திருடப்பட்டது. அது குறித்து செய்திகளும் வெளியாகின"

"அவரோ, அவரது மனைவியோ வங்கிக் கணக்கு சார்ந்த தகவல்களை யாருக்கும் கொடுக்கவில்லை. வங்கி தலையிட்டு பிரச்னையை சீர் செய்தது. சாமானிய மக்களில் எத்தனை பேருக்கு இது போல உடனடியாக பணம் கிடைக்கும். இதையெல்லாம் அரசு யோசிக்க வேண்டும்." என்கிறார் தாமஸ்.

தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு தெரிந்து ஒரு கல்லூரி பேராசிரியர், அவரது கணக்கிலிருந்து 1,50,000 திருட்டு போனது. அவர் எந்த லிங்கையும் அழுத்தவில்லை, ஓடிபி போன்ற விவரங்களையும் யாருக்கும் அனுப்பவில்லை. எனவே பணத்திற்கான பாதுகாப்பு என்பது யுபிஐ பரிவர்த்தனைகளில் கேள்விக்குறியாக உள்ளது" என்றார்.

யுபிஐ பரிவர்த்தனைக்கு 5 புதிய விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

"காகிதப் பணம் என்பதையே மறந்து விடக்கூடாது"

"ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால், பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாவதைத் தடுக்க முடியாது தான், அதே சமயத்தில் இவர்கள் இதை முதலில் கொண்டு வந்தது பெரிய பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க தான். ஆனால் அவை வேறு வழிகளில் சாமர்த்தியமாக செயல்படுத்தப்படுகின்றன. சாமானிய மக்கள் தான் யுபிஐ பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொள்கிறார்கள்" என்கிறார் பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன்.

"இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், யுபிஐ வசதி நல்ல பயனுள்ள ஒன்று தான். தினமும் பணத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லது சில்லறை தேடிக்கொண்டு அலைய வேண்டாம் தான்.

இப்போது எல்லோரிடமும் பரவலாக ஸ்மார்ட் போன் அல்லது இணைய வசதி இருப்பதால், இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போதைய தேவையும் அது தான்" என்கிறார் வள்ளியப்பன்.

தொடர்ந்து பேசிய அவர், "சிக்கல்கள் என்று பார்த்தால், ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டால் இணைய வசதி, மின்சாரம் துண்டிக்கப்படும். அப்போது ஸ்மார்ட் போன் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். வல்லரசு நாடுகளில் கூட புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்படும். எனவே காகிதப் பணம் என்பதை முற்றிலும் மறந்து விடக்கூடாது. மேலும் பணத்தை நிர்வாகிக்கும் திறனையும் காகிதப் பணம் கற்றுக்கொடுக்கும் என்பதையும் மறுக்க முடியாது" என்கிறார் பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)