வங்கதேச தேர்தல்: இந்தியா - சீனா மேலாதிக்க போட்டிக்கு நடுவே ஷேக் ஹசீனா என்ன செய்கிறார்?

இந்தியா vs சீனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி செய்திகள்

வங்கதேசத்தில் ஜனவரி 7ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதும் அவை தவிர்க்க முடியாததாகவும் இருக்கும் என இப்போதே தெரிகிறது.

எதிர்க்கட்சிகளில் மிகப்பெரிய கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியும் (பிஎன்பி) அதன் கூட்டணிக் கட்சிகளும், பிரதமர் ஷேக் ஹசீனா சுதந்திரமான மற்றும் நியாயமான ஒரு தேர்தலை நடத்துவார் என்பதில் நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றன.

ஷேக் ஹசீனாவைப் பதவி விலகுமாறும், நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தேர்தல் நடத்த அனுமதிக்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். அந்தக் கோரிக்கையை அவர் நிராகரித்தார். எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் அவாமி லீக், அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களாக அல்லது சுயேச்சை வேட்பாளர்களாக இருப்பார்கள்.

"வங்களதேசத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது. ஜனவரியில் நாம் பார்க்கப் போவது போலித் தேர்தல்" என்று பிஎன்பி மூத்த தலைவர் அப்துல் மொயீன் கான் பிபிசியிடம் தெரிவித்தார். "ஷேக் ஹசீனா கடந்த சில ஆண்டுகளில் ஒரு சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார், இது கவலையளிக்கக் கூடிய ஒன்று" என அவர் கூறினார்.

ஷேக் ஹசீனா நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்க சர்வதேச சமூகம் ஏன் ஒன்றும் செய்யவில்லை என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவரது அரசாங்கம் ஜனநாயக விரோதமான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கிறது.

"மக்கள் வாக்களிப்பதன் மூலம் தேர்தல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் பி.என்.பி. தவிர பல அரசியல் கட்சிகள் உள்ளன" என்று சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் பிபிசியிடம் கூறினார்.

வளர்ச்சிக்கான விலை என்ன?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக எழும் விமர்சனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்காவில் தேர்தல் பதாகைகள்

ஹசீனாவின் ஆட்சியில் உள்ள வங்கதேசம் வேறொரு மாறுபட்ட தோற்றத்தை வழங்குகிறது. வங்கதேசம், முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட நாடு. ஒரு காலத்தில் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது, 2009 முதல் அவரது தலைமையின் கீழ் நம்பகமான பொருளாதார வெற்றியை அந்நாடு அடைந்துள்ளது.

நாட்டின் சொந்த நிதிகள், கடன்கள் மற்றும் மேம்பாட்டு உதவிகளைப் பயன்படுத்தி, ஹசீனாவின் அரசாங்கம் கங்கையின் குறுக்கே 2.9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பத்மா பாலம் உட்பட மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த பாலம் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.23% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, அங்கு அதிகரித்து வரும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் வங்கதேச மக்கள் போராடி வருகின்றனர். நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 9.5% ஆக இருந்தது.

அதன் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2021இல் 48 பில்லியன் டாலர்களிலிருந்து (£38 பில்லியன்) இப்போது 20 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது, மூன்று மாத இறக்குமதிகளுக்கு இது போதுமானதாக இல்லை. அதன் வெளிநாட்டுக் கடனும் 2016இல் இருந்து இரட்டிப்பாகியுள்ளது.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை விற்று, பொருளாதார வெற்றி கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் ஹசீனாவின் ஆட்சி, அவரது அரசியல் எதிரிகள், எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகஸ்ட் மாதம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, விர்ஜின் குழும நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் U2 முன்னணி பாடகர் போனோ உட்பட 170க்கும் மேற்பட்ட உலகப் பிரமுகர்கள், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் மீதான "தொடர்ச்சியான நீதித் துன்புறுத்தலை" நிறுத்துமாறு ஹசீனாவுக்கு ஒரு கடிதம் எழுதினர்.

மேலும் சமீபத்திய மாதங்களில், அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியதற்காக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பல மூத்த பி.என்.பி. தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"பொய்யான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகள்"

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக எழும் விமர்சனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனாவின் எதிர்ப்பாளர்கள் அவர் ஒதுங்கி நிற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

கைது செய்யப்படாத பிஎன்பியின் சில மூத்த தலைவர்களில் ஒருவரான கான், 20,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பொய்யான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான கட்சி ஆர்வலர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் அரசு இதை மறுக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள பி.என்.பி. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, "நான் சரிபார்த்தேன், எதிர்க்கட்சிகள் கூறிய அளவுக்கு நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதில் பாதி நபர்கள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று ஹக் கூறுகிறார்.

"சில வழக்குகள் 2001 மற்றும் 2014 தேர்தல்களின் போது நடந்த வன்முறை சம்பவங்களுக்கு முந்தையவை", என்றும் கூறுகிறார்.

எவ்வாறாயினும் ஹசீனா ஆட்சியின் கீழ் அரசியல் நோக்கம் கொண்ட கைதுகள், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை அரசாங்கத்தின் "வன்முறையான எதேச்சதிகார ஒடுக்குமுறை" என்று கூறியது.

ஒரு காலத்தில் பல கட்சிகளின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய ஷேக் ஹசீனா போன்ற ஒரு தலைவருக்கு, இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

"போராளி பேகம்"

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக எழும் விமர்சனங்கள்
படக்குறிப்பு, விலைவாசி உயர்ந்துள்ளதால், ஆடைத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி போராடி வருகின்றனர்

1980களில் ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாத் ஆட்சியின் போது ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்களை நடத்துவதற்காக தனது போட்டியாளரான பேகம் கலீதா ஜியா உட்பட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கைகோர்த்தார் ஷேக் ஹசீனா.

நாட்டின் ஸ்தாபகத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகள், ஹசீனா 1996இல் பல கட்சித் தேர்தலில் முதல் முறையாக அரசமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2001ஆம் ஆண்டு கலீதா ஜியா தலைமையிலான பி.என்.பி.யிடம் தோல்வியடைந்தார்.

ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகிய இரண்டு பெண்களும் வங்கதேசத்தில் "போராளி பேகம்" என்று வர்ணிக்கப்படுகிறார்கள். பேகம் என்பது உயர் பதவியில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணைக் குறிக்கிறது.

பேகம் ஜியா இப்போது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பி.என்.பி.க்கு களத்தில் ஆற்றல்மிக்க தலைமை இல்லை.

"எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை முறையாகக் கைது செய்து தண்டனை வழங்குவதன் மூலம் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக பிஎன்பியை முடக்குவதற்காக அவாமி லீக் வேண்டுமென்றே இதைச் செய்தது" என்று பலர் வாதிடுகின்றனர்.

சையத் மியா (அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் பெயரை மாற்றியுள்ளோம்) போன்ற பல பி.என்.பி. ஆதரவாளர்கள் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தலைமறைவாகிவிட்டனர். 28 வயதான அவர், செப்டம்பர் மாதம் ஒரு அரசியல் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறையில் ஒரு மாதம் கழித்தார்.

மியா தற்போது தனது மூன்று கட்சி சகாக்களுடன் ஒரு காட்டுப் பகுதியில் கூடாரமைத்து வசிக்கிறார். பேரணியின் போது அவர்கள் செய்ததாக கூறப்படும், தீவைப்பு மற்றும் வன்முறை குற்றங்கள் தொடர்பாக அவர்கள் அனைவரும் தேடப்படுகின்றனர்.

"நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளோம், நாங்கள் எங்கள் மறைவிடங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை" என்று மியா பிபிசியிடம் கூறினார்.

வங்கதேசத்தில் மனித உரிமைகள் மோசமான நிலையில் இருப்பது சர்வதேச முகவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

"தற்போதைய சூழ்நிலையில் அதே சம்பவம் தொடர்பாக ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தொழிலாளர்களை அடிக்கடி சுற்றி வளைப்பது, ஒரு கண்மூடித்தனமான அணுகுமுறையைப் போல் தோன்றுகிறது" என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தில் ஆசிய-பசிபிக் தலைவர் ரோரி முங்கோவன் ஜெனிவாவில் பிபிசியிடம் கூறினார்.

"நடந்த வன்முறைகளுக்கு தண்டனை அளிப்பது போல இல்லை, இது எதிர்கட்சிகளை மிகப்பெரிய அளவில் அடக்குவது போலத் தெரிகிறது" என்றார்.

"நீதித்துறை மூலம் சுதந்திரம் சிதைக்கப்படுகிறது"

ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் குழுவும் நவம்பரில் ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்தியது, "பத்திரிகையாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் நீதித்துறையின் ஆயுதங்கள் சுதந்திரத்தை குறைத்து அடிப்படை மனித உரிமைகளை சிதைக்கிறது" என்று அவர்கள் கூறினர்.

ஆனால், இதற்கும் அரசாங்கத்திற்கும் நீதிமன்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சட்ட அமைச்சர் ஹக் கூறுகிறார்: "நாட்டில் நீதித்துறை முற்றிலும் சுதந்திரமாக உள்ளது" என்கிறார்.

மனித உரிமைக் குழுக்களை கவலையடையச் செய்வது அதிக எண்ணிக்கையிலான கைதுகள் மற்றும் தண்டனைகள் மட்டுமல்ல. 2009ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இது குறித்த வழக்குகள் மற்றும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள் தொடர்பான வழக்குகளையும் தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய துஷ்பிரயோகங்களுக்குப் பின்னால் அரசின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படும் கூற்றுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுக்கிறது, ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க விரும்பும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வருகையையும் அது கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.

பெரும்பாலான உள்ளூர் ஊடகவியலாளர்கள் தங்கள் பாதுகாப்புக்கு பயந்து இதுபோன்ற வழக்குகள் குறித்து பேசுவதை நிறுத்திவிட்டனர்.

2021ஆம் ஆண்டு முதல், துணை ராணுவப் படையான ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் மற்றும் அதன் இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் ஏழு பேர் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததில் இருந்து, சட்டத்திற்கு புறம்பான கொலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட அந்தத் தடைகள் வங்கதேசத்தின் ஒட்டுமொத்த மனித உரிமை நிலைமையை மேம்படுத்தவில்லை. அதனால் தான் சில அரசியல்வாதிகள் மேற்கத்திய நாடுகளின் கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

ஷேக் ஹசீனாவின் ராஜ தந்திரம்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக எழும் விமர்சனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஷேக் ஹசீனா

"ஐரோப்பிய ஆணையம் ஜனநாயக சூழ்நிலை குறித்து வங்கதேசத்தை கேள்வி கேட்க வேண்டும். வங்காளதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா அணுகலை திரும்பப் பெறுவது பற்றி அது பரிசீலிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கேரன் மெல்கிவர் கூறினார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் உள்ளது. கடந்த ஆண்டு 45 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயத்த ஆடைகளை, பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பியது.

இவ்வளவு மகத்தான பொருளாதார செல்வாக்கு கொண்ட மேற்கத்திய நாடுகள், ஜனநாயக அமைப்புகளை முறையாக சிதைக்கும் ​​ஷேக் ஹசீனாவை தண்டிக்காமல், செயல்பட அனுமதிப்பது ஏன் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

அண்டை நாடான இந்தியா, வங்கதேசத்திற்கு எதிரான எந்தவொரு கட்டாய நடவடிக்கையையும் எதிர்க்கும். இந்தியா, தனது ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கு வங்காளதேசம் வழியாக சாலை மற்றும் நதி போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த விரும்புகிறது.

நேபாளம், வங்கதேசம் மற்றும் பூடான் இடையே உள்ள 20 கிமீ (12 மைல்) தரைவழிப் பாதையான "சிக்கன் நெக்" (chicken's neck) பற்றி இந்தியா கவலை கொண்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்தியாவின் போட்டியாளரான சீனாவுடனான எந்தவொரு சாத்தியமான மோதலிலும், அந்த பாதை பாதிக்கப்படலாம் என்று டெல்லியில் உள்ள அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

2009ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள இன கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகச் செயல்பட்டதன் மூலம் டெல்லியின் ஆதரவைப் பெற்றார் ஹசீனா.

அதிகப்படியான தடைகள், எதிர்ப்புகள் வங்களதேச அரசை சீனாவை நோக்கி தள்ளும் என்ற கவலைகள் உள்ளன. இந்தியாவுடன் பிராந்திய மேலாதிக்கத்திற்காக சண்டையிடும் சீனா, வங்காளதேசத்திலும் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது.

இப்போதைக்கு, ஹசீனா அதிகாரத்திற்கான தெளிவான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவருடைய அதிகாரத்திற்கு எதிரான கேள்விகள் விரைவில் மற்ற பகுதிகளிலிருந்து எழக்கூடும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் 4.7 பில்லியன் டாலர் கடனைக் கேட்டுள்ளது வங்காளதேசம். எனவே, தேர்தலுக்குப் பிறகு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

அவரது எதிரிகள் உறுதியாக களத்தில் நின்று எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் இல்லாமல் போகலாம், ஆனால் விலைவாசி உயர்வின் காரணமாக பொது மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு உணர்வு, ஹசீனாவிற்கும் அவரது அவாமி லீக்கிற்கும் ஒரு ஆரம்ப சவாலாக இருக்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)