தோனியை புகழ்ந்ததால் ஹர்பஜன் சிங் கோபம்: உலகக்கோப்பையின் அந்த 'கடைசி ஓவர்' காரணமா?

பட மூலாதாரம், Getty Images
தோனியை புகழ்ந்து ட்விட் செய்த ஒரு ரசிகரிடம் ஹர்பஜன் சிங் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தோனிக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் நடுவில் என்ன பிரச்னை? 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது ஹர்பஜன் பற்றி தோனி பேசியதுதான் அதற்குக் காரணமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி அடைந்த படுதோல்வி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் இந்தத் தோல்வியை பெரிய அவமானமாக இந்திய ரசிகர்கள் கருதுகிறார்கள். பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணியின் படுதோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கொந்தளிக்கும் பல ரசிகர்கள், வரிசையாக ஐ.சி.சி. கோப்பைகளை பெற்றுக் கொடுத்த தோனியின் கேப்டன்சியை வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர். தோனி கேப்டன்சி காலம் இந்திய அணியின் பொற்காலம் என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே பாராட்டி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் இந்திய அணி மீதான விமர்சனங்களும் தோனிக்கான புகழுரைகளும் சரியானதல்ல என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருதுவது போல் தெரிகிறது.
அந்த வகையில், தோனியை புகழ்ந்து அவரது ரசிகர் போட்டிருந்த பதிவுக்கு பதில் கொடுத்து ஹர்பஜன் பதிவு செய்த ட்வீட் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
தோனி ரசிகரிடம் ஹர்பஜன் ஆவேசம்

பட மூலாதாரம், Getty Images
தோனி ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள ஹர்பஜன், கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
"பயிற்சியாளர் இல்லை, வழிகாட்டி இல்லை, இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் பெரும்பாலானோர் விளையாட மறுத்துவிட்டனர். அதற்கு முன்னதாக ஒரு போட்டியில்கூட கேப்டனாக இருந்த அனுபவம் இல்லை.
ஆனாலும், கேப்டன் பொறுப்பேற்ற 48 நாட்களிலேயே, ஆஸ்திரேலிய அணி அதன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும்போது அரையிறுதியில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர்," என்று குறிப்பிட்டு தோனியின் புகைப்படத்துடன் அந்த ரசிகர் ட்வீட் செய்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதற்குப் பதிலளித்துள்ள ஹர்பஜன், "ஆமாம். அந்தப் போட்டிகளில் எல்லாம் அந்த இளைஞர், மற்ற 10 பேர் இல்லாமல் இந்தியாவுக்காக தனியாகவே விளையாடினார்.
உலகக் கோப்பைகளை அவர் தனியாகவே வென்று கொடுத்தார். ஆஸ்திரேலியாவோ மற்ற நாடுகளோ உலகக்கோப்பையை வெல்லும் போது அந்த நாடுகள் வென்றதாகவே தலைப்புச் செய்திகள் வருகின்றன.
ஆனால், இந்தியா வெல்லும்போது மட்டும் கேப்டன் வென்றதாக செய்திகள் வெளியாகின்றன. இது குழு விளையாட்டு. ஒன்றாகவே வெல்கிறோம், ஒன்றாகவே தோற்கிறோம்," என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலடியாக மற்றொரு ரசிகர், புள்ளிவிவரங்கள் அடங்கிய படத்தைப் பதிவிட்டு, "ஐ.சி.சி. இறுதிப்போட்டிகளில் தோனி தலைமையில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் இந்தியா வென்றுள்ளது. மற்ற அனைத்து கேப்டன்களும் 7 முறை இறுதிப்போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளனர்," என்று கேட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், "தோனி அல்லாத, அதே 10 வீரர்களை வைத்துக் கொண்டு சௌரவ் கங்குலி எத்தனை ஐசிசி தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்," என்று கேட்டுள்ளார்.
தோனி - ஹர்பஜன் இடையே பிரச்னை இருக்கிறதா?
தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது. அந்த அணியில் ஹர்பஜன் சிங்கும் அங்கம் வகித்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் இருப்பதாக செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், தோனியோ, ஹர்பஜனோ அதுகுறித்து பொதுவெளியில் இதுவரை பேசியதே இல்லை.
ஆனால், இருவருக்கும் இடையே பிரச்னை இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளை மட்டும் ஹர்பஜன் சிங் அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளார்.
தனது 18 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 2021ஆம் ஆண்டு டிசம்பரில் முடித்துக் கொண்ட ஹர்பஜன், "400 விக்கெட்டுகளுக்கும் மேலாக எடுத்த ஒருவருக்கு அணியில் இடம் கொடுக்காதபோது அல்லது காரணமே இல்லாமல் நீக்கப்படும்போது பல விதமான எண்ணங்கள் மனதில் உதிக்கின்றன, கேள்விகள் எழுகின்றன. நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒருவர்கூட பதில் தரவில்லை," என்று குறிப்பிட்டார்.
அதுகுறித்த சர்ச்சைகளுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரியில் பதிலளித்த ஹர்பஜன், தான் குறிப்பிட்டவை அனைத்துமே பிசிசிஐ தொடர்பானவை என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "தோனி மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை. உண்மையில், என் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்துள்ளார். பிசிசிஐ செயல்பாடுகள் குறித்தே நான் குறைபட்டுக் கொண்டேன்.
பிசிசிஐ நிர்வாகத்தை அரசு என்று குறிப்பிடுவது என் வழக்கம். அந்த நேரத்தில் தேர்வுக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் தங்கள் பொறுப்பைச் சரிவர செய்யவில்லை," என்று கூறினார்.
கடந்த மார்ச்சில்கூட, தானும், தோனியும் நல்ல நண்பர்கள் என்று ஹர்பஜன் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.
தோஹாவில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்ற லெஜன்ட்ஸ் லீக்ஸ் தொடரின்போது பேசிய ஹர்பஜன் சிங், "தோனியுடன் எனக்கு என்ன பிரச்னை?
இந்தியாவுக்காக நாங்கள் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவிட்டோம். நாங்கள் தற்போது வரை நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். நாங்கள் இருவருமே அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பிசியாக இருக்கிறோம். இனிமேல் அதிகம் சந்திக்கப் போவதில்லை. ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை," என்றார்.
2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் அந்த 'கடைசி ஓவர்'

பட மூலாதாரம், Getty Images
2007ஆம் ஆண்டு தோனி இந்திய அணிக்குத் தலைமையேற்ற முதல் தொடரிலேயே, அதுவும் இருபது ஓவர் அறிமுக உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
அந்தப் போட்டிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவின்போது, கடைசி 2 ஓவர்கள் குறித்து தோனியிடம் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார். குறிப்பாக, கடைசி ஓவரை ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக ஜோகிந்தர் சிங்கிடம் கொடுத்தது ஏன் என்று அவர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த தோனி, "யார்க்கர்களை வீசுவதில் ஹர்பஜன் சிங் கைதேர்ந்தவர் அல்ல. ஆகவே, அவர் வெற்றி தேடித் தருவார் என்பதில் 100% உறுதியில்லை. 100 சதவீதம் உறுதியில்லாத ஒருவரை பந்து வீச அழைப்பதைக் காட்டிலும், சர்வதேச அளவில் அதைச் செய்ய சிறப்பாக முயற்சி செய்யும் ஒருவரை பயன்படுத்தலாம் என்று கருதினேன்.
இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும்கூட, அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. ஜோகிந்தர் சிங் பந்து வீசிய விதம் மிகச் சிறப்பாக இருந்ததாகக் கருதுகிறேன்," என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












