ஐ.பி.எல்.லை மனதில் கொண்டு ஆடுகளங்களை உருவாக்குவதே இந்தியாவின் படுதோல்விக்கு காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வெல்லாமல் இங்கிலாந்திலிருந்து வெளியேறுகிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்காத குறையை ரஹானே, ஷர்துல் தீர்த்து வைத்தனர். இந்த முறை 2வது இன்னிங்ஸிலும் ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நாளான இன்று 280 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெறும் 55 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.
இந்திய வீரர்களிடம் போராட்டக் குணம் இல்லை
இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கடைசிநாளான இன்று எந்த ஒரு போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தாமல் சீட்டுக்கட்டுபோல் சரிந்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம், அதில் தோற்றாலும், கடைசிவரை சண்டை செய்ய வேண்டும் என்ற போராட்ட குணம்கூட இல்லாமல் கடைசி 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தோல்வி அடைந்தது.
இந்திய அணி கடந்த 6 செஷன்களாக கடுமையாகப் போராடியதன் விளைவாக கடைசிநாளில் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், இந்திய அணியின் போராட்டத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களும், ஒற்றை சுழற்பந்துவீச்சாளர் லேயனும் சேர்ந்து சுக்குநூறாக உடைத்துவிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணியை கடந்த 4 டெஸ்ட் தொடர்களில் இந்தியாவில் நடந்த 2 தொடர்களிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. இருப்பினும் இங்கிலாந்து மண்ணில் தாங்கள்தான் “ராஜா” என்று ஆஸ்திரேலிய அணியினர் இந்திய அணியினருக்கு வெளிப்படுத்திவிட்டனர்.
அடுத்ததாக ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணியுடன், இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணியினர் விளையாட உள்ளனர்.
இந்திய அணி 3வது மற்றும் 4வது நாளில் வெளிப்படுத்திய போராட்டக் குணத்தை, முனைப்பை தொடக்க இரு நாட்களில் வெளிப்படுத்தி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஆனால் முதல் இரு நாட்களில் இந்திய அணி வீரர்கள் செய்த தவறு, கடைசி நாளில் குறைந்தஅளவே வெற்றிக்கான நம்பிக்கை வைக்க முடிந்தது.
அதிலும் ஓவல் ஆடுகளத்தில் 5-வது நாளில் ஆடுகளம் சுமாரான நிலையில் இருக்கும். இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் பேட்செய்வதே கடினமாக இருக்கும் சூழலில் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வீசும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமம். அதுமட்டும்லாமல் புழுதி பறக்கும் ஆடுகளத்தில் சுழற்பந்துவீசினால் எந்தப் பக்கம் பந்து திரும்பும் என்பதும் தெரியாது ஆகியவை இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக இருந்தது.
ஆஸ்திரேலியா புதிய சாதனை
அதேசமயம், பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றபின் அந்த அணிக்கு ஆஷஸ் கோப்பையை ஏற்கெனவே வென்றுகொடுத்துவிட்டார். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் பெற்றுக்கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையை வென்றுள்ள ஒரே அணி. அந்த அணி 9-வது ஐ.சி.சி. கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதுவரை 5 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகள், 2 ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபிகள், ஒரு டி20 உலகக் கோப்பை, இப்போது டி20 சாம்பியன்ஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை கூட்டணி
ஆட்டநாயகன் விருது முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. டிராவிஸ் ஹெட்(163), ஸ்டீவ் ஸ்மித்(128) ஆகியோர் இணைந்து 285 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த கூட்டணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் உடைத்திருந்தால், நிச்சயம் ஆட்டம் வேறுபட்ட திசையில் பயணித்திருக்கும்.
வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்
இந்தப் போட்டியில் மொத்தம் 38 விக்கெட்டுகள் இரு அணிகளிலும் சேர்த்து வீழ்த்தப்பட்டுள்ளன. அதில் 20 விக்கெட்டுகளை முழுமையாக இந்திய அணி இழந்துள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். நாதன் லேயான் மட்டும் 5 விக்கெட்டுகளை இரு இன்னிங்ஸிலும் சேர்த்து கைப்பற்றியுள்ளார்.
இந்த ஓவல் ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த அணிகளே பெரும்பாலும் வென்றுள்ள என்று வரலாறு இருந்தநிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி செய்த தவறுகள் என்ன?
இந்திய அணி நிர்வாகம் மட்டுமின்றி, பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் இந்தத் தொடரில் பல்வேறு தவறுகளைச் செய்தனர். குறைவான தவறுகளைச் செய்த ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது, அதிகமாகச் செய்த இந்திய அணி 2வது இடம் மட்டுமே கிடைத்தது.
முதல் இன்னிங்ஸில் சுப்மான் கில், புஜாரா இருவரும் பந்தை லீவ் செய்யத் தெரியாமல் கையை மேலே தூக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆப்-ஸ்டெம்பை மறைக்காமல் பந்தை லீவ் செய்தும் பலன் இல்லை, பந்து எந்தப் பக்கம் ஸ்விங் ஆகிறது என்பது தெரியாமல் பந்தை லீவ் செய்தும் பயன் இல்லை. இருவரின் விக்கெட் முதல் இன்னிங்ஸில் மிகவும் முக்கியமானது இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
2வது இன்னிங்ஸில் புஜாரா ஆட்டமிழந்ததும் தேவையற்றது. அப்பர்-கட் ஷாட்டை புஜாரா பெரும்பாலும் ஆடமாட்டார், ஆனால், ரன்நெருக்கடியில் அப்பர்கட் ஷாட்டை புஜாரா ஆடி தேவையில்லாமல் விக்கெட்டை இழந்ததும் பெரிய தவறாகும்.

பட மூலாதாரம், Getty Images
சுப்மான் கில்லுக்கு கிரீன் பிடித்த கேட்ச் சரியென்று 3வது நடுவர் தீர்ப்பளித்தாலும், அந்த முடிவு இந்திய அணியின் தோல்வியிலும் எதிரொலித்துள்ளது. கில்லுக்குப் பிடித்த கேட்ச் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பதும் தோல்விக்கான காரணமாகும்.
விராட் கோலி உலக அரங்கில் ‘கிங்’காக இருந்தாலும் அவரின் ஆப்சைட் பலவீனத்தை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆப் சைட் விலக்கி வீசப்படும் பந்தை கையாள்வதிலும், அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசப்படும் பவுன்ஸரை எதிர்கொள்ளவும் கோலி கணிக்கத் தவறுகிறார் என்பதைத் தெரிந்து அவரை கட்டம் கட்டி தூக்கினர். 2வது இன்னிங்ஸில் வைடு சக்கர் பந்தை வீசி போலந்து விக்கெட் வீழ்த்தியது கோலியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ரோஹித் சர்மா உள்நாட்டுப் போட்டிகளில் ஆடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகள், உள்நாட்டில் ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி போன்றவற்றில் ரோஹித் சர்மா சில மாதங்கள் விளையாடினால்தான் அவரால் டெஸ்ட் போட்டிக்கு தன்னை சிறந்தவராக மாற்ற முடியும். இன்னும் டி20 பேட்ஸ்மேனிலிருந்து ரோஹித் சர்மா வெளியே வரவில்லை என்பது அவரின் ஷாட் தேர்வுகளில் இருந்தே தெரிந்துவிட்டது.
ரஹானே தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை முதல் இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பயன்படுத்தினால், 2வது இன்னிங்ஸிலும் கவுரவமான ஸ்கோரை எட்டினார். 18 மாதங்களுக்குப் பின் கிடைத்த டெஸ்ட் வாய்ப்பை ரஹானே அருமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
பந்துவீச்சில் சிராஜ், ஷமியைத் தவிர உமேஷ் யாதவ், ஷர்துல் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக இரு இன்னிங்ஸ்களிலும் அமையவில்லை. அதிலும், 2வது இன்னிங்ஸில்தான் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு லைன் லென்த் பிடிபட்டு துல்லியமாகவீசத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸில் இதைச் செய்திருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும்.
இந்தியஅணியில் அஸ்வின் இருந்தும் அவரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காதது தவறு என்பது இந்த தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. அஸ்வின் இருந்திருந்தால் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட், ஸ்மித் கூட்டணியை உடைத்திருப்பார், 2வது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மையை நன்கு பயன்படுத்தியிருப்பார். அஸ்வின் அணியில் இல்லாதமைக்கு கொடுத்த விலையாகவே தோல்வி இருக்கிறது.
"சூழலுக்கு ஏற்பவே பீல்டிங் செய்ய தீர்மானித்தோம்"

பட மூலாதாரம், Getty Images
தோல்விக்குப்பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப நாங்கள் டாஸை வென்று பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தோம். முதல் செஷனில் நன்றாகவே பந்துவீசினோம், ஆனால், சில இடங்களில் எதிர்பார்த்த பந்துவீச்சு இல்லை.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கு உரித்தானவர்கள். குறிப்பாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக பேட் செய்தார். இவரின் பேட்டிங்கால் நாங்கள் கடும் சிரமத்தை உணர்ந்தோம். சரியான லைன் லென்தில் பந்துவீசுவது குறித்து அதிகமாக ஆலோசித்தோம், ஆனால், எதுவுமே பலனிக்கவில்லை.
முதல் இன்னிங்ஸில் ரஹானே, ஷர்துல் சிறப்பாக பேட் செய்து அணியை மீட்டனர். 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நன்றாகப் பந்துவீசினர், ஆனால்பேட்டிங்கில் மீண்டும் கோட்டைவிட்டோம். 5 நாட்களும் ஆடுகளம் அருமையாக இருந்தது, நாங்கள் பயன்படுத்தவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல கடுமையாக உழைத்தோம். எங்களுக்கு இந்தத் தோல்வி வேதனையளிக்கிறது. ஏராளமான வீரர்கள் சாம்பியன்ஷிப்புக்காக உழைத்துள்ளனர். அடுத்த சாம்பியன்ஷிப்பில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம்” எனத் தெரிவித்தார்.
"போலந்து என் ஃபேவரேட் ப்ளேயர்”
வெற்றிக் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில் “ டாஸ் வென்றிருந்தால்கூட பந்துவீச்சைத்தான் தேர்ந்தெடுத்திருப்போம். ஸ்மித், டிராவிஸ் ஆட்டம் எங்களை கடும் அச்சத்திலிருந்து காப்பாற்றியது. இந்த சீசன் முழுவதும் டிராவிஸ் சிறப்பாக பேட் செய்துள்ளார். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே அழுத்தத்தை அளிப்பவர் டிராவிஸ்.
முதல் நாளில் இருந்தே நாங்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிட்டோம். ஆனால் இந்திய அணி எங்களிடம் இருந்து ஆட்டத்தை கைப்பற்ற முயன்றபோதிலும் நாங்கள் விடவில்லை. ஆட்டத்தின் பெரும்பகுதி நாட்கள் எங்கள் வசம் இருந்தது. போலந்து எனக்கு பிடித்த வீரர். தொடர்ந்து என்னுடன் பயணிப்பார், ஒவ்வொரு வீரரும் அவர்களின் பங்களிப்பை செய்தனர். அடுத்து எங்களின் பார்வை ஆஷஸ் மீது திரும்பும்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
என்ன மாதிரி ஆடுகளங்கள்?
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லாவிட்டாலும்கூட டிரா செய்யக்கூட இந்திய பேட்ஸ்மேன்கள் முயன்றிருக்கலாம். ஆனால், கடைசி 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது என்பது தோல்வியை அப்பட்டமாக ஒப்புக்கொண்டதற்கும், போராட்டக்குணம் இல்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஆடுகளங்கள் ஐபிஎல் போட்டி ரசிப்புக்காகவும், ஸ்வாரஸ்யத்தை அதிகப்படுத்தவும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டவை.
இந்த ஆடுகளங்கள் தகுதிவாய்ந்த இளம் பேட்ஸ்மேன்களை உருவாக்குவது கடினம். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்தை எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடும்போது அவர்களின் திறமையின் உறைகல் தெரிந்துவிடும். இந்தியாவில் உள்ள பேட்ஸ்மேன் சாதகமான ஆடுகளங்களை மாற்றினால்தான் டெஸ்ட் போட்டியில் ஆடும் திறமையான பேட்ஸ்மேன்கள் உருவாகுவார்கள்.
இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன?

பட மூலாதாரம், BCCI/IPL
இந்திய அணியில் உள்ள டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எந்த ஆடுகளத்திலும் தங்களால் விளையாட முடியும் என்ற மாயையில் உள்ளனர். முதலில் அதிலிருந்து வெளியே வர வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களின் வசதிக்காக, ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களைக் கவர்வதற்காக உருவாக்கப்பட்ட ஆடுகளங்கள், இதில் விளையாடிவிட்டு, ஓவல், மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்ட் ஆடுகளங்களில் இந்திய டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதும், வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதும் இயலாத காரியம்.
ஆதலால், முதலில் சர்வதேச தரத்துக்கு பிசிசிஐ ஆடுகளங்களின் தரத்தை மேம்படுத்தி, இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் பழகிவிட்ட இந்திய வீரர்கள், திடீரென 5 நாள் போட்டிகளுக்கும், களத்தில் நீண்டநேரம் பீல்டிங் செய்யவும், பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் உடலை வளைப்பது கடினம்தான். ஆதலால், இனிமேல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கென தனியாக பேட்ஸ்மேன்களை உருவாக்க வேண்டும், அல்லது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையை இரக்கமின்றி மாற்றி அமைக்க வேண்டும்.
அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களையும், பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பி இந்திய அணி களமிறங்கினால் நிச்சயம் கரை சேராது. பிசிசிஐ அமைப்பு, இந்திய ஆடுகளங்களின் தரத்தை மேம்படுத்துவதிலும், 5 நாட்களுக்குமேல் ஆடுகளங்கள் தாங்கும் வகையில் க்ரீன் டாப் ஆடுகளங்களை அமைக்க முயல வேண்டும்.
அப்போதுதான், இ்ந்திய பேட்ஸ்மேன் ஒருமுழு நாள் அல்லது முழு செசன் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் தகுதியுடையவர்களாக மாறுவார்கள். இல்லாவிட்டால், சர்வதேச தரத்துக்கு வடிவமைக்கப்பட்ட சவாலான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் இதுபோன்று எளிதாக எதிரணியிடம் சரண்டராவது தொடர்கதையாகிவிடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












