உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 40 ஓவர்களுக்கு பழகிய இந்திய வீரர்கள் 5 நாள்களுக்கு தாங்குவார்களா?

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 7) தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இதில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று மதிப்பீடு செய்ய சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் தோனி குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் ‘குலு எகேக்கியேல்’லை பிபிசி ஸ்போர்ட்ஸ் கேட்டு கொண்டது.
கவலை தரும் வீரர்களின் காயம்
முன்னணி வீரர்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ள காயங்களும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆயத்தமாக அவர்களுக்கு போதிய நேரம் இல்லாததும் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியுடன், மூன்று கூடுதல் வீரர்கள் என மொத்தம் 18 பேர் மூன்று குழுக்களாக லண்டன் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட ஐந்து வீரர்கள், கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெற வேண்டிய அந்த போட்டி, மழை காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:35 மணிக்கு தான் நிறைவடைந்தது.
அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு வெறும் எட்டு நாட்களுக்கு முன்பு தான் ஐபிஎல் தொடர் முடிவடைந்தது. இந்த குறுகிய காலத்தில் எவ்வித பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடாமல், டி20 கிரிக்கெட் மனநிலையில் இருந்து வெளியே வந்து, டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் துரிதமாக தயாராகி விடுவார்கள் என்பது பரவலான நம்பிக்கையாக உள்ளது.
நம்பிக்கை நாயகர்கள்

பட மூலாதாரம், Getty Images
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல நேரங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள புஜாரா, இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடாத, இந்திய கிரிக்கெட் அணியின் சில முன்னணி வீரர்களில் ஒருவராகவும் இவர் விளங்குகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளார் புஜாரா. சிவப்பு பந்து பயன்படுத்தப்படும் இந்தப் போட்டிகளில் மூன்று சதங்களை விளாசி உள்ளதுடன், பேட்டிங் சராசரியை 68 ஆகவும் வைத்துள்ளார் அவர்.
இருப்பினும், அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மூன்று சதங்கள் விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் சுப்மன் கில். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக இவர் திகழ்கிறார் என்று சந்தேகத்துக்கு இடமின்றி கூறலாம்.
நீளும் காயமடைந்த வீரர்களின் பட்டியல்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பீரித் பும்ரா மற்றும் சிறந்த விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் காயம் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததன் காரணமாக, 2022 ஜூலை மாதம் முதல் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதற்காக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரிஷப் பந்த், இனி கிரிக்கெட் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.
இவர்களை போன்றே, இந்திய அணியின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் காலில் ஏற்பட்ட காயத்தின் விளைவாகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
விக்கெட் கீப்பர் யார்?

பட மூலாதாரம், Getty Images
ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள, சிறந்த விக்கெட் கீப்பராக கருதப்படும் ஸ்ரீகர் பரத்துக்கு, இஷான் கிஷன் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“அணியின் தேர்வாளர்கள், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் பயிற்சியாளரான ராகுல் திராவிட் பரிட்சார்த்த முறையில் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகின்றனர்,” என்று கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பிசிசிஐ பொது மேலாளருமான ஷபா கரீம்.
ஆனால், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் இல்லாதவருக்கு விக்கெட் கீப்பர் வாய்ப்பை அளிக்கும் விபரீத முயற்சியில் அணி நிர்வாகம் இறங்காது என்று எதிர்பார்க்கலாம்,” எனவும் கூறுகிறார் கரீம்.
காரணம், “இங்கிலாந்து பிட்சுகளில் ஸ்டெம்பை தாண்டி வரும் பந்தை கையாள அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தேவை” என்றும் கூறுகிறார் அவர்.
“அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனுக்கு ஆதரவளித்தேன். ஆனால் அப்போது பரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ராகுல் காயமடைந்த பிறகு, விக்கெட் கீப்பர் வாய்ப்பு விரித்திமான் சாஹாவுக்கு அளிக்கப்படும் என்று நினைத்தேன். ஆனால் தற்போது இஷான் கிஷனுக்கும், பரத்திற்கும் இந்த வாய்ப்பு சென்றுள்ளது. இவர்களில் பரத்திற்கு தான் இறுதியில் விக்கெட் கீப்பிங் வாய்ப்பை அணி நிர்வாகம் அளிக்கும்,” என்கிறார் சபா கரீம்.
ஜடேஜாவா, அஸ்வினா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் போதெல்லாம் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களையும் களமிறக்குவது தொடர்பாக அணி நிர்வாகம் அவ்வளவு எளிதில் முடிவெடுக்க முடிவதில்லை. அதாவது, இவர்களில் ஒருவருக்கு மட்டும் 11 பேர் கொண்ட அணியில் இடமளித்துவிட்டு, மற்றொருவருக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளரை அணியில் இடம்பெற செய்யலாமா என்பது குறித்து முடிவெடுப்பது அணி நிர்வாகத்திற்கு தலைவலியாக இருந்து வருகிறது.
“லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற்றால், மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கலாம்,” என்கிறார் இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
ஆனால், “ஓவல் மைதானத்தில் பந்து சற்று மேலெழும்பும் என்பதுடன், இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டில் திரும்பவும் செய்யும். எனவே இங்கு நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற, அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்துகிறார் அவர்.
“ஜடேஜா மற்றும் அஸ்வின் பேட்ஸ்மேன்களாகவும் திகழ்வதால், ஐந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் இரண்டு ஆல் ரவுண்டர்கள் உடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்குவது சிறப்பாக இருக்கும்” என்கிறார் சிவராமகிருஷ்ணன்.
டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீதான ஆர்வம் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ரசிகர்கள் மத்தியில் குறைந்து கொண்டே தான் வந்துள்ளது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 2019 பிப்ரவரியில் ஐசிசி அறிமுகப்படுத்தியதில் இருந்து, இந்தப் போட்டியின் மீது ரசிகர்களுக்கு மீண்டும் மெல்ல மெல்ல ஆர்வம் அதிகரித்து வருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. இதனையடுத்து, இந்த அணியுடன் மோதவுள்ள அணி எது என்பதில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீயா, நானா என்ற போட்டி நிலவியது. இது டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்திய அணி, இங்கிலாந்தில் கடைசியாக 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை எதையும் கைப்பற்றவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீண்டுமொரு முறை ஐசிசி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












