பேட் கம்மின்ஸ் : இந்தியாவுக்கு நெருக்கடி தரப்போகும் ஆஸ்திரேலியாவின் 'அரிதான' கேப்டன்

பட மூலாதாரம், Getty Images
“எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து, கவனத்தை திருப்பி வெற்றி பெறுவதில் நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. தரமற்ற விஷயங்களை விரும்பவில்லை”
இந்த வியப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்தான்.
கிரிக்கெட் விளையாட்டில் ஓர் அணி வெல்லும் தறுவாயில் இருக்கும்போது அந்த அணி பேட்ஸ்மேன்களிடம் வம்பு செய்து, அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் ஸ்லெட்ஜிங் முறைகளில் எதிரணியினர் தந்திர யுத்தியை கையாள்வதுண்டு. அதில் ஆஸ்திரேலிய அணியினர் வல்லவர்கள். அந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் பாட் கம்மின்ஸிடம் இருந்து இதுபோன்ற வார்த்தை வந்தது வியப்புக்குரியது.
ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் கடந்த 2021ம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டதும் வியப்புக்குரியதுதான். கடந்த 65 ஆண்டுகளில் ரே லிண்ட்வாலுக்குப்பின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.
ஆஸ்திரேலிய அணிக்கு 47-வது கேப்டனாக நியமிக்கப்பட்ட கம்மின்ஸ், பாரம்பரிய ஆஷஸ் தொடரிலும் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்குப் பெற்றுக்கொடுத்துவிட்டார். அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தங்களின் அணியை கம்மின்ஸ் அழைத்து வந்துள்ளார்.
வரும் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி களம் காண்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களில் ஹேசல்வுட், கம்மின்ஸ் இருவரும் பெரிய தூண்கள். இதில் ஹேசல்வுட் காயத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகியது அந்த அணிக்குச் சுற்று பின்னடைவுதான். இருப்பினும் அந்தக் குறைதெரியாமல் கம்மின்ஸ் மற்ற பந்துவீச்சாளர்களை வைத்து சமாளித்துவிடுவார் என நம்பலாம்.
தடைகளைத் தகர்த்தவர் கம்மின்ஸ்

பட மூலாதாரம், Getty Images
ஏனென்றால், பலவிதமான சிரமங்களைக் கடந்துதான் கம்மின்ஸ் இந்த கேப்டன் பதவிக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மிகக் குறைந்த வயதில் 18 வயது 96 நாட்களிலேயே டெஸ்ட் அணியில் 2011ம் ஆண்டு கம்மின்ஸ் இடம் பெற்றார்.
ஆனால், காயம் காரணமாக அதன்பின் 6 ஆண்டுகள் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் கம்மின்ஸ் விளையாடாமல் வாழ்க்கை சூனியமானது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியில் கம்மின்ஸ் இடம் பெற்றாலும் பெரிதாக அவரின் பெயர் பேசப்படவில்லை.
சிறுவயதிலேயே தனது சகோதரியால் வலதுகை நடுவிரலின் பாதியை இழந்தவர் கம்மின்ஸ். இருப்பினும் விடாமுயற்சியால் உலகளவில் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்து வருகிறார்.
மனம்தளராத கம்மின்ஸ் உள்நாட்டு போட்டிகள், பிக்பாஷ் லீக், ஷெப்பீல்ட் ஷீல்ட் போன்றவற்றில் தொடர்ந்து ஆடி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். ரியான் ஹாரிஸ் ஓய்வுபெற்றபின் அவரின் இடத்தை நிரப்ப மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்ட போது, கம்மின்ஸ் அந்த இடத்தை நிரப்ப வந்தார். ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் 2017ம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் இடம் பெற்ற திடமான நம்பிக்கை கொண்டவர்.
திறமையை நிரூபித்தவர்
2017-18ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் வாய்ப்புக் கிடைத்தவுடன் தன் பந்துவீச்சை நிரூபித்த கம்மின்ஸ், 23 விக்கெட்டுகளை வீழ்த்தியும், கடைசி வரிசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வென்றது.
அதன்பின் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற கம்மின்ஸ் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் நிலைத்தன்மையான பந்துவீச்சாளர் என்ற நம்பிக்கையைப் பெற்றார்.
2018-19ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ் 19 விக்கெட்டுகளைச் சாய்த்து பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். 21 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 21-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
சிறந்த வீரர் விருது

பட மூலாதாரம், Getty Images
2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இரு துணைக் கேப்டன்கள் நியமிக்கப்பட்டபோது, டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ் நியமிக்கப்பட்டனர். அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இலங்கைஅ ணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்மினிஸ் சாதனை படைத்தார்.
2019ம் ஆண்டில் சிறந்த வீரருக்கான ஆலன் பார்டர் விருதையும் கம்மின்ஸ் பெற்றார். 2014ம் ஆண்டுக்குப்பின் இந்த விருதைப் பெற்ற முதல் பந்துவீச்சாளராக கம்மின்ஸ் அடையாளம் காணப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு அடுத்தபடியாக ஐசிசி டெஸ்ட் தரவரிசை பந்துவீச்சாளர்கள் வரிசையில், முதலிடத்தைப் பிடித்ததும் கம்மின்ஸ்தான்.
அதன்பின் நடந்த 2019ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் தனது பந்துவீச்சால் கம்மின்ஸ் முத்திரை பதித்தார். அதிவேகமாக 31 போட்டிகளில் 150-வது விக்கெட்டுகளையும், 44 போட்டிகளில் 200-வது டெஸ்ட் விக்கெட்டையும் எட்டி கம்மின்ஸ் சாதனை படைத்தார்.
ஒரு நாள் போட்டிகளிலும் இடம் பெற்று தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்த கம்மின்ஸ் 27 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும், 62 போட்டிகளில் 100வது விக்கெட்டையும் எட்டினார்.
டெஸ்ட் கேப்டன்
2021ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் நியமிக்கப்பட்ட போது, பந்தை சேதப்படுத்தும் விவகாரம் , பல்வேறு வீரர்கள் ஃபார்மின்றி இருந்த காலகட்டம், பெய்ன் மீது பாலியல் குற்றச்சாட்டு, வீரர்களிடம் ஒழுங்குநெறி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், கொரோனா பெருந்தொற்று பரவல் போன்ற கடினமான சூழல்கள் இருந்த காலகட்டம்.
மாறுபட்ட கேப்டன்

பட மூலாதாரம், Getty Images
கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வந்தது முதல் இதற்கு முன் இருந்த மற்ற கேப்டன்களில் இருந்து தன்னை வேறுபட்டு செயல்பட்டார். மற்ற கேப்டன்களான ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், கிளார்க், டிம் பெய்ன் போல் கம்மின்ஸ் தன் முகத்தை சிடுசிடுவென களத்தில் வைத்திருக்கவில்லை.
எப்போதும் புன்னகையுடன், அமைதியான முகத்துடன், சக வீரர்களை அனுசரித்துச் செல்லும் போக்கை கம்மின்ஸ் கடைபிடித்தார். பந்துவீச்சாளர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவர்களின் நோக்கத்தின்படி பீல்டிங்கை மாற்றி அமைத்து செயல்பட்டார்.
கம்மின்ஸ் கேப்டன்சியைப் பார்த்து, அவர் விளையாடிய பென்ரித் மவுன்டைன்ஸ் கிளப் பயிற்சியாளர் மைக்கேல் ஹோலோகன் கூறுகையில் “ கம்மின்ஸ் புன்னகை தான் எவ்வளவு பெரியது, அழகானது. அவர் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்துவிடுவார் இதுதான் அவரை சாம்பியனாக வைத்திருக்கிறது” என பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
மைதானத்தில் எப்போதாவதுதான் உணர்ச்சிவசப்பட்டு சத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். மற்ற நேரங்களில் அவரின் புன்னகை மட்டுமே அனைத்துக்கும் பதில் அளிக்கும். எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தை, சூடான கருத்து மோதல்களை, எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்வதை விரும்பாதவர் கம்மின்ஸ்.
ஸ்லெட்ஜிங் குறித்து கம்மின்ஸ் ஒரு ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “ ஸ்லெட்ஜிங், சூடான வாக்குவாதம் போன்றவற்றை நான் விரும்புவதில்லை. அந்த தரம் தாழ்ந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சக வீரர்கள் மீது பெரும்பாலும் குறைகூறாமல் அவர்களுக்கு ஆதரவாகவே கம்மின்ஸ் கருத்துகளை கூறக்கூடியவர். தோல்விக்கு கேப்டனாக நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் கம்மின்ஸ் தோல்விக்கான பழியை சக வீரர்கள் மீது சுமத்துவதை விரும்பாதவர்.
கடினமான காலம்
கொரோனா பரவல் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து இங்கிலாந்து அணியினர் ஆஷஸ் தொடரில் விளையாடினர். இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றாலும், எந்தவிதமான கர்வமும் இன்றி கம்மின்ஸ் பேச்சு அமைந்திருந்தது.
அப்போது அவர் கூறுகையில் “ இந்த ஆபத்தான கொரோனா பரவல் காலத்தில் எங்கள் நாட்டுக்கு வந்து ஆஷஸ் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியினருக்கு எனது நன்றிகள். இந்த இக்கட்டான நேரத்தில் இங்கு விளையாடுவது எளிதானதுஅல்ல என்பது எனக்குத் தெரியும்” என தனது பணிவை வெளிப்படுத்தினார்.
சக வீரர்களின் உணர்வுகளை மதிப்பவர் கம்மின்ஸ்
பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணியினர் முந்தைய காலக்கட்டத்தில் ஆஷஸ் தொடரை வென்றாலும், இந்தியாவுக்கு எதிராக ஆலன்-பார்டர் தொடரை வென்றாலும் மஞ்சள் வண்ணத்தைப் பூசி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், கம்மின்ஸ் கேப்டனாக வந்தபின், அந்த கொண்டாட்டத்தில் எளிமை காணப்பட்டது. எதிரணியினரின் மனதைப் புரிந்து கொண்டு, தங்களின் கொண்டாட்டத்தை மாற்றி அமைத்தனர்.
குறிப்பாக டெல்லியில் நடந்த டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது, ஆஸ்திரேலிய அணியினர்அனைவரும் கையொப்பமிட்ட ஜெர்சியை கம்மின்ஸ் வழங்கி அவரை கவுரவப்படுத்தினார். இது இதுவரை இருந்த ஆஸ்திரேலியக் கேப்டன்களில் இருந்தும் கம்மின்ஸ் வேறுபடுத்திக்காட்டியது
ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் ஜெப் லாசன் கம்மின்ஸின் இந்த செயல்பாட்டை புகழ்ந்து தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேட்டில் கட்டுரையாக எழுதிஇருந்தார். அதில் “ டெஸ்ட் கிரிக்கெட்டை வாழ்வா சாவா என்ற ரீதியில் இருந்து, அதை ஒரு விளையாட்டாகவும், விளைவுகள் இல்லாத போட்டியாகவும் கம்மின்ஸ் நட்புடன் மாற்றிவிட்டார். உலக சம்பவங்களையொட்டி கம்மின்ஸ் தனது கேப்டன்ஷிப்பை மாற்றுகிறார்.” எனப் புகழ்ந்தார்.
ஷாம்பெய்ன் கொண்டாட்டம் ரத்து

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயான் கூறுகையில் “கம்மின்ஸ் எளிமையான அமைதியான கேப்டன். ஆஸ்திரேலிய அணியினர் அமைதியாக இருந்தபோதுதான், முகத்தில் புன்னகையுடன் இருந்தபோதுதான் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை மகிழ்ச்சியாக ஆடினார்கள் என நான் நினைக்கிறேன். எங்கள் கேப்டன் உள்நாட்டில் சாதித்துவிட்டார்” எனப் பெருமையாகக் குறிப்பிட்டார்.
அதேபோல சக வீரர்களின் உணர்வுகளையும் கம்மின்ஸ் மதிக்கக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஷாம்ப்பெய்ன் மது விருந்து அளிப்பார்கள்.
ஆனால், இஸ்லாம் மதப்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது என்பதால், அந்த விருந்துகளில் கவாஜா பங்கேற்காமல் இருந்தார். இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ், சக வீரர்களிடம் இதை எடுத்துக்கூறி, கவாஜாவுக்காக, ஷாம்பெய்ன் மது விருந்துக் கொண்டாட்டத்தை நடத்தாமல் தவிர்த்தார்.
கம்மின்ஸும், சக வீரர்களும் தனக்காக ஷாம்பெய்ன் கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்ற செய்தியை கவாஜாவும் மெய்சிலிர்க்கப் பேசினார். கேப்டன்ஸ் கம்மின்ஸ் சகவீரர்களின் உணர்வுகளை மதிக்கும் இந்த செயல்பாடு வீரர்கள் மத்தியில் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.
சமூக பொறுப்புள்ள கேப்டன்
கேப்டனாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் கம்மின்ஸ் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அரசு கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் பொறுப்புள்ள குடிமகனாக பல்வேறு பிரச்சாரங்களில் கம்மின்ஸ் ஈடுபட்டார்.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவல் காலத்தில் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்காக 50ஆயிரம் டாலர்களை பிரதமர் மோடியிடம், யுனிசெப் அமைப்புடன் இணைந்து கம்மின்ஸ் வழங்கினார்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் ஆசிய அணிகள், ஆப்பிரிக்க அணிகள் இன ரீதியான சீண்டல்களை சந்திக்க நேர்வது தொடர்கதையாகி வருகிறது. அதுபோன்ற இனவெறிக்கு எதிராக “ரிப்லெக்ட் ஃபார்வேர்ட்” என்ற பிரச்சாரத்தையும் கம்மின்ஸ் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்.
"கிரிக்கெட்டில் அரிதான மனிதர்"

பட மூலாதாரம், Getty Images
கம்மினிஸின் இளமைக்காலப் பயிற்சியாளர் ஹூலகன் கூறுகையில் “ கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறிவிட்டபின் எங்கள் கிளப்புக்கு மீண்டும் விளையாட வந்தார். அப்போது, சக வீரர்கள், நண்பர்கள் அவரிடம் விருந்து வைக்க கோரினர். உடனே, தனது கிரெடிட் கார்டைஎடுத்துக்கொடுத்து செலவு செய்யக் கம்மின்ஸ் கூறினார். மனிதநேயம் கொண்ட, உதவி செய்யும் எண்ணம் கொண்ட மனிதர் கம்மின்ஸ், கிரிக்கெட்டில் இதுபோன்ற வீரரைக் காண்பதுஅரிது” என்றார்.
இன்றைய சூழலில் உலகில் எந்தக் கிரிக்கெட் அணியிலும் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. அந்தப்பெருமை கம்மின்ஸுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு கேப்டன் பொறுப்பையும் கவனிப்பது என்பது கடினமானது.
தன்னுடைய பந்துவீச்சில் ரன்கள் அதிகம் சென்றுவிடாமல் தடுக்க வேண்டும், அவ்வாறு எதிரணி பேட்ஸ்மேன் விளாசினாலும் மனம்தளராமல் கேப்டன் பணியைத் தொடர வேண்டும். பந்துவீசி சோர்வடையாமல் கேப்டன் பணியைக் கவனித்து ஆலோசனைகள் வழங்கிட வேண்டும், குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி வரும் காயத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள வேண்டும். இந்த சவால்களைக் கடந்துதான் வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாகத் தொடர முடியும் அதை கம்மின்ஸ் சிறப்பாகச் செய்து வருகிறார்
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் பிரியர்லி தனது “ தி ஆர்ட்ஆப் கேப்டன்ஸி” நூலில் கூறுகையில் “ வேகப்பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிப்பதை கடைசி வாய்ப்பாக வைக்கவேண்டும். எப்போது பந்துவீச வேண்டும், தனது ஆவேசத்தை ஒன்றாகத் திரட்டி பந்துவீசுவது எப்போது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
அணியின் தேவைகளை உணர்ந்து, மனரீதியாக துணிச்சலுடன் செயல்படக்கூடிய அற்புதமான குணங்கள் கொண்ட பந்துவீச்சாளர்தான் கேப்டனாக இருக்க வேண்டும். கேப்டனாக இருப்பவர் பந்துவீசாமல் இருந்துவிடக்கூடாது, அதிகமாகவும் பந்துவீசிவிடக்கூடாது, சுயபாதுகாப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து கம்மின்ஸுக்கு சரியாகப் பொருந்தி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
அணிக்குள் ஜனநாயகப் போக்கு
கேப்டன்ஷிப்பிலும் அணிக்குள் ஜனநாயக ரீதியான போக்கை கம்மின்ஸ் கடைபிடித்து வருகிறார். தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவை எடுக்காமல், குழுவாக ஆலோசித்து அனைத்து முடிவுகளையும் எடுப்பதை கம்மின்ஸ் வழக்கமாக வைத்துள்ளார். பீல்டிங் அமைப்பதிலும் தன்னிச்சையாக செயல்படாமல் துணைக் கேப்டன்களிடம் பேசியும், பந்துவீச்சாளர்களிடம் கலந்து பேசியும் கம்மின்ஸ் செயல்படக்கூடியவர். அதேபோல் பந்துவீச்சாளர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை அளித்து அவர்கள் பீல்டி செய்யவும் கம்மின்ஸ் அனுமதிக்கும் தன்மை கொண்டவர்.
கேப்டன்களில் மிகவும் திறமையானவர் என்று கம்மின்ஸை கூறமுடியாவிட்டாலும், ஆக்ரோஷமான மற்றும் இடைவிடாத முயற்சி, உந்துசக்தி கொண்ட, மனத்தின்மை கொண்ட கேப்டன்.
பந்துவீச்சில் சோடை போகாதவர்
கேப்டன் பொறுப்பு ஏற்ற பின்பும் சரி அதற்கு முன்பும் சரி, கம்மின்ஸ் தனது பந்துவீச்சில் எந்த வகையிலும் சோடை போகவில்லை. கேப்டனாகவும், சாதாரண பந்துவீச்சாளராகவும் சராசரியாக 21 வைத்துள்ளார்.
கம்மின்ஸ் கேப்டனாக இல்லாமல் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் கேப்டனாக 15 போட்டிகளில் 53 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சாளராக கேப்டன் பொறுப்பேற்று ஆஷஸ் தொடரை வென்று கொடுத்ததும் கம்மின்ஸ்தான், 2வது ஆஷஸ் வெற்றியையும் கம்மின்ஸ் தலைமை எதிர்நோக்கியுள்ளது. கம்மின்ஸ் தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் ஆஸ்திரேலிய அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












