தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை: வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு - அடுத்து என்ன?

தோனி, சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2023 ஐபிஎல் சீசன் முழுவதும் முழங்கால் வலியோடு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, இடதுகால் மூட்டில் இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முழங்கால் வலியைப் பொருட்படுத்தாமல், ஐஸ் பேக் வைத்து விளையாடிய தோனி, சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

எங்கு அறுவை சிகிச்சை நடந்தது

மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு இன்று நடந்த முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் முழுவதும் முழங்கால் வலியால் அவதிப்பட்ட தோனி, முழங்காலுக்கு ஐஸ்பேக் வைத்து சமாளித்து விளையாடினார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த கையோடு ஆமதாபாத்தில் இருந்து தோனி மும்பை சென்றார்.

அங்குள்ள கோகிலாபென் மருத்துவமனையி்ன் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தின்ஷா பர்திவாலாவிடம் மருத்துவ ஆலோசனை பெற்ற தோனி, அவரது ஆலோசனையின்படி இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

ஓய்வு தேவை

மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் தோனிக்கு இன்று முழங்கால் அறுகை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

தோனி நலமுடன் உள்ளார், அவரது உடல்நிலை குறித்த அறிக்கை அடுத்த இரு நாட்களில் தெரிவிக்கப்படும். தோனிக்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டு அதன்பின் முறைப்படி பிசியோதெரபி பயிற்சிகள் தொடங்கும்.

அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதற்குள் அவரது உடலைத் தகுதியாக வைத்திருக்க அதிக அவகாசம் இருக்கிறது,” எனத் தெரிவித்தனர்.

தோனியின் முழங்கால் அறுகை சிகிச்சை குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் நேற்று கூறுகையில், “தோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புவது முழுமையாக அவரது விருப்பம்,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் சீசன் முழுவதும் முழங்கால் வலியோடு போராடிய தோனி

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்தே தோனி முழங்கால் வலியோடுதான் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடினார்.

தோனி ஏன் 8வது வரிசையில் களமிறங்குகிறார் என்று ரசிகர்களுக்குப் புதிராக இருந்திருக்கும்.

ஆனால், முழங்கால் வலியும் அதற்குரிய ஓய்வும் தோனிக்கு போதுமான அளவில் தேவை என்பதாலேயே அவர் நடுவரிசையில் களமிறங்காமல் கடைசி வரிசையில் களமிறங்குவதை இந்த சீசனில் வழக்கமாக்கிக் கொண்டார்.

அவ்வாறு களமிறங்கினாலும், பேட்டிங்கின்போது, விக்கெட்டுகளுக்கு இடையே ஓடிச் சென்று ரன் எடுப்பதிலும் தோனி சற்றும் சளைக்காமல் செயல்பட்டார்.

தோனியின் உடற்தகுதியைப் பார்க்கும்போது 42 வயது நிரம்பியவரா என்று கேட்கும் அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

வலியை வெளிக்காட்டாத தோனி

இருப்பினும் கடந்த ஆண்டிலிருந்தே தோனிக்கு முழங்கால் வலி இருந்தபோதிலும் அதை ஒருபோதும் தோனி வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அதைப் பொருட்படுத்தாமால்தான் விக்கெட் கீப்பிங் பணியையும், ஓடிச் சென்று பந்தை எடுத்து எறிவதும், ஃபீல்டிங் செய்வதுமாக சுறுசுறுப்புடன் செயல்பட்டார்.

குறிப்பாக பதிரனா பலமுறை வைடாக க்ரீஸுக்கு வெளியே வீசியபோதெல்லாம் தோனிக்கு முழங்கால் வலி இருந்ததா என்று கேட்கும் அளவுக்கு டைவ் செய்து பந்தைப் பிடித்துள்ளார்.

சிஎஸ்கே ரசிகர்கள் கவனித்தார்களா!

சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் சிஎஸ்கே அணி தோற்றபின், தோனி சென்னை ரசிகர்களுக்கு நன்றி கூறி மைதானத்தை வலம் வந்தார்.

அப்போது தோனியின் இடதுகாலை ரசிகர்கள் பலரும் கவனித்திருந்தால், அவரது இடது முழங்காலில் ஐஸ் பேக் வைத்து கட்டிக்கொண்டு வலியுடன் ரசிகர்களைச் சந்தித்து தோனி நன்றியைத் தெரிவித்தது தெரிய வந்திருக்கும்.

முழங்கால் வலியோடு போட்டியில் பங்கேற்று, காலில் ஐஸ்பேக் கட்டிக்கொண்ட பின்பும், ஓய்வெடுக்காமல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தோனியின் உணர்வு குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் பெருமிதப்பட்டனர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

தயாராக வருவேன்

சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற பிறகு தோனி அளித்த பேட்டியில் “ரசிகர்களிடம் நன்றி தெரிவித்து, ஓய்வு பெறுகிறேன் என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்காக, இன்னும் ஒரு சீசன் விளையாட இருக்கிறேன். அடுத்த 9 மாதங்கள் அதற்காக நான் தயாராக இருக்கிறேன்,” எனத் தெரிவித்திருந்தார்.

அடுத்த ஐபிஎல் சீசனுக்கு தயாராவதற்கான முன்னோட்டமாகவே தோனி, ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

ஆயுர்வேத சிகிச்சைக்கும் முயற்சி

அதுமட்டுமல்லாமல் தோனிக்கு இருக்கும் முழங்கால் காயம் அவரை பல போட்டிகளில் சிறப்பாகச் செயல்படவிடாமல், அவரது முழுத்திறமையை வெளிப்படுத்தவும் தடையாக இருந்துள்ளது.

எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் உடற்தகுதி என்பது அவசியமானது. தோனி தனக்கு இருக்கும் முழங்கால் வலியை ஆயுர்வேத சிகிச்சையில் சரி செய்யவும் முயன்றார்.

இதற்காக கடந்த ஆண்டு, ராஞ்சி அருகே லாபாங் எனும் சிறிய கிராமத்துக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக தோனி சென்றார்.

அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர் வந்தன் சிங் கேர்வாரிடம் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற்று தோனி திரும்பினார். தோனியின் பெற்றோர் மருத்துவர் கேர்வாரிடம் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததையடுத்து தோனியும் ஆலோசனை பெற்றுத் திரும்பினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங் திறன் பாதிப்பு

இருப்பினும் தோனிக்கு அவரது முழங்கால் வலி தொடர்ந்து இருந்து வந்தது. தோனிக்கு இருந்த முழங்கால் வலி அவரின் பேட்டிங் திறமையையும், ரன் குவிப்பையும் பாதித்தது.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி, எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில்தான் மிகக் குறைவாக ரன்கள் சேர்த்துள்ளார்.

இதற்கு தோனியின் முழங்கால் வலியும் முக்கியக் காரணம். இந்த வலியால்தான் தோனி நடுவரிசையில் களமிறங்காமல் கடைசி வரிசையில் களமிறங்கினார். அதனால்தான் பேட்டிங்கில் போதுமான அளவு ரன்களைக் குவிக்க முடியாமல் போனது.

2023 சீசன் மோசம்

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து தோனி சராசரியாக 350 ரன்களுக்கு மேல் குவித்துவிடுவார். ஆனால், இந்த சீசனில் தோனி 16 போட்டிகளில் விளையாடி வெறும் 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

ஒரு அரைசதம், சதம்கூட அடிக்கவில்லை. 3 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் ரன்களை குறைவாக தோனி அடித்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் எந்த சீசனிலும் இல்லாத அளவாக 182 ஆக இருந்தது.

மீண்டு வருவார் ‘மஹி பாய்’

தோனியின் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, தீர்க்கம்தான் சிஎஸ்கே அணிக்குப் பல நேரங்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்து, கோப்பையை வெல்லக் காரணமாக இருந்துள்ளது.

ஆதலால் இந்த காயத்திலிருந்தும் தோனி விரைவில் மீண்டு வர அவரின் தீர்க்கம், அர்ப்பணிப்பு, உழைப்பு முக்கியப் பங்காற்றும் என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களிலும் பெருமிதம் அடைந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: