எதிரணியின் பொறுமையைச் சோதிக்கும் புஜாரா; ஆஸ்திரேலியாவால் சமாளிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
“சச்சின், டிராவிட்டுக்கு அடுத்து இவரைப் போல் பந்தை இவ்வளவு உன்னிப்பாக கவனித்த பேட்ஸ்மேனை நான் பார்த்தது இல்லை. இவரின் உன்னிப்பான கவனம் எதிரணிக்கு சவாலாக இருக்கும், இவரைப் போலவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் பழக வேண்டும்”
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், இந்திய டெஸ்ட் அணியின் தூணாக இருக்கும் சத்தேஸ்வர் புஜாரா குறித்து பெருமையுடன் கடந்த 2019இல் கூறிய வார்த்தைகள் இவை.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யும் போதெல்லாம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் புஜாரா சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார். களத்துக்கு வந்துவிட்டால், பந்துவீச்சாளர்கள் சோர்வடையும்வரை ரன் எடுக்காமல், ஸ்ட்ரோக் மட்டும் வைத்து வெறுப்பேற்றுவதிலும், களத்தில் பசைபோட்டு ஒட்டிவிட்டதைப் போன்று நிலைத்து நின்று பேட் செய்வதிலும் புஜாராவுக்கு நிகராக இன்று இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இல்லை.
2018-ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 54 பந்துகளைச் சந்தித்தபின் புஜாரா முதல் ரன்னை எடுத்து பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். இவரின் நிதானமான ஆட்டம் சில நேரங்களில் ரசிகர்களையே வெறுப்பேற்றக்கூடும். ஆஸ்திரேலியப் பயணத்திலும், இங்கிலாந்துப் பயணத்திலும் புஜாரா முதல் ரன் எடுத்தவுடன் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி இவரை கலாய்த்த சம்பவங்களும் நடந்துள்ளன.
பொறுமை, நிதானம் முக்கியம்
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நிதானம், பொறுமை மிக முக்கியம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் அனைத்துவிதமான பந்துகளையும், ஷாட்களையும் ஆடப் பழகிவிட்டாலே எந்தவிதமான போட்டிகளிலும் சோபிக்க முடியும்.
புஜாராவுக்கு பொறுமையாக பேட் செய்யவும் தெரியும், அதேநேரத்தில் ஒரு பந்துவீச்சாளர் தவறு செய்யும்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து அவரைத் தண்டிக்கவும் தெரியும். இந்திய அணியின் சூழலுக்கு ஏற்ப புஜாரா தனது பேட்டிங் முறையை மாற்றிக்கொள்ளும் வித்தை தெரிந்தவர்.
இந்தியாவின் புதிய சுவர்
1990களில் இந்திய டெஸ்ட் அணி தடுமாறும்போது “இந்திய அணியின் சுவர்” எனச் சொல்லப்படும் ராகுல் டிராவிட் மட்டும் நிலைத்து நின்று பேட் செய்து, பெவிலியன் திரும்பும் காட்சி ரசிகர்கள் பலருக்கும் கண்களைவிட்டு அகன்றிருக்காது.
டிராவிட்டுக்குப்பின் இந்திய அணிக்கு சுவராக இருக்கும் பேட்ஸ்மேன் கிடைப்பாரா என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் வந்தவர்தான் சத்தேஸ்வர் புஜாரா. இந்திய அணியின் “புதிய சுவர் புஜாரா” என்றாலும் தகும்.

பட மூலாதாரம், Getty Images
புஜாராவின் பேட்டிங் ஸ்டைல்
வலது கை பேட்ஸ்மேனான புஜாராவின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் கட்டுக்கோப்பாக, மரபுவழி ஷாட்களை அடிப்பது போன்று இருக்கும். முகமது அசாருதீன் போல கைமணிக்கட்டுகளை பயன்படுத்தி பெரிதாக ஷாட்களை ஆடாத புஜாரா, சிறந்த பேக்ஃபுட் ப்ளேயர். கால்களை நகர்த்தி பல்வேறு விதமான ஷாட்களை ஸ்டைலாக ஆடுவதில் கைதேர்ந்தவர்.
டிபெஃன்ஸ் ஆட்டத்தில் கைத்தேர்ந்தவரான புஜாரா, தொடக்கத்தில் மிக நிதானமாகவும், நேரம் கடந்து நிலைத்தபின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பேட்டிங்கையும் வெளிப்படுத்துபவர். புஜாராவின் நல்ல உடற்தகுதி அவர் களத்தில் நீண்டநேரம் பேட்டிட் செய்ய உதவியாக இருந்து வருகிறது. அதனால்தான் கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் பயணத்தில் கால்காப்பில் புஜாரா பந்துகளைத் தடுத்ததைவிட, பந்தில் உடலில் அடிவாங்கியதே அதிகம் எனலாம்.
டெஸ்ட் போட்டிகளுக்காகவே உருவானவர்
டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வடிவமைக்கப்பட்டவராக சத்தேஸ்வர் புஜாரா மாறிவிட்டார் என்றுகூட கூறலாம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பலமுறை வாய்ப்புக் கிடைத்தும், அதில் பெரிதாக சோபிக்காத புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் முத்திரையை பல போட்டிகளில் பதித்துள்ளார்.
102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 19 சதங்கள், 35 அரை சதங்கள் உட்பட 7,154 ரன்களைக் குவித்துள்ளார். அதிகபட்சமாக இரட்டை சதங்களையும் புஜாரா விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 43.38 ரன்களையும், 44.31 ஸ்ட்ரைக் ரேட்டையும் அவர் வைத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிம்மசொப்பனமாக விளங்கும் புஜாரா
இந்திய டெஸ்ட் அணிக்கு கடந்த 2010ம் ஆண்டு அறிமுகமாகிய புஜாரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியினர் இந்திய வந்தபோதிலும் சரி, இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, புஜாரா பேட்டிங்கில் தனது முத்திரையை பதிக்கத் தவறியதில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில், 43 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள புஜாரா 2,033 ரன்களைக் குவித்துள்ளார், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புஜாராவின் சராசரி 50.82 ரன்களாகும். அந்த அணிக்கு எதிராக 5 சதங்களை விளாசிய புஜாராவின் அதிகபட்சம் 204 ரன்களாகும்.
ஆதலால், 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணிக்கு சத்தேஸ்வர் புஜாராவின் ஆட்டம் நிச்சயம் சிம்மசொப்பனமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து ஆடுகளங்களை துல்லியமாக அறிந்தவர்
இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ், யார்க்ஸையர், நாட்டிங்காம்ஷையர், டெர்பிஷையர் போன்ற கவுண்டி அணிகளில் பலமுறை விளையாடிய அனுபவம் கொண்டவர் புஜாரா. எனவே, இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் குறித்து புஜாரா நன்கு அறிந்தவர் என்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
அதிலும் தற்போது சசெக்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு அங்கு இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, இதுவரை 3 சதங்களை அடித்து அருமையான ஃபார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், புஜாராவுடன் ஒரே அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆதலால், இங்கிலாந்து ஓவல் மைதானம், அங்கு நிலவும் காலநிலை, பந்து ஸ்விங் ஆகும் தன்மை, ஆடுகளத்தின் தன்மை குறித்து மற்ற இந்திய வீரர்களைவிட புஜாரா நன்கு அறிந்தவர். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாராவின் ஆட்டம் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கக்கூடும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான சராசரி வைத்திருக்கும் புஜாரா, இங்கிலாந்து ஆடுகளங்களில் 15 டெஸ்ட்களில் விளையாடி 859 ரன்கள் மட்டுமே சேர்த்து 29 ரன்கள் சராசரி வைத்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும் ஐபிஎல் தொடர் காரணமாக இந்திய அணி வீரர்கள் சிறு, சிறு குழுவாகவே லண்டனுக்குச் சென்றுள்ளார்கள். ஆனால், இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களாக இருந்துவரும் புஜாரா அந்த ஆடுகளங்களை நன்கு அறிந்தவர் என்பதால், அவரிடம் இருந்து ஆலோசனைகளை பெறுவது சிறப்பு என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கவாஸ்கரின் அறிவுரை
சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு அளிக்க பேட்டியில், “ஓவல் மைதானத்தில் புஜாரா சமீபத்தில் விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் சசெக்ஸ் அணியில் ஆடிவரும் புஜாராவுக்கு லண்டனில் இருந்து ஓவல் வெகுதூரம் இல்லை. ஓவல் மைதானம் எப்படி இருக்கிறது, அங்குள்ள நிலவரம், காலநிலை, ஆடுகளத்தின் தன்மை குறித்து நிச்சயம் புஜாரா தெரிந்திருப்பார்.
அவரிடம் இருந்து இந்திய அணியினர் ஆலோசனைகள் பெறுவது அவசியம். மேலும், ஐபிஎல் தொடரில் ஆடிவிட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு வரும் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களின் பேட்டிங் வேகத்தை சற்று மாற்றி அமைக்க வேண்டும். ஸ்விங் பந்துகளை கவனமாகப் பார்த்து ஆடி, விக்கெட்டுகளைத் தக்கவைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
ஆக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாராவின் பங்கு நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரின் அனுபவமும், நிலைத்து ஆடும் பக்குவமும் ஆஸ்திரேலிய அணியினருக்கு பெரிய சவாலாக இருக்கும்.
ரிக்கி பாண்டிங் விடுத்த எச்சரிக்கை
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில்கூட புஜாரா, விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில் “ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியில் தற்போதிருக்கும் பேட்ஸ்மேன்களில் சிறப்பாக ஆடக்கூடியவர்கள், ரன் சேர்த்தவர்களில் விராட் கோலி, புஜாரா இருவரும் முக்கியமானவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புஜாரா, கோலியின் பேட்டிங் நிச்சயம் அச்சுறுத்தலாக இருக்கும். சசெக்ஸ் அணியில் விளையாடி வரும் புஜாரா, இங்கிலாந்து ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்தவர், 3 சதங்களை அடித்து ஃபார்மில் இருக்கிறார்.
அதேபோல, ஐபிஎல் தொடரில் விராட் கோலி 3 சதங்களை அடித்து ஃபார்மில் இருப்பதால், இருவரின் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலிய அணியினர் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
புஜாராவின் ஆட்டத்தில் மாற்றம்
புஜாராவின் ஆட்டத்திலும் சமீபகாலத்தில் மாற்றம் வந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளிலும் மிகவும் மந்தமாக ஆடக்கூடியவர், பந்துகளை அதிகம் வீணாக்கி ஸ்ட்ரைக் ரேட்டையும் குறைத்துள்ளார் என்று புஜாராவின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. புஜாராவின் மந்தமான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் வழக்கமாக உயர வேண்டிய அளவுகூட சில நேரங்களில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புஜாராவின் பேட்டிங்கில் நல்ல மாற்றம் வந்துள்ளது. வேகமான ஷாட்களை அடிக்கிறார், ஆட்டத்தில் ஒருவிதமான ஆக்ரோஷம் தெரிகிறது என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ஆமை வேகம் இப்போது இல்லை
அவர் கூறுகையில் “ புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் பல நேரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளில் புஜாரா விளையாடியபோதிலும் இன்னும் அவரின் ரன் சேர்க்கும் விதம் மெதுவாக இருக்கிறது என்ற விமர்சனத்தை வைக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு புஜாராவும் வேகமாக ஷாட்களை ஆடவும், விளையாடவும் தொடங்கிவிட்டார்.
குறிப்பாக கட் ஷாட்களை அதிகம் ஆடி ரன்களை புஜாரா ஸ்கோர் செய்கிறார். ஃபுல்லர் டெலிவரி பந்துகளை அடிக்காமல் விடுவதோ அல்லது டிபென்ட்ஸ் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ள புஜாரா, பந்துவீச்சாளர் தவறு செய்தால், அந்த பந்துகளை கட் ஷாட் மூலம் பவுண்டரி அடிக்கவும், ரன்களை ஸ்கோர் செய்யவும் தவறுவதில்லை.
குறிப்பாக ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயானுக்கு எதிராக பிளிக் ஷாட்களை ஆடுவதில் புஜாரா வல்லவர். நாதன் லேயான் பந்துவீச்சில் கால்களை நகர்த்தி, பேக்புட், ஃபிரன்ட்புட் ஷாட்களை ஆடுவதிலும் புஜாரா சிறப்பாக செயல்படுவார்.
ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் பந்தை தூக்கி அடிக்க மட்டும் புஜாரா செய்யமாட்டார். புஜாரா முறையான டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் என்பதால், பந்தை தூக்கி அடித்து எந்த வீரரிடமும் கேட்ச் ஆகும் வாய்ப்பை வழங்குவதில்லை. கேட்ச் பிடிக்கும் வாய்ப்பு வழங்காவிட்டாலேயே டெஸ்ட் போட்டியில் நல்ல ஸ்கோர் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்
அதிகமான பந்துகளை சந்தித்த புஜாரா
கடந்த 2010ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகிய புஜாரா, தவிர்த்து, ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட், அலிஸ்டார் குக், அசார் அலி ஆகிய 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் அதிகமான பந்துகளைச் சந்தித்துள்ளனர். இதன் மூலம் புஜாராவின் நிதானமான பேட்டிங் டெஸ்ட் போட்டியில் எவ்வாறு இருக்கும் என்பது தெரிந்துகொள்ளலாம்.
2010ம் ஆண்டிலிருந்து, புஜாரா 15,797 பந்துகளை எதிர்கொண்டு விளையாடியுள்ளார். அதாவது, ஏறக்குறைய 2632 ஓவர்களை புஜாரா விளையாடியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நங்கூரமிடும் பேட்ஸ்மேன்
13 ஆண்டுகால டெஸ்ட் போட்டி அனுபவத்தில் புஜாரா ஒவ்வொரு 99.9 பந்துகளில் ஆட்டமிழந்துள்ளார். அதாவது, புஜாரா களத்துக்கு வந்துவிட்டால் குறைந்தபட்சம் 100 பந்துகளை சந்திக்காமல் பெரும்பாலும் சென்றது இல்லை.
அந்த வகையில் எதிரணியினர் ஆட்டமிழக்கச் செய்வதற்கு கடினமான பேட்ஸ்மேன்களில் சர்வதேச அளவில் 7-வது இடத்தில் புஜாரா இருக்கிறார். சராசரியாக 99 பந்துகளை சந்தித்த பின்பே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பதே எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடும்.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன்கள் களத்தில் எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறாரோ அந்த அளவுக்கு வலுவாக பேட்டிங் செய்ய முடியும். அந்த வகையில் புஜாரா களத்தில் வலுவாக நின்று பேட் செய்த ஆட்டங்களில் பெரும்பாலும் சதம், அரை சதங்களைக் கடந்துள்ளார். ஆதலால், புஜாராவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால், ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தலைவலியாக மாறுவார்.
புஜாரா களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சேர்க்கும் ரன்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக புஜாரா ஸ்கோர் செய்துவிடுவார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
களத்தில் நிலைத்துவிட்டால், இந்திய அணி சேர்க்கும் ரன்களில் ராகுல் டிராவிட் 36 சதவீதமும், சுனில் கவாஸ்கர் 34 சதவீதமும் பங்களிப்பு செய்துவிடுவார்கள், இதில் புஜாரா 3வது இடத்தில் உள்ளார். விராட் கோலியின் பங்களிப்பு 29.1% ஆக இருக்கிறது.
பார்ட்னர்ஷிப் அமைப்பதில் வல்லவர்
அதேபோல களத்தில் பிற இந்திய பேட்ஸ்மேன்களுடன் நிலைத்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்ப்பதிலும் புஜாராவின் பங்கு அளப்பரியது. இந்திய பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கருக்கு அடுத்தார்போல், மற்ற பேட்ஸ்மேன்களுடன் சேர்ந்து அதிக ரன்களைச் சேர்த்ததில் புஜாரா 3வது இடத்தில் உள்ளார்.
டிராவிட் பார்ட்னர்ஷிப் அமைத்து 32 ஆயிரம் ரன்களும், கவாஸ்கர் 21 ஆயிரம் ரன்களும் குவித்த நிலையில் புஜாரா பார்ட்னர்ஷிப் அமைத்து 15,804 ரன்களை டெஸ்ட்போட்டிகளில் சேர்த்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












