அணியின் ப்ளேயிங் 11இல் ரோகித் சர்மா அஸ்வினை சேர்க்காதது ஏன் - வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
லண்டனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை ப்ளேயி்ங் லெவனில் தேர்வு செய்யாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக விளங்கும் அஸ்வினை, முக்கியத்துவம் வாய்ந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தேர்வு செய்யாதது குறித்து முன்னாள் வீரர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறி்த்து தமிழக கிரிக்கெட் அணி வீராங்கனை ஷைலஜா சுந்தர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வினை சேர்த்திருப்பது அவசியமானது. அஸ்வினை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால் இந்த கேள்விக்கு இடமில்லை.
ஆனால், அஸ்வின் அணியில் இருக்கும்போது அவருக்கு இடமில்லை என்பது சிறிது அதிர்ச்சியாகத்தான் இருந்தது,” என்று கூறினார்.
நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள்
லண்டன் ஓவல் ஆடுகளத்தில் இருக்கும் ‘க்ரீன்டாப்’ ஆடுகளத்தை மேலோட்டமாகப் பார்த்து வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று ரோகித் சர்மா எண்ணிவிட்டார். அதனால்தான், 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது தற்போது கையைச் சுட்டுக்கொண்டுள்ளது.
முதல்நாள் ஆட்டத்தில் புதிய ‘பந்து’ பாலிஷ் குறையாமல் இருந்தவரை எளிதாக 3 விக்கெட்டுகளை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்திவிட்டனர். அதன்பின் 4வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் கூட்டணியை ஆட்டநேர முடிவுவரை நகர்த்தக்கூட முடியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
விமர்சனம்
எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்காத இந்திய அணியின் பந்துவீச்சை புரட்டி எடுத்த டிராவிஸ் ஹெட் சதம் அடித்து, 150 ரன்களை எட்டவுள்ளார், ஸ்மித் சதத்தை எட்டவுள்ளார்.
ஆனால் இருவருக்கும் நெருக்கடி தரும் வகையில் பந்துவீசக்கூடிய முழுநேர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் அடுக்கடுக்காக கேள்விக்கனைகளை வீசியுள்ளனர்.
அதிலும் ஆஸ்திரேலிய அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். உலகளவில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்துவீச்சில் பெரிய நெருக்கடி தரும் வகையில் பந்துவீசுவதில் இன்றைய சூழலில் அஸ்வின் சிறந்தவர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், அவரை ப்ளேயிங் லெவனில் ஏன் எடுக்கவில்லை என்பதும், பேட்டிங் வலுவை மட்டும் நம்பி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எவ்வாறு களமிறங்கியது என்பதும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்வினுக்கு வாய்ப்பு மறுப்பு தொடர்கிறதா
இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். இருந்தபோதிலும் அவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தேர்வு செய்யவில்லை.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்தபோது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு தராமல் அமர வைத்தார். இப்போது ரோகித் சர்மா - டிராவிட் கூட்டணியும் அஸ்வினின் திறமையை இருட்டடிப்பு செய்வதுபோல் செயல்படுகிறார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களைப்போல் லண்டன் ஆடுகளங்கள் இல்லை. முதல் 3 நாட்களுக்குப் பிறகு ஆடுகளத்தின் தன்மை மாறத் தொடங்கி, வறண்ட தன்மை வரும்போது சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். அப்போது முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
முழுநேர சுழற்பந்துவீச்சாளர் அணியில் எப்போதும் இருப்பார்
இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் கோலோச்சியபோதுகூட எந்த அணியும் முழுநேர சுழற்பந்துவீச்சாளரின் பணியைத் துச்சமாக மதித்து அமர வைத்தது இல்லை. உலக அணிகளைத் தனது வேகப்பந்துவீச்சால் மிரட்டிய மேற்கிந்தியத் தீவுகள் கூட ஹார்பர், கிப்ஸ் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் அணியில் இடம் ஒதுக்கியிருந்தது.
ஆஸ்திரேலிய அணியில் மெக்ராத், கில்லஸ்பி போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்த காலத்திலும்கூட ஷேன் வார்ன் அணியில் இல்லாமல் இல்லை. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு அணிகளிலும் குறைந்தபட்சம் ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளர் அணியில் இருப்பார்.
வரலாறு இப்படியிருக்கும்போது, எந்தத் துணிச்சலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இந்திய அணி முழுநேர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் இல்லாமல் களமிறங்கியது என்பது வியப்புக்குரியதாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உமேஷ் யாதவைவிட அஸ்வின் சிறந்த ஆல்ரவுண்டர்
இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் வரை அதாவது 8வது வரிசைவரை பேட்ஸ்மேன் இருக்கவேண்டும் என்பதற்காக அஸ்வின் அமர வைக்கப்பட்டார் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், உமேஷ் யாதவைவிட அஸ்வின் சிறந்த பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் என்பதையும் மறுக்கமுடியாது.
அதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வினின் பந்துவீச்சு எப்போதுமே சிறப்பாக இருந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் அஸ்வின் 54 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் மட்டும் 4 முறை 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் சாதனைகள்
அஸ்வின் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தனது தனித்தன்மையான பந்துவீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தி தனிமுத்திரையைப் பதித்தவர். டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் மட்டும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் என்பது கவனிக்கத்தக்கது.
இதுவரை அஸ்வின் 92 டெஸ்ட் போட்டிகளில் 174 இன்னிங்ஸ்களில் விளையாடி, 474 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின், 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் நான்கில் ஒரு பகுதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது.
வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய பந்துவீச்சுக்கு தனி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
அஸ்வின் தனது ஸ்லோபால், கேரம்பால், கூக்ளி பந்துவீச்சு, ஆஃப் ஸ்பின், லெக் கட்டர் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
அதிலும் உலகளவில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சவாலான பந்துவீச்சை வெளிப்படுத்தக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வின் முதன்மையானவர் என்றால் மிகையல்ல. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், கவாஜா, அலெக்ஸ்காரே ஆகிய 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஏன் அஸ்வின் அமர வைக்கப்பட்டார் என்பது கிரிக்கெட் விமர்சர்கள் வைக்கும் கேள்வி.

பட மூலாதாரம், Getty Images
முரளிதரன் சாதனையை முறியடிப்பார்
35 வயதாகும் அஸ்வின் இன்னும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டியில் விளையாடினால் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் 493 டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனையையும் முறியடித்துவிடுவார்.
முத்தையா முரளிதரன் எடுத்த விக்கெட்டுகளில் பெரும்பாலும் ஆசிய நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. ஆனால், அஸ்வின் களமாடியது பெரும்பாலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகத்தான். அவர் வீழ்த்திய அதிக விக்கெட்டுகளும் இந்த நாடுகளுக்கு எதிராகத்தான்.
இந்த 3 நாடுகளுக்கு எதிராக மட்டும் அஸ்வின் 268 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பதில் இருந்து அஸ்வினுடைய பந்துவீச்சு திறமையை அறியலாம்.
இந்திய அணியில் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்தாற்போல் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக இருப்பவர் அஸ்வின். அஸ்வின் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருது வென்றவர் என்பது பலருக்கும் நினைவிருக்காது.
முதல் 16 போட்டிகளிலேயே அஸ்வின் 9 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும், 300 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றவர். முத்தையா முரளிதரனுக்கு அடுத்தாற்போல் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதும் அஸ்வின் மட்டும்தான்.
அஸ்வின் 30 முறை 4 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 90க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2016-17ஆம் ஆண்டு அஸ்வினுடைய கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் இருந்தது.
உள்நாட்டில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 27 விக்கெட்டுகள், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 28 விக்கெட்டுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அஸ்வினை அமர வைத்ததற்கு ரோகித் சர்மா கூறும் காரணம் என்ன
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அஸ்வின் அமர வைக்கப்பட்டதற்கு கேப்டன் ரோகித் சர்மா அளித்த விளக்கத்தில், “ஓவல் மைதானத்தில் இந்த ஆண்டில் மட்டும் 3 கவுன்டி போட்டிகள் 3 சுற்றுகள் நடந்துள்ளன. கடைசியாக மே 20ஆம் தேதிகூட ஒரு போட்டி நடந்துள்ளது. அப்போது நடந்த சம்பவங்களையும் புள்ளிவிவரங்களையும் அறிந்துள்ளோம்.
இந்த கவுன்டி போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் மொத்தமே 32 ஓவர்கள்தான் வீசியுள்ளனர், வேகப்பந்துவீச்சாளர்கள் 745 ஓவர்கள் வீசியுள்ளனர். அதாவது ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 7 ஓவர்களுக்கு மேல் சுழற்பந்துவீச்சாளர்கள் வீசியதில்லை. சர்ரே அணிகூட ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளரை அணியில் வைக்கவில்லை. பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே வைத்திருந்தது.
இந்த ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் வேகப்பந்துவீச்சுக்கும், நல்ல பவுன்ஸருக்கும் ஒத்துழைக்கும். ஆட்டத்தின் ஒவ்வொரு நாட்களும் செல்லச் செல்ல ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்,” எனத் தெரிவித்தார்.
ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, மஞ்சரேக்கர் ஆகியோர் அஸ்வினை அமரவைத்தது தவறு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அஸ்வினை அமரவைத்தது தவறு
சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நம்பர் ஒன் பந்துவீச்சாளரான அஸ்வினை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் இந்திய அணி தவறு செய்துவிட்டது. அஸ்வின் மாதிரியான வீரரிடம் ஆடுகளத்தின் தன்மையை ஒப்பிடக்கூடாது.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும்போது, உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரை எவ்வாறு தேர்வு செய்யாமல் விடலாம். என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டு இந்திய அணியின் முடிவு இருக்கிறது.
நான்கு இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் இருக்கும்போது அவர்களுக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசக்கூடிய அஸ்வினை ஏன் தேர்வு செய்யவில்லை. உமேஷ் யாதவுக்கு பதிலாக அஸ்வினை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து,” எனத் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே முடிவு எடுத்துவிட்டீர்கள்
பிசிசிஐ முன்னாள் தலைவர், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறுகையில், “கேப்டனாக, டாஸ் போடுவதற்கு முன்பு முடிவு எடுத்து நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்துவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று கூறுவார்கள்.
ஒவ்வொரு கேப்டனும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம், நானும், ரோகித் சர்மாவும் வேறுபட்டு சிந்திப்போம். என்னைப் பொறுத்தவரை அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இருக்கவேண்டும். அவரை நிராகரித்து அமர வைத்தது கடினமான முடிவு,” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மைக்கேல் வான் கருத்து
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய அணி அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாட வைக்காதது பெரிய தவறு” எனத் தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில் “ரவிந்திர ஜடேஜாவைவிட ஆஸ்திரேலிய இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடியவர் அஸ்வின். அவர் இல்லாமல் இந்திய அணி களமிறங்கி தவறு செய்துவிட்டது,” என விமர்சித்துள்ளார்.
அஸ்வின் இடம்பெற்றிருக்க வேண்டும்
இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறி்த்து தமிழக கிரிக்கெட் அணி வீராங்கனை ஷைலஜா சுந்தர் பிபிசி தமிழிடம் கூறுகையில், “இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வினை சேர்த்திருப்பது அவசியமானது," எனக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மேற்கொண்டு பேசியவர், "அஸ்வினை தேர்வு செய்யாமலேயே இருந்திருந்தால் இந்த கேள்விக்கு இடமில்லை. ஆனால், அஸ்வின் அணியில் இருக்கும்போது அவருக்கு இடமில்லை என்பது சிறிது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், கேப்டன் ரோகித் சர்மாவின் தனிப்பட்ட முடிவாக இல்லாமல், பயிற்சியாளர் உள்ளிட்டோர் சேர்ந்து எடுத்த முடிவாக, ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப எடுத்த முடிவாக இருக்கலாம்.
முதல்நாள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் அஸ்வினை எடுக்காதது சரி என்றும் தவறு என்றும் கூறுவது கடினம். இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் நாட்கள் செல்லும்போதுதான் இந்த முடிவு பற்றித் தெரியவரும். ஒருவேளை இந்திய அணி நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் சென்று போட்டியை வென்றுவிட்டால் அவர்கள் எடுத்த முடிவு சரியானதாக அமையலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இல்லாவிட்டாலும்கூட, அவர் அணியில் இருப்பதே வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஜடேஜா, ரோகித் சர்மாவுக்கு அவ்வப்போது வந்து அஸ்வின் தேவையான ஆலோசனைகளை வழங்குவதும் ஊக்களிக்கும்,” எனத் தெரித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












