அஸ்வின் இல்லாத இந்தியப் பந்துவீச்சை 'புரட்டி எடுத்த' ஆஸ்திரேலியா - ஏன் இந்த 'விஷப்பரீட்சை'?

பட மூலாதாரம், Getty Images
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் ஆதிக்கம் செய்து ரன்களைக் குவித்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது. அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து 146-ரன்களுடனும்(156பந்துகள், 22பவுண்டரிகள்,ஒரு சிக்ஸர்), ஸ்வீடன் ஸ்மித் 95 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
ஸ்மித், ஹெட் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆஸ்திரேலிய அணியை வலுவான இடத்தை நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
பல் இல்லாத இந்தியப் பந்துவீச்சு
இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று ஹெட், ஸ்மித்திடம் எடுபடவில்லை. தொடக்கத்தில் ஷமி, சிராஜ் கட்டுக்கோப்பாக வீசி, ஆட்டத்தை இந்தியா கையில் வைத்திருந்தது. ஆனால், தாக்கூர், உமேஷ், ஜடேஜா பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு கைகொடுத்தாததால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் சென்றது.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்து தடுமாறி இந்திய அணி ஆதிக்கம் செலதுத்தியது. ஆனால், ஸ்மித், ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து நங்கூரமிட்டு, இந்தியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ஆதிக்கம் செய்யத் தொடங்கினர்.
அதிரடியாக ஆடிய ஹெட்

பட மூலாதாரம், Getty Images
குறிப்பாக டிராவிஸ் ஹெட் டெஸ்ட் போட்டி போன்று ஆடாமல் ஒருநாள் போட்டிபோல் பேட்டிங் செய்து, ஸ்ட்ரைக் ரேட்டை 100 ஆக வைத்திருந்தார். டிராவிஸ் ஹெட் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு வெளியே எந்த வெளிநாட்டிலும் சதம் அடித்தது இல்லை. முதல்முறையாக ஹெட் நேற்று வெளிநாட்டில் சதம் அடித்தார், அதிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடிக்கப்பட்ட முதல் சதமும் இதுவாகும்.
இந்த டெஸ்ட் போட்டியில் பெரிய விவாதப் பொருளாக மாறியிருப்பது இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காமல், 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கி இருப்பதுதான். ஆஸ்திரேலிய அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் அஸ்வினுக்கு இணையாக பந்துவீசும் சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.
தவறான கணிப்பா?
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இறங்கி இந்திய அணி தோல்வி அடைந்தது. அதை மனதில் வைத்தும், ஆடுகளத்தில் 6மில்லிமீட்டருக்கு புற்கள் இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று நம்பி அஸ்வினுக்குப் பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா தேர்ந்தெடுத்தார். ஆனால், ஷமி, சிராஜ் தவிர தாக்கூர், உமேஷ் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை.
2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதை மனதில் வைத்து இந்த டெஸ்ட் போட்டியிலும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த முடிவு சரியானதா அல்லது தவறா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும்
ஆனால், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாகக் கையாண்டனர். உமேஷ், ஷர்துல் இருவரும் சேர்ந்து 32 ஓவர்கள் வீசி 129 ரன்கள் வாரி வழங்கினர். பெரும்பாலான பவுண்டரிகள் இருவரின் பந்துவீச்சில்தான் டிராவிஸ் பெட், ஸ்மித் அடித்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் அதிகமான பவுண்டரிகள் அடிக்க விடுவது, பீல்டிங் செய்யும் அணிக்கு கடைசிநாளில் இலக்கை விரட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மட்டும் ஹெட் 22பவுண்டரி, ஸ்மித்14 என மொத்தம் 36 பவுண்டரிகளை இந்திய அணியினர் வாரி வழங்கினர்.
சிராஜ், ஷமி மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images
புதிய பந்தில் ஷமி, சிராஜ் இருவரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டும் விதத்தில் பந்துவீசினர். ஆட்டம் தொடங்கிய முதல் ஒருமணிநேரத்தில் 12 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேர்க்க முடிந்தது, உஸ்மான் கவாஜா விக்கெட்டையும் பறிகொடுத்திருந்தது.
ஆனால், ஷமி, சிராஜ் இருவருக்குப் பின் உமேஷ், ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது எளிதாக அமைந்தது. டெஸ்ட் போட்டிக்கு பந்துவீசிவது போன்று இல்லாமல் இருவரும் ஓவருக்கு 2 முதல் 3 பந்துகள் ஓவர் பிட்சாகவும், எளிய ஷாட்களை ஆடுவதற்கு வசதியாக தவறான பந்துகளையும் வீசியதால் ரன் சேர்ப்பு எளிதாக இருந்தது.
சிராஜ், ஷமி ஓவரின்போது ரன் சேர்க்காமல் சிரமப்பட்ட வார்னர், தாக்கூர், உமேஷ் பந்துவீச்சை வெளுத்து வாங்கி பவுண்டரிகளாக விளாசினார். ஆனால், வார்னர் 43 ரன்கள் சேர்த்தபோது, விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மதிய உணவு இடைவேளைக்கு செல்லும் முன்பாக, ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
உணவு இடைவேளைக்குப்பின் ஸ்மித், லாபுஷேன் ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது சிராஜ் வீசிய பந்து பவுன்ஸ் ஆகி, லாபுஷேன் இடதுகை பெருவிரலில் பந்து தாக்கியது. பந்து கைவிரலில் பட்டவுடன் லாபுஷேன் பேட்டை தூக்கி எறிந்துவலியால் துடித்தார். அதன்பின் சிறிய முதலுதவி சிகிச்சைக்குப்பின் லாபுசேன் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
ஆனால், ஷமியின் அருமையான லெக் கட்டர் பந்துவீச்சை கணித்து ஆடத் தவறியதால் லாபுஷேன் 23 ரன்களில் க்ளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஸ்மித், ஹெட் நங்கூர கூட்டணி
4வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்து, ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர். இருவரும் ஜோடி சேர்ந்தபின், ஆட்டத்தில் மாற்றம் காணப்பட்டது.
ஹெட் இந்தியப் பந்துவீச்சை அடித்து ஆட, ஸ்மித்தும் தனது ரன் சேர்ப்பில் சற்று வேகக்தை அதிகப்படுத்தினார். இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் ஓவருக்கு 4 ரன்கள் என்ற வேகத்தில் சென்றது.
டிராவிஸ் ஹெட் 60 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார், ஸ்மித் 144 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் பந்துவீச்சை ஸ்மித், ஹெட் இருவரும் நன்றாகப் பயன்படுத்தி பவுண்டரிகளாக விளாசினர்.
இதில் உமேஷ் மட்டும் 14 ஓவர்கள் வீசி 54 ரன்களும், தாக்கூர் 18ஓவர்கள் வீசி 75 ரன்களையும் வாரி வழங்கினர். ஜடேஜ் பந்துவீச்சும் பெரிதாக ஸ்மித், ஹெட்டுக்கு தொந்தரவாக அமையவில்லை. வேகப்பந்துவீச்சில் ரன் சேர்க்க சிரமப்பட்ட ஸ்மித், ஜடேஜா ஓவரை நன்கு பயன்படுத்திக்கொண்டு பவுண்டரிகளாக விளாசினார்.
ரன் சேர்க்கும் வேகம் அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
மாலை நேர தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. அதன்பின் ஓவருக்கு ஒருபவுண்டரி விளாசிய ஹெட் 106 பந்துகளில் சதம் அடித்தார்.
ஆஸ்திரேலிய அணி பிற்பகல் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள்தான் சேர்த்திருந்தது, அதன்பின் 2வது மற்றும் 3வது செஷனில் ஹெட், ஸ்மித் இருவரும் தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டு 35 ஓவர்களில் 125 ரன்கள் சேர்த்தனர்.
இந்தியப் பந்துவீச்சாளர்கள் 5 பேரும் சேர்ந்துநேற்று முதல்நாளில் 140 மோசமான பந்துகளை வீசி ஷாட்களை ஆடுவதற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு வழிகாட்டியுள்ளனர். சிராஜ், ஷமி இருவரும் பந்துவீசி 234 பந்துகளில் 19 பவுண்டரிகள் மட்டுமே வழங்கினர். ஆனால், தாக்கூர், உமேஷ் இருவரும் சேர்ந்து 192 பந்துகளை வீசி 23 பவுண்டரிகளை வாரிவழங்கினர்.
அஸ்வினை பிளேயிங் லெவனில் எடுக்காதது தவறா?
அஸ்வினை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் அமரவைத்தது தவறு என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் “ ஆடுகளம் நன்றாக வறண்டு, புற்களுடன் இருப்பதால், அஸ்வினை இந்திய அணி ப்ளேயிங் லெவனில் எடுத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, அஸ்வின் இருந்திருந்தால், அவர்களுக்கு பெரிய தொந்தரவாக அவரின் பந்துவீச்சு இருந்திருக்கும். ஜடேஜாவின் பந்துவீச்சைவிட அஸ்வின் பந்துவீச்சு இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்தார்
சச்சின் கருத்து என்ன?
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் “இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சில் வல்லவரான அஸ்வினை இந்திய அணி சேர்க்காமல் விட்டது தவறு. ஓவல் ஆடுகளம் கடைசி நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஆதரவாக மாறும்போது, அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்கள் அவசியம் தேவை. அஸ்வின் இருந்திருந்தால், ஓவலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியிருக்கும்” எனத் தெரிவித்தார்.
"அஸ்வின் விக்கெட் டேக்கர்"

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் “ ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய மண்ணிலும், அவர்கள் நாட்டிலும் அஸ்வினின் பந்துவீச்சு 2018ம் ஆண்டிலிருந்து சிறப்பாக இருந்துள்ளது.
வெளிநாடுகளில் அஸ்வின் சிறப்பாக பந்துவீ்சியுள்ளார். வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் கடந்தகாலங்களில் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசியிருக்கும்போது, ஏன் இதில் வாய்ப்பு வழங்கவில்லை. பும்ரா இல்லாததால் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் ஆட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
கூடுதலாக ஆல்ரவுண்டருக்காக ஷர்துல் தாக்கூரை எடுத்திருக்கலாம், அஸ்வினுக்குப் பதிலாக உமேஷ் யாதவை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போது, சவுத்தாம்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
ஆனால், நியூசிலாந்து 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் வந்து, கோப்பையை வென்றது. அதுபோல் இந்திய அணி செயல்பட்டால் அது தவறானது. ரோஸ்பவுல் ஆடுகளம் வேறு, ஓவல் ஆடுகளம் வேறு. பல்வேறு நல்ல காரணங்களுக்காக அஸ்வினை எடுத்திருக்கலாம், அவரால் நன்றாக பேட்டிங் செய்யவும் முடியும், தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் திறமையுடையவர் ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












