சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியர்கள் அச்சம் கொள்ள தேவையா?

கொரோனா இந்தியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுப்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 28, 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜனவரி 8ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை கொண்டுவரப் போவதாகவும், தனது வான் எல்லையை திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பால் பிற நாடுகள் கவலையடைந்துள்ளன. 

சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை, எனினும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் , முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கக் தொடங்கியவுடனேயே இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. 

சீனா மற்றும் 4 ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் நிச்சயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மருத்துவமனைகளால் கொரோனா சூழலை சமாளிக்க முடியுமா என்று செவ்வாயன்று மருத்துவமனைகளில் ஒத்திகையும் நடைபெற்றது. 

அரசு தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது வெறும் 3,400 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆனால், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மற்றும் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் நினைவுகள் மக்களை கவலையடைய செய்துள்ளது. 

ஆனால், தற்போது இது தொடர்பாக எவ்வித கவலையும் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

"சீனாவில் நோய்த்தொற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படும் வரிசையில் உள்ளது. வைரஸால் பாதிக்கப்படாத மக்கள்தொகை இருந்தால், எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தியா உட்பட உலகின் பிற நாடுகளில் எதுவும் மாறவில்லை," என்கிறார் தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் சுகாதார அமைப்புகள் நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லஹரியா.

கடுமையான ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் மற்றும் எல்லைகள் மூடல் என்ற பூஜ்ஜிய கோவிட் அணுகுமுறையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கிய பின்னர், அதிகரித்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீனா போராடி வருகிறது. 

கொரோனா அதிகரித்து வருவதால், சீனாவில் பயன்படுத்தப்படும் முக்கிய தடுப்பூசிகளான சினோவாக் மற்றும் சினோபார்ம் - நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குமா என்பதிலும் சில நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

“மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம், BF.7 [சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பை உண்டாக்குகிறது என்று அறிக்கைகள் கூறும் Omicron துணை வகை] அதிக தொற்றுத்தன்மை நிறைந்தது மற்றும் முந்தைய அனைத்து நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்தும் தப்பிக்கும் தன்மையை கொண்டது. உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், உங்களுக்கு அதிகமான நோய்கள் வரும், இது முதியவர்களை, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மக்களை பாதிக்கும்” என்கிறார் வைராலஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான். 

கொரோனா இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கடந்த சில மாதங்களில் நான்கு பேர் BF.7 காரணமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். இவர்கள் அனைவருமே குணமடைந்துவிட்டனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

கோவிட் இன்னும் உள்ளது, மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் நாம் கொரோனா இல்லாமல் இருக்கிறோம் என்பதல்ல, ஆனால் இது காய்ச்சல் போன்ற மற்றொரு மேல் சுவாசக்குழாய் தொற்று போல மாறிவிட்டது" என்கிறார் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் லலித் காந்த்.

இந்தியாவில் தற்போது கொரொனா எண்ணிக்கை குறைந்து காணப்படுவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியர்கள் ஏற்கனவே பெற்றுள்ள நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் என்று கூறப்படுகிறது. 

ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஏ. ஃபதாஹுதீன், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் "கலப்பின நோய் எதிர்ப்புச் சுவர்" திருப்திகரமாக இருப்பதாகக் கூறுகிறார், ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை எடுத்துள்ளனர் அல்லது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 

சீனாவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியை விட இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி அதிக வீரியமிக்கது என்றும் அவர் குறிப்பிடுகிறார். தற்போதுவரை 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. இதில், முதல் டோஸ், இரண்டாம் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகியவையும் அடக்கம். 

இந்தியர்களில் 27 சதவீதம் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டுள்ள நிலையில், இதுவரை பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். மற்ற நிபுணர்களும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர். 

கொரோனா இந்தியா

பட மூலாதாரம், Getty Images

“காலப்போக்கில், ஆன்டிபாடிகளின் அளவு குறைகிறது. எனவே மூன்றாவது ஷாட் எப்போதும் நன்மை பயக்கும் மற்றும் ஆன்டிபாடிகளின் அளவை அதிகரிக்கும். இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நல்லது” என்று மருத்துவர் லஹரியா கூறுகிறார், 18-59 வயது பிரிவில் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் எடுத்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு அது அவர்களின் விருப்பம் சார்ந்தது என்றும் அவர் கூறுகிறார். 

புதிய திரிபுகளை விஞ்ஞானிகள் அடையாளம் காண அனுமதிக்கும் மரபணு வரிசைமுறையை முடுக்கிவிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை நிபுணர்களும் ஏற்றுகொள்கின்றனர். 

சர்வதேச பயணிகளில் தோராயமாக 2 சதவீதம் பேரின் மரபணு வரிசைமுறையை ஆய்வு செய்யும் தற்போதைய சோதனை முறை எந்த புதிய மாறுபாட்டையும் எடுக்க போதுமானதாக உள்ளது என்று மருத்துவர் ஃபதாஹுதீன் கூறுகிறார். 

“அரசாங்கமும் சாதாரண மக்களும் பின்பற்ற வேண்டிய சிறந்த மந்திரம் "சிறந்ததை எதிர்பார்ப்பது மற்றும் மோசமானதை எதிர்கொள்ள தயாராவது” என்கிறார் மருத்துவர் ஜான். 

விளையாட்டுகளை மைதானங்களில் பார்க்கும்போதோ, கூட்டம் நிறைந்த பேருந்து அல்லது ரயில்களில் பயணிக்கும்போதோ எதுவாகினும் கூட்டம் நிறைந்த இடங்களில் முகக் கவசம் அணிவதை பழக்கமாக்க வேண்டும். 

நோய்த்தொற்று அளவு குறைந்த பின்னர் இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் முகக்கவசம் அணியும் விதிகளை தளர்த்தியது, மேலும் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நெரிசலான பகுதிகளில் மக்களைப் பார்ப்பது இப்போது பொதுவானது.

"எச்சரிக்கையாக இருங்கள், முகக்கவசம் அணியுங்கள்" என்று மருத்துவர் ஜான் கூறுகிறார்.

தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத சூழல் என்றால் முகக் கவசத்தை அணிய வேண்டும் என்றும் மருத்துவர் ஃபதாஹுதீன் வலியுறுத்துகிறார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: