சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆலிஸ் டேவிஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாயன்று, ஜனவரி 8, 2023 முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை கொண்டுவரப் போவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்குள் நுழையும் நபர்களுக்கு நியூக்ளிக் அமில சோதனைகள் இனி மேற்கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளது.
தனது எல்லைகளை அடுத்த மாதம் மீண்டும் திறப்பதாக சீன அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள், வெளிநாட்டு பயணத்துக்காக டிக்கெட்டுகளை அவசர அவசரமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளனர். பெய்ஜிங் தனது எல்லைகளைத் திறப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
மூன்று ஆண்டுகளாக தனது எல்லையை மூடி வைத்திருந்த சீனா, ஜனவரி 8ஆம் தேதி முதல் தடையின்றி தனது நாட்டிற்கு வெளியே பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, ஜனவரி 5ஆம் தேதி முதல் சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் கோவிட் நெகடிவ் பரிசோதனை முடிவைக் காட்ட வேண்டும். இந்தப் பரிசோதனை முடிவு பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், “இந்த நடவடிக்கைகள் நோய்ப் பரவல் வேகத்தைக் குறைக்கவும் புதிய திரிபுகள் எதுவும் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்டறியவும் கொண்டுவரப்படுகின்றன,” எனக் கூறிய சிடிசி, “வெளிப்படையான, போதிய நடவடிக்கைகளை சீனா எடுக்கத் தவறியதாக” குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவை போலவே, இந்தியா, ஜப்பான், தைவான், மலேசிய ஆகிய நாடுகளிலும் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா: சீனாவிலிருந்தும் மற்ற நான்கு ஆசிய நாடுகளில் இருந்தும் வருகின்ற பயணிகளுக்கு, இந்தியா வருவதற்கு முன்பாக கோவிட் பரிசோதனையில் நெகடிவ் என்ற முடிவு கிடைத்திருக்க வேண்டும். பயணிகளுக்கு கோவிட் பாசிடிவ் என்று முடிவு வந்திருந்தால், அவர்கள் ஏழு நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள்.
ஜப்பான்: வெள்ளிக்கிழமை முதல், சீனாவிலிருந்து வரும் பயணிகள் ஜப்பான் வந்தவுடன் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் பாசிடிவ் என்று வந்தால், ஏழு நாட்கள் வரை தனிமைபடுத்தப்பட வேண்டும். சீனாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து ஜப்பான் வரும் விமானங்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும்.
தைவான்: சீனாவிலிருந்து விமானங்களிலும், இரண்டு தீவுகளுக்குப் படகுகளிலும் வரும் மக்கள், ஜனவரி 1 முதல் 31 வரை கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தைவான் கூறுகிறது. பாசிடிவ் என்று பரிசோதனை முடிவு வந்தால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
மலேசியாவில், இந்தக் கட்டுப்பாடுகளோடு சேர்த்து, கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயண விதிமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் கூறினார். அதேவேளையில், ஆஸ்திரேலியா சீனாவிலும் உலகமெங்கிலும் உள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடு செல்ல விரும்பும் சீன குடிமக்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஜனவரி 8-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என குடியேற்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கடைபிடிக்கப்பட்ட கடுமையான தனிமைப்படுத்துதல் முறைகள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கைவிடப்படுவதாக கடந்த திங்களன்று வெளியான அறிவிப்புக்கு பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, டிக்கெட்களை முன்பதிவு செய்யும் தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. எனினும், சீன சுற்றுலா பயணிகள் நாங்கள் நினைத்த நாடுகளுக்கெல்லாம் செல்ல முடியாத நிலை உள்ளது.
சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் மற்றும் அதுதொடர்பாக அந்நாட்டு அரசிடம் வெளிப்படை தன்மை இல்லாதது ஆகியவற்றை கருத்தில்கொண்டு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
“சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் வைரஸ் மரபணு வரிசை தரவு உட்பட வெளிப்படையான தரவு இல்லாமை ஆகியவை சர்வதேச சமூகத்திடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இந்தத் தரவு இல்லாமல், பொது சுகாதார அதிகாரிகளால் சாத்தியமான புதிய திரிபுகளை அடையாளம் காணவும், பரவலைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்துவது கடினமாகி வருகிறது ” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன.
சீனா மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் நாடான ஜப்பான், சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை தங்கள் வருகையின்போது காட்ட வேண்டும் அல்லது 7 நாட்கள் தனிமைப்படுத்தபடுதலை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
சீனா மற்றும் சில பிற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்தியாவும் அறிவித்துள்ளது. புதிய தொற்று அலையுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் கடைசி பகுதியான சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகளிலும் சீனா தளர்வை அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கொரோனா கொள்கைகளுக்கு எதிரான மனக்கசப்பு , அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக அரிய பொது எதிர்ப்புகளைத் தூண்டியது, மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்த இது வழிவகுத்தது. ஆனால், அதனை தொடர்ந்து கொரோனா பரவல் மேலும் அதிகரித்தது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பிவழிவதோடு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK
கொரோனாவை ஏ பிரிவு தொற்று நோய்களில் இருந்து பி பிரிவு தொற்று நோய்களுக்கு தரம் குறைப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையமும் செவ்வாயன்று அறிவித்துள்ளது.
பயண விதிகள் தளர்த்தப்படுவதற்கு முன்பு, வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருக்க மக்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். சந்தைப்படுத்தல் தீர்வுகள் நிறுவனமான டிராகன் டிரெயில் இன்டர்நேஷனல் படி, வெளிச்செல்லும் குழு மற்றும் பேக்கேஜ் பயணத்தின் விற்பனை தடைசெய்யப்பட்டது.
ஆனால், சீனாவின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட அரை மணி நேரத்திற்குள், புகழ்பெற்ற சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கான தேடல் 10 மடங்கு அதிகரித்ததாக பயண தளமான Trip.com இன் தரவுகளை சீன ஊடகங்கள் மேற்கொள் காட்டுகின்றன.
மக்காவ், ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து மற்றும் தென் கொரினா ஆகியவை சீன மக்களால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலா தளங்களாக உள்ளன.
மேலும், அறிவிப்பு வெளியான 15 நிமிடங்களுக்குள் சீன பயண நிறுவனமான குனார் இணையதள பக்கத்தில் விமானம் தொடர்பான கோரிக்கைகள் 7 மடங்கு அதிகரித்ததாக தி சீனா டெய்லி குறிப்பிட்டுள்ளது.
தொற்றுநோய்க்கு முன்னர், 2019-இல் சீனாவிலிருந்து வெளிச்செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 155 மில்லியனாக இருந்தது என்று ஸ்டேடிஸ்டா தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020ல் 20 மில்லியனாக குறைந்துள்ளது.
மக்களின் மனநிலை எப்படி உள்ளது?
இந்த ஆண்டு, ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் சீனப் புத்தாண்டின் போது, சீனாவில் உள்ள சிலர், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களைச் சந்திக்க விரும்புவார்கள். ஆனால், அரசின் அறிவிப்பால் சீனாவுக்குள் கலவையான எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளது. “இந்த அறிவிப்பால் நான் மகிழ்ச்சியாகவும் பேச்சற்றும் இருக்கிறேன்.
இதைதான்(எல்லைகளை திறப்பது) செய்யப்போகிறோம் என்றால், இந்த ஆண்டு தினசரி கொரோனா சோதனைகள் மற்றும் லாக்டவுன்கள் அனைத்தையும் நான் ஏன் அனுபவிக்க வேண்டியிருந்தது?"” ஷாங்காயில் வசிக்கும் ரேச்சல் லியு கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் மூன்று மாத முழு ஊரடங்கை தாங்கியதாக அவர் கூறினார் - ஆனால் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் சமீபத்திய வாரங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
ஜைய்ன், ஷாங்காக் மற்றும் ஹன்ஷோ என வெவ்வெறு நகரங்களில் வசிக்கும் தனது பெற்றோர், தாத்தா-பாட்டி, இணையர் ஆகியோர் கடந்த வாரம் காய்ச்சலை எதிர்கொண்டனர் என்று ரேச்சல் லியு தெரிவிக்கிறார்.
கொரோனா அதிகரித்துவரும் சூழலில் எல்லைகளை திறந்துவிடுவதற்கு ஆன்லைனில் பலரும் தங்கள் கவலைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
“இந்த அலை கடந்துசொல்லும் வரை நாம் ஏன் காத்திருக்கக் கூடாது? மருத்துவ பணியாளர்கள் ஏற்கனவே களைத்துபோய் உள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு தொற்றுகளை முதியவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது ” என்று வெய்போவில் அதிகம் விரும்பப்பட்ட பின்னோட்டம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களில் குளிர்காலத்தில் குளிர்ச்சியான வெப்பநிலையை அனுபவிக்கும் மக்கள், தங்களிடம் காய்ச்சல் மற்றும் சளி மருந்துகள் தீர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள். மயானங்கள் நிரம்பிவழிவதால் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகாமல் போகலாம் என்று அஞ்சப்படுகிறது.
பெய்ஜிங்கில் தொற்றின் தீவிரத்தன்மையை குறைப்பதற்காக ஃபைசர் மாத்திரைகள், பாக்ஸ்லோவிட் ஆகியவற்றை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தி குளோபல் டைம்ஸ் ஊடகம் திங்களன்று சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு கேட்டப்போது மருத்துங்கள் இன்னும் விநியோகிப்படவில்லை என்று தெரிவித்தன.
திங்களன்று, அதிபர் ஷி மாற்றங்கள் குறித்த தனது முதல் கருத்துக்களை வெளியிட்டார், உயிர்களைக் காப்பாற்ற "சாத்தியமான"தைச் செய்ய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
சீனாவின் இந்த திடீர் திருப்பம் அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பூஜ்ஜிய கோவிட் கொள்கைக்கு பின்னால் அவர் உந்து சக்தியாக இருந்தார். எனினும் இந்த கொள்கை மக்களின் வாழ்க்கையை அதிகமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை முடக்கியதாக பலர் குற்றம் சாட்டினர்.
ஆனால் அந்த கொள்கையை கைவிட்டதால், தற்போது ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொற்றை எதிர்கொள்ள நாடு ஏன் சிறப்பாக தயாராகவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












