சுனிதா வில்லியம்ஸ்: மீட்புக் குழுவின் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன?

பட மூலாதாரம், NASA
இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 13 அன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்து வர, விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவை அனுப்ப நாசா முடிவு செய்தது.
ஆனால் அந்தக் குழுவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கான முயற்சி 45 நிமிடங்களுக்கு முன்பாக கைவிடப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏவுதள அமைப்பின் ஹைட்ராலிக் கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்படுமெனில் நாசாவும் ஸ்பேஸ்எக்ஸும் இந்த குழுவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெள்ளிக்கிழமை அனுப்ப முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுனிதா வில்லியம்ஸ் எப்போது, எவ்வாறு பூமிக்குத் திரும்புவார்? நாசா புதிய அறிவிப்பு
- சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே செய்தியாளர் சந்திப்பு - கேள்விகளும் பதில்களும்
- விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா?
- சுனிதா வில்லியம்ஸ்: 270 நாட்களுக்கு மேலாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருப்பது ஏன்?

தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாகத் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், பேரி புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்புவது மேலும் இரண்டு நாட்கள் தாமதமாகியுள்ளது.
விண்வெளியில் உள்ள இருவரையும் திரும்பி அழைத்து வருவதற்காக அனுப்பத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகலனில் பயணிக்க க்ரூ-10 குழுவைச் சேர்ந்த தளபதி ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் கென்னடி மையத்தில், ஏவுதளம் 'பேட்-39'இல் தயார் நிலையில் இருந்தனர்.
'கவுன்ட்-டவுன்' ஆரம்பிக்கப்பட்டு, ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் ஃபால்கன் 9 ராக்கெட்டை ஏவுதளத்தில் இருந்து ஏவ உதவும் இரண்டு பக்க ஹைட்ராலிக் கரங்களில் (clamp arms) சோதனை நடத்தினார்கள். மொத்த ஏவுகலனும் சரியான நிலையில் இயங்கிக் கொண்டிருந்தபோதும், இந்தக் கரங்கள் சரியான நேரத்தில் ராக்கெட்டை விண்ணில் ஏவும் வகையில் ராக்கெட்டை விடுவிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பலமான காற்று வீசுமென்ற காரணத்தால் மார்ச் 13 அன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவது தொடர்பாக சந்தேகம் நிலவியது. இந்தச் சூழல், பொறியாளர்களுக்கு தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யத் தேவையான கால அவகாசத்தை வழங்கியுள்ளது. ஹைட்ராலிக் கோளாறு உடனடியாக சரி செய்யப்படுமெனில் வெள்ளிக்கிழமை மாலை 7.03 மணி அளவில் மீண்டும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Reuters
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், மார்ச் 19 அல்லது 20ஆம் தேதியன்று பூமிக்குத் திரும்பலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 9 மாதங்களுக்கும் மேலாகத் தங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 அன்று விண்வெளிக்குச் சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்குத் திரும்பி வர வேண்டியது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியபோது பல பிரச்னைகளைச் சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவது தாமதமானது.
இந்த ராக்கெட் சரியான நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டால், நிக் ஹாக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ், புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் மார்ச் 19ஆம் தேதியன்று தங்கள் பயணத்தை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தொடங்குவார்கள். அவர்கள் மார்ச் 20 அல்லது 21 அன்று பூமிக்குத் திரும்புவார்கள்.
சுனிதாவும் வில்மோரும் அப்போது 288 நாட்கள் விண்வெளியில் தங்களின் காலத்தைக் கழித்தவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் ஹாக்கும், கோர்புனோவும் 173 நாட்கள் விண்வெளியில் தங்கியவர்களாக இருப்பார்கள்.
தனி விண்கலன் ஒன்றில் நீண்ட நாட்கள் விண்ணில் தங்கியிருந்த விண்வெளி வீரர், ஃப்ராங்க் ரூபியோ. அவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் 371 நாட்கள் தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. அவர் சென்ற சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓர் ஆண்டுக்கும் மேலாக அவர் விண்வெளியிலேயே இருக்க நேரிட்டது. பிறகு மற்றொரு சோயுஸ் விண்கலன் மூலமாக அவர் வீடு திரும்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












