சுனிதா வில்லியம்ஸ் எப்போது, எவ்வாறு பூமிக்குத் திரும்புவார்? நாசா புதிய அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் பூமிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 அன்று விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டியது.
ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிய போது பல பிரச்னைகளை சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது.
இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவது தாமதமானது.
- சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே செய்தியாளர் சந்திப்பு - கேள்விகளும் பதில்களும்
- விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா?
- சுனிதா வில்லியம்ஸ்: 270 நாட்களுக்கு மேலாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருப்பது ஏன்?
- சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?

இந்த கால தாமதம் ஏன்?
61 வயதான வில்மோர், 58 வயதான சுனிதா இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் இதுவாகும்.
வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதை கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது அமைந்தது.
ஆனால், இதனை பயன்படுத்தும் போது சில பிரச்னைகள் இதில் ஏற்பட்டன. விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் பிரச்னை ஏற்பட்டது. சில த்ரஸ்டர்களும் செயலிழந்தன.
இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈலோன் மஸ்கிடம் கொடுத்துள்ளார். நாசா வெளியிட்ட அறிவிப்பின் படி அவர்கள் மார்ச் 19 அல்லது 20 தேதியில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள்.
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9-ன் உறுப்பினர்கள் விண்வெளியில் இருந்து புறப்படும் முன் செய்தியாளர் சந்திப்பின் மூலம் அனைவரிடமும் பேசினர்.
மார்ச் 4 அன்று நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹாட்ஜ், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் விண்வெளியில் இருந்த வண்ணமே செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
சுனிதா வில்லியம்ஸ் சாதனை
சுனிதா வில்லியம்ஸ் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஆனால் இது சுனிதாவின் முதல் வரலாற்று சாதனை அல்ல. 2006-07 ஆண்டில் தனது முதல் விண்வெளி பயணத்தின் போது, அவர் 29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார்.
இதுவே இதுவரை ஒரு பெண் பதிவு செய்த மிக நீண்ட விண்வெளி நடையாகும். மேலே குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அவர் நான்கு முறை விண்வெளியில் நடந்துள்ளார்.
முன்னதாக இந்த சாதனையை விண்வெளி வீராங்கனை கேத்தரின் வசமிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 21 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளி நடையை மேற்கொண்டு சாதனை புரிந்திருந்தார்.
இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்ற கடற்படை ஹெலிகாப்டர் விமானி, வில்மோர் போர் விமானத்தை இயக்கிய முன்னாள் விமானி. வில்மோர் இதற்கு முன்பு இரண்டு முறை விண்வெளிப் பயணம் செய்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?
சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.
1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி.
சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.
படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
சுனிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
2013-ஆம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றும் போது, சுனிதா விண்வெளிக்கு சமோசாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தார். இதனுடன், உபநிடதங்கள் மற்றும் கீதையையும் படிக்க எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.
இந்திய உணவைப் புகழ்ந்து பேசிய அவர், இந்திய உணவுகளைப் பார்த்து யாருக்கும் சலிப்பே ஏற்படாது என்றார்.
அமெரிக்க அரசாங்கத்தின் தரநிலைப்படியே நாசாவிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் விண்வெளி வீரர்களுக்கான (civilian astronauts) GS-13 மற்றும் GS-15 தர ஊதியமும் அடங்கும்.
அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் GS-01 முதல் GS-15 வரையிலான தர ஊதியத்தின்படி சம்பளம் வழங்கப்படுகிறது. GS-15 தர ஊதியம் என்பது இங்கு மிக அதிகமான சம்பளத்தை குறிக்கிறது.
இந்த தரநிலைப்படியே சுனிதாவும் சம்பளம் பெறுகிறார்.
GS-13: இந்த பிரிவில் ஆண்டுக்கு $81,216 முதல் $105,579 வரை (தோராயமாக ரூ. 70 லட்சம் முதல் 92 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
GS-14: இந்த பிரிவில் ஆண்டுக்கு $95,973 முதல் $124,764 வரை (தோராயமாக ரூ.83 லட்சம் முதல் ஒரு கோடியே 8 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
GS-15: இந்த பிரிவில் ஆண்டுக்கு $112,890 முதல் $146,757 வரை (தோராயமாக ரூ.98 லட்சம் முதல் ஒரு கோடியே 27 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சுனிதா வில்லியம்ஸ் எவ்வாறு பூமிக்கு திரும்புவார்?
விண்வெளியில் தற்போது தங்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவர அனைத்துவிதமான வாய்ப்புகளையும் ஆலோசித்து வருகிறது நாசா.
நாசாவின் கமர்சியல் க்ரூ திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச், சில நாட்களுக்கு முன்பு, "சுனிதாவையும், வில்மோரையும் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக அழைத்து வர வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு. ஆனால் நாங்கள் இதர சாத்தியங்களையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
ஸ்டார்லைனரை பயன்படுத்தி அவர்களை பூமிக்கு அழைத்துவர இயலவில்லை என்றால், மாற்றுத் திட்டங்கள் மூலம் அவர்களை இங்கே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
அவர்கள் இருவரையும் ஒன்றாக பூமிக்கு அழைத்து வருவதற்கான சாத்தியங்கள் குறித்து தெரிவித்தார் அவர்.
தற்போது விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கும் விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் என்பதாகும். ஆரம்பத்தில் இதில் நான்கு பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தேவைக்கு ஏற்றபடி இரண்டு இருக்கைகளை காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாக தீர்க்கமான முடிவை நாசா இன்னும் எடுக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
போயிங்கிற்கு பின்னடைவாக இருக்கலாம்
விண்வெளி வீரர்களை திரும்பி அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தை பயன்படுத்துவது போயிங்கிற்கு பின்னடைவாக இருக்கலாம்.
ஸ்டார்லைனர் விண்கலம் போயிங்கால் உருவாக்கப்பட்டது. மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்ல உருவாக்கப்பட்ட போயிங்கின் முதல் விண்கலம் இதுவாகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இதுவரை 9 முறை மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளது.
போயிங் நிறுவனம் ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப முற்பட்டது. மென்பொருள் கோளாறு காரணமாக எஞ்ஜினில் பிரச்னை ஏற்பட அது விண்வெளி மையத்தை சென்று சேரவில்லை.
2022-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முயற்சியை போயிங் நிறுவனம் மேற்கொண்டது. அப்போதும் த்ரஸ்டர்களில் பிரச்னை ஏற்பட்டது. விண்கலத்தின் குளிரூட்டும் அமைப்பிலும் பிரச்னைகள் ஏற்பட்டன.

பட மூலாதாரம், NASA
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ ட்ராகன் என்றால் என்ன?
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ ட்ராகன் என்பது ஒரு விண்கலமாகும். எலோன் மாஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இது நாசா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விண்கலமாகும். அமெரிக்க அரசாங்கம் விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்கான விண்கலங்களை உருவாக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்தது. இதற்கு முன்பு வரை, அமெரிக்கா ரஷ்யாவின் உதவியையே நாடியிருந்தது.
க்ரூ டிராகன் விண்கலத்தில் மொத்தம் 16 ட்ராக்கோ த்ரஸ்டர்கள் உள்ளன. இது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 7 விண்வெளி வீரர்கள் இதில் பயணிக்க இயலும். இதனை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்த இயலும்.
விண்வெளியில் இருந்து திரும்பும் போது, இந்த விண்கலம் ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 25 மடங்கு வேகமாக பயணிக்கும்.
விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு ஏதேனும் பிரச்னை என்றால் அதில் இருக்கும் வீரர்கள் தப்பித்துக் கொள்ள தானியங்கி அமைப்பு உள்ளது. இது டிராகன் க்ரூவை ராக்கெட்டில் இருந்து தனியே பிரித்தெடுக்கிறது.
பாராசூட்டுகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவார்கள். விண்கலத்தின் கணினி மற்றும் த்ரஸ்டர்கள் தோல்வி அடைந்துவிட்டாலும் ஆராய்ச்சிக் குழுவினர் பத்திரமாக திரும்ப இயலும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்களுக்கு உணவு வழங்கப்படுவது எப்படி?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாள் முழுவதும் பணியாற்றிய பிறகு இரவு உணவுக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு உணவுகள் 'பாக்கெட்டில்' கட்டி வைக்கப்படும். ஒவ்வொரு நாட்டினரின் உணவு பழக்கத்திற்கு ஏற்ற வகையில் அவை பிரித்து வைக்கப்பட்டிருக்கும்.
"இது ராணுவ உணவு அல்லது முகாம்களில் வழங்கப்படும் உணவு போன்று இருக்கும். நன்றாக இருக்கும். ஆரோக்கியமானதும் கூட. எனக்கு மிகவும் பிடித்த உணவு என்பது ஜப்பானிய கறியும், ரஷ்ய சூப்பும் தான்," என்று முன்னாள் விண்வெளி வீரர் நிக்கோல் ஸ்டோட் தெரிவித்தார்.
விண்வெளி வீரர்களின் வீட்டினரும் அவர்களுக்கு தேவையான உணவை பூமியில் இருந்து அனுப்ப முடியும். ஸ்டோட்டின் கணவரும் மகனும் சேர்ந்து அவருக்கு சாக்லேட்டால் பூசப்பட்ட ஜிஞ்சர் பிரெட்டுகளை அனுப்பி வைத்திருக்கின்றனர். விண்வெளி மையத்தில் உணவை அனைவரும் பங்கிட்டு உண்பார்கள்.
சுனிதா வில்லியம்ஸ் அவருடைய முதல் விண்வெளி பயணத்தின் போது சமோசாக்களை எடுத்துச் சென்றுள்ளார். 2024-ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்கு ரஷ்யாவின் ஆளில்லா சரக்கு விண்கலத்தின் மூலமாக 3 டன் எடையுள்ள உணவு, எரிபொருள் மற்றும் இதர தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












