சுனிதா வில்லியம்ஸ்: 270 நாட்களுக்கு மேலாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருப்பது ஏன்?
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நாசா குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று 9 மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன.
வெறும் 8 நாட்கள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி நிலையத்துக்கு சென்ற அந்த குழுவினர் இத்தனை நாட்கள் அங்கேயே தங்கக்கூடும் என்று நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது அவர்கள் பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
270 நாட்களுக்கு மேலாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருப்பது ஏன்? அவர்கள் பூமி திரும்பபோவது எப்போது?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜுன் 5ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகில் சென்றபோது அதில் சிக்கல்கள் ஏற்பட்டன. விண்கலத்திற்கு உந்துசக்தியை வழங்கக்கூடிய ஐந்து உந்துகலன்கள் வேலை செய்யாமல் போனது.
இதையடுத்து, இந்த விண்கலம் ஆளில்லாமல் பூமி திரும்பியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்துவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை பலனளிக்கவில்லை.
இந்நிலையில், இரு விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார்.
வீடு திரும்ப விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த புட்ச் வில்மோர், ' குறுகிய காலத்திற்கு மட்டுமே பயணம் திட்டமிடப்பட்டு இருந்தாலும், நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகவே வந்ததாக குறிப்பிட்டார்.
மேலும் மனித விண்வெளி பயணம் "எதிர்பாராத சூழ்நிலைகளுக்கான திட்டமிடலை அடிப்படையாக கொண்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
சுனியா வில்லியம்ஸ் பேசும்போது, கீழே உள்ள குடும்பங்களுக்கு இது ஒரு "ரோலர்கோஸ்டர்" அனுபவமாக இருந்ததாகவும், ஏனெனில் தாங்கள் எப்போது திரும்பி வருவோம் என்பது அவர்களுக்கு தெரியாது, இதுதான் கடினமான பகுதி என்றும் கூறினார்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வயதாகிவிட்டதாகத் தெரிகிறது என்று ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதன் நிலை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
"விண்வெளி நிலையத்தில் எவ்வளவு அறிவியல் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்" என்று கூறினார் சுனிதா வில்லியம்ஸ்.
தான் விண்வெளியை அதிகம் மிஸ் செய்வேன் என்றும் சுனிதா குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



