'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இயர்போன், ஹெட்போன்,

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா?

'அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை.

பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது.

'இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது' என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

இயர்போன் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் என்ன? ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'செவித்திறன் பாதுகாப்பு' வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், கடந்த வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) அன்று 'செவித்திறன் பாதுகாப்பு' என்ற தலைப்பில் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தார்.

அதில், இயர்போன் மற்றும் ஹெட்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை எனப்படும் முக்கிய பிரச்னை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஒலி சாதனங்களைப் பயன்படுத்தி நீண்டநேரம் மற்றும் அதிக அளவில் இசை மற்றும் பிற ஒலிகளைக் கேட்பதன் மூலம் திரும்பப் பெற முடியாத செவித்திறன் இழப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இயர்போன், ஹெட்போன் மற்றும் இயர்பிளக் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகு தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.

'நீண்ட காலம் பாதுகாப்பற்ற ஒலி சாதனங்களைப் பயன்படுத்துவதால் செவித்திறனில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டு காது கேளாமை ஏற்படும். சிலருக்கு நிரந்தர காது இரைச்சல் ஏற்படும்' என்கிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை.

செல்வ விநாயகம்

பட மூலாதாரம், FB

படக்குறிப்பு, செல்வ விநாயகம்

பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமானவை சில கீழே தரப்பட்டுள்ளன.

* தினமும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் பயன்பாட்டை 2 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* ஒலி சாதனங்களை பயன்படுத்துவதில் இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சாதாரண அளவில் ஒலி இருந்தாலும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் ஆகியவற்றின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இது செவியின் கேட்கும் திறனைக் குறைத்து நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

* தேவை ஏற்பட்டால் இயர்போன், ஹெட்போன் போன்ற தனிப்பட்ட ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேல் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.

*பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி அளவு 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* குழந்தைகள் இணையத்தில் விளையாடும் (online game) விளையாட்டின் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு ஆட்படுவதை தவிர்க்க முடியும்.

இயர்போன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

"தூரமாக அமர்ந்து கேட்பது பிரச்னை அல்ல"

"தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூரமாக அமர்ந்து பாடல்களைக் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றால் காதில் பாதிப்புகள் வராது." எனக் கூறுகிறார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறையின் இணைப் பேராசிரியர் இளஞ்செழியன்.

டி.ஜே போன்ற இசைக் கச்சேரி நிகழ்வுகள், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றில் அதிக ஒலிகளைக் கேட்கும் போது காதில் அதிக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

"உதாரணமாக, மழைத்துளி ஓரிடத்தில் விழுந்து கொண்டே இருந்தால் அந்த இடத்தில் குழி போன்ற பாதிப்பு ஏற்படுவதைப் போலவே காதுக்குள் தொடர்ந்து அதிக ஒலிகளைக் கேட்கும் போது பாதிப்பு ஏற்படும்" என்கிறார் அவர்.

இதை இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு (noise induced hearing loss) என்று மருத்துவர்கள் குறிப்பிடுவதாகக் கூறும் இளஞ்செழியன், "இதனை மருந்து, மாத்திரைகள் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. அதாவது பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்ய முடியாது" என்கிறார்.

 பாடல்

பட மூலாதாரம், Getty Images

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

இதுதொடர்பாக, பிஎம்ஜே பப்ளிக் ஹெல்த் (BMJ Public Health) என்ற சர்வதேச மருத்துவ இதழ், கடந்த ஆண்டு விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடுகிறவர்களின் செவித்திறனில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. பாதுகாப்பற்ற ஒலி அளவுகள் காரணமாக இவை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான ஒலி அளவுகளைத் தாண்டி நீண்டநேரம் அதிக சத்தத்துடன் விளையாடும் போது காது கேளாமை, காது இரைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

சுமார் 50,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இவை தெரியவந்துள்ளதாக பிஎம்ஜே மருத்துவ இதழ் கூறியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டால் என்ன ஆபத்து?

"ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் நபர்கள், அதிக ஒலியை அடிக்கடி கேட்பதால் செவித்திறன் குறையும் நிலைக்கு உள்ளாவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம்.

"ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிக சத்தத்துடன் ஆடுவது தான் உற்சாகத்தைக் கொடுக்கிறது. இதற்காக ஹெட்போன் பயன்படுத்துகின்றனர். இது வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது" எனக் கூறுகிறார் மருத்துவர் இளஞ்செழியன்,

"ஆன்லைன் விளையாட்டில் அதிக ஒலியைக் கேட்டு விளையாடும் மாணவர்களுக்கு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கேட்பதில் சிரமம் ஏற்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இயர்போன் பயனாளர்களுக்கு கூறுவதைப் போலவே ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்

இதை உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஒலிகளின் அளவு அதிகமாகவும் அதைக் கேட்கும் நேரம் அதிகமாகவும் இருந்தால் செவித்திறன் குறையும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது.

80 டெசிபல் ஒலி அளவில் வாரத்துக்கு 40 மணிநேரம் வரையில் பாதுகாப்பாக கேட்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஒலி சாதனக் கருவியில் ஒலியின் அளவை (Volume) 60 சதவீதம் வரை வைக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதுதொடர்பாக சில ஆலோசனைகளையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

  • சத்தம் அதிகம் உள்ள இடங்களில் இயர்பிளக்குகளை (earplugs) பயன்படுத்தலாம்.
  • ஒலிபெருக்கிகள் மற்றும் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் இயந்திரங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும்.
  • அதிக ஒலிகளில் இருந்து காதுகளுக்கு அவ்வப்போது இடைவெளிகளைக் கொடுப்பதன் மூலம் காதுகளில் உள்ள உணர்வு செல்களை (sensory cells) மீட்டெடுக்க முடியும்.

காதுகளில் இரைச்சலோ அதிக ஒலிகளைக் கேட்பதில் சிரமமோ இருந்தால் மருத்துவ நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் குறித்து பிபிசியிடம் பேசிய மருத்துவர் இளஞ்செழியன், "டி.ஜே போன்ற பார்ட்டி நிகழ்வுகளில் 130 டெசிபல் அளவுக்கு சத்தம் கேட்கும். அப்போது ஸ்பீக்கர் அருகில் அமர்ந்தால் காது ஜவ்வு கிழிந்துவிடும். திருவிழாவில் பட்டாசு வெடிக்கும் போதும் இதே பாதிப்பு ஏற்படும்" எனக் கூறுகிறார்.

செவித்திறன் பாதிப்பு - தீர்வு என்ன?

"தொடர்ச்சியாக சத்தத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கும் போது காதில் பூச்சி கத்துவதைப் போன்ற இரைச்சல் ஏற்படும். இது முதற்கட்ட அறிகுறி. காதில் எங்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதனையின் மூலம் அறியலாம்" எனக் கூறுகிறார் மருத்துவர் இளஞ்செழியன்.

இதையே செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம், "காது கேட்கும் திறன் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டு செவித்திறன் இழப்பை தவிர்க்க முடியும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் விவரித்துள்ள அவர், "காதுகேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது. உதவி கருவிகள் மூலம் கேட்கும் திறனை மீண்டும் பெற முடியாது" எனக் கூறியுள்ளார்.

மேலும் சிறு வயதிலிருந்தே நிரந்தர காது இரைச்சல் தொடர்ந்தால் மன அழுத்தம் உட்பட மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் எனவும் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

"காதில் இரைச்சல் ஏற்பட்ட பிறகாவது கூடுதல் சத்தத்தைக் கேட்பதைக் குறைத்துக் கொண்டால் செவித்திறன் பாதிப்பை ஓரளவுக்கு சரிசெய்ய முடியும்" எனக் கூறுகிறார் மருத்துவர் இளஞ்செழியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)