முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர்; சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி

Stalin

பட மூலாதாரம், MK STALIN

இந்தியாவில், மாநில ஆளுநர் என்பவர் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதற்கு தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே உதாரணம் என்றும் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தது இந்திய அளவில் பேசப்படுகிறது என்றும், முதல்வர் சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரை சர்ச்சையாக உருவெடுத்தது. சட்டமன்ற கூட்டத்தில், அரசு அளித்த உரையில் இடம்பெறாத 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை ஆளுநர் ரவி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. உரையில் இருந்த பல வரிகளை விடுத்து, அவராகவே பல வரிகளைச் சேர்த்துப் படித்ததாகவும் கூறப்பட்டது.

அரசாங்கத்தின் வரைவை ஏற்று ஒப்புதல் அளித்துவிட்டு, ஆளுநர் உரையின்போது, அதற்கு மாறாக ஆளுநர் நடந்துகொண்டது சட்டமன்ற மரபுகளுக்கு எதிரான செயல் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழலை முதல்வர் சரியாக கையாண்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு இன்று தெரிவித்தார்.

''ஆளுநர் உரையில் பல குளறுபடிகள் இருந்தன. உரையை வசிப்பது மட்டும்தான் ஆளுநரின் கடமை. உரையில் உள்ள வரிகளுக்கு அரசுதான் பொறுப்பு. ஆனால் ஆளுநர் உரையை மாற்றிப் படித்ததால், அவையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அப்போது முதல்வர் மதிநுட்பத்துடன் செயல்பட்டார். அவையில் இருப்பவர்களை அமைதிபடுத்தினார். விதி எண் 17 ஐ தளர்த்தி ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதை பதிவு செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரி சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாத்தார். அவருக்கு நன்றி. பிற மாநிலங்களுக்கு ஓர் முன்மாதிரியான சட்டமன்றமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பிற மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் செயல்பட்ட முதல்வரின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது,'' என்று அப்பாவு தெரிவித்தார்.

மேலும், ஆளுநரின் உரை தொடர்பான தீர்மானம் இந்திய அளவில் பேசப்பட்டது என்றும் ஆளுநரின் உரிமை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் அமைந்தது என்றும் அப்பாவு தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் உரை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டன.

“முதல்வர் பேசியதற்கு அனுமதி அளித்தது தவறு”

ஆளுநர் உரை தொடர்பாகப் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி, ஆளுநர் உரைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதை அனுமதித்திருக்கக்கூடாது என்று தெரிவித்தார். ஆளுநர் சபையில் இருக்கும்போது சபாநாயகருக்குக் கூட எந்த அதிகாரமும் இல்லை என்றும் முதல்வருக்கு பேசுவதற்கு அனுமதி அளித்திருக்கக்கூடாது என்றும் முனுசாமி தெரிவித்தார். ஆனால் முதல்வர் பேசாமல், தீர்மானம் கொண்டுவராமல் இருந்திருந்தால், ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம்பெற்று, தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் என்றார் சபாநாயகர் அப்பாவு.

இதற்கிடையில் ஆளுநர் உரையின்போது, அவருடன் வந்திருந்த விருந்தினர் ஒருவர் சட்டமன்ற நடவடிக்கைகளை வீடியோ எடுத்தது உரிமை மீறலாக கருதவேண்டும் என்று திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

எடப்பாடி

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY

சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வாதம்

ஆளுநர் விவகாரத்தை தவிர, சட்டமன்றத்தில் இன்று சட்டஒழுங்கு குறித்தும் பேசப்பட்டது. தமிழ்நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்து எழுப்பட்டகேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்துவெளியேறினர். ஆனால் அவர்கள் மக்கள் பணியைக் கருத்தில் கொண்டு மீண்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தில், எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் சென்னையில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் பேசினார்.

அதற்குப் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதைக் காட்டும் பட்டியல் தன்னிடம் உள்ளது என்றார். அதனை அளிக்கவும் தயார் என்றார். அதனை அடுத்து சட்டமன்றத்திலிருந்து அதிமுகவினர் வெளியேறினர்.

 சட்டமன்றத்திலிருந்து வெளியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி, ஊடகத்தினரிடம் பேசுகையில்,

''தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்றபோது, மற்ற பெண்களுக்கு எப்படி திமுக பாதுகாப்பு கொடுக்கும். நாங்கள் தினமும் செய்தித்தாள்களில் வரும் பதிவுகளை வைத்துத்தான் பேசுகிறோம். தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்துவருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது. இந்த விவகாரங்களைப் பேசினால் சரியான பதிலை தரவில்லை என்பதால் வெளியேறுகிறோம்,'' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: