ஆளுநர் மீது புகாரா - திமுகவின் அடுத்த நகர்வு என்ன?

தமிழ்நாடு ஆளுநர்

பட மூலாதாரம், TN DIPR

    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அரசியல் களத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய சம்பவம் தான் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி விட்டார் என ஒரு தரப்பும், ஆளுநரை வைத்து கொண்டு மரபுகளை மீறி முதலமைச்சர் பேசியது தவறு என மற்றொரு தரப்பும் வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுகவின் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணலின் போது, ஆளுநர் - மாநில அரசு இடையே நிலவும் மோதல் போக்கு குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கேள்வி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் - மாநில அரசு இடையே ஏற்பட்ட முரண்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழ்நாடு ஆளுநர்

பட மூலாதாரம், Facebook/S.S.Palanimanickam

படக்குறிப்பு, பழனிமாணிக்கம், திமுக எம்.பி.

பதில்: தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகரீகமாக நடந்து கொள்ள தவறிவிட்டார். அவரின் சொந்த கருத்துக்களை வெளிப்படையாக பேசுகிறார். இது பல நேரங்களில் மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்து விடுகிறது.

அது போல தான் நேற்றும் நடந்தது. ஆளுநர் உரை என்பது, மாநில அரசின் கொள்கை குறிப்பு. இதில் இடம்பெறும் அம்சங்களில் ஆளுநருக்கு மாற்றுக்கருத்து இருந்தால், அதை பேசி களைந்த பின்னர் தான் ஆளுநர் உரையின் இறுதி வடிவம் உருவாக்கப்படும். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநர் இப்படி செய்யாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசின் கொள்கை விளக்க குறிப்பை, தனது அரசியல் சார்புக்கு ஏற்ப மாற்றி பேசியது தவறு. இது ஆளுநர் பதவியில் இருப்பவர்களுக்கு மாண்பல்ல.

அரசின் கொள்கை குறிப்பில் மாற்றுக்கருத்து இருந்தால் அது குறித்து சட்டமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகள் இருக்கும் போது, ஆளுநர் உரையின் பகுதிகளை தவிர்த்து இருக்க தேவையில்லை.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டு இருந்ததை ஏன் ஆளுநர் பேச மறுத்தார்?

பதில்: இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் பல்வேறு தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வருகிறது. 

தொழில் வளர்ச்சியின் வெளிப்பாடாக தான் வெளிமாநில தொழிலாளர்கள், பிழைப்புக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். முன்பு தனியாக வந்து வேலை செய்த பல வெளிமாநில தொழிலாளர்கள், இப்போது குடும்பத்துடன் வந்து இங்கு வாழ்கின்றனர்.

தஞ்சாவூர் பகுதியில் கூட மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ள வெளி மாநில தொழிலாளர்கள் பலர் விவசாயக் கூலிகளாக குடும்பத்துடன் தங்கி வேலை செய்கின்றனர். அவர்களின் குழந்தைகள் இங்குள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.

சட்டம் - ஒழுங்கு நிர்வாகம் சிறப்பாக இருப்பதால் தான் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வருகிறார்கள்.

ஆளுநர் - மாநில அரசு இடையே நீடிக்கும் முரண்பாடு தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாதிக்குமா?

தமிழ்நாடு ஆளுநர்

பட மூலாதாரம், TN DIPR

பதில்: நிச்சயமாக இல்லை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் ஆளுநருக்கும் நேரடி தொடர்பு ஏதும் இல்லை. ஆளுநர் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிற இந்திய மாநிலங்களை விட சிறப்பாக இருக்கும். ஆளுநருக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு, தமிழ்நாட்டின் முதலீடுகளிலும் தொழில் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால் இந்திய அரசியலமைப்பின் தலைவராக இருக்கும் ஆளுநரோடு மோதல் போக்கு நீடிக்கக் கூடாது. ஆளுநரும் முதலமைச்சரும் நேரில் சந்தித்து வேறுபாடுகளை களைய வேண்டும்.

சட்டப்பேரவையில் ஆளுநரும், முதலமைச்சரும் மரபுகளை மீறி விட்டதாக இரு தரப்பிலும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறதே?

ஆளுநர்

பட மூலாதாரம், TN DIPR

பதில்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், குடியரசுத் தலைவர் ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்கு முன்பு உரை நிகழ்த்துவது மரபு. இந்த உரையை மத்திய அரசின் அமைச்சகம் தான் இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்.

குடியரசுத் தலைவர் இந்த உரையை தான் நாடாளுமன்றத்தில் வாசிப்பார். இது இந்தியாவில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டும் மரபு.

இதே மரபு தான் தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைச்சரவை இறுதி செய்யும் உரையை தான் ஆளுநர் வாசிப்பார். இது தான் தமிழ்நாட்டின் மரபு.

தமிழ்நாட்டில் சட்டத்திற்கு இணையாக மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த மரபை மீறி அரசால் வழங்கப்பட்ட உரையை மாற்றி ஆளுநர் படித்ததால் தான், முதலமைச்சரும் மரபை மீறி அவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தார். 

ஆளுநர் கோவமாக வெளியேறும் போது கூட முதலமைச்சர் சிரித்த முகத்துடன் அமைதி காத்தார். 

ஆளுநர் - மாநில அரசுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு ஜனநாயகத்திற்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?

ஆளுநர்

பட மூலாதாரம், Twitter/rajbhavan_tn

பதில்: தமிழ்நாட்டின் ஜனநாயகம் என்பது பிற மாநிலங்களை விட மேம்பட்ட ஜனநாயகம். இங்குள்ள திராவிட கட்சிகளும், இடதுசாரி அமைப்புகளும் இந்த ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆளுநரின் தன்னிச்சையான செயல்பாடுகளால் ஜனநாயகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆளுநரும், முதல்வரும் இந்த விவகாரத்தில் சுமூக முடிவை எட்ட வேண்டும். மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருப்பது ஒன்றும் குடும்ப சண்டை அல்ல, அதனால் பேசினால் எல்லாம் சரியாகும்.

திமுக அரசு கொண்டு வந்த மாற்றங்களில் மிக முக்கியமானது 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது. ஆனால் இந்த பெயரை 'தமிழகம்' என மாற்ற வேண்டும் என்று ஆளுநர் பரித்துரைப்பது சரியா?

பதில்: கடந்த ஆண்டின் சித்திரை திருவிழா அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்‘ என்று ஆர்.என்.ரவி குறிப்பிட்டு இருந்தார். இந்த ஆண்டு அவரின் நிலைப்பாட்டை மாற்றி பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் ‘தமிழக ஆளுநர்‘ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது அவரின் முடிவு.

ஆனால் அவரது காரில் ‘தமிழ்நாடு ஆளுநர்‘ என எழுதி இருக்கும் இலச்சினையை அகற்றி விட்டு அவரால் வெளியில் செல்ல முடியுமா?

தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டுமா?

பதில்: ஆளுநரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு நினைக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ஆளுநரின் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்து இருக்கிறோம். தேவைப்பட்டால் மீண்டும் புகாரை அளிப்போம்.

காணொளிக் குறிப்பு, ஆளுநரை வைத்துக்கொண்டே திமுக தீர்மானம் கொண்டு வந்தது சரியா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: