வட கொரியா: பசி, பஞ்சம், பட்டினி, அடக்குமுறை - மக்கள் புரட்சிக்கு ஆயத்தமா? பிபிசி கண்டறிந்த உண்மைகள்

வடகொரியாவில் பஞ்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்
    • எழுதியவர், ஜீன் மெக்கன்சி
    • பதவி, பிபிசி செய்திகள்

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை இருப்பதாகவும், அண்டை வீடுகளில் வசிப்பவர்கள் பட்டினியால் வாடுவதாகவும் அந்நாட்டு பொது மக்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வட கொரிய மக்களுடன் பேசிய பிபிசியிடம், 1990களில் இருந்து இதுபோன்ற நிலைமை படிப்படியாக மிகவும் மோசமடைந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2020இல், கொரோனா காரணமாக வட கொரிய அரசு அந்நாட்டு எல்லைகளை மூடியதைத் தொடர்ந்து அவசரத் தேவைகளுக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் பொதுமக்கள் தவிக்கின்றனர். மேலும், பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருவதால் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பிபிசியிடம் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நாட்டு மக்களின் நலன்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டு அரசின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

வடகொரியாவில் வசிக்கும் பொதுமக்களில் மூன்று பேரிடம் பிபிசி ரகசியமாகப் பேசியது. வடகொரியாவில் நல்ல நெட்வொர்க்கை கொண்டுள்ள "டெய்லி என்கே" என்ற செய்தி நிறுவனத்தின் உதவியுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எல்லைகள் மூடப்பட்ட பின் பட்டினியில் தவித்து பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சாதாரண சட்ட மீறலுக்குக்கூட பொதுமக்கள் தூக்கிலிடப்படும் ஆபத்து இருப்பதாகவும் அதனால் எல்லோரும் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய குறைகளை வெளிப்படுத்தக்கூட முடியாத நிலையில் தவிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான ஆபத்துகள் நிலவுகின்றன என்பதை பொதுமக்களின் நேர்காணல்கள் காட்டுவதாக 'வடகொரியாவில் மக்களுக்கான சுதந்திரம்' ('Liberty in North Korea'-LINK) என்ற அமைப்பைச் சேர்ந்த சோகீல் பார்க் தெரிவித்துள்ளார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயலும் பொதுமக்களுக்கு இந்த அமைப்பு உதவி வருகிறது.

உணவுப் பொருட்களை கடத்திச் செல்வதிலும் நெருக்கடி

வடகொரியாவில் பஞ்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்

பட மூலாதாரம், NK NEWS

நாட்டின் தலைநகரான 'பியோங்யாங்கில்' வசிக்கும் பெண் ஒருவர், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பட்டினியால் இறந்து போனது தமக்குத் தெரியும் என்கிறார்.

“அவர்கள் குடிப்பதற்காக நல்ல தண்ணீர் கொடுக்க நான் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டினேன். ஆனால், அங்கே இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை,'' என்றார் ஜி யோன். பின்னர் அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ​​மூன்று பேரும் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். ஜி யோன் மற்றும் நமது நேர்காணலில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து எல்லைக்கு அருகே வசிக்கும் 'சான் ஹோ' என்ற கட்டுமானத் தொழிலாளியிடம் பேசினோம். உணவுப்பொருட்கள் மிகக் குறைவாக இருப்பதாகவும், தங்கள் கிராமத்தில் ஏற்கெனவே ஐந்து பேர் பசியால் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

"ஆரம்பத்தில், நான் கொரோனா தொற்றின் காரணமாக இறந்துவிடுவோமோ என்று பயந்தேன். ஆனால், அதன் பின் பசியால் இறந்துவிடுவோமோ என்ற பயம் தொடங்கியது,'' என்றார் அவர்.

நாட்டின் 2.6 பில்லியன் மக்களுக்குப் போதுமான உணவை வட கொரியாவால் ஒருபோதும் உற்பத்தி செய்ய முடியவில்லை. வட கொரியா 2020 ஜனவரியில் நாட்டின் எல்லைகளை மூடியது. சீனாவில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதியும் நிறுத்தப்பட்டது. மறுபுறம், பயிர் உற்பத்திக்குத் தேவையான உரங்கள், இயந்திரங்களின் இறக்குமதியையும் நிறுத்தியது.

எல்லைகள் வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. யாரேனும் வேலிகளைக் கடக்க முயன்றால் துப்பாக்கியால் சுடவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் உணவு அல்லது இதர பொருட்களை கடத்திச் செல்வதிலும், சந்தைகளில் விற்பனை செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்பு படம்

பசிக் கொடுமையால் நடக்கும் தற்கொலைகள்

நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மியோங் சுக் என்பவரும் பிபிசியிடம் பேசினார். நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் நான்கில் மூன்று பங்கு தயாரிப்புகள் சீனாவில் இருந்து வந்ததாகத் தெரிவித்த அவர், இன்று சந்தையில் எல்லா கடைகளும் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்.

மற்றவர்களைப் போலவே, எல்லைக்கு அப்பால் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை அந்தப் பெண் செய்து வருகிறார்.

“இதுவரை எங்கள் வீட்டில் குடும்பத்துக்குத் தேவையான உணவு இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. அண்மையில், எங்கள் வீட்டுக்கு வந்த சிலர் ஒரு வேளை சாப்பாடு தரமுடியுமா என்று கேட்டனர் என்றால் நிலைமை எப்படி மாறியிருக்கிறது என்பது புரியும் என்கிறார்.

பியோங்யாங்கில் வசிக்கும் ஜி யோன், “பசிக் கொடுமையில் இருந்து தப்புவதற்காக சிலர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் இப்பகுதிகளில் உள்ள மலைகளுக்குச் சென்று அங்கே உயிரை மாய்த்துக்கொண்டனர். இங்கு அவர்கள் வாழ முடியாது என்பதை உணரும்போது வாழ்க்கையில் பிடிப்பில்லாத நிலை ஏற்படுகிறது,’’ என்றார்.

வடகொரியாவில் பஞ்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்

வட கொரியாவுக்கு முக்கியம் மக்களின் பசியா? ஏவுகணை சோதனையா?

ஜி யோன் சொல்வதைக் கேட்கும்போது, அவரது குழந்தைகளுக்கு உணவளிப்பதுகூட மிகப்பெரும் சுமையாக இருப்பது போலவே தோன்றுகிறது. ஒருமுறை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்றும், தூக்கத்திலேயே பட்டினியால் உயிர் போய்விடுமோ என பயந்ததாகவும் அவர் கூறினார்.

1990களின் பிற்பகுதியில், வட கொரியாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வறட்சி நிலவியது. இதனால் சுமார் 30 லட்சம் பேர் பட்டினியால் உயிரிழந்தனர். அதேபோல் பசியில் சிக்கி பலர் இப்போது உயிரிழப்பதாக உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரிய பொருளாதார நிபுணர் பீட்டர் வார்டு இதுகுறித்துப் பேசிய போது, "நடுத்தர வர்க்க மக்கள்கூட அடிக்கடி தங்கள் அண்டை வீட்டார் உயிரிழப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது," என்றார்.

மேலும் பேசிய அவர், "இருப்பினும், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பட்டினியில் சிக்கித் தவிப்பதாகவோ, அல்லது ஒட்டுமொத்த சமூகமும் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவோ அஞ்சும் நிலை இதுவரை இல்லை. ஆனால் நிலைமை சரியில்லை என்பது மட்டும் உண்மை,’’ என்றார்.

மறுபுறம், வட கொரியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளை வெளியிடும் NCDBயின் இயக்குநர் ஹன்னா சாங், இந்த வாதத்துடன் உடன்படுகிறார்.

"கடந்த 10-15 ஆண்டுகளாக, இங்கு பட்டினி சாவுகள் பற்றிய செய்திகளை நாங்கள் அதிகம் கேட்கவில்லை. ஆனால், தற்போது பழைய வறட்சி மீண்டும் புத்துயிர் பெறுவதை இங்கே நிலவும் சூழ்நிலைகள் காட்டுகின்றன," என்று ஹன்னா கூறினார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், வடகொரியாவில் "உணவு தொடர்பான நெருக்கடி நிலை" காணப்படுவதாகவும், எனவே விவசாய விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், அணு ஆயுத திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மட்டுமே அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2022இல் இங்கு 63 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் மொத்த மதிப்பு 500 மில்லியன் டாலர்கள் (ரூ. 4,108 கோடி). இது இங்குள்ள உணவு தானிய பற்றாக்குறையைச் சமாளிக்கத் தேவையான அளவைவிட அதிகமான தொகையாகும்.

இது போல் பசிக்கொடுமை அந்நாட்டு மக்களை இப்படி வாட்டிக்கொண்டிருக்க, இன்னொருபுறம், பொதுமக்கள் குற்றங்களில் ஈடுபடும்போது விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்குதல், கட்டுப்பாடுகள் மிக்க புதிய சட்டங்களைக் கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகளால், கடந்த மூன்றாண்டுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசின் கட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகவும் பிபிசியிடம் பேசியவர்கள் தெரிவித்தனர்.

தென் கொரியாவின் புள்ளிவிவரங்களின் படி, கொரோனா பரவலுக்கு முன், ஒவ்வோர் ஆண்டும் வடகொரியாவிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் யாலு ஆற்றைக் கடந்து சீனாவிற்குள் நுழைந்தனர் எனத் தெரியவருகிறது.

இருப்பினும், அப்படி நாட்டை விட்டு வெளியேறுவது கூட இப்போது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது என மியோங் சுக் கூறுகிறார். “குறைந்த பட்சம் அந்த நதியை நோக்கிச் சென்றால்கூட, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் நிலை தற்போது காணப்படுகிறது. இதனால் அந்த ஆற்றைக் கடப்பதைப் பற்றிச் சிந்திக்கவே மக்கள் அஞ்சுகின்றனர்,'' என்றார்.

கட்டடத் தொழிலாளியான சான் ஹோ, சிலர் ரகசியமாக தூக்கிலிடப்பட்டதை தனது நண்பரின் மகன் பார்த்ததாகக் கூறினார். “இங்கு எங்களைப் போன்ற சாதாரண மக்கள் வாழ்வது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. ஒரு சாதாரண தவறுக்காகவே பொதுமக்கள் தூக்கிலிடப்படும் அவலம் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் இங்கு மரணத்தை எதிர்பார்த்து வேதனையுடன் வாழ்கிறோம்," என்றார்.

'வட கொரியாவில் நெருக்கடி நிலை இல்லை'

வடகொரியாவில் பஞ்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்

இந்நிலையில், இந்த செய்திக்கு வடகொரிய அரசு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

இதற்கிடையே, "இக்கட்டான சூழ்நிலைகளிலும், இங்குள்ள அரசு, மக்களின் நலன்களைப் பாதுகாக்க முயல்கிறது," என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

"பொதுமக்களைப் பாதுகாப்பதற்கே நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். நீங்கள் கூறும் விவரங்கள் சரியானவை அல்ல," என்கின்றனர் லண்டனில் உள்ள வடகொரிய தூதரக அதிகாரிகள். அவர்கள் மேலும் பேசுகையில், "வடகொரிய அரசுக்கு எதிராக செயல்படும் நபர்கள் உங்களுக்கு இதுபோன்ற தவறான தகவல்களை அளித்திருக்கலாம்," என்கின்றனர்.

ஆனால், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, வடகொரிய பொதுமக்கள் மூன்று விதமான கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். ​​

இது குறித்துப் பேசிய LINK அமைப்பைச் சேர்ந்த சொகீல் பார்க், “இங்கே உணவுப் பஞ்சம் தீவிரமாக ஏராளமான மக்களைப் பாதித்து வருகிறது. இன்னொருபுறம், பொதுமக்களின் சுதந்திரம் படிப்படியாக பறிக்கப்படுகிறது.

மறுபுறம், இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர், ஆகவே, வடகொரிய பொதுமக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் அனுபவித்து வருகின்றனர்," என்று கூறினார்.

"கண்காணிப்பு மற்றும் அடக்குமுறையின் காரணமாக, மக்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை இழக்கிறார்கள். 2020 டிசம்பரில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் நானும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். புதிய சட்டம், வெளிநாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்களைக் கேட்பதைக்கூட தடை செய்கிறது. குறிப்பாக, வெளிநாட்டு தகவல்களை இங்கு பகிர்ந்துகொண்டதாக நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனைகூட விதிக்க முடியும் என்ற அளவுக்கு இந்த சட்டம் வழிவகைகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது," என்று ஜி யோன் கூறினார்.

வடகொரிய தூதரக அதிகாரியாகப் பணிபுரிந்து தற்போது வெளிநாட்டில் குடியேறியுள்ள ரூ ஹியூன் வூ பேசுகையில், வெளிநாட்டு செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டங்கள் எவ்வளவு கடுமையானவை என்பதைப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்றார். மேலும், "மக்கள் தாங்கள் வாழும் சூழலை முழுமையாகப் புரிந்து கொண்டால், அது எழுச்சியாக மாறும் நிலை உருவாகும் அல்லது புரட்சி வெடித்துவிடும் என அதிபர் கிம் ஜோங் உன் அஞ்சுவதாக" தெரிவித்தார்.

வடகொரிய அரசின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மக்களிடையேகூட தற்போது நம்பிக்கை குறைந்து வருவதாகவும், அவர்களிடம் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிபிசியிடம் பேசிய பலர் தெரிவித்தனர்.

"கொரோனா பரவலுக்கு முன், சிலர் கிம் ஜாங் உன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் இப்போது நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பொறுமையிழந்து விட்டதாகவே தெரிகிறது," என்கிறார் மியோங் சுக்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: