வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம்

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சகோதரியுடன் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்

கொரோனா தொற்றுகாலத்தில், வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு தொற்று (காய்ச்சல்) இருந்தது என்று அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரமாக அவரது கூற்று பார்க்கப்படுகிறது.

மேலும், தமது நாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட தென் கொரியாதான் காரணம் என்றும் கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை பகுதியில் கொரோனா தொற்று கொண்ட துண்டு பிரசுரங்களை அனுப்பியதாக அவர் கூறினார்.

இதனை தென் கொரியா ஆதாரமற்றது என்று கூறி மறுத்துள்ளது.

கொரோனா தொற்றை எதிர்த்து தமது நாடு வெற்றி கண்டுள்ளது என்று கிம் ஜாங் உன்அறிவித்ததையடுத்து, அவரது சகோதரி இதுகுறித்து பேசினார்.

கடந்த மே மாதம், முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்தது. அன்று முதல், மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு, சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், அங்கு நடந்த மிக குறைவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கவனிக்கும்போது, இது தொடர்பான தரவு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அந்நாட்டில் கிம் யோ ஜாங் மிகவும் செல்வாக்குமிக்கவர். அவரது உரையில், எல்லையைத் தாண்டி, தென் கொரியா துண்டு பிரசுரங்களை அனுப்புவதன் மூலம் கோவிட் வடக்கில் பரவியதற்காக குற்றம் சாட்டினார். தென் கொரியாவில் உள்ள ஆர்வலர்கள் பல தசாப்தங்களாக பலூன்களைப் பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை, வட கொரியாவுக்கு எதிரான பிரசாரங்களை காற்றில் மிதக்கச் செய்தனர். இந்த நடைமுறை கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்டது.

இத்தகைய துண்டுப் பிரசுரங்களை அனுப்புவதை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்," என்றும், தொற்று உள்ள பொருள்களை அனுப்புவதன் மூலம் தொற்றை இங்கு பரப்ப செய்யும் ஆபத்து உள்ளது" என்று அவர் கூறியதாக அந்நாட்டு அரசுசெய்தி முகமையான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

வட கொரியா இதற்கு ஒரு வலுவான பதிலடி கொடுப்பது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும் தமது உரையில் தமது சகோதரரின் உடல்நிலை குறித்து கிம் பேசினார். "அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போர் முடியும்வரை, அவர் மக்களைப் பார்த்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுக்கவில்லை," என்றார்.

அங்கு கொரோனா தொற்றை கண்டறிய சோதனை கருவிகள் இல்லாததால், கொரோனா தொற்று என்பதை விட 'காய்ச்சல்' என்றே வட கொரியா குறிப்பிடுகிறது.

வட கொரியா அதிபர்

பட மூலாதாரம், KCNA VIA REUTERS

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்த தொற்றுக்கு எதிராக நாடு மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்று அறிவித்த அதிபர், வட கொரியர்களின் மன உறுதியையும் பாராட்டினார் என்று கே.சி.என்.ஏ தெரிவித்தது.

வடகொரியாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொற்று காரணமாக வெறும் 74 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதை 'அதிசயம்' என்று பாராட்டியுள்ளார்.

ஜூலை 29ஆம் தேதி முதல் வட கொரியாவில் சந்தேகத்திற்கிடமான புதிய கொரோனா பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், அந்நாட்டில் சோதனை வசதி மிகவும் குறைவாக உள்ளது என்று சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 4.8 மில்லியன் பேருக்கு தொற்று பாதிப்புகள் இருப்பதாக கே.சி.என்.ஏ கூறுகிறது. ஆனால் 74 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இறப்பு விகிதம் 0.002% ஆக உள்ளது. இந்த விகிதம் உலகில் மிகவும் குறைந்த விகிதம்.

பலூன்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த புள்ளிவிவரங்களை நம்புவது கடினம் என்று பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.. வெகுசில தீவிர சிகிச்சை பிரிவுகள், கோவிட் சிகிச்சை மருந்துகள், தடுப்பூசிகள் இல்லாத உலகின் மிக மோசமான சுகாதார அமைப்புகளில் ஒன்றாக இந்த நாடு உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தொற்றுநோய்களின் போது வட கொரியா நாடு எந்த தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக ஊரடங்கு, உள்நாட்டு சிகிச்சைகள் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை 'சாதகமான கொரிய பாணியில் உள்ள சமூகவுடைமை அமைப்பு' என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிடுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: