சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற முயற்சிக்கும் அதிமுக - சவால்கள் என்னென்ன?

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY/FACEBOOK
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுக அடைந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாததே காரணமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
மதுரையில் காமராஜரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “ சிறுபான்மையினர் இன்னும் எங்களை நம்பிக்கைக்குரியவர்களாக பார்க்கவில்லை, கூவி கூவி அழைக்கிறோம், நல்லது தான் செய்கிறோம். இந்த வாக்குகள் தான் தோல்விக்கு காரணம்” என்று பேசியிருந்தார்.
சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “சிறுபான்மையினர் மக்களின் மனநிலை மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 6% பேர் இஸ்லாமியர்கள். அவர்கள் மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளில் எந்த தொகுதியிலிம் பெரும்பான்மையாக இல்லை. எனினும், ராமநாதபுரம், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட சில தொகுதிகளில் தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவில் கணிசமாக உள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சிறுபான்மையினர் ஆதரவைப் பெற அதிமுக செய்தவை என்னென்ன?
பாஜக கூட்டணியிலிருந்து, 2023 செப்டம்பரில் வெளியேறியது அதிமுக. அப்போதிருந்தே இஸ்லாமியமக்களின் நன் மதிப்பை பெறவேண்டும் என்ற முனைப்பை வெளிப்படுத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ அமைப்பின் மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் வலியுறுத்தியது அதிமுக.
இருப்பினும் பாஜகவோடு இணக்கமாக இருந்த சமயத்தில், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் அதிமுக அளித்த வாக்குகள்தான் அதை சட்டமாக்க உதவின என்ற வலுவான குற்றச்சாட்டை அதிமுகவால் எதிர்கொள்ள முடியவில்லை. பாஜக எதிப்பு சிறுபான்மையினர் வாக்குகள் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கே சென்றன.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமாக வசிக்கும் பகுதி ஆம்பூர். அந்தப் பகுதியில், மாநிலத்தின் முக்கிய இஸ்லாமிய கட்சிகளின் ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத மாவட்ட நிர்வாகி, ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிபிசி தமிழிடம் பேசியிருந்தார்.
"குடியுரியுமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ)ஆதரவாக மாநிலங்களவையில் அதிமுக அளித்த வாக்குகள் இந்த சட்டம் அமலாவதற்கு காரணம். இதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு அதிமுகவிடம் இஸ்லாமிய தலைவர்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை நிராகரித்தது அதிமுக. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள்மீது வழக்கு தொடுத்தது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வந்தாலும், அந்த கோபம் இன்னும் ஆறவில்லை. எனவே இஸ்லாமிய ஜமாத்துகள் இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்போம் என்று மாநிலம் முழுவதும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
'பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி'
பாஜக அணியில் இருந்து அதிமுக விலகிய பின் அந்த குற்றச்சாட்டு வலுவிழந்துவிட்டது என்கிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி. “கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போதே அதை உணர முடிந்தது. பாஜக கூட்டணியில் இருந்த போது, எங்கள் கட்சியின் இஸ்லாமிய நிர்வாகிகளே, இஸ்லாமியர் குடியிருப்புகளில் வாக்குச் சேகரிப்புக்காக கட்சியினரை கூட்டிச் செல்வதை தவிர்த்து விடுவர், பள்ளிவாசலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த தேர்தலின் போது, பள்ளிவாசலுக்குள் சென்று வாக்கு சேகரிக்க முடிந்தது. அதுவே சிறுபான்மை மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சான்று” என்று நம்பிக்கையுடன் பேசினார்.
தோல்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய காரணத்தையே இவரும் குறிப்பிடுகிறார்.
அதை பற்றி பி.பி.சியிடம் விளக்கிய ஜவஹர் அலி, “பிரதமரை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், ராகுல் காந்திக்காகவே இஸ்லாமியர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்துவிட்டனர். 2026 நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் மனநிலை மாறும். 2011-ம் ஆண்டிலும் 2016-ம் ஆண்டிலும் ஜெயலலிதா பெற்ற தொடர் வெற்றியை இஸ்லாமியர்கள் வாக்குகள் இல்லாமலா பெற்றார்? திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நோக்கில் பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti- terror squad) அமைக்கப்பட்டது. என் ஐ ஏ சட்டத்துக்கு ஆதரவாக திமுகதான் வாக்களித்தது. அதையும் இஸ்லாமியர்கள் மறக்கவில்லை. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அதிமுக நடத்திவரும் ஆலோசனைக் கூட்டங்களில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் உறுதி செய்திருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
'அணியிலிருந்து விலகினால் போதுமா?'
இஸ்லாமியர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்திருப்பது மட்டுமே போதுமா? என்று கேள்வி எழுப்புகிறார் திமுக கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி. “பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்க துணியாத போது, அதிமுகவினால் சிறுபான்மையினர் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது.” என்றார்.

பட மூலாதாரம், Facebook
அதிமுக கூட்டணியில் இருக்கும் இஸ்லாமிய கட்சி கூறுவது என்ன?
திமுகவின் நடவடிக்கைகள் இஸ்லாமியர் விரோதமாக இருப்பதாக கூறுகிறார் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக்.
“இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அவர்கள் வெளியே வர முடியாத வகையில் அரசாணையில் “மத ரீதியிலான வழக்குகளில்” சம்பந்தம் உடையவர்கள் பொது மன்னிப்பு பெற முடியாது என்று திருத்தம் கொண்டுவந்தது. அதே போன்று சிறை மேற்பார்வையாளர் பரோல் வழங்கும் உரிமையை சிலருக்கு ரத்து செய்தது” என்றார்.
அதிமுக அணியில் உள்ள ஒரே இஸ்லாமிய கட்சியான எஸ்.டி.பி.ஐ., அதற்கான நியாயங்களாக அதிமுகவின் சில நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறது.
“ஒவ்வொரு ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியில் இஸ்லாமியர்களை குறிவைத்து முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதிமுக அரசு தான் அதை நிறுத்தியது. குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அதிமுக மாற்றிக் கொண்டுள்ளது. பாஜக எவ்வளவோ அச்சுறுத்தியும் கூட அதிமுக அந்த அணியில் இருந்து வெளியேறியது. இருப்பினும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை அதிமுக செய்யும் என்று நம்பலாம்” என்று கூறினார்.
'அண்ணாமலை தான் பிரச்னை, கொள்கை பிரச்னை இல்லை'

பட மூலாதாரம், நசீர் அஹ்மத்
அண்ணாமலைதான் அதிமுகவிற்கு பிரச்சனை. பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கட்டும் அதை வைத்து முடிவு செய்யலாம் என்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் நசீர் அஹ்மத்.
“மோதியை, அமித்ஷாவை எதிர்த்து இன்னும் அதிமுக வாய் திறக்கவில்லை. எங்களுக்கு இரண்டு திராவிடக் கட்சிகளும் சமம்தான். அதிமுக முன்னாள் பொது செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, திமுக, அதிமுக இரு கட்சிகளுடனும் கூட்டணியில் இருந்திருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் போது, எங்களுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே அதிமுக மீதான நம்பிக்கை வரும். தற்போது வரை திமுக கூட்டணியில் பாதுகாப்பாக இருக்கிறோம். இஸ்லாமிய சிறைவாசிகள் இரண்டு பேரை விடுவித்துள்ளது திமுக, பத்தாண்டுக் கால அதிமுக ஆட்சியில் ஒருவரை கூட விடுவிக்கவில்லையே?” என கேட்டார்.

பட மூலாதாரம், Facebook
இஸ்லாமிய சமூகம் திமுகவுடன் உணர்வு ரீதியில் நின்று வருகிறது என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹிதீன் பிபிசி தமிழிடம் கூறினார்.
“தேசிய அளவில் பாரம்பரியமாக எப்படி காங்கிரஸுக்கு இஸ்லாமிய சமூகம் ஆதரவு அளித்ததோ, அதே போன்று மாநிலத்தில் திமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 8ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜமாத்துகளில் சுமார் 100 ஜமாத்துகளை தவிர மற்றவை எல்லாம் ஒன்றுபட்டு இருக்கின்றன. இந்த மனநிலையில் மாற்றம் வர வேண்டிய அவசியம் இல்லை. வட இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையை பார்க்கும் போது, ஜனநாயகத்துக்கான கூட்டணி அவசியம் என்று தோன்றுகிறது. அதிமுக மீது இஸ்லாமிய சமூகத்துக்கு வெறுப்பு இல்லை, ஆனால் அவர்களுடன் அரசியல் ரீதியாக சேரவில்லை. இஸ்லாமிய சமூகத்தினரிடம் மிக நெருக்கமாக இருக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் மக்களின் ஆதரவு பெற்று வெற்றி பெறுகின்றனர். ஆனால் இவை வெகு சில தொகுதிகளில் மட்டுமே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலை வேறுபட்டது” என்றார்.

பட மூலாதாரம், Facebook
பாஜக அணியிலிருந்து அதிமுக வெளியேறியிருப்பதை வரவேற்பதாக கூறுகிறார் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களை குறிக்கும் வகையில் ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோதி பேசியதற்கு எடப்பாடி கண்டனம் தெரிவிக்கிறார், ஆனால் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் இருந்தும் கூட, பாஜகவின் இஸ்லாமிய விரோத நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசவில்லையே?” என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.
சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதில் அதிமுகவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?
சிறுபான்மையினர் அதிமுகவுக்கு வாக்களிக்கவோ, திமுகவுக்கு வாக்களிக்காமல் இருக்கவோ புதிய காரணங்கள் ஏதும் இல்லை என்கிறார் சென்னைப் பல்கலைகழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் வீ.அரசு.
“மோதிக்கு எதிராக உள்ள வாக்குகள் ராகுல் காந்தியை நோக்கித்தான் செல்லும்” என்கிறார். பாஜகவின் இஸ்லாமிய விரோத போக்குகள் காரணமாக "மோதி இருக்கும் வரை இஸ்லாமியர்கள் ராகுல் காந்திக்குத்தான் வாக்களிப்பார்கள்" என்றார்.
மேலும் அவர், “காங்கிரஸ் உடனான கூட்டணி என்பதால் தமிழ்நாட்டில் திமுகவுக்கே சிறுபான்மையினரின் ஆதரவு இருக்கும்” என்றார்.
அதிமுகவின் நோக்கமே அதிருப்தி வாக்குகளை கைப்பற்றுவதுதான் என்கிறார் பேராசிரியர் வீ.அரசு, “ஆளும் திமுக அரசு மீதான அதிருப்தியை தன் பக்கம் இழுக்க அதிமுக புதிய உத்திகளை கையாள்கிறது” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












