AFG vs NED: 19ஆம் நூற்றாண்டு முதல் கிரிக்கெட் விளையாடியும் நெதர்லாந்து சோபிக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
லக்னௌவில் நடந்து வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் முதல்தரமான சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நெதர்லாந்து அணி 174 ரன்களில் ஆட்டமிழந்தது.
முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, ரஷித் கான், நூர் அகமது ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களின் 4 முனைத் தாக்குதலை நெதர்லாந்து அணி தாங்க முடியாமல் நொந்துபோனது.
ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்தை போலவே கிரிக்கெட் விளையாட்டு உருவான காலகட்டத்தில் இருந்தே அதை விளையாடி வரும் நாடு நெதர்லாந்து. அப்படி இருந்தும், டச்சு வீரர்கள் உலகளவில் உள்ள மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் கிரிக்கெட்டில் சோபிக்காதது ஏன்?
முதல்முறை

பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியின் முதல் நான்கு பேட்டர்கள் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தது இதுவே முதல்முறை.
ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினாலும், நெதர்லாந்தின் 4 விக்கெட்டுகள் ரன்-அவுட் மூலமே வீழ்த்தப்பட்டன.
நெதர்லாந்து அணியில் சைபிரன்ட்(58), மேக்ஸ்(42) ஆகியோர் சேர்த்த ஸ்கோர்தான் அதிகபட்சம். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 73 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நெதர்லாந்து அணி, அடுத்த 106 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆப்கனுக்கு அருமையான வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணியின் டாப்கிளாஸ் சுழற்பந்துவீச்சை சமாளித்து நெதர்லாந்து பேட்டர்களால் பேட் செய்ய முடியவில்லை. அது மட்டுமல்லாமல் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுப்பதிலும் போதுமான புரிதல் இல்லாமல் ஓடியதால், தேவையற்று 4 ரன்அவுட்கள் செய்யப்பட்டன.
இந்த ஆடுகளத்தில் 200 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால் ஓரளவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி அளித்திருக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பைக்கூட நெதர்லாந்து அணி உருவாக்கவில்லை.
ஆடுகளம் எப்படி
டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆடுகளம் ஓரளவு பேட்டர்களுக்கு சாதகமானது என்பதால், நல்ல ஸ்கோரை முதலில் பேட் செய்யும் அணி அதிக ரன்களை சேர்த்தால், பந்துவீச்சு மூலம் டெபென்ட் செய்யலாம்.
இரவுநேரப் பனிப் பொழிவால் பந்துவீச்சு கடினமாகும் என்பதால், 250 ரன்களுக்கு மேல் சேர்த்தாலே சேஸிங் செய்வது கடினம் என்று கணிக்கப்பட்டது.
நான்கு ரன்-அவுட்கள்
நெதர்லாந்து பேட்டர்கள் வெஸ்லே, மேக்ஸ், ஆட்டத்தைத் தொடங்கினர். முஜிபுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் கால்காப்பில் வாங்கி வெஸ்லே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் முஜிபுர் ரஹ்மான் தனது 100வது விக்கெட்டை இதன்மூலம் வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது விக்கெட்டுக்கு வந்த ஆக்கர்மேன், மேக்ஸுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்த்தடடால், பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு நெதர்லாந்து 60 ரன்களை சேர்த்தது.
பன்னிரண்டாவது ஓவரில் மேக்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சில ஓவர்களில் ஆக்கர் மேன் 29 ரன்களில் விக்கெட் கீப்பர் இக்ரம் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறினார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த பாஸ்டே லீட் 3 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும், அடுத்து களமிறங்கிய ஜுல்பிகர் 3 ரன்னில் நூர் அகமது பந்துவீச்சிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
நெதர்லாந்து அணி 73 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால், அதற்கு அடுத்த 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 92 ரன்களில் இருந்தபோது அடுத்த 5 ரன்களை சேர்ப்பதற்கு உள்ளாகவே 3 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்தது.

பட மூலாதாரம், Getty Images
இருபது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்த நெதர்லாந்து அணி, 30 ஓவர்கள் முடிவில், கூடுதலாக 33 ரன்கள் சேர்த்து மேலும் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
லோகன் வேன் பீக் 31வது ஓவரில், 2 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது நபி பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 134 ரன்களுக்கு 7வது விக்கெட்டை நெதர்லாந்து இழந்தது.
விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும், நிதானமாக பேட் செய்த சைபேண்ட் எஞ்சல்பிரெச்ட் அரை சதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கடைசி வரிசை பேட்டர்களான வென் டெர் மெர்வ் 11 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சிலும், மீக்ரன் 4 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர்.
46.3 ஓவர்களில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 134 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நெதர்லாந்து, அடுத்த 35 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
19ஆம் நூற்றாண்டு முதல் விளையாடி வரும் நெதர்லாந்து கிரிக்கெட்டில் சோபிக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
நெதர்லாந்து அணி 19ஆம் நூற்றாண்டிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருவதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அந்த அணி ஐசிசி கோப்பையில் பெரிதாக சிறப்பாக ஆடியதாக சரித்திரம் இல்லை.
நெதர்லாந்து அணி, 1966ம் ஆண்டே ஐசிசி-யில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டாலும், சொல்லிக்கொள்ளும் வகையில் டச்சு வீரர்கள் விளையாடியதில்லை. கடந்த 1996, 2003, 2007, 2011, 2023 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைத் தொடர்களில் தகுதிச் சுற்று மூலம் நெதர்லாந்து அணி தகுதி பெற்றாலும், இதுவரை குரூப் ஸ்டேஜை தாண்டியதில்லை.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஒரு வெற்றிகூட நெதர்லாந்து அணி பெற்றது இல்லை. நெதர்லாந்தில் ஹாக்கி, கால்பந்து விளையாட்டுக்கு இணையாக கிரிக்கெட் ரசிகர்களும் இருந்தாலும்கூட அங்கு கிரிக்கெட் வளர்ச்சியடைந்த ஒரு விளையாட்டாக இல்லை.
நெதர்லாந்து நாட்டில் உருவாகும் கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் இங்கிலாந்து கவுண்டி அணிக்கும், கிளப் அணிக்கும் விளையாடச் சென்று விடுகிறார்கள். இதனால், சரியான முறையில் கிரிக்கெட்டை வளர்க்கவும், வீரர்களை ஊக்கப்படுத்தவும் அங்கு முடியவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த பல வீரர்கள் கடந்த காலங்கள் முதல் இப்போது வரை நெதர்லாந்து அணியில் விளையாடியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்தில் இருக்கும் காலநிலைதான் ஏறக்குறைய நெதர்லாந்து நாட்டிலும் இருக்கும். இதனால் பெரிதாக சுழற்பந்துவீச்சாளர்கள் உருவாவதில்லை. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சைப் பின்பற்றியே பந்துவீச்சாளர்கள் காலந்தோறும் உருவாகிறார்கள். அவ்வாறு சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தாலும், பெரிதாக சோபிப்பதில்லை.
இதனால் நெதர்லாந்து காலநிலையில் தரமான சுழற்பந்துவீச்சை விளையாடி பயிற்சி எடுக்காமலே அந்த அணி வீரர்கள் உருவாகிறார்கள். ஆசிய கண்டத்தில் இருக்கும் சூழலுக்கு ஏற்பவும், இங்கிருக்கும் ஆடுகளத்துக்கு ஏற்பவும் அவர்கள் விளையாடியதில்லை, ஆசிய அணிகளுக்கு எதிராக ஆசிய மைதானத்திலும் பெரிதாக நெதர்லாந்து அணி விளையாடியதில்லை.
இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு பெரும்பாலும் ஒத்துழைக்கும். அந்த ஆடுகளத்தில் தரமான சுழற்பந்துவீ்சசைக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது, அதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் நெதர்லாந்து பேட்டர்கள் திணறினர்.
தரமான சுழற்பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வது, அதிலும் ஆசிய ஆடுகளங்களில் எவ்வாறு எதிர்கொள்வது என்று போதிய பயிற்சியும், புரிதலும் இல்லாமல் எதிர்கொள்ளும்போது, இதுபோன்று மிகப்பெரிய தோல்வியை எதிர்கொள்ள நேரிடுகிறது.
போர்களத்தில் முளைத்த சிறுமலர் போல் ஆப்கானிஸ்தான் குறுகிய காலத்தில் கிரி்க்கெட் விளையாடி மேம்பட்ட அணியாக மாறிவிட்டது. 19ஆம் நூற்றாண்டிலிருந்து கிரிக்கெட் விளையாடி வரும் டச்சுநாட்டவர்கள் இன்னும் அமெச்சூர் அளவிலேயே இருப்பது வியப்பாக இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












