ஆப்கானிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் கற்றுக்கொடுத்த பாகிஸ்தானை விட்டுவிட்டு இந்தியாவை விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் பல ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி ஆச்சரியமளிக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றிகளை ருசித்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணிக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ள அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
முதலில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, பின்னர் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.
ஆனால் திங்கட்கிழமை, ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த போது, அது ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இதை தலைகீழான ஒரு நிகழ்வு என்று கூறமுடியாது. மாறாக இந்த அணி கிரிக்கெட்டின் அடிவானத்தில் ஒரு நிரந்தர சக்தியாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம்.
இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் சொந்த அணிக்கு பிறகு எந்த அணியை ஆதரிக்கிறார்கள் என்றால், அது ஆப்கானிஸ்தான்தான். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மீதான இந்த அன்பு ரசிகர்களிடம் மட்டுமில்லை. பிரபல முன்னாள் இந்திய வீரர்களும் வர்ணனையாளர்களுமான இர்பான் பதான், ஹர்பஜன் சிங் போன்றோரும் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக் களிப்பை நடனமாடி பகிர்ந்துகொண்டதை காணமுடிந்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் இந்தியர்களைப் பாராட்டி, அவர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா ஆப்கானிஸ்தானின் இரண்டாவது தாய்நாடு என்றும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் ஏன் மிகவும் விரும்பப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"பாகிஸ்தான்தான் ஆப்கன் வீரர்களுக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்தது"
இந்தக் கேள்வியை கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மொய்னுதீன் ஹமீத்திடம் கேட்டோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான சலீம் மாலிக்கைப் பற்றி ஹமீத் புத்தகம் எழுதியிருக்கிறார்.
கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ஹமீத் பிபிசி உருதுவிடம் பேசுகையில், இதற்குப் பின்னால் வரலாற்று மற்றும் அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறினார்.
"ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வரலாற்று உறவுகள் உள்ளன. பாகிஸ்தானை விட ஆப்கானிஸ்தான் இந்தியாவை அதிகம் விரும்புகிறது. இப்போது இந்தியாவிலும் அதே நிலைமை உள்ளது" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆப்கானிஸ்தானுக்கு உதவியதாகவும் லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை தயார் செய்வதில் பாகிஸ்தானும் முக்கிய பங்காற்றியுள்ளது ஆனால் இது பாகிஸ்தான் மக்களுக்கு தெரியாது. இந்தியா-பாகிஸ்தான் என்று வரும்போது, ஆப்கானிஸ்தான் மக்கள் பாரம்பரியமாக இந்தியாவை ஆதரிப்பதைக் காணலாம்.
அவர் கூறுகையில், "கிரிக்கெட் பற்றி பேசும்போது, பாகிஸ்தான் வீரர்கள்தான் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பேட் பிடிக்க கற்றுக் கொடுத்தனர். கபீர் கான், ரஷித் லத்தீப், இன்சமாம் உல்-ஹக், உமர் குல் போன்ற பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானிற்கு சென்று அவ்வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர்" எனத் தெரிவித்தார்.
ரஷித் கான் போன்ற சில ஆப்கன் வீரர்கள் பாகிஸ்தானுக்கு அடைக்கலம் தேடி வந்தபோது கிரிக்கெட்டை கற்றுக்கொண்டதோடு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் பாகிஸ்தானில் பயின்றார்கள்.
பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியாவை நோக்கிய ரஷித் கானின் சாய்வு புரிந்து கொள்ள முடியாதது என்று மொய்னுதீன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா எனும் இரண்டாவது வீடு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்ட பிறகு, இந்தியா பல நூறு கோடி ரூபாயை அங்கு வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்தது. 2021ல் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினர். அதன் பின்னர் இந்தியாவே ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. பல நிபுணர்கள் இந்தியாவை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் 'இரண்டாம் தாயகம்' என்று பார்க்கிறார்கள்.
விளையாட்டு பத்திரிக்கையாளர் ஆதேஷ் குமார் பிபிசியிடம் தொலைபேசியில் பேசுகையில், பாகிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியை உருவாக்கினார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களின் ஆதரவு முடிந்ததும் இந்தியா ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்தது. டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா மற்றும் டேராடூனில் அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பயிற்சி அளித்தது.
இவ்விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பழைய உறவுகளும் முக்கியமானவை என அவர் கூறினார். இப்போது ஐசிசி தொடர்களில் மட்டும்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிறது என்பதால் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"அரசியல் காரணங்களால் ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் விளையாடாத நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎலில் விளையாடுகிறார்கள். இதுவும் இளம் வயது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆப்கன் வீரர்களுக்கு வரவேற்பு உள்ளது" என ஆதேஷ் குமார் தெரிவித்தார்.
ஆனால், நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெளிப்படுத்திய ஆட்டத்தை பார்க்கும்பொழுது ஐபிஎல்லில் அதிக ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது.
இந்திய நிறுவனமான அமுல் பிசிசிஐ உதவியுடன் ஆப்கானிஸ்தான் அணிக்கு நிதியுதவி செய்கிறது. தற்போது, அவர்களின் அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாதான் வழிகாட்டியாக உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சமூக வலைதளங்களிலும் விவாதம் நடந்து வருகிறது

பட மூலாதாரம், X
இந்தியாவின் மீது ஆப்கானிஸ்தான் அணியின் நாட்டம் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு கிடைக்கும் அன்பு குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.
Arfa feroz zake என்ற X சமூக வலைத்தளப் பயனர், "ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானில் கிரிக்கெட் கற்றுக்கொண்டனர். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதும் இந்தியாவைதான் தங்கள் இரண்டாவது வீடு என்று அழைக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவையே ஆதரித்துள்ளது"எனக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், X
thekaippullai என்ற மற்றொரு பயனர் எழுதுகையில் "பிசிசிஐ பல விஷயங்களில் தவறு செய்துள்ளது என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு ஒரு மைதானத்தை வழங்கியிருக்கிறார்கள். மேலும் கிரிக்கெட் பயிற்சிக்கான உட்கட்டமைப்பையும் உருவாக்கி கொடுத்ததன் மூலம் ஆப்கன் கிரிக்கெட்டில் இந்திய பெரும் பங்காற்றியுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் பிசிசிஐ இல்லையென்றால் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானின் பயணம் இன்னும் கடினமாக இருந்திருக்குமெனத் தெரிவித்தார்.
பல பயனர்கள் அவருடன் உடன்பட்டுள்ளனர்.
அனுபமா சிங் என்ற பயனர், "இது முற்றிலும் உண்மை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியாவில் பெரும் ஆதரவு உள்ளது, வீரர்களும் அதற்கு நன்றியுள்ளவர்களாக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் நஸ்ரானா யூசுப்சாய் எழுதுகையில்"ஆப்கானிஸ்தான் அணி தாலிபன் அரசாங்கத்தின் எந்த ஆதரவும் இல்லாமல் விளையாடி நிறைய சாதித்துள்ளது. அவர்கள் உலகத்தரத்தோடு விளையாடுகிறார்கள். ஆப்கானிஸ்தானை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், X
ஆப்கானிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் இர்பான் பதானின் கொண்டாட்டத்தையும் நடனத்தையும் பாராட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் அதை விமர்சிக்கிறார்கள்.
"அண்டை நாட்டுக்காரர்கள் எங்கள் தோல்வியில் நடனமாட விரும்புகிறார்கள். ஆனால் எங்கள் சகோதரர்கள் எங்கள் வெற்றியில் நடனமாடுகிறார்கள்" என Fazal Afghan என்ற பயனர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் சமூக ஊடக பயனர்களின் ட்வீட்களைப் பார்க்கும்போது, அவர்கள் பாகிஸ்தானை தங்கள் போட்டியாகக் கருதுகிறார்கள் என்பதும் அவர்களின் போட்டி அனைத்தும் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானின் ரசிகர்கள் இந்தியாவை விரும்புவது எனது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று பத்திரிகையாளர் மொய்னுதீன் ஹமீத் கூறினார்.
"ஆப்கானிஸ்தான் தனது எல்லையை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு துறைமுகம் இல்லாததால் அவர்களுக்கான வழித்தடத்தைக் கூட பாகிஸ்தான்தான் வழங்குகிறது" என்று அவர் கூறினார்.
ஜேஎன்யுவில் பாரசீகப் பேராசிரியரும், ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் நிபுணருமான முஹம்மது மஸ்ஹருல் ஹக், "ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் வர்த்தகம் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது" என்று சில காலத்திற்கு முன்பு பிபிசியிடம் கூறியிருந்தார்.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் இருப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு ரீதியில் மிகவும் வலுவானது என்று அவர் கூறினார்.
இந்தியா ஆப்கானிஸ்தானில் பல திட்டங்களை தொடங்கியுள்ளது மற்றும் சுமார் 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












