இலங்கையை வீழ்த்தியபோது இந்திய ரசிகர்கள் பற்றி ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் ஆகிய இரு சாம்பியன்களை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, இன்று 3வதாக மூன்றாவது முன்னாள் சாம்பியனான இலங்கை அணியையும் சாய்த்துள்ளது.
புனேயில் இன்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.2 ஓவர்களில் 241ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் புறப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 28 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் இலங்கையை கீழே இறக்கி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் பெற்ற 3 வெற்றிகளுமே அசாத்தியமானவை, வீழ்த்திய அணிகளும் சாமானிய அணிகளும் அல்ல.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்துவீச்சால் அடக்கியது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராக 280 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தி 8 விக்கெட்டில் வென்றது, இலங்கைக்கு எதிராக பேட்டிங்கில் ஒழுக்கத்தை கடைபிடித்து, பொறுமையாக ஆடிய வென்றது ஆப்கானிஸ்தான்.
ரஷித் கான் இன்று தனது 100-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு ஆப்கான்அணியினர் சேர்ந்து மிகப்பெரிய வெற்றியை பரிசாக அளித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.
‘கத்துக்குட்டி’ அல்ல ‘கற்றுக்கொடுப்போர்’
ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும், அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களையும் கடந்து அந்த அணியினர் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் “மினோஸ்” என்று சிறிய அணிகளை அழைப்பார்கள். அவ்வாறு இனிமேல் ஆப்கானிஸ்தானை அழைக்க முடியாத அளவுக்கு அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் முதிர்ச்சி காணப்படுகிறது. தங்களின் திறமைக்கும் அதிகமான ஆட்டத்தை எதிரணியிடம் வெளிப்படுத்தி, திக்குமுக்காடச்செய்து ஆப்கானிஸ்தான் வெல்கிறது.

பட மூலாதாரம், Getty Images
உலக அணிகளுக்கு சவால்விடும் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு, பொறுமையான, நேர்த்தியான, ஒழுக்கமான பேட்டிங், தேவைப்படும் நேரத்தில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆட்டக்காரர்கள் என தரமான விளையாட்டை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துகிறது.
பல உலகக் கோப்பைகளாக நெதர்லாந்து, வங்கதேசம், அயர்லாந்து அணிகள் பங்கேற்றாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால், இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டம் உலக ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக இந்திய மக்களிடையே பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் உத்தி என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமே சுழற்பந்துவீச்சுதான். அதை ஒவ்வொரு ஆட்டத்திலும் மிகச்சரியாக கையாண்டு, எதிரணியை திணறடித்து வருகிறார்கள். இந்த ஆட்டத்திலும் அதை செய்யாமல் இல்லை. முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, ரஷித் கான் ஆகியோரின் நடுப்பகுதி ஓவர்கள் இலங்கை பேட்டர்களை திணறடித்தது. வேகப்பந்துவீச்சாளர் பரூக்கி 10ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன்விருதை வென்றார்.
ஆப்கானிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பேட்டர்கள் 147 டாட் பந்துகளை ஏறக்குறைய 24 ஓவர்களில் ரன் சேர்க்காமல் வீணாக்கினர்.
பேட்டிங்கிலும் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் பட்டையைக் கிளப்பினர். ஜாத்ரன் ஆட்டமிழந்தாலும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் பேட் செய்தனர். பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், ஷாட்களில் இருந்த நேர்த்திதான் வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
ஒருநாள் போட்டிகளில் மிக முக்கியமானது ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதாகும். இந்த விஷயத்தை ஆப்கன் வீரர்கள் அருமையாகச் செய்தனர். ஒவ்வொரு வீரரும் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்காமல் ஒரு ரன், 2 ரன்களாகச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இலங்கை பந்துவீச்சாளர்கள் தவறான பந்துகளை வீசியபோதுகூட தேவையற்ற ஷாட்களை ஆப்கன் பேட்டர்கள் ஆடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்புதான் கடைசிவரை விக்கெட்டுகளை பெரிதாக இழக்காமல் வெற்றிக்கு அழைத்துவந்தது. ஒருநாள் போட்டியில் சேஸிங்கை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆப்கன் பேட்டர்கள் செயல்பட்டனர்.
அதிலும் ஆப்கானிஸ்தானின் ஹர்திக் பாண்டியா என்று வர்ணிக்கப்படும் அசமத்துல்லா ஓமர்ஜாய் பேட்டிங் அற்புதமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான சேஸிங்கிலும், இந்த ஆட்டத்தில் சேஸிங்கிலும் ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அணியை உயரத்துக்கு கொண்டு சென்றனர்.
சுவாரஸ்ய கருணாரத்னே
இலங்கை அணி பேட்டர்கள் நிசங்கா, கருணா ரத்னே ஆட்டத்தைத் தொடங்கினர். இதில் திமுத் கருணாரத்னேயின் ஒருநாள் வருகை மிகவும் வேடிக்கையானது.
கடந்த 2015ம் ஆண்டு கடைசியாக கருணா ரத்னே ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார், அவர் அதன்பின் விளையாடவில்லை. அவருக்கு 2019ம் ஆண்டு கேப்டன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2020 முதல் 2021ம் ஆண்டில் 3 ஒருநாள் போட்டியில் மட்டுமே கருணாரத்னே விளையாடியிருந்தார்.
ஆனாலும் அவரை அணியில் தேர்ந்தெடுத்து நிசாங்காவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்க இலங்கை அணி முடிவு செய்துள்ளது. கடந்த உலகக் கோப்பைத் தொடரிலிருந்து 17 விதமான ஜோடிகளை உருவாக்கி தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பரிசோதித்துள்ளது இலங்கை அணி. இதில் கருணாரத்னே, நிசாங்கா ஜோடி 14வது முறையாக களமிறங்குகிறது.
விக்கெட் சரிவு

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் தொடக்கத்திலேயே பரூக்கியையும், சுழற்பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மானையும் களமிறக்கி பந்துவீசச்செய்தது. இலங்கை பேட்டர்கள் ரன் சேர்க்க கடும் சிரமப்பட்டனர். பருக்கி வீசிய 6-வது ஓவரில் கருணாரத்னே 15 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
10 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் இலங்கை அணி 4 பவுண்டரிகள் மட்டுமே சேர்த்திருந்தது. குஷால் மென்டிஸ், நிசாங்கா இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டதால் ரன்ரேட் மந்தமாக இருந்தது.
அசமத்துல்லா ஓமர்ஜாய் வீசிய 19-வது ஓவரில் நிசாங்கா 46 ரன்கள் சேர்த்த நிலையில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.
இலங்கையின் மந்தமான பேட்டிங்
3வது விக்கெட்டுக்கு சமரவிக்ரமா வந்து மென்டிஸுடன் சேர்ந்தார். சமரவிக்ரமா வந்தபின் ரன்களை வேகமாகச் சேர்த்தார். 22-வது ஓவரில்தான் இலங்கை அணி 100 ரன்களை எட்டியது.
ரஷித் கான், முகமது நபி, ஓமர்ஜாய் என மாறி மாறி நெருக்கடியாகப்பந்துவீசி இலங்கை பேட்டர்களை திணறவிட்டனர். விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் இலங்கை பேட்டர்கள் நிதானமாக பேட் செய்ததால் ரன் ரேட் மிகவும் மந்தமாகவே உயர்ந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆமை வேகத்தில் பேட் செய்த மென்டிஸ் 50 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து முஜிபுர் ரஹ்மான் வீசிய 27-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு மென்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 50 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
முஜிபுர் வீசிய 29-வது ஓவரில் மற்றொரு விக்கெட்டும் வீழ்ந்தது. சமரவிக்ரமா 36 ரன்களுடன் பேட் செய்தநிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியின் திரும்பினார். இலங்கை அணி மிகப்பெரிய விக்கெட்டை இழந்து தடுமாறியது.
30 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 134 ரன்களில் மென்டிஸ் விக்கெட்டையும், 139 ரன்களில் சமரவிக்ரமா விக்கெட்டையும் 5 ரன்கள் இடைவெளியில் இலங்கை இழந்தது.
அடுத்தடுத்து விக்கெட் இழப்பு
அசலங்கா, டி சில்வா ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. 35-வது ஓவரில், ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டி சில்வா14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அசலங்கா 22 ரன்னில் பரூக்கி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய சமீரா ஒரு ரன் சேர்த்தநிலையில் ஜாத்ரனால் ரன்அவுட் செய்யப்பட்டார். 40ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 30 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை இலங்கை அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இலங்கை அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் கடைசி 15 ஓவரில் அதன் ரன்ரேட் 5.78 என வைத்திருக்கிறது. இது எந்த அணிகளையையும் விட மிகக் குறைவாகும்.
ரஷித் கானுக்கு 100வது போட்டி

பட மூலாதாரம், Getty Images
ரஷித் கான் இன்று தனது 100-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறார். டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்படும் ரஷித் கான் ஒருநாள் போட்டிகளில் 20ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார். இவர் எடுத்த பெரும்பாலான விக்கெட்டுகள் ஜிம்பாப்வே, நெதர்லாந்துக்கு அணிகளுக்கு எதிராகத்தான்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில்கூட இங்கிலாந்துக்கு எதிராக ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதில் 2 விக்கெட்டுகள் டெய்லெண்டர்களை வீழ்த்திக் கிடைத்தது. 2023ம் ஆண்டில் ரஷித் கான் பந்துவீச்சு சராசரி 37 முதல் 47 ஆக மோசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில்கூட இலங்கையின் ரன் சராசரி 4.5 ஆக இருக்கும்போது, ரஷித் கான் ஓவரில் ரன் சராசரி 5.5 ஆக இருக்கிறது.
மாத்யூஸ் 23 ரன்களும், தீக்சனா 29 ரன்களும் கடைசி நேரத்தில் சேர்த்ததால் இலங்கை ஸ்கோர் ஓரளவுக்கு கவுரமான எண்ணிக்கையை எட்டியது இல்லாவிட்டால் 200 ரன்களைக் கூட கடந்திருக்காது. 49.3 ஓவர்களில் இலங்கை அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடக்கமே அதிர்ச்சி
242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மதுசங்கா வீசிய முதல் ஓவரின் 4வது வந்தில், தொடக்க ஆட்டக்காரரும், அதிரடி பேட்டருமான குர்பாஸ் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார்.
அதன்பின் வந்த ரஹ்மத் ஷா, இப்ராஹிம் ஜாத்ரனுடன் சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவரான முதல் 10ஓவர்களில் ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
பேட்டிங்கில் ஒழுக்கம்
ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஜாத்ரன், ரஹ்மத் ஷா இருவரும் மிகுந்த ஒழுக்கத்துடன் ஷாட்களை ஆடினர். எந்த தவறான ஷாட்களையும் ஆடி விக்கெட்டை இழக்க விரும்பாததால், இலங்கை பந்துவீச்சாளர்கள் நொந்துபோயினர்.
ஒருநாள் போட்டிக்கு ஏற்றார்போல் விக்கெட்டை ரொட்டேட் செய்தும், ஒருரன், இரு ரன்களாகச் சேர்த்தும் ஜாத்ரன், ரஹ்மத் இருவரும் ஆடி, ஸ்கோரை உயர்த்தினர். 10வது ஓவருக்குப்பின் 6 ஓவர்களாக பவுண்டரி ஏதும் அடிக்காமல் இருவரும் ரன்களைச் சேர்த்தனர்.
17-வது ஓவரில் மதுசங்கா பந்துவீச்சில் ஜாத்ரன் 39 ரன்களில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, ரஹ்மத் ஷாவுடன் சேர்ந்தார்.
வெற்றி மட்டுமே நோக்கம்
ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் வெற்றி மட்டுமே நோக்கமாகக் கருதி பேட் செய்ததால், தவறான எந்த ஷாட்களையும் ஆடவில்லை, அவசரப்பட்டு பெரிய ஷாட்களையும் ஆடாமல் ரன்களைச் சேர்த்தனர். இவர்களின் ஆட்டம் இலங்கை வீரர்களின் பொறுமையை கடுமையாகச் சோதித்தது. 20ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்தது, 22 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
மிகுந்த பொறுப்புடன் பேட் செய்த ரஹ்மத் ஷா 61 பந்துகளில் தனது 25-வது ஒருநாள் அரைசதத்தை நிறைவு செய்தார். ரஹ்மத் ஷா விக்கெட்டை வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்களும் பல்வேறு உத்திகளை கையாண்டு பந்துவீசியும் பலனில்லை.
இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறல்

பட மூலாதாரம், Getty Images
பவுன்ஸர்களாக வீசுவதற்கு ரஜிதா அழைக்கப்பட்டார். ரஜிதாவின் பவுன்ஸரில் சற்று திணறிய ரஹ்மத்ஷாவின் பலவீனத்தை தெரிந்து கொண்டனர். ரஜிதா வீசிய 28-வது ஓவரில், ரஹ்மத் ஷா 62 ரன்கள் சேர்த்தநிலையில் கருணாரத்னேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் வந்து, ஷாகிதியுடன் இணைந்தார். இருவரும் இலங்கை பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் விதத்தில் மிகுந்த ஒழுக்கத்துடன் ஷாட்களை ஆடி, விக்கெட் இழப்புக்கு வாய்பில்லாமல் பேட் செய்தனர். ஒரு ரன், 2ரன்கள் மட்டுமே சேர்த்து அற்புதமான பேட்டிங்கை ஆப்கான் வீரர்கள் வெளிப்படுத்தி, அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 40ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி நகர்ந்தது.
40ஓவர்களுக்குப்பின் டெத் ஓவரில் ஆப்கன் பேட்டர் ரன் சேர்க்கத் தொடங்கினர். இலங்கை பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம், ஷாகிதி, ஓமர்ஜாய் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.
ஹஸ்மத்துல்லா ஷாகிதி மதுசங்கா வீசிய 42-வது ஓவரில் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து, ஓமர்ஜாயும், 50 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி நோக்கி செலுத்தினர்.
இலங்கை தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் ஆப்கானிஸ்தான் பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஆப்கன் பேட்டர்களின் பொறுமையான நிதானமான பேட்டிங்கால் இலங்கை பந்துவீச்சில் ஒரு விதமான சோர்வு வரத் தொடங்கியது.
ஷாகிதி, ஓமர்ஜாய் ஹீரோக்கள்
42பந்துகளில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆப்கன் பேட்டர்கள் ரன் சேர்க்கும் கியரை மாற்றினர். சமீரா வீசிய 44-வது ஓவரில் 2 பவுண்டரிகளை அசமத்துல்லா விளாசினார். அதன்பின் இருவரும் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 45.2 ஓவர்களில் வெற்றிக்குத் தேவையான 242 ரன்களைச் சேர்த்து ஆப்கானிஸ்தான் அணி வென்றது.
கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி 58 ரன்களிலும், ஓமர்ஜாய் 73 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை தரப்பில் மதுசங்கா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்திய ரசிகர்கள் பற்றிக் கூறியது என்ன?
போட்டிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி, "விளையாட்டை வெற்றிகரமாக முடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வரவிருக்கும் ஆட்டங்களில் அதைத் தொடர முயற்சிப்பேன். ரஷீத் கான் சிறந்த வீரர். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். அவரைச் சுற்றி ஆற்றல் நிறைந்துள்ளது. எங்கள் நாட்டுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை ஆதரித்து மைதானங்களுக்கு வரும் இந்திய மக்களுக்கு நன்றி." என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












