'பிரேமம் போலவே லியோ படத்திலும் எனக்கு நடந்தது' - மடோனா செபாஸ்டியன்

லியோ- மடோனா செபாஸ்டியன்

பட மூலாதாரம், madonnasebastianofficial@instagram

    • எழுதியவர், ஹேமா ராகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் எலிசா தாஸ் என்கிற கதாபாத்திரம் மூலம் மக்களை கவர்ந்திருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன். பிபிசி தமிழுக்காக பல்வேறு தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். பேட்டியிலிருந்து:

கேள்வி: லியோ திரைப்படத்தில் “எலிசா தாஸ் ” என்கின்ற கதாபாத்திரம் படம் வெளியாவதற்கு முன்பு கூட எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. சஸ்பென்ஸ் ஆக இருக்க வேண்டும் என்று இப்படி செய்தார்களா ?

பதில்: ஆம். என்னுடைய கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக தான் வைத்திருந்தார்கள். படக்குழுவினர் என்னிடம், இதை நீங்கள் சஸ்பென்சாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கதையின் முக்கியத்துவம் அறிந்து இந்த கதாபாத்திரத்தை நாம் வெளியே சொல்லக்கூடாது என்று நினைத்தேன். நானும் யாரிடத்திலும் இந்த கதாபாத்திரம் குறித்து தெரிவிக்கவில்லை.

கேள்வி: “எலிசா தாஸ் ”கதாபாத்திரம் மக்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது ?

பதில்: படம் வெளியான முதல் நாள் காலை 5.56 மணிக்கே எனக்கு டெக்ஸ்ட் மெசேஜ்கள் வர தொடங்கிவிட்டன . நான் கூட , படம் முடிந்து 9 மணிக்கு பிறகு தான் என்னை அழைத்து பேசுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே எனக்கு பல பேரிடமிருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்த இயக்குனருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என்னால் இந்த கதாபாத்திரத்தை சரியாக செய்ய முடியுமா என்று நினைத்திருந்தேன். இந்த வாய்ப்பு எனக்கு மேலும் மெருகேற்றி இருக்கிறது.

லியோ- மடோனா செபாஸ்டியன்

பட மூலாதாரம், Madonna Sebastian

கேள்வி: பட குழுவினர் படம் குறித்து பல்வேறு இடங்களில் பிரமோஷன் மேடைகளில் பேசும்போது உங்களுடைய கதாபாத்திரம் குறித்து எங்கேயும் தெரிவிக்கவில்லை . அந்த சமயத்தில் உங்களுக்கு அது வருத்தமாக இருந்ததா ?

பதில்: நிச்சயமாக இல்லை, ஏனென்றால் இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து நான் ஏற்கனவே அறிந்திருந்தேன் . என்னுடைய முதல் படமான பிரேமம் படத்திலும் இதுதான் நடந்தது . பிரேமம் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தோ அதனுடைய முக்கியத்துவம் குறித்தோ பிரமோஷன் மேடைகளில் எங்கும் நாங்கள் பேசமாட்டோம் ,போஸ்டரில் கூட நீங்கள் வர மாட்டீர்கள் என அந்த படக்குழுவினர் சொன்னார்கள். ஆனால் படம் வந்த பிறகு என்னுடைய கதாபாத்திரம் கொண்டாடப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது . அதேபோல் லியோ படத்திலும் நான் நடித்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் படம் வெளியான பிறகு மக்கள் கொடுக்கும் வரவேற்பில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

கேள்வி: நடிகர் விஜயுடன் ஆயிரம் பேரோடு நடனம் ஆடிய தருணம் எப்படி இருந்தது ?

பதில்: நடனத்திற்கான அசைவுகளை சொல்லிக் கொடுக்கும் போதே, நீங்கள் சரியாக ஆட வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு மிகவும் டென்ஷன் ஆக தான் இருந்தது. ஆனால் அந்த டென்ஷனை மனதிற்குள் நான் ஏற்றிக் கொள்ளவில்லை. எப்படியாவது இந்த நடனத்தை நான் சரியாக ஆடி முடிக்க வேண்டும் என என்னுடைய மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். எல்லாம் சரியாக நடந்து முடிந்திருக்கிறது.

லியோ- மடோனா செபாஸ்டியன்

கேள்வி: எலிசா தாஸ் கதாபாத்திரம் குறித்து நடிகர் விஜய் உங்களிடம் ஏதாவது சொன்னாரா ?

பதில்: முதல் நாளே அது குறித்து அவர் என்னிடத்தில் பேசினார். எலிசா தாஸ் கதாபாத்திரத்தை யார் செய்தால் நன்றாக இருக்கும் என பல பேரை தேடிக் கொண்டிருந்தபோது இறுதியாக நீங்கள் செய்தால் அது சரியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம் என்று அவர் கூறினார்.

கேள்வி: நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது ?

பதில்: எனக்கு போக்கிரி மற்றும் அழகிய தமிழ் மகன் திரைப்படம் மிகவும் பிடிக்கும்

கேள்வி: தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் முதல் இப்போது நடிகர் விஜயுடன் நடிப்பு உங்களுடைய திரை பயணம் எப்படி இருக்கிறது?

பதில்: இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தான் இந்த துறைக்குள் நுழைந்தேன். பிறகு தான் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான வேலையை பார்த்தேன். பிறகு பட வாய்ப்புகள் தானாக வந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக திரைத்துறைக்குள் இருக்கிறேன். முதல் படத்தில் நான் என்னுடைய வேலைக்கு கொடுத்த அர்ப்பணிப்பை விட கடந்த எட்டு ஆண்டுகளில் என்னுடைய வேலைக்கான அர்பணிப்பு என்பது அதிகமாக இருக்கிறது . இதைத்தான் இந்த எட்டு ஆண்டுகளில் நான் திரைத்துறையில் கற்றுக் கொண்டேன்.

லியோ- மடோனா செபாஸ்டியன்

பட மூலாதாரம், Studio Green, Abi & Abi Pictures, Thirukumaran Entertainment, Aadnah Arts

கேள்வி: லியோ திரைப்படத்தின் மூலமாக உங்களுடைய ‘கம் பேக்’ எப்படி இருக்கிறது ?

பதில்: தமிழில் முதலில் நடிகர் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் நடித்தேன். இந்த படக்குழு எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இசை பயணத்தின் மூலமாக திரைப்படத்துறைக்கு வந்தவள் நான். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த துறை மீதான அர்ப்பணிப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது. இந்த துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் . அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் . துறையில் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. சரியான நபர்கள் என்னை, என் நடிப்பை கண்டறிய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். நான் அதற்காகவே காத்திருக்கிறேன்.

கேள்வி:நடிகர் விஜய் சேதுபதி உடன் மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா ?

பதில்: நான் அதை திட்டமிட முடியாத, ஆனால் நான் காத்திருக்கிறேன். ஒரு நல்ல வாய்ப்பு வந்தால் நிச்சயம் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்போம். எங்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சினிமாவில் நன்றாகவே இருக்கிறது.

லியோ- மடோனா செபாஸ்டியன்

பட மூலாதாரம், Madonna Sebastian

கேள்வி: பிரேமம் படத்தில் செலின், கககபோ படத்துல யாழினி, பவர் பாண்டி படத்தில் பூந்தென்றல், இப்போது லியோ மூலமா எலிசா தாஸ்.. இதில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது ? எதில் நடித்த போது உங்களுடைய நிஜ வாழ்க்கை கேரக்டர் போல இருந்தது ?

பதில்: தமிழில் நான் நடித்த முதல் திரைப்படமான காதலும் கடந்து போகும் திரைப்படமே அப்படித்தான் இருந்தது. படத்தில் இருந்த கதாபாத்திரத்தில் என்ன பாடி லாங்குவேஜ் இருந்ததோ அது என்னுடைய ஒரிஜினல் பாடி லாங்குவேஜ் தான்.

கேள்வி: எலிசா தாஸ் போன்ற ஒரு கேமியோ ரோலில், நடிகர் அஜித் உடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா ?

பதில்: மடோனா செபாஸ்டியன், எப்போதும் கேமியோ ரோல், மட்டுமே செய்வார் என்கின்ற எண்ணம் மக்களிடத்தில் வந்து விடக்கூடாது என்று ஆண்டவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அஜித்துடன் இணைந்து நடிப்பேன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)