பாகிஸ்தான் தோல்விக்குப் பிறகு டிரெண்டாகும் தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜின் 'இந்து' அடையாளம்

பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) சென்னயில் நடைபெற்ற உலகக்கோப்பையின் 26வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 47.2 ஓவர்களில் 16 பந்துகள் மீதமுள்ள நிலையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோரை துரத்திய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த ஆட்டம், கடைசி பந்து வரை பரபரப்பாகச் சென்றது. தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 93 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் குவித்தார்.
கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரேஸ் ஷம்சி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆனால் போட்டி முடிந்ததும், தென் ஆப்பிரிக்க வீரரான கேசவ் மகாராஜின் புகைப்படங்களும் அவரது கிரிக்கெட் பேட்டின் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.
இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினையும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் தாக்கும் வகையிலும் சில பதிவுகள் காணப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் இந்த விஷயம் குறித்து என்ன பேசப்படுகிறது?
இறுதிவரை விலகாத சுவாரஸ்யம்
தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது, பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவூப் தான் வீசிய பந்திலேயே என்டிகியின் கேட்சை பிடித்து ஆட்டத்தில் பாகிஸ்தானின் பிடியை தக்க வைத்தார்.
தென் ஆப்பிரிக்காவின் கைகளில் இருந்து வெற்றி நழுவிவிட்டதாகத் தோன்றியது. ஆனால் கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி இடையிலான கூட்டணி வேலை செய்தது.
இருவரின் கூட்டணியில் எடுக்கப்பட்ட ரன்கள் வெறும் 11 மட்டுமே. ஆனால் கேசவ் மகாராஜ் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு திரில்லான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாகிவிட்டது.
கடந்த 24 ஆண்டுகளில், தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையின் எந்தவொரு வடிவத்திலும் பாகிஸ்தானை தோற்கடிக்க முடியவில்லை. 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்துள்ள தற்போதைய வெற்றியைத் தொடர்ந்து கேசவ் மகாராஜ் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
யார் இந்த கேசவ் மகாராஜ்?
இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜின் முழுப் பெயர் கேசவ் ஆத்மானந்த் மகாராஜ்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முறையாக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய கேசவ் மகாராஜ், 2018ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில், அவரது அணியால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, ‘கேசவ் மகாராஜின் குடும்பம் உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர்கள்’ என்று சமூக ஊடக பக்கத்தில் எழுதினார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு, கேசவ் மகாராஜ் கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் முன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். வெள்ளிக்கிழமை போட்டிக்குப் பிறகு அவரது இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இவர் அனுமனின் பக்தர் என்றும் பேசப்படுகிறது. கேசவ் மகாராஜ் தனது சமூக ஊடக சுயவிவரத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்’ ம்ற்றும் ‘ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என்று எழுதியுள்ளார்.
அவரது பல பதிவுகளில், 'ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். அவரே தான் கடவுல் நம்பிக்கை கொண்டவர் என்று சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
கேசவ் மகராஜின் ‘இந்து’ அடையாளம்
இது தவிர, 2016ஆம் ஆண்டு, தனது சமூக ஊடகப் பக்கத்தில் ராமரின் படத்தைப் பகிர்ந்து, "ராமரின் பெயரைப் பாடாதவர்கள் உயிருடன் இறந்துவிடுகிறார்கள், ராமரின் பெயரைப் பாடுபவர்கள் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்," என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது அவரது இந்தப் பதிவை சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தாலும் கேசவ் மகாராஜ் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார் என்று மக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

பட மூலாதாரம், X/TheJaipurDialogues
அதேபோல் மிகவும் விவாதிக்கப்படும் மற்றொரு விஷயம் அவரது கிரிக்கெட் பேட். அதில் ‘ஓம்’ என்று எழுதப்பட்டுள்ளது. அவரது சமூக ஊடக பதிவுகளில் உள்ள சில படங்களிலும் இது தென்படுகிறது.
தி ஜெய்ப்பூர் டயலாக்ஸ் என்ற பெயரில் எக்ஸ் சமூக ஊடக பக்கம் ஒன்று "கேசவ் மகாராஜ் தனது ‘ஓம்’ என்று எழுதியிருக்கும் பேட்டை வைத்து உலகக்கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தார்," என்று எழுதியிருக்கிறது.
மிஸ்டர் சின்ஹா என்ற மற்றொரு எக்ஸ் பயனர், "கேசவ் மகாராஜின் பேட்டில் ஓம் என்று எழுதப்பட்டிருக்கிறது, பாகிஸ்தானால் அவரை பெவிலியனுக்கு அனுப்ப முடியாமல் போனதில் ஆச்சரியமில்லை," என்று பதிவிட்டிருக்கிறார்.
சஷாங்க் சேகர் ஜா என்பவர், "உலகக்கோப்பை போட்டியில், ஒரு இந்துவான கேசவ் மகாராஜ், பாகிஸ்தானின் இஸ்லாமிய அணியை தோற்கடித்தார்," என்று பதிவிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், ShashankShekarJha
உதயநிதி ஸ்டாலினை தாக்கும் பதிவு
பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் உறுப்பினருமான முகமது கைஃப் , "உலகக்கோப்பையில், அசாதாரண பேட்ஸ்மேன்கள் அல்ல, அசாதாரண வீரர்கள்தான் உங்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். என்ன ஒரு சிறந்த ஃபினிஷர்! ஜெய் கேசவ் மகாராஜ்," என்று எழுதியிருக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சிக்கும் வகையில் துருவ் திரிபாதி என்ற எக்ஸ் பயனர், "ஒரு இந்துவான கேசவ் மகாராஜ் பாகிஸ்தானை தோற்கடித்திருக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கும் அவரது மகனுக்கும் ஆழ்ந்த இரங்கல்," என்று பதிவிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், X/DhruvTripathi
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், கொசுக்கள், டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா வைரஸ் போன்று அதையும் ஒழிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தது சர்ச்சையானது.
அவரது கருத்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பா.ஜ.க உட்பட பல வட்டாரங்களில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கோரப்பட்டது.
இருப்பினும், இந்த விஷயத்தில் அவரது தந்தை மு.க.ஸ்டாலின் அவருக்கு ஆதரவளித்தார். மேலும் மோதி அரசு முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்புகிறது என்றும் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் நிலை என்ன?
இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில், “போட்டியைப் பார்த்து எனக்கும் வருத்தமாக இருக்கிறது. தோல்வி என்றால் என்னவென்று எனக்குப் புரிகிறது. ஆனால் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை விளையாடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
மேலும் “அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். நம்மால் முடிந்தவரை முயன்றுள்ளோம். ஆனால் வெற்றி பெற முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது,” என்றார்.
தற்போது ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தியா 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி நான்கு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் சென்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
அதேநேரம் தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












