கோபம் வரும் நேரத்தில் அழுகை வருகிறதா? - நிபுணர் கூறும் காரணம்

கோபமும் அழுகையும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

“எனக்கு கோவம் வந்துச்சுன்னா, என்ன பண்ணுவேன்னு தெரியுமுல்ல? அழுது போடுவேன் அழுது”

சதி லீலாவதி படத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசிய நகைச்சுவையான வசனம் இது.

உண்மையில் இந்தக் காட்சி சிரிப்பூட்டினாலும், பலருக்கும் கோபம் வரும்போது, அது அழுகையாக மட்டுமே வெளிப்படும். இதனால் அவர்கள் இழப்பதும் பெறுவதும் என்ன என்று பார்க்கலாம்.

ஸ்வாதி ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். பரமசாது. கிட்டத்தட்ட சதிலீலாவதி கமலின் கதாப்பாத்திரம் போன்றுதான் அவரும். அவர் ஒரு நாள் தன் வீட்டில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். பிராஜக்டின் இறுதிக்கட்டத்தை மும்முரமாக நெருங்கிக் கொண்டிருந்தார்.

அவர் தனது அதிகாரிக்கு இ-மெயில் அனுப்ப வேண்டிய நேரம்வேறு நெருங்கி விட்டது. ஆனால் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அவரது கணவர் எழிலோ, ‘எழுந்து வந்து சாப்பாடு பரிமாறு“ என அதட்டலாகக் கூற “நீங்களே, போட்டு சாப்பிடுங்களேன்?. எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என பதிலளித்தார் ஸ்வாதி.

கடும் பசியில் இருந்த எழிலோ, ‘புருஷனுக்கு சோறு போடுவதை விட அப்படி என்ன முக்கியமான வேலை? எனக் கேட்டு ஸ்வாதிக்கு அலுவலகத்தில் கொடுத்த லேப்டாப்பைத் தூக்கி சுவற்றில் அடித்து உடைத்தார். ஒவ்வொரு பாகமாகக் கழன்று விழ, ஸ்வாதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமா நடந்துக்குறீங்க?“ எனக் கேட்க வாய் துடித்தது. நீராவி ரயிலின் புகை போல குப், குப்பென பெருமூச்சு விட்டபடி கோபம் கொப்பளித்தது. தனது இதயத்துடிப்பு, காதில் கேட்டது. ஆனால், பேசுவதற்காக நிறைய நியாயமான விவாதங்கள் இருந்தும், கண்களில் தாரை தாரையாகத் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்க, பேச்சற்று ஓரிடத்தில் அமர்ந்தார்.

நியாயமாகப் பார்த்தால் ஸ்வாதி தன் கோபத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரால் அழுவதைத் தவிர வேறு ஏதும் செய்யமுடியவில்லை. காரணம் தன் கணவர் கோபம் வந்தால் மிருகத்தை விட மோசமானவராக மாறிவிடுவார். கர்ப்பிணி என்றும் பாராமல் மணிக்கணக்கில் போட்டு அடிப்பார். தானும் கத்தினாலோ, சண்டையிட்டாலோ அதனால் விளையும் சண்டையில் தன் குழந்தையும் சேர்ந்து பாதிக்கும் என்பது ஸ்வாதிக்கு நன்கு தெரியும்.

கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஏற்கெனவே பலமுறை நடந்ததுபோல் இதய நோயாளியான ஆன தன் தந்தைக்கு போன் செய்வதாக பிளாக்மெயில் செய்வார் எழில். “உங்க வாழாவெட்டி மகள வந்து கூட்டிட்டுப் போயிருங்க“ எனக் கூறிவிடுவேன் என்று மிரட்டுவார்.

கராத்தேவில் பிளேக் பெல்ட்டே வாங்கியிருந்தாலும்கூட, இப்படி ஒரு சூழலில், தான் அடங்கிப் போவதுதான் நல்லது என்பது ஸ்வாதி எடுத்த முடிவு. ஆனால் பீறிட்டு வரும் தனது கோபத்தை வெளிக்காட்டமுடியாத கையாலாகாத நிலை தன் மீதே தனக்கு கோபத்தை ஏற்படுத்தி அவரை அழவும் வைத்துவிட்டது.

இதுபோல் உங்கள் வாழ்விலும் சில சூழல் வந்திருக்கலாம். அந்த நேரம் உங்களுக்கு நடந்தது அநியாயமாகவே இருக்கலாம். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் நீங்கள் சிக்கியிருக்கலாம். உங்கள் முகம் கோபத்தில் சிவந்தபோதும், வார்த்தை தொண்டையை அடைத்தபோதும், அழுவது மட்டும்தான் உங்களிடம் இருந்து அந்த அநீதிக்குக் கொடுக்கும் ஒரே பதிலாக இருந்திருக்கும். இந்த உணர்வுகளை பலர் தங்கள் வாழ்வில் அனுபவித்திருப்பார்கள்.

ஆம், சோகம், இழப்பு, வருத்தம், கவலை மட்டுமின்றி கோபத்திலும் சிலருக்கு அழுகை வரும். சந்தோஷத்தில் கண்ணீர் விடுவதுபோல இதுவும் ஒரு வகையான உணர்ச்சியின் வெளிப்பாடுதான். ஆனால், இவ்வாறு கோபத்தில் அழும் மனிதர்கள் சண்டையிலோ, விவாதத்திலோ ஜெயிப்பது அரிது என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

“கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுபவர்கள் தங்களை சக்தியற்றவராக உணர்கின்றனர். அவர்கள் இன்னொருவரை எதிர்த்து தன் உணர்வுகளை சொல்லமுடியாத நிலையில் இருப்பார்கள். இதற்கு ஆங்கிலத்தில் பாசிவ் பர்சனாலிடி எனச் சொல்கிறோம். சுருக்கமாக சொன்னால் சாது. அவர்கள் வலியைப் பொறுத்துக் கொள்வார்கள். மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள். நட்பையோ, உறவையோ இழந்துவிடாமல் இருக்க அவர்கள் விவாதம் செய்வதைத் தவிர்ப்பார்கள்” என விளக்கினார்.

கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இரண்டு வகையான கோபம்

கோபத்தின் வகைகளையும் விளக்கினார் மருத்துவர் சித்ரா அரவிந்த். “சுயமரியாதையைக் கெடுக்கும் வார்த்தைகளைக் கேட்டு, தான் அவமதிக்கப்படும்போது தனது தரப்பில் நியாயத்தை எடுத்துக்கூற முயலும் ஒரு மனிதனுக்கு வரும் கோபம் முதன்மையான கோபம். அதுவே மன அழுத்தம், பொது இடத்தில் அசிங்கப்படுதல், அநீதி இழைக்கப்படுதல், பசி, பயத்தில் வருவது இரண்டாம் வகையான கோபம்.” என்றார்.

நினைக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதபோது “நீங்கள் நடந்துகொள்வது பிடிக்கவில்லை, தவறாக இருக்கிறது“ என்பது போன்ற வார்த்தைகளை சொல்லமுடியாது தடைபோடுவதுதான் அழுகை. எனவே ஒரு உறவை இருகப்பற்றிப் பிடிக்க முயலும்போது பெண்களும், குழந்தைகளும்தான், கோபத்தில் அதிகம் அழுகிறார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

மௌன விவாதம்

கோபம்-அழுகையை அடுத்து அவர்களது மனநிலை வெறுமையாகிவிடும். அடுத்து பேச வார்த்தைகள் பீறிட்டு வந்தாலும், அந்த நியாய தர்மங்களை தனக்குள்ளேயே பேசி மூளைக்கும் – மனதுக்கும் உட்புற வாக்குவாதத்தை நடத்திக் கொண்டு இருப்பார்கள். உதாரணமாக, ஏதேனும் பழைய பிரச்னையைப் பற்றி கணவர் சத்தமாக கத்திப் பேசி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கான பதிலை வாய்விட்டுக் கூறாமல் தனக்குள்ளேயே கூறிக் கொள்வார்கள் சில பெண்கள்.

இது ஏன் என்றும் மருத்துவரிடம் விளக்கம் கேட்டது பிபிசி தமிழ். “மூளையின் முன்பகுதி அதாவது ‘ஃப்ரன்டல் லோப்‘ என்ற முன்பக்க நெற்றிக்குப் பின்னால் உள்ள மூளைப் பகுதியில்தான், சில நினைவுகள், ஒரு விஷயத்தை செயல்படுத்தும் திறமை, முடிவெடுக்கும் திறன், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவை இருக்கும். ஒருவர் கோபம் போன்ற உணர்ச்சி வயப்படும்போது மூளையின் அமிக்டலா (Amygdala) பகுதி அதிகம் வேலை செய்யும். அப்போது முன்பக்க நெற்றிப் பகுதியானது ஷட் டவுன் ஆனது போல் தற்காலிகமாக செயலற்றதாகிவிடும்.” என மருத்துவர் எடுத்துரைத்தார்.

ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல சாதுவுக்கும் புத்தி மட்டு

இதனால்தான் “ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு” என்றும் சொல்கிறார்களாம். எனவே, கோபம் மட்டுமின்றி எந்தவொரு உணர்ச்சிவயமான சூழலிலும் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தள்ளிப் போடுமாறு பெரியவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒரு சிலர் அழும்போது, முன்பக்க நெற்றியில் தானாக அடித்துக் கொண்டு அழுவதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

“தேர்வுக்கு நன்கு தயாராகிவிட்டு சென்ற மாணவன் கூட, பயம் என்ற உணர்ச்சிவயப்படுவதால், படித்த கேள்வியே வந்திருந்தாலும் பதில்கள் அனைத்தும் திடீரென மறந்து போய்விடுகிறது“ என்றும் தெளிவுபடுத்தினார்.

ஒரு சிலரோ கோபம் வந்தால், பின்விளைவுகள் பற்றி யோசிக்காது, படபடவென தகாத வார்த்தைகளை விடுவதற்குக் காரணமும் முன்பக்க மூளை ஒரு வடிகட்டி போல செயல்படத் தவறுவதுதான் என்றும் கூறினார். அனைத்தையும் பேசிவிட்டு “மூளையில்லாம பேசிட்டேன்” என மன்னிப்புக் கேட்பதும் ஃப்ரன்டல் லோப் என்ற சிந்திக்கும் திறன் ஷட் டவுன் ஆவதுதான் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

எனவே ஆத்திரக்காரர்கள் அதிகம் பேசி காயப்படுத்துவது, அடித்து கொடுமைப்படுத்துவது, மூளையில்லாமல் செயல்படுவது, கொலை செய்வது ஆகியவற்றுக்கும், சாதுவான ஆட்கள் பேச முடியாமல் போவதற்கும் முன்நெற்றிக்குப் பின்னால் உள்ள மூளை சற்று நேரம் செயலற்றுப் போவதே காரணம் என விளக்கினார்.

கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

அழுவதால் சாந்தமாகும் மனம்

ஒருவர் அழும்போது, ஆக்சிடாசின், புரொலாக்டின் என்ற இரு ரசாயனங்கள் சுரக்கும். இது அதிக படபடப்பாகத் துடிக்கும் அவர்களின் இதயத்துடிப்பின் வேகத்தைக் குறைத்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு இலகுவாக உணரவைக்க உதவும். அதனால்தான் அழுதபின் சிலர் ஆசுவாசம் அடைகின்றனர்.

கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சமூக சாபம்

ஆண் அழக்கூடாது என்பதுபோல், “இவ்வளவு கோபம் ஆகாது“ என சிறுவயதில் இருந்தே சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள், கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்வு.

அதை வெளிக்காட்டக்கூடாது என நினைத்து கோபம் வரும்போதெல்லாம் அதை அடக்க முயன்று தங்களை அறியாமல் அழுதுவிடுகிறார்கள். இதனால்தான் ஆண்களை விட பெண்களும் குழந்தைகளும் 4 மடங்கு அதிகம் அழுவதாக ஹெல்த்லைன் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கோபத்தின் போது உடலில் என்ன நடக்கும்?

ஒருவர் கோபத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, உடலில் பல்வேறு விசயங்கள் நடக்கும்.

  • மூளையின் Amygdala, Hypothalamus, pituitary gland பகுதிகள் அதிகமாக வேலை செய்யும்
  • Cortisol, Adrenaline என்ற மன அழுத்தத்துக்கான ஹார்மோன் அதிகம் சுரக்கும்.
  • இதயத்துடிப்பு அதிகரிக்கும்
  • ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்
  • உடல் சூடாக உணரலாம்
  • வாய் வறண்டு போகும்
  • உள்ளங்கை வியர்க்கலாம்
  • பார்வை குறுகலாம்
  • குறுகிய கால நினைவு இழப்பு வரலாம்
கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கோபத்தில் அழுதால் என்ன கிடைக்கும்?

கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் அழுபவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்னைகள் இல்லாவிட்டாலும் சமூகத்திலும் தன் மனதளவிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம்.

  • சமூகம் அவர்களை பாவமாகப் பார்க்கும். ஆனால், உண்மையில் அது அழும் நபருக்கு அவமானமாகவே தெரியும்.
  • சண்டைக்கு வந்தவர்கூட அழுவதைப் பார்த்து விட்டுவிட்டுப் போக வாய்ப்புள்ளது.
  • தனது தரப்பு நியாயத்தை சண்டையிடும்போதே கூறுவது என்பது பதிலுக்கு பதில் பேசுவதாக எதிராளியால் நினைக்கப்பட்டு சண்டையைப் பெரிதாக்கிவிடும்.
  • மனதில் நினைத்ததை எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் எனக் கொட்டித் தீர்க்காது இருக்கலாம்.
  • சண்டைக்கு நடுவில் ஒரு இடைவேளை எடுத்தால், என்ன நடக்கிறது என்பதை மூளைக்கு உணர்த்தும் வாய்ப்பு கிடைக்கும்.
  • கோபத்தின் விளைவாக கொலைகூட நடக்கும் எனில், கோபத்தில் அழுபவர்கள் அத்தகைய அசம்பாவிதத்தை செய்யும் வாய்ப்பு குறைவு. ஆனால் சாது மிரண்டால், காடு கொள்ளாது.
  • கோபத்தில் அழுதுவிட்டால், அந்த உணர்ச்சி அழுகை வழியே வெளியேறிவிடும். அவர்களது உடலுக்கு ஆபத்தாகிவிடாது.
  • ஆனால், கோபத்தையும் அடக்கி, எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பவர்கள் அந்த அழுத்ததினால் ரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை மூலம் உயிரிழப்புக்களுக்கு வழிவகுக்கலாம்.

கோபத்தில் அழுதால் என்ன இழப்பு?

சூழலை கையாள முடியாத ஆற்றாமையினால் கோபத்தை அழுகையாக வெளிப்படுத்துபவர்கள் பல விசயங்களை இழக்ககூடும்.

  • தன்னம்பிக்கை பறிபோகும்
  • சுயமரியாதை இழக்க நேரிடும்
  • கோபமும் அழுகையும் வந்தது பொது இடமாக இருந்தால் அவமானம் ஏற்படும்.
  • அழுமூஞ்சி, கோழை, பாவப்பட்ட ஜென்மம், பரிதாபம் தேடுபவர் என பெயர் வரலாம்
  • விவாதம் செய்யத் தெரியாத முட்டாளாக இருக்கலாம்
  • நியாயங்களை எடுத்து வைக்கத் தெரியாது, எனவே தொடர்ந்து அடிவாங்க நேரிடலாம்.
  • அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது தொடர்கதையாகிவிடும்
  • உறவு முறிந்துவிடும் என்ற பயத்தில் எதிர்த்து பேச முடியாது போகலாம்
  • கொடுமையை எதிர்க்கவோ, பொறுக்கவோ மனமின்றி உறவை விட்டு விலகியும் செல்லலாம்
  • சாதுவாக இருப்பவர்கள் அழுவதன்மூலம், அந்த உணர்ச்சி வெளிப்பட்டுவிட்டதாக நினைத்துவிடுவார்கள்.
  • ஆனால், மனிதர்களுக்கு அழுகையின் மொழி புரியாது. அந்த அநீதிக்கு அழுகை வெளிப்பட்டுவிட்டதால், அதுபற்றி தான் சண்டையிட்டவரிடம் ஏற்கெனவே மனதளவில் விவாதித்து விட்டதாக நினைப்பார்கள். சாதாரண மனநிலைக்கு சண்டையிட்ட நபர் வந்தபின்புகூட அதைப்பற்றி பேசமாட்டார்கள்.
  • பதற்றம், அதீதயோசனையால் மறதி அதிகமாகும்.

தீர்வு என்ன?

அழுதுவிட்டோமே என அவமானமாகக் கருதவேண்டாம். அது ஒரு இயற்கையான உணர்ச்சி, வெளிப்படுத்தாவிட்டால்தான் ஆபத்தாகும். அதேசமயம், பொதுஇடத்தில் கோபம் வரும்போது, அனைவர் முன்னிலையிலும் அழுதுவிட்டால் அது அவர்களுக்கு அசிங்கமாக உணரக்கூடும்.

  • கோபம் வரும் சூழல்களை அறிவது
  • கோபத்தில் அழுகை வந்த சூழல்களை ஒரு டைரியிலோ அல்லது போனிலோ குறித்து வைக்க வேண்டும்.
  • எந்தெந்த சூழலில், யார் அந்த கோபத்தைத் தூண்டி அழுகையாக மாற்றினார்கள் எனப் பார்க்க வேண்டும்.
  • இதுபோன்று ஜர்னலிங் என்ற பதிவை செய்வதன்மூலம் அடுத்த முறை அந்தக் கோபம் வரும்போது, அழுகைவந்தால் அதைக் கட்டுப்படுத்த முயலலாம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அதீத கோபம் யார் உடலுக்கும் மனதுக்கும் நல்லது அல்ல. எனவே கோபம் வரும் தருணத்திலேயே அதை கட்டுப்படுத்த வேண்டும் என உணர்ந்து சில விசயங்களை செய்யலாம்.

  • கோபம் வரும்போது ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும்.
  • அந்த இடத்தை விட்டு செல்வது நல்லது.
  • கோபத்தைத் தூண்டும் நபரிடம் இருந்து சற்று நேரம் விலகிச் செல்வது.
  • 100 முதல் 1 வரையோ, Z முதல் A வரையோ தலைகீழாக எண்ணலாம்.
  • ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.
  • யாரையேனும் திட்டி, எழுதி அந்த காகிதத்தை எரித்துப் போட்டுவிடலாம்.
  • தலையணையை அவர்கள் முகமாக நினைத்து குத்தி ஆத்திரத்தைத் தீர்க்கலாம்.
  • உடற்பயிற்சி செய்யலாம்.
  • மீண்டும் ஒரு குளியல் போடலாம்
  • குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடலாம்
  • சாமி கும்பிடுவது, தியானம் செய்வதும் கோபத்தைக் குறைக்கும்.
  • நீண்ட தூரம் தனியே மெதுவாக நடந்து செல்லலாம்.
  • நரம்புகளை அமைதிப்படுத்தும் வகையில் மெல்லிய இசை கேட்கலாம்.
கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

நியாயத்தைப் பேசக் கற்றுக் கொள்வது எப்படி?

தன் பக்கம் உள்ள நியாயமான கோபத்தை வெளிப்படுத்த முடியாமலே பலருக்கு அழுகை வருகிறது. தனது நியாயத்தை பேச இயல்பாக முடியவில்லை என்றால், அதனை பழகி கற்றுக் கொள்ள வேண்டும்.

  • சவுகர்யமான நாட்களில், உங்கள் தேவைகளை, நியாயங்களை எழுதி வைக்க வேண்டும்.
  • சண்டையிடுபவர் சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது, அன்று அவர் செய்தது தவறு என எடுத்துக் கூற வேண்டும்.
  • உங்களுக்கு வலித்தால் வலிக்கிறது என்று எடுத்துக் கூறக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • குழு விவாதங்களில் பங்கெடுத்துப் பழக வேண்டும்.
  • சண்டை, சச்சரவுகளில் பிறர் எப்படி பேசுகிறார் என உற்றுநோக்க வேண்டும்.

எப்போது மனநலமருத்துவரை அணுகவேண்டும்?

நிலைமை எப்போது கையை மீறி போகிறது என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் உள்ளன.

  • கோபம் உறவைக் கெடுக்கும் அளவு செல்லும்போது
  • உங்கள் உணர்வுகள் துளிகூட உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது
  • அனைவரும் இருக்கும் இடத்தில்கூட அழுகையை அடக்க முடியாதபோது
  • அந்த கோபமும், அழுகையும் உங்களை ஆட்கொண்டு உங்களைக் கையாளும்போது
  • தனிப்பட்ட வாழ்க்கையை நடத்த விடாது தொந்தரவு செய்யும்போது

இதுபோன்ற சூழல்களை எதிர்கொண்டால், கோபத்தைக் கட்டுப்படுத்துவது, உணர்ச்சியைக் கையாளுவது தொடர்பான ஆலோசனை, பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கலாம்.

கோபத்தில் அழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலும் இத்தகைய சாதுவானவர்களால் வீட்டிலோ, சமூகத்திலோ பிரச்னைகள் இருக்காது. எதையும் பொறுத்துப் போகிறார்கள் என்பதற்காக எல்லை மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் தங்கள் இயல்பை இழந்துவிடுவார்கள். ஒரு ரப்பர் பேண்டை அதிக தூரம் இழுத்தால் எப்படி அறுந்துவிடுமோ அப்படித்தான் இவர்களும். இழுக்கும் வரை அமைதிகாத்து ஓரிடத்தில் அறுந்துபோய்விடுவார்கள்.

3 நாட்களுக்கு மேல் உடல்நிலை சரியில்லை என்றால் எப்படி மருத்துவரை சென்று பார்க்கிறோமோ, அப்படித்தான் உளவியல், மனநல மருத்துவர்களும். பைத்தியம் பிடித்தவர்கள்தான் அவர்களிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்ற மனப்போங்கு அரதப் பழையது.

உடல் ஆரோக்யம் போன்றே மன ஆரோக்யமும் அவசியம். அதுதான் பெரும்பாலான மாரடைப்புக்களுக்கு காரணமாகி உயிரைப் பறிக்கிறது என்பதை நாம் ஏற்கெனவே இறந்த பலரது மரணத்திலும் கண் கூடாகப் பார்த்த பின்பும் கூட மன ஆரோக்யத்தைப் புறக்கணிப்பதில் பலன் இல்லை.

இலவச மனநல ஆலோசனைகளுக்கு 104 என்ற அரசின் மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)