ஃபார்முலா பாலில் மறைந்துள்ள ஆபத்து என்ன? இந்தியாவின் பாரம்பரிய முறை சிறந்ததா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஞ்சலி தாஸ்
- பதவி, பிபிசி இந்திக்காக
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் எம்.பி. லாரிசா வாட்டர்ஸ், தனது இரண்டு மாத மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தார். இது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறியது.
தாயின் பால் குழந்தைக்கு அமிர்தம் போன்றது என்று காலம் காலமாக கேள்விப்பட்டு வருகிறோம். பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு இது ’திரவ தங்கம்’ என்று கூறப்படுகிறது.
இது சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது. நோய்த்தொற்றுகளிலிருந்து மட்டுமல்ல, பல பொதுவான குழந்தை பருவ நோய்களிலிருந்தும் பாதுகாக்கும் ஆன்டிபாடிகளை இது கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, யூனிசெஃப் மற்றும் இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு தாய்ப்பாலில் இருந்து குழந்தைக்கு கொலஸ்ட்ரம் என்ற சிறப்பு வகை புரதச் சத்து கிடைக்கிறது. இது மிகவும் சத்தானது.
இருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.

பட மூலாதாரம், DR AIMEE GRANT
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு தாய் பலவீனத்திலிருந்து எளிதில் மீள முடிவதில்லை. அவருக்கு போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் தாக்கத்தால் பால் சுரப்பதும் குறைகிறது.
ஒவ்வொரு ஏழு தாய்மார்களில் ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் பலவீனம் காரணமாக குறைவான பாலே சுரக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில் அவர் தாய்ப்பாலையோ அல்லது ஃபார்முலா பாலையோ பாட்டில் மூலம் குழந்தைக்குக் கொடுக்கிறார்.
காரணம் எதுவாக இருந்தாலும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஃபார்முலா பால் கொடுக்கும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் பிறந்த குழந்தைக்கு பால் கலக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் போதுமான அளவு சூடுபடுத்தப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
ஃபார்முலா பாலில் மறைந்துள்ள ஆபத்து என்ன?
ஃபார்முலா பால் தயாரிக்கும் 85 சதவிகித இயந்திரங்களால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்ல முடிவதில்லை என்று சமீபத்திய ஆராய்ச்சி எச்சரித்தது.
குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் வெற்றியடையத் தவறியதை அறிந்து இந்த ஆய்வில் கலந்து கொண்ட தாய் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஃபார்முலா பால் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு பாலில் உள்ள இந்த பாக்டீரியாக்களால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் இந்த ஆராய்ச்சி காட்டுகிறது.
ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் இந்த ஆராய்ச்சியில் 69 பெற்றோர்கள் தண்ணீரை சூடாக்க கெட்டில்களைப் பயன்படுத்தினர். அதில் 22 சதவிகித பேரின் தண்ணீர் போதுமான அளவு சூடாகவில்லை.
"முதலில் என் மெஷினில் இருந்து தண்ணீரை சோதித்தபோது அது 52 டிகிரி செல்சியஸ் மட்டுமே சூடாக இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் இந்த மெஷின் தர நிர்ணய வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பிரத்யேகமாக குழந்தைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நான் கருதினேன்," என்று ஆய்வில் கலந்துகொண்ட குழந்தையின் தாய் ஜானி கூப்பர் கூறினார்.
குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க தண்ணீரில் பாக்டீரியா இல்லை என்பதை உறுதிப்படுத்த, உடனடி ஃபார்முலா தயாரிப்பின் போது குறைந்தபட்சம் 70 டிகிரிக்கு அதை சூடாக்கி, பின்னர் அதை குளிர்வித்து பயன்படுத்த வேண்டும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.
“மெஷினை வாங்கும்போது தண்ணீரின் வெப்பநிலையை சரிபார்த்த பிறகு வாங்குமாறு பெற்றோர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்” என்கிறார் ஜானி கூப்பர்.

பட மூலாதாரம், DR PRARTHANA
இந்தியாவின் பாரம்பரிய முறை சிறந்ததா?
இந்தியாவிலும் ஃபார்முலா பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ- காமர்ஸ் வலைத்தளங்களில் அதன் பல தயாரிப்புகள் கிடைக்கின்றன.
டாக்டர் பிரார்த்தனா, ஒடிஷாவில் உள்ள மகாநதி கோல்ஃபீல்டில் குழந்தை நல மருத்துவராக உள்ளார். இந்திய அரசாக இருந்தாலும் சரி, உலக சுகாதார அமைப்பாக இருந்தாலும் சரி, தாய்ப்பாலுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றே அறிவுறுத்துகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
"இருப்பினும், ஃபார்முலா பாலின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதாவது ஆரம்பத்தில் தாய்க்கு பால் அதிகமாக சுரக்காத போது குழந்தையின் வயிற்றை நிரப்பும் ஒரு மாற்று வழியாக அவர் ஃபார்முலா பாலை ஏற்றுக்கொள்கிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
"ஃபார்முலா பாலை கலப்பதற்காக இருந்தாலும் சரி, பால் பாட்டில்களை சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி, இரண்டு சந்தர்ப்பங்களிலும் தண்ணீரை அதிகபட்ச வெப்பநிலையில் சூடாக்கி, அது ஆறிய பிறகு அதைப் பயன்படுத்துங்கள். பாரம்பரியமாக இந்திய வீடுகளில் இப்படித்தான் செய்யப்படுகிறது,” என்று டாக்டர் பிரார்த்தனா குறிப்பிட்டார்.
"பிறந்த குழந்தையின் எந்த ஒரு பொருளையும் தொடுவதற்கு முன் உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள். இல்லையெனில் இது குழந்தைக்கு தொற்று அபாயத்தை அதிகரிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், TARULATA
ஃபார்முலா பாலுக்கான தண்ணீரின் வெப்பநிலை என்னவாக இருக்க வேண்டும்?
"ஃபார்முலா பாலுக்கான தண்ணீரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியசாக இருக்க வேண்டும். வெப்பநிலை பற்றி சந்தேகம் இருந்தால் அவர்கள் உணவு வெப்பமானியை வாங்கி சரிபார்க்கலாம்," என்று ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த டாக்டர் ஏமி கிராண்ட் கூறுகிறார்.
”இந்தியாவில் பெற்றோரால் வெப்பநிலையை மீண்டும்மீண்டும் சரிபார்க்க முடியாது. எனவே தண்ணீரை பயன்படுத்துவதற்கு முன் அதை அடுப்பில் வைத்து அதிகபட்ச வெப்பநிலை வரை சூடாக்க வேண்டும்,” என்று டாக்டர் பிரார்த்தனா கூறினார்.
தருல்தா 11 மாத குழந்தையின் தாய். அவருக்கு 10 வயதில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளார்.
”என் இரண்டு குழந்தைகளுக்கும் நான் தாய்ப்பால் கொடுத்துள்ளேன். இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்குகிறது. என் குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகின்றன. இன்று வரை தாய்ப்பால் கொடுக்கும் வலிமை என்னிடம் உள்ளது. அப்படி இருக்கும்போது நான் ஏன் ஃபார்முலா பால் கொடுக்கவேண்டும்? நான் இப்போதும் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன். குழந்தை ஆரோக்கியமாகவும் நன்றாகவும் வளர்ந்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
‘‘என் மகளுக்கு ஒரு வயதுக்கு மேல் ஆனபோது சில சமயங்களில் பாட்டிலில் பால் கொடுத்து வந்தேன். அந்த பாட்டில் சம்பந்தமான அனைத்தையும் கிருமியின்றி வைக்க சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டேன். இதற்கு நான் கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தினேன்,” என்று புதுச்சேரியைச் சேர்ந்த பிரதீபா அருண் கூறினார்.
”தாய்ப்பாலூட்டுவது குழந்தையோடு கூடவே தாய்க்கும் நன்மை பயக்கும். மூன்று வயது வரை நானும் தாய்ப்பாலையே குடித்தேன்" என்கிறார் தருல்தா.
தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால், ஃபார்முலா பால் ஒரு மாற்று. ஆனால் குழந்தையின் வயதுக்கு ஏற்ப இது மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டால் வேறு எந்த மாற்று வழியையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகவேண்டும் என்றும் WHO அறிவுறுத்துகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












