காஸாவில் வாழும் 23 லட்சம் பேரையும் ஒட்டுமொத்தமாக இடம் மாற்ற இஸ்ரேல் திட்டமா?

பட மூலாதாரம், Getty Images
காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், 2,329 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்கள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இஸ்ரேலில் இதுவரை 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதற்குப் பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, மேலும் தரைவழித் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவம் தரை, வான், மற்றும் கடல் வழித் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு என வேறு எந்த குறிப்பிட்ட தகவலையும் தெரிவிக்கவில்லை.
தரை வழியில் ஆக்ரோஷமான தாக்குதல் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யூ போர்க் களத்தில் உள்ள வீரர்களிடம், “அடுத்த கட்டம் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலத்தீனர்களை தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் கால்நடையாகவும் வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார நிறுவனம் இஸ்ரேலின் இந்த உத்தரவைக் கண்டித்துள்ளது. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை வெளியேறச் சொல்வது மரண தண்டனைக்கு சமம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், வடக்கு காசாவிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்துள்ளதை பிபிசி உறுதி செய்துள்ளது.
காஸா மக்களை பூண்டோடு இடம் மாற்ற இஸ்ரேல் திட்டமா?
காஸா மீது தரைவழியே படையெடுத்துச் சென்று ஹமாஸை பூண்டோடு அழிக்க திட்டமிடும் இஸ்ரேல், இந்த மோதலின் போது காசாவின் 23 லட்சம் மக்களையும் ஒட்டுமொத்தமாக எகிப்தின் சினாய் பாலைவனத்திற்கு மாற்ற இஸ்ரேல் விரும்புவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னதாக எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில், "காசாவில் இப்போது நடப்பது பொதுமக்களை தஞ்சம் புகுந்து எகிப்துக்கு இடம்பெயரச் செய்யும் முயற்சியாகும், இதை ஏற்கக் கூடாது" என்று கூறினார்.
இது நடந்தால், எகிப்திய மக்கள் "லட்சக்கணக்கில் வீதிக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கலாம்" என்று அவர் எச்சரித்தார்.
பாலஸ்தீனர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேறினால், அது பாலஸ்தீனர்களின் தனி நாடு நம்பிக்கையை "குலைத்துவிடும்" என்று எகிப்து ஏற்கனவே எச்சரித்துள்ளது.
ஆனால், அரபு நாடுகளில் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டக் கூடிய, அத்தகைய ஒப்பந்தத்திற்கு உடந்தையாக இருந்தால் அது எகிப்திய அரசாங்கத்திற்கு மிகவும் ஆபத்தானது.
எந்தவொரு மக்கள் வருகையும் எகிப்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் மற்றும் அதன் அமைதியற்ற சினாய் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சத்தை உருவாக்கும்.
காஸா இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாலஸ்தீனர்கள் ஹமாஸுக்கு எதிரான தாக்குதலின் போது "போராளிகளை சமாளிக்கும் வரை" இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்திற்கு மாற்றலாம் என்று சிசி பரிந்துரைத்தார்.
நூற்றுக்கணக்கான லாரிகள் உதவிப் பொருட்களுடன் வடக்கு சினாயில் குவிந்துள்ளன, இது எகிப்தின் ரஃபா வழியாக காசாவிற்கு அனுப்ப அனுமதிக்கும் ஒப்பந்தத்திற்காக காத்திருக்கிறது.
இது பாலஸ்தீன மக்கள் வெளியேறுவதற்கான ஒரே பாதையாகும், இது இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் அதை திறக்க அனுமதிக்க இஸ்ரேலின் ஒப்புதல் தேவைப்படும். சமீபத்திய நாட்களில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு இது நான்கு முறை இலக்காகியுள்ளது-
'நாங்கள் விலங்குகள் அல்ல, மனிதர்கள்'
முகமது மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகளுடன் தெற்கு காசாவில் உள்ள மகசி முகாமை வெள்ளிக்கிழமை சென்றடைந்தனர். எனினும் அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை.
அவர், “கையறு நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு ஆறுதலே இல்லை” என்று பிபிசியிடம் கூறினார். “நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. வேறு இடத்துக்குச் செல்வதுகூட பாதுகாப்பானதாக இல்லை,” என்றார். 31 வயதான முகமது, கடந்த மூன்று நாட்களை விவரிக்கவே முடியாது என்றார்.
“நாங்கள் இரு புறமும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் பணயக் கைதிகளாக உள்ளோம்,” என அவர் கூறினார்.
காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து தெற்குப் பகுதிக்கு எத்தனை பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பிரதேசத்திற்குள் இயங்கும் ஐக்கிய நாடுகள் நிவாரண நிறுவனத்தின் கூற்றுப்படி, இது "ஒரு வெளியேற்றம்."

காஸா மக்கள் வெளியேற 3 மணிநேரம் அவகாசம்
காசா மக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம் மூன்று மணி நேரங்களுக்கு திறந்திருக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இன்னமும் இருப்பவர்கள், அவர்கள் நேரப்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளது.
பெய்ட் ஹனூன் பகுதியிலிருந்து கான் யூனிஸ் பகுதிக்கு செல்லும் நேரடி வழியாக மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த வழித்தடத்தில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸா மக்கள் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கூறும் இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களில் மக்களுக்கான காலக்கெடுவை மாற்றிக்கொண்டே வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தபோது 24 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறியது. அப்போது இரண்டு வழித்தடங்களில் செல்லலாம் என்று கூறியது. எனினும் வெளியேறிக் கொண்டிருந்த மக்கள் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது.
காத்திருக்கும் நிவாரண வாகனங்கள்

முன்னதாக ஐ.நாவின் நிவாரண நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான ஜூலியட் டுமா பிபிசியிடம் பேசியபோது, "இது நாங்கள் இதுவரை கண்டதிலேயே மிகவும் மோசமானது. இது காஸா மக்களை பள்ளத்தில் தள்ளப்படுவதைப் போன்றது. உலகின் கண் முன்னாலேயே இது நடந்து கொண்டிருக்கிறது," என்றார்.
மேலும் அவர், "களத்தில் உள்ள சக ஊழியர்களின் கூற்றுப்படி, ஒரு மிகப்பெரிய வெளியேற்றம் நடைபெற்று வருகிறது. மக்கள் அங்கிருந்து காலி செய்கிறார்கள். தங்கள் கார்களுடன் செல்ல முடிபவர்கள் செல்கிறார்கள், சிலர் நடந்து செல்கிறார்கள், சிலர் படுக்கைகளை எடுத்துச் செல்கிறார்கள்"
"மக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
மற்றொரு புறம், எகிப்து எல்லையில் நிவாரணங்கள் வழங்க வந்துள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளைக் காண முடிகிறது.
எகிப்து மற்றும் துருக்கியில் இருந்து வந்துள்ள நிவாரண வாகனங்கள் ஆரிஷ் நகரத்தில் எல்லை அருகே காத்துக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் காரணமாக பாலத்தீன எல்லைப்பகுதி சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் காஸாவிலிருந்து உள்ளேயும் வெளியேயும் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
காசாவை தரை, வான், கடல் வழியே தாக்கத் தயாராகும் இஸ்ரேல்

காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கத் தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "லட்சக்கணக்கான ரிசர்வ் படை வீரர்கள் உதவியுடன் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறோம். அதற்குத் தேவையான அத்தியாவசியமான தளவாடங்கள் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
நாடு முழுவதும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளர்," என்று கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதலால் காசாவில் பதற்றம்
கடந்த 7 அக்டோபர் 2023 அன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்தில் ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் அதே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நாட்டிற்குள்ளும் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 150 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து காசாவுக்கு அவர்கள் கடத்திச் சென்றனர்.
போருக்குத் தயார் நிலைப் பிரகடனத்தை இஸ்ரேல் பிறப்பித்ததுடன் உடனடி தாக்குதலையும் தொடங்கியது. இஸ்ரேலுக்கு உதவும் விதத்தில் அமெரிக்கா ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலையும் அனுப்பிவைத்தது. தாக்குதல் தொடங்கி ஒருவாரம் கடந்துவிட்டது. இந்தப் போரில் கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3,38,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வடக்கு காசாவில் வசிக்கும் 11 லட்சம் பாலத்தீனர்களை தெற்கு நோக்கி பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இந்த எச்சரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளதால் பொதுமக்களிடையே பீதி உருவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை பத்து மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே இவ்வாறு பொதுமக்கள் இடம்பெயரவேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியது. பொதுமக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில் ஏராளமான பொதுமக்கள் வாகனங்கள் மூலமாகவோ அல்லது கால்நடையாகவோ இன்னும் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், இப்படி பொதுமக்களை இடம்பெயரச் செய்வது மிகவும் ஆபத்தானது என்றும், மனிதாபிமான உணர்வுடன் இந்நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வடக்கு காசாவில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் இஸ்ரேலின் உத்தரவை "அமல்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றது" என்று கூறினார்.
"காசாவைப் போன்ற ஒரு இடத்தில் 24 மணி நேரத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற முடியும் என்பதை கற்பனை செய்யக் கூட முடியாது என்றும் இது ஒரு மனிதாபிமற்ற நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்த போதிலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பின்பற்றுவதும் கடமையாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாதி, பாலத்தீனர்களை இப்படி இடப்பெயர்ச்சி செய்ய முயலும் இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கையும் அந்தப் பகுதியில் ஒரு பெரும் மோதலுக்கு வித்திடும்" என்று கூறினார்.
ஒரு அறிக்கையில், காசாவுக்கான மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பதும், வடக்கில் உள்ள குடிமக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவும் சர்வதேச சட்டத்தை "அப்பட்டமான" மீறுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
காசாவின் வடபகுதியில் இருந்து இடம்பெயர்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
ஆன் அபு ஷரர் என்பவருடைய மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த இடம்பெயரும் செயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. "எனது மனைவிக்கு இன்னும் 5 நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளது," என 29 வயது நிரம்பிய வழக்கறிஞர் ஆன் அபு ஷரர் வேதனையுடன் பிபிசிடம் தெரிவித்தார். "அவர் சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தையைப் பெற்றெருக்க ஒரு நல்ல மருத்துவமனையைக் கண்டறியும் தேவையில் இருக்கிறேன்."
இந்த தம்பதிக்கு, இஸ்ரேல் அரசின் உத்தரவு குறித்து வியாழக்கிழமையன்று இரவு தான் தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் காசாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றாலும், உறவினர்கள் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. வாகனங்களிலும், கால்நடையாகவும் தெற்கு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்களுடன் அவர்களும் இணைந்துகொண்டனர்.
அதனால் வெறும் இரண்டு மணிநேரத்தில் ஒரு குழந்தைக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் கிளம்பிவிட்டனர். "நாங்கள் எங்கள் வீட்டை விட்டு அவசரஅவசரமாக வெளியேறினோம். ஆனால் நாங்கள் எங்கே போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எந்த ஒரு ஏற்பாட்டையும் செய்யமுடியவில்லை என்பது மட்டுமல்ல, எந்த இடமும் பாதுகாப்பான இடமாகத் தெரியவில்லை," என அவர் நடுங்கும் குரலில் தெரிவித்தார்.
இப்போது அவர்கள் தெற்கு நகரமான ரஃபாவை அடைந்துள்ளனர். அங்குதான் ஏற்கெனவே இடம்பெயர்ந்து வந்த பாலத்தீன மக்கள் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியுள்ளனர். ரஃபாவில் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவமனை இருப்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் விதித்துள்ள கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்று காசா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
புகலிடம் தேடிச் சென்ற காசா மக்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இடம் பெயர்ந்த தெற்கு காசா நோக்கி இடம் பெயர்ந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடந்தது. அந்த வாகனத்தில் சுமார் 30 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
உயிர் பிழைக்க பாதுகாப்பான இடம் தேடிச் சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என்று பாலத்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் அரசோ, அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
இப்படி இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களில் பலர் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். வரௌண்ட் அல்-டாகஃப் என்ற 24 வயது மாணவி, தனது குடும்பத்தினர் 7 பேருடன் இணைந்து தெற்கு பகுதிக்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குடும்பத்தினர் இப்போது டெயர் அல்-பாலா நகரில் ஒரே வீட்டில் 20 பேர் வசிக்கும் இடத்தில் தங்கியுள்ளனர். “நாங்கள் அமர்வதற்கு ஒரு சேர் கூட இங்கில்லை. என்னுடைய வீட்டை விட்டு வெளியேறி இப்படித் தவிப்பதை எப்படி விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார் அவர்.
எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை
காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில், அங்கு எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை இந்த முற்றுகை நீடிக்கும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக முற்றுகையைத் திரும்பப் பெறுமாறு ஐ.நா. சபை இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
காசாவுடனான இஸ்ரேல் எல்லையில் சுமார் 3,00,000 பாதுகாப்பு வீரர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டிற்குள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் லெபனானில் இருந்து எல்லை தாண்ட முயற்சித்த ஏராளமானோரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு மக்கள்
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்படி உயிரிழந்த 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் பட்டியலைத் தொகுத்து ஏஎஃப்பி (AFP) வெளியிட்டுள்ளது, உயிரிழந்த, காணாமல் போன அல்லது பணயக் கைதிகளாகச் சிக்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாட்டு அரசும் தெரிவித்துள்ள தகவல்களுடன் இணைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது:
அமெரிக்கா: 27 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து: 24 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ்: 15 பேர் உயிரிழப்பு
நேபாளம்: 10 பேர் உயிரிழப்பு
அர்ஜென்டினா: 7 பேர் உயிரிழப்பு
உக்ரைன்: 7 பேர் உயிரிழப்பு
ரஷ்யா: 4 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்து: 4 பேர் உயிரிழப்பு
சிலி: 4 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரியா: 3 பேர் உயிரிழப்பு
பெலாரஸ்: 3 பேர் உயிரிழப்பு
கனடா: 3 பேர் உயிரிழப்பு
சீனா: 3 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ்: 3 பேர் உயிரிழப்பு
பிரேசில்: 3 பேர் உயிரிழப்பு
பெரு: 2 பேர் உயிரிழப்பு
ருமேனியா: 2 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், கம்போடியா, அயர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கொலம்பியா, பராகுவே ஆகிய ஒவ்வொரு நாட்டினரும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். ,
ஜெர்மனி, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த பலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், இத்தாலி, பராகுவே, இலங்கை, தான்சானியா நாடுகளைச் சேர்ந்த பலரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் காசாவை விட்டு ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேலிய மற்றும் எகிப்திய அரசுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையைத் தொடர்ந்து, இன்று உள்ளூர் நேரப்படி 12:00 மணி முதல் 17:00 மணி வரை ரஃபா பாதை திறந்திருக்கும்.
காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ், அமெரிக்கக் குடிமக்கள் பிரதேசத்தை விட்டு வெளியேற அனுமதிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
'ஹமாஸை ஒழிப்போம்' - இஸ்ரேல் ராணுவம்
லெப்டினன்ட் கர்னல் கான்ரிகஸ் கூறுகையில், காசா பகுதியைச் சுற்றிலும் இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர் என்றார்.
"எங்கள் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது, இந்தப் போரின் இறுதிக் கட்டம், ஹமாஸ் மற்றும் அதன் ராணுவத் திறன்களை சிதைத்து, அடிப்படையில் நிலைமையை மாற்றுவோம். இதனால் ஹமாஸ் மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது வீரர்கள் மீது எந்தவிதமான தாக்குதலையும் நடத்த முடியாது."
லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நிகழ்வைப் பற்றி அவர் பேசும் போது, “நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேலிய ராணுவத்தினரை நோக்கி டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை வீசினர். சிறிது நேரம் போர் நடந்தது, இறுதியில் நிலைமை அமைதியானது," என்று கூறினார். "பின்னர் ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு ட்ரோன்களை அனுப்பியது என்பதுடன் இஸ்ரேலிய விமானங்களுக்கு எதிராக தரையிலிருந்து ஏவுகணைகளை வீசியது."
அந்த இரண்டு முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. ஆனால் வடக்கு எல்லையில் நிலைமை "மிகவும் பதற்றமாக உள்ளது" என்றார் அவர்.
இஸ்ரேலை எதிர்த்து கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போரில் ஈடுபடப் போவதாக ஹமாஸ் குழுவினர் அறிவித்துள்ளர்.
(பிப்ரவரி 16 திருத்தம்: அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டதாக இந்தக் கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது 1,200 க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன், கூடுதலாக காயங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்போது காயங்களால் இறந்தவர்களையும் சேர்த்து சுமார் 1,200 இறப்புகள் எனக் குறிக்கும் வகையில் கட்டுரை திருத்தப்பட்டுள்ளது. எனினும் இது இறுதியான எண்ணிக்கை அல்ல என்று இஸ்ரேல் கூறுகிறது.)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












