இன்சமாம் உல் ஹக் பதவி விலகல்: பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதிய பூகம்பம்

பட மூலாதாரம், Getty Images
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கொல்கத்தாவில் செவ்வாய்கிழமை பங்களாதேஷுக்கு எதிரான போட்டிக்கான வியூகங்களை வகுத்து வந்த நேரத்தில் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் பதவி விலகல்தான் அந்த செய்தி. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இன்சமான் உல் ஹக் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அப்துல் கஃப்ஃபர் X சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் கூறுகையில், “உலகத்திற்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. இதை நன்றாக ரசியுங்கள். இந்த மாதிரியான வேடிக்கையை எங்கும் பார்க்கமுடியாது. ஒருபக்கம், உங்களது அணி உலகக்கோப்பையில் விளையாடி வருகிறது. மற்றொரு பக்கம் அந்த அணியை தேர்வு செய்தவர் கட்டாயத்தின் பேரில் பதவி விலக வைக்கப்பட்டுள்ளார் அல்லது பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்”

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் கேப்டனுமான பாபர் ஆசமும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களும் வீரர்களுடன் இணைந்து வாரியத்தை அவதூறு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜிநாமா செய்தியை உறுதிப்படுத்திய இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைக்காட்சியிடம் பேசினார்.
இன்சமாம் உல் ஹக் கூறுகையில்,“நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் எனவே நாங்கள் எப்போதும் எங்களை நாட்டிற்காக சமர்பிக்கிறோம். என் மீது ஏதேனும் விசாரணை இருந்தால் நான் பதவி விலகுவதுதான் நல்லது என்று உணர்ந்தேன். அவர்கள் விசாரணையை வசதியாக செய்ய அனுமதிக்க வேண்டும் மற்றும் என்ன முடிவு செய்யப்படுகிறது என்று பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் "அனைத்து வீரர்களையும் நான் தான் தேர்வு செய்தேன். அதில் என்மீது கேள்வி எழுப்பப்படுகிறது என்றால் நான் ஒரு ஓரமாக விலகியிருப்பதுதான் நல்லது” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இன்சமாமின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இன்சமாம் உல் ஹக் பதவி விலகுவதாக அறிவித்து ஒரு மணி நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதை உறுதி செய்ததுடன், எந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் ராஜிநாமா செய்துள்ளார் என்றும் கூறியுள்ளது.
"ஆண்களுக்கான தேசிய தேர்வுக் குழு மற்றும் ஜூனியர் தேர்வுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்துள்ளார்" என்று சமூக தளமான X அறிக்கை மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "இன்சமாம் உல் ஹக் 7 ஆகஸ்ட் 2023 அன்று தேசிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தன் மீது ஊடகங்களில் எழுப்பபட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக தான் பதவி விலகுவதாக இன்சமாம் தெரிவித்தார் என்றும் தான் குற்றவாளி இல்லை என்று கமிட்டி கண்டறிந்தால், தான் மீண்டும் தலைமை தேர்வாளராக பொறுப்பேற்பேன்" என்றும் இன்சமாம் தெரிவித்ததாக பிசிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவையும் பிசிபி அமைத்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பிசிபி தலைவர் ஜகா அஷ்ரஃபிடம் பாகிஸ்தானின் செய்தி சேனல் 'ARY' இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பியது. பாகிஸ்தான் அணியிலுள்ள 8 வீரர்களுக்கு தல்ஹா ரஹ்மானி என்பவர் ஏஜண்டாக இருக்கும் நிலையில் அவரின் நிறுவனத்தில் இன்சமாம் பங்குதாரராக இருக்கிறார். பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் எப்படி பாகிஸ்தான் வீரர்களின் ஏஜண்டின் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கலாம் என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஜகா அஷ்ரப், இது பிரச்சனைக்குரிய விஷயம்தான். இது குறித்து தேர்வுக்குழு தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் எந்த முகவரும் இரண்டு வீரர்களுக்கு மேல் முகவராக பணியாற்ற முடியாது என்ற புதிய சட்டத்தை வாரியம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இன்சமாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் என்ன? அவர் என்ன சொல்கிறார்?
பாகிஸ்தானின் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தேர்வுக்குழு தலைவராக நேர்மையாக செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
வீரர்களை நிர்வகிக்கும் நிறுவனத்தில் அவருக்கு பங்கு இருப்பதாகவும், இந்த நிறுவனத்துடன் பிசிபி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. இந்நிறுவனத்துடன் தொடர்புடைய வீரர்களில், நடப்பு உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்களும் அடங்குவர்.
பாகிஸ்தான் சேனலான 'சாமா நியூஸ்' உடன் பேசும்போது, இன்சமாம் இந்த நிறுவனத்தின் பெயரை 'சாயா கார்ப்பரேஷன்' என்று கூறினார். மேலும், "நான் தெளிவாக சொல்கிறேன். என் வாழ்நாளில் சாயா கார்ப்பரேஷனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
யார் இந்த சாயா கார்ப்பரேஷன்?
'சாயா கார்ப்பரேஷன்' இணையதளத்தில் இது ஒரு விளையாட்டு மேலாண்மை நிறுவனம். பாகிஸ்தான் அணியின் பல வீரர்களை நிர்வகித்து வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் நிர்வகிக்கும் வீரர்களில் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷஹீன் ஷா அப்ரிடி, ஃபகார் ஜமான், யாசிர் ஷா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் அடங்குவர்.
இவர்களில் பலர் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிறுவனம் தன்னுடைய சுயவிவரத்தில், “சாயா ஒரு உலகத்தரம் வாய்ந்த தடகள மேலாண்மை மற்றும் முன்னணி விளையாட்டு அமைப்பு. இந்நிறுவனம் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி தல்ஹா ரஹ்மானியால் 2014 இல் நிறுவப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 70 சதவீத வீரர்களை சாயா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எங்கள் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானோர் உலகப் புகழ்பெற்ற லீக்குகளில் பங்கேற்கின்றனர்” எனக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தவிர்க்கமுடியாத பதவி விலகல்
பாகிஸ்தான் பத்திரிகையாளர் அப்துல் கஃபர் கூறுகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின்னரே இன்சமாம் பதவி விலகியுள்ளார் என்று கூறினார்.
மேலும், “இன்சமாம் உல் ஹக்கின் ராஜிநாமா வரும் என்று எனக்குத் தெரியும். பிசிபி தலைவர் அஷ்ரப்பின் அறிவுறுத்தலின் பேரில் இன்சமாம் பதவி விலகியுள்ளார்” என அவர் தெரிவித்தார்.
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, பிசிபியின் தலைவர் அஷ்ரப்பை சுற்றி சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாமின் தனிப்பட்ட உரையாடல்களை கசியவிட்டதாகவும் அஷ்ரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் வீரர்கள் என்ன கூறுகிறார்கள்?
இன்சமாம் உல் ஹக் தன் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதுடன், முன்னாள் வீரர்களின் ஆதரவையும் பெற்று வருகிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷாகித் அப்ரிடி மற்றும் முஷ்டாக் அகமது ஆகியோரும் 'சாமா நியூஸ்' சேனலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அதில் இன்சமாம் உல் ஹக் தனது ராஜிநாமா குறித்து தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் முஷ்டாக் அகமது கூறுகையில் “உங்கள் ராஜிநாமா செய்தியைக் கேட்டு நாங்கள் மனம் தளர்ந்துள்ளோம். எங்களின் புத்துணர்ச்சி சற்று குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
முஷ்டாக் அகமதுவும் இன்சமாம் உல் ஹக்கிடம் கேள்விகள் கேட்டார்.
ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது வருத்தப்படுகிறீர்களா? என இன்சமாமிடம் முஷ்டாக் அகமது கேட்டார்.
அதற்கு இன்சமாம் உல் ஹக் கூறுகையில், “எல்லோருக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். யார் பேசியிருந்தாலும் ஆதாரம் அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. நானும் மனிதன்தான். என் மனது காயப்பட்டுள்ளது. மக்களுக்கு நான் யாரென்று தெரியும்” என அவர் தெரிவித்தார்.
அதேசமயம், இன்சமாம் உல் ஹக்கின் ராஜிநாமா முடிவை ஷாஹித் அப்ரிடி பாராட்டினார்.
ஷாகித் அப்ரிடி கூறுகையில், “இன்று நீங்கள் எடுத்த முடிவு பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் நிறைய மரியாதை சம்பாதித்திருக்கிறீர்கள்”

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம்
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நெதர்லாந்து மற்றும் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான், அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகளோடு வென்றுள்ளது.
ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட தற்போதைய அணியை கேலி செய்தனர். பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கேள்விகள் எழுந்துள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












