காஸாவுக்காக இஸ்ரேலின் உறவைத் துண்டித்த நாடு

பட மூலாதாரம், Getty Images
காஸாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுடனான அரசுமுறை உறவுகளை தென்னமெரிக்க நாடான பொலிவியா துண்டித்திருக்கிறது.
காஸாவில் "ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற" ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக பொலிவியா தெரிவித்துள்ளது.
பொலிவியா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், முற்றுகையிடப்பட்ட காஸா பகுதிக்கு உதவிகளை வழங்குவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
போரில் இஸ்ரேலுடனான உறவை துண்டித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு இதுவாகும்.
இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திற்கு சரணடைவது” என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தன்னை இணைத்துக் கொள்கிறது" என்று பொலிவியா மீது லியோர் ஹையாட் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK
"காஸாவில் நடைபெறும் ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலை நிராகரித்தும், கண்டித்தும் உறவுகளை துண்டிக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது” என்று பொலிவியாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஃப்ரெடி மமானி கூறினார்.
"உணவு, தண்ணீர், வாழ்க்கைக்கு தேவையான பிற பொருள்கள் நுழைவதை" தடுக்கும் இஸ்ரேலின் முற்றுகைக்கு முடிவு கட்ட பொலிவியா விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.
காஸா மீது பல வாரங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் அத்தியாவசிய உதவிகள் எகிப்தின் ரஃபா வழியாக மட்டுமே மக்களைச் சென்றடைகின்றன.
"பொலிவியாவின் பயங்கரவாத ஆதரவையும், அதற்கு ஆதரவு தரும் இரானுக்கு அடிபணிவதையும் இஸ்ரேல் கண்டிக்கிறது." என்று ஹையட் பதிலளித்தார்.
அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹமாஸூக்கு ஆதரவு அளித்ததாக இரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரான் தலைவர்கள் இதைக் கொண்டாடினாலும், அதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்றே கூறிவருகின்றனர்.
இஸ்ரேலுக்கு எதிராக ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிய லத்தீன் அமெரிக்க நாடு பொலிவியா மட்டுமல்ல.
சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் செவ்வாயன்று டெல் அவிவில் உள்ள நாட்டின் தூதரை ஆலோசனைக்காக திரும்பப் பெறுவதாகக் கூறினார்.
"காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களைக் கருத்தில் கொண்டு." இதைச் செய்வதாக அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்த ராணுவ நடவடிக்கைகளை சிலி கடுமையாக கண்டிக்கிறது மற்றும் மிகுந்த கவலையுடன் உற்றுநோக்குகிறது. காஸாவில் உள்ள பாலஸ்தீன குடிமக்கள் கூட்டுத் தண்டனை அனுபவிக்கும் நிலையை இது ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார்.
கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சமூக ஊடகங்களில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.
"இஸ்ரேலில் உள்ள எங்கள் தூதரை ஆலோசனைக்கு அழைக்க நான் முடிவு செய்துள்ளேன்," என்று பெட்ரோ கூறினார்.
"பாலத்தீன மக்களின் படுகொலையை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் நாங்கள் அங்கு இருக்க முடியாது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார்.
"கொல்லப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கும் ஒரு போரை முதல் முறையாக நாங்கள் காண்கிறோம். நிறுத்துங்கள்! கடவுளின் அன்பிற்காக, நிறுத்துங்கள்! " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடு
தென் அமெரிக்காவின் மிக உயரமான பகுதியில் இருக்கும், மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடு பொலிவியா. நான்கு புறமும் நில எல்லைகளால் சூழப்பட்ட நாடாக பொலிவியா அமைந்துள்ளது. 1538 ஆம் ஆண்டு ஸ்பெயின் இந்நாட்டைக் கைப்பற்றியது. 1824 ஆம் ஆண்டு வெனிசுலாவின் விடுதலைப் போராளி சைமன் பொலிவார் ஸ்பானிய ஆட்சியிலிருந்து இந்நாட்டை விடுவித்தார்.
ஒரு வருடம் கழித்து, பொலிவியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அந்நாட்டின் முதல் அதிபராக சைமன் பொலிவார் பதவியேற்றார். பொலிவியா அவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதி பழங்குடியினர் ஆவர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளனர்.
தென் அமெரிக்காவில் பொலிவியா இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்பு உள்ள நாடாக உள்ளது, ஆனால் இந்த வாயுவைப் பிரித்தெடுத்தல் மற்றும் ஏற்றுமதி குறித்து நீண்ட காலமாக பலதரப்புகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.
பழங்குடியினர் குழுக்கள் நாட்டில் உள்ள இயற்கை வளங்களின் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று கூறுகின்றனர். இதை பொலிவியாவில் மீதமுள்ள ஒரே இயற்கை வளமாக அவர்கள் பார்க்கிறார்கள்.
உலக அளவில் கோகா உற்பத்தியில் பொலிவியா முன்னிலை வகிக்கிறது. இது கோகைன் என்ற போதைப் பொருளுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடு இந்த பயிர் விளைவிப்பதை எதிர்த்து ஒரு பிரசாரத்தை தொடர்ந்து நடத்திவருகிறது. ஆனால், பொலிவியாவில் உள்ள ஏழை விவசாயிகள் இந்த பிரசாரத்தை எதிர்க்கின்றனர். ஏனெனில் இதுவே அவர்களின் வருமானத்திற்கான ஒரே ஆதாரமாக விளங்குகிறது.
பொலிவியாவின் தற்போதைய அதிபர் லூயிஸ் ஆர்ஸ் 2020 அக்டோபரில் பதவியேற்றார். அவருக்கு முன், எதிர்க்கட்சித் தலைவர் ஜனின் அனஸ் 2019 ஆம் ஆண்டு நவம்பரில் சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பிறகு அதிபர் எவோ மோரல்ஸ் பதவி விலகியபோது தற்காலிக அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












